அம்பை இரு கடிதங்கள்

அன்புநிறை ஜெ,

அணுக அணுகத் திறந்து கொண்டே செல்லும் வெண்முரசில் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும்  எத்தனையோ புதிய அறிதல்கள்.
கணக்கற்ற முறை வாசித்துவிட்ட முதற்கனலின் எரியிதழ் பகுதியில் ஒரு வரி புதிதாகக் கண்ணில் பட்டது. காசியின் இளவரசியர் விஸ்வநாதனை வணங்கியபின் விசாலாட்சியின் சந்நிதியில் கன்னிமை நிறைவுப்பூசை செய்கின்றனர். “கஜன் வணங்கிய மங்கல சண்டிகை கோயில் முன்னால் நின்று ஆடைகளையும் அணிகளையும் மலர்களையும் களைந்தனர்” – இதில் வரும் கஜன் வணங்கிய மங்கல சண்டிகை என்பது கஜமுகன் வணங்கிய அன்னை என்பதுதானா அல்லது வேறு ஏதும் குறிப்புகள்/கதைகள் இருக்கிறதா?

அதன் பிறகு அன்னையின் ஆலயத்தின் இடதுபுறம் சித்தயோகினியான நாகதேவியின் சிற்றாலயம் செல்கின்றனர். அங்கு “கனகலம் என்னும் கங்காத்வாரத்தில் இருக்கும் நாகச்சுனையில் இருந்து கொண்டுவந்த புனிதநீர் வைத்த குடத்திலிருந்து மூன்று முறை நீரள்ளிவிட்டு கன்னியரை அரசியராக அபிஷேகம் செய்யும் சடங்கு” நிகழ்கிறது. இதில் வரும் கனகலம்(Kankhal) என்பது  ஹரித்துவாருக்கு அருகே தட்ச யாகம் செய்த தலமாக கருதப்படும் இடம்.  ஒவ்வொரு காசி இளவரசிக்கும் இச்சடங்கு நிகழ்ந்திருக்கும். அவர்களனைவருக்கும் புனிதத் தலம் கங்காத்வாரத்தின் தாட்சாயணிகுண்டம், கனகலத்தில் அமைந்த சதி  குண்டம். சதி தேவி குளித்த நெருப்பில் இருந்து அள்ளப்படும் நீரால் காசி இளவரசியருக்கு அபிஷேகம்.

அம்பை மட்டுமல்ல, அம்பிகையும் அம்பாலிகையும், பானுமதியும், அசலையும் கூட சதி தேவியே. எந்த நெருப்பில் இறங்குகிறார்கள் என்பதில்தான் வேறுபாடு. ஆனால் நெருப்பில் ஏது வேறுபாடு! கங்காஜனிகளின்  நிரை – குளிர்ந்த கங்கைக்குள் உறங்கும் இமயத்தின் அணையாத்தழல்.

மிக்க அன்புடன்,
சுபா

அன்புள்ள சுபா,

சிலசமயம் கடந்து வந்த புனைவுவெளியை கடிதங்கள் திரும்பிப் பார்க்கவைக்கின்றன. எப்படி அப்படி எழுதினேன் என்று எண்ணுகிறேன். இப்போது தோன்றுகிறது சிறுவயதில் தீப ஒளியில் செவ்வாடை அணிந்து அமர்ந்திருந்த பகவதியின் காட்சிதான் என்று.

 

ஜெ

 

மதிப்பிற்குரிய ஜெ

உங்கள் பதில் கடிதம் படித்து விருது வாங்கியது போல் மகிழ்ந்தேன். நான் வெண்முரசுவை நாள்தோறும் தொடர்ந்து வாசித்தவள். என்னை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கியவள் அம்பையே. நல்லதோ கெட்டதோ நான் அடைந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் துணிந்து விட்டேன். பொறுத்தருள வேண்டுகிறேன்.

எரிதழல் மூன்றாவது அத்தியாயம் படிக்கும்போதே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியடைந்தேன். “சரடுகள் அறுபட்ட கூத்துப்பாவைபோல அம்பையின் கைகளும் கால்களும் விழுந்தன”. இந்த வரிகள் படிக்கும்போது என் மனம் நடுக்கமுற்றது. எரிதழல் நான்காம் அத்தியாயம் போல வேதனை தந்த வரிகள் மிகவும் குறைவு. சரணாகதி அடைய வந்த அம்பையின் நிலை உள்ளம் உருக வைத்தது. பீஷ்மரின் மறுப்புரைகள் அவர் மேல் என் மனதில் வெறுப்பை ஏற்றின.

“என்னுடைய நெஞ்சத்தையும் ஆன்மாவையும் உங்கள் பாதங்களில் படைக்க வந்திருக்கிறேன்”, என்று கதறி அழும்போது என் கண்கள் கண்ணீர் பொழிந்தது. இறுதியாக,”நான் உங்கள் தாசி. உங்கள் அடிமை”, என்று சரணடைந்த அம்பையை எண்ணி காலகாலமாக அடிமைப்பட்டு அவமானம் ஒன்றையே பரிசாகக் கொள்ளும் பெண் இனத்தின் அவலத்தை உணர்ந்தேன். நானே அம்பையான தருணம் அது.

ஒரு பெண்ணை ஒரு ஆண் கைவிடலாம் ஆனால் காதலன், தந்தை, சிறையெடுத்து வாழ்வைக் கெடுத்த உத்தமன் என அனைவருமே கைவிட்டால் என்செய்வாள் அவள். பாண்டியன் நீதி தவறி நின்றபோது கணவனை இழந்தாளே சிலம்பின் கண்ணகி, அவளுடைய கோபக்கனலை நினைவுபடுத்தியது அம்பையின் கோபம். என் கண்களில் கண்ணீர், முகத்தில் கொழுந்துவிட்டு எரியும் கோபக்கனல். மொத்த ஆணினத்தின் மேல் வெறுப்பு பொங்கியது. நானே அம்பையான தருணம் அது.

இந்த நிலையில் நானிருக்க, என் கணவர் பணியிலிருந்து வீடு திரும்பினார். எப்பொழுதும் புன்னகையுடன் வரவேற்கும் மனைவியின் அமைதி அவருக்குப் புதியதாக இருந்திருக்க வேண்டும். “இன்னைக்கு அலுவலகத்தில் நடந்த விஷயம் தெரியுமா? என்று கூறியவாறு சோபாவில் அமர்ந்தார். என் கண்ணீர் முகத்தைக் கண்டதும் அதிர்ச்சி தெரிந்தது. “என்னப்பா ஆச்சு” என அதிர்ந்து தோளைத் தொட்டார். ஒரே தள்ளு தள்ளியது என் கைகள். பீஷ்மரே என் முன்னில் நிற்பது போலிருந்தது. “பாவி ஒரு பெண்ணிடம் கொடுத்த வாக்கிற்காக இன்னொரு பெண்ணை அழித்தாயடா ! உங்களிடமிருந்தே மீட்பே இல்லையா எங்கள் இனத்திற்கு” என் மனம் அரற்றிக் கொண்டிருந்தது.

என் கணவர் “ஊரில் இருந்து ஏதேனும் போன் வந்ததா”, என்று மெதுவாய் கேட்டது இன்னும் என் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. என் கோபப்பார்வை கண்டு அதிர்ந்தவர் “என் மேல் கோபமா?” என்று கேட்டு வைத்தார். “எல்லாமே போச்சு, வாழ்க்கையே வீணாய் போச்சு” என்று கூறியவாறே கண்களை மூடினேன். கண்களில் கண்ணீர் பெருகியது. “நான் தாசியாயிருக்கிறேன் உனக்கு.என்னை ஏற்றுக்கொள் “என்று மன்றாடிய பெண்ணைக் கண்டு ஏளனச்சிரிப்பு சிரித்த பீஷ்மரின் ஆணவம் அன்றி வேறென்ன!

“அழுவதுபோல் அப்படி என்னப்பா நடந்து விட்டது உடம்புக்கு ஏதாவது முடியவில்லையா” என் கணவரின் குரல் பரிவுடன் ஒலித்தது. அதற்குள் என் மூத்த மகன் வந்து சேர்ந்தான். “என்னாச்சு டாடி” என்றவனிடம், “அம்மா அழுகிறாங்க என்ன நடந்தது என்று தெரியவில்லை நீயாவது கேள்” ,என்றார். “என்னம்மாச்சு”, என்று என் கையை பிடித்தவனின் கைகளை உதறினேன். அவனும் பீஷ்மரின் வழி வந்தவன்தானே என் மனம் அரற்றியது. என் மகன்,”டாடி எனக்கு புரிந்து விட்டது. இது உறுதியாக டிப்ரஷன்தான். அம்மா ரொம்ப காலமாக அடக்கி வச்சதுதான் இப்படி அழுகையும் கோபமாய் வந்திருக்கு”.

“நான் என்னடா பண்ணினேன்” “மறந்துட்டீங்களா எங்களை வளர்க்கணும்னு அம்மாவை வேலைக்கு அனுப்ப மறுத்துட்டீங்க. வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்து இப்படி ஆயிருச்சு. நீங்க மன்னிப்பு கேளுங்க டாடி” “இதுதான் காரணமா சாரிப்பா மன்னிச்சுரு. நான் நம்ம குடும்பம் நல்லா இருக்கணும்னு நெனச்சுதான் அப்படி முடிவு எடுத்தேன். அந்த வயசில உன் மனச புரிஞ்சுக்கிற பக்குவம் அப்ப இல்லை. இனிமே பாரு உனக்கு என்ன விருப்பமோ அதை செய் நீதான்டா சாட்சி” என்றார்.

ஒரு முறை முறைத்து கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தேன். “அவளுடலில் இருந்து சன்னதம் கொண்டெழும் மயான சாமுண்டியின் பேரோலம் கிளம்பியது” என்ற வரிகள் தந்த பாதிப்பு கொஞ்சநஞ்சமல்ல. அம்பையின் முடிவில்லா நடைப்பயணமும் வழியெல்லாம் கருகி அழியும் வனங்களும் மனக்கண்ணில் காண நேர்ந்தது. இதற்க்குள் இளைய மகனும் பள்ளியிலிருந்து வந்திருந்தான். மூத்தவன்,”எதுக்கு அம்மா இப்படி இருக்காங்கனே தெரியலை நீயே கேளு” என்றான்.

ஆறே வயதான என் இளைய மகன்,” எனக்குத் தெரியும் அம்மா ஏன் இப்படி இருக்காங்கன்னு நேத்து நான் பொய் சொல்லிட்டேன்  அதான்” என்று சொல்வதைக் கேட்டு கண் திறந்தேன். கண்கலங்கியபடி என் செல்லப்பிள்ளை! என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்! என் மகனை வாரி அணைத்தேன். அம்பை என் சிந்தையிலிருந்து மறைந்து மீண்டும் அம்மாவான தருணம் அது.

என் கணவரின் முகம் நிம்மதி அடைந்தது. “எதைப்பற்றியும் கவலைப்படாத நீ என்ன சொல்றியோ அதுதான் இனி சட்டம்” வாக்குறுதி அளித்தார். கடைசிவரை அம்பை என்ற  கதாபாத்திரம்  மஹாபாரதத்தில் இருப்பதையோ, நான் கொஞ்ச நேரம் அம்பையாக மாறியதோ அவர்களுக்குத் தெரியவே தெரியாது.

இப்படிக்கு,

உங்கள் தீவிர வாசகி,

இஷ்ரஜ் கணேசன்

அன்புள்ள இஷ்ரஜ்

பொதுவாக புனைவுகளை வாசிப்பவர்கள் ஒருவகையான ‘அறிவார்ந்த’ வாசிப்பை அளிப்பார்கள். அந்த அறிவார்ந்த தன்மை என்பது ஒருவகை விலக்கம். அது கற்பனைக்கு தடையாகவும் ஆகும். உங்கள் வாசிப்பு ஒரு வகையான தன்மய பாவம் உண்டு. அப்படித்தான் பெரும்பாலான பெண்கள் வாசிக்கிறார்கள். அவ்வாசிப்பு கொள்கைகளை, தத்துவங்களை தவறவிடலாம். ஆனால் கதைமாந்தருடன் நெடுந்தொலைவு செல்லவைக்கும். மேலும் ஆழமாக அறியவைக்கும்

ஜெ

முந்தைய கட்டுரைஓர் இளைஞரின் குரல்
அடுத்த கட்டுரைஅந்திம காலத்தின் இறுதி நேசம்- சிங்களக் கதைகள்