வீகன் உணவுப்பழக்கம்

அன்புள்ள ஜெயமொகன் அவர்களுக்கு,

மிகுந்த பொருட்செலவுடனும், “வீ கேர் அனிமல்ஸ்”, ”சேவ் அனிமல்ஸ்” போன்ற எரிச்சலூட்டும் வாசகத்துடனும் பிரச்சாரம் செய்யப்படும் இந்த வீகன்(Vegan) உணவு முறை, அதன் அரசியல், வர்த்தகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள். அவர்கள் தம் தரப்பை நியாயப்படுத்துவது, உணவுக்காக விலங்குகள் கொல்லப்படுகின்றன, பாலுக்காகவும், முட்டைக்காகவும் பண்ணைகளில் விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன போன்றவை. நாகரீகம் வளர்ச்சி அடையும் போது உணவு பழக்கம் மேம்படுவது வரவேற்கத்தக்கது. மனிதர்களைத் தாண்டி விலங்குகளையும் நேசிப்பது என்பது மகத்தானது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் உண்மையில் இவர்களின் நோக்கம் என்ன?

ஏன் இந்த சந்தேகம் என்றால் சமூக தளங்களில் இதை ப்ரமோட் செய்பவர்களை பார்க்கும் போது நமக்கு கோபம் தான் வருகிறது. எந்த சமூக புரிதலும் இல்லாமல் அசைவம் உண்பவர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ காட்டுமிராண்டிகள் போல் சித்தரிப்பது, அனைத்து வகை தொற்று வியாதிகளுக்கும் இறைச்சி உண்பதுதான் காரணம் என்றும் சந்தடி சாக்கில் பரப்பி விடுகிறார்கள். சக மனிதன் மீது அக்கறை இல்லாத இவர்கள் விலங்குகள் மீது அக்கறை கொள்வது என்பது சந்தேகத்திற்கு இடமானதே.

சமீபத்தில் ஜேம்ஸ் கேமரூன், ஜாக்கி சான், அர்னால்டு போன்ற பிரபலங்கள் சேர்ந்து தயாரித்து வெளிவ்ந்த ‘கேம் சேன்சர்ஸ்’ என்ற ஆவணபடத்தை பார்க்க நேர்ந்தது. தன் விருப்பத்திற்கு ஏற்ப அறிவியலை திரித்து வேகன் உணவே ஆரோக்கியமானது என்று நிறுவப் பார்க்கிறார்கள். அந்த பிரபலங்கள் வேகன் ஆக மாறிவிட்டார்கள். இதே போல் இந்திய பிரபலங்கள் பலரும் வேகன் உணவு முறைக்கு மாறிவிட்டதாக பெருமையுடன் அறிவித்திரிக்கிறார்கள். ஒரு வயதுக்கு பிறகு சைவ உணவுக்கு மாறுவது உடலுக்கு ஆரோக்கியமானது தான். அதை ஏன் இவ்வளவு மெனக்கெட்டு எல்லாருக்கும் என பிரச்சாரம் செய்ய வேண்டும். அது போக வேகன் உணவு முறை செலவேறியது. முட்டை, இறைச்சி, பாலில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை வேகன் உணவு முறையில் இருந்து பெறுவது செலவேறியது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான் இதை முன் வைக்கிறார்களா? இவர்களின் நோக்கம் தான்
என்ன?

ஞானசேகர்

***

அன்புள்ள ஞானசேகர்

வீகன் உணவுப்பழக்கம், புரோட்டீன் மட்டும் உண்ணும் உணவுப்பழக்கம், காலைக்கும் மாலைக்கும் இடையே முழு உணவையும் முடித்துக்கொள்ளும் உணவுப்பழக்கம், ஒருவேளை மட்டும் திடஉணவு உண்ணும் பழக்கம்,  வேகவைக்காத உணவை மட்டுமே உண்பது என உணவுப்பழக்கங்களில் சோதனைகள் பல நிகழ்கின்றன.

சிந்திக்கும் மனிதன் தன் உடலைப்பற்றி கூர்ந்த கவனம் கொண்டிருப்பான் என்று காந்தி எழுதினார். எனக்கும் இந்த உணவு, உடல்நலச் சோதனைகளில் ஆர்வமுண்டு. நானும் புரோட்டீன் மட்டும் உணவு பழக்கத்தில் இருந்து கடுமையாக எடை குறைந்திருக்கிறேன். 1988ல் வேகவைக்காத உணவை மட்டுமே உண்டு ஓராண்டு இருந்திருக்கிறேன். அதுபற்றிய நூலை மொழியாக்கம் செய்திருக்கிறேன்.

இவற்றை தேவையானவர்கள் செய்து பார்க்கவேண்டியதுதான். பொதுவாக மிகை எடை கொண்டவர்களுக்கு புரோட்டீன் மட்டும் உணவு [பேலியோ] மிக பயன்தருகிறது. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கும் அது அருமருந்தாக அமைகிறது. அதனால் கெடுதல்கள் இருக்கலாம் என்கிறார்கள் – நோயால், மிகு எடையால் வரும் அவதிகளுக்கு அது மேல்.

அப்படி ஒரு நல்ல உணவுமுறையை தான் கண்டுகொண்ட ஒருவர் அதை தேவை என்று நினைப்பவர்களுக்குச் சொல்வதிலும், அதை பரப்ப முயல்வதிலும் பிழையில்லை. ஆனால் ஒருவகை ஓர் உணவுப்பழக்கத்தை முழுமையான ஒரு தத்துவக்கொள்கையாக, உலகதரிசனமாக முன்வைப்பதும் சரி; அதை மதம்போல பிரச்சாரம் செய்வதும், அதைவைத்து மற்றவர்களை இகழ்வதும் சரி; கீழ்த்தரமான செயல்பாடுகள். வெறுக்கத்தக்க பண்பாடின்மைகள்.

உலகம் முழுக்க எல்லாவகையான உணவுப்பழக்கங்களும் வரலாற்றின்போக்கில் உருவாகி வந்துள்ளன. எல்லாமே நிகரானவைதான். வெறுக்கத்தக்க உணவுமுறை என ஏதுமில்லை என்பதுதான் என் புரிதல். நான் எந்த உணவையும் அருவருத்ததோ வெறுத்ததோ இல்லை – ஈசல் பாம்பு, முதலை எல்லாமே சாப்பிட்டிருக்கிறேன். இன்று எனக்கு ஒத்துக்கொள்கிறதா என்பதை மட்டுமே பார்ப்பேன்.

ஒரு குறிப்பிட்ட உணவை மட்டும் நாகரீகமானது, மேலானது, அதை உண்பதனால் தாங்கள் மேலானவர்கள் என நினைப்பது ஒருவகை அறியாமை. ஆன்மிகமான இருளறை அது. அந்த குருட்டுத்தனம்தான் மானுடர் பிற மானுடரை இழிவென நினைக்க, ஒடுக்க அடிப்படை அமைத்து அளித்தது. நவீன மனிதன் அருவருக்கவேண்டியது அந்த மனநிலையைத்தான்

உலகம் முழுக்க மனிதன் வெவ்வேறு சூழல்களில் பரிணாமம் கொண்டு வந்திருக்கிறான். வெவ்வேறு உணவுகளுக்குப் பழகியிருக்கிறான். தேவை சார்ந்தும், கிடைப்பதை ஒட்டியும் பண்பாடுகள் உருவாகியிருக்கின்றன. வசுதைவ குடும்பகம் என்பது உலகை தன் குடும்பமாக மாற்றிக்கொள்ள முயல்வது அல்ல, தன்னை உலகக்குடிமகனாக எண்ணிக்கொள்வது.,

உணவையே எண்ணி, உணவையே பேசி, உணவையே அடையாளமாக ஆசாரமாகக் கொண்டு, உணவின் அடிப்படையில் மேட்டிமை கொண்டு, உணவின் அடிப்படையில் சகமனிதனை இழிவுசெய்த அந்த பழைய ஆசாரவாதத்தின் நவீன முகமாக இந்த புதிய உணவுக்கொள்கைகள் ஆகிவிடக்கூடாது. மற்றபடி எந்தச் சோதனையும் தேவையானவர்களுக்கு உதவினால் நல்லதுதான்.

ஜெ

முந்தைய கட்டுரைமனம்
அடுத்த கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் திரையிடல்- ஆஸ்டின்