நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். பல வருடங்களாக உங்களுக்கு எழுத வேண்டும் என நினைத்து பின்பு சீரிய காரணங்கள் எதுவும் இல்லாததாலும், உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்ற காரணத்தாலும் எழுதவில்லை. என் மின்னஞ்சல்களை நோக்கும் பொழுது உங்களுக்கு கடைசியாக 2009ல் எழுதிஇருக்கிறேன். பிறகு பூமணி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் உங்களை பார்த்தேன். தயக்கத்தினால் உங்களுடன் வந்து பேச வில்லை. இப்பொழுது தான் உங்களின் மாஸ்டர் கட்டுரையை படித்தேன். வம்புக்காக பல பேர் உங்களுக்கு எழுதும் பொழுது நாமும் ஓரிரு வரிகள் எழுதலாமே என்று தோன்றியது. நோபல் பரிசு பெற்ற பால் க்ருக்மான் (krugman) ஒரு பேட்டியில், யாரும் இதுவரை கண்டிராத ஒரு தொடர்பை, ஒரு புதிய எண்ணத்தை நான் நோக்கி செல்கிறேன் என்று எண்ணி ஆராய்ச்சி செய்வதற்க்கே ஒரு ஆணவம் தேவை என்று சொல்லியிருந்தார். உங்கள் மாஸ்டர் கட்டுரை அதைத்தான் நினைவுறுத்தியது .
உங்களின் வெண்முரசு எனக்கு ஒரு பெரிய கொடை. அதற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள். வலைத்தளத்தில் சில முறை பிந்தியும், சில முறை அவசரத்திலும், கவனமில்லாமலும் படித்ததனால் இப்பொழுது மறுபடியும் இந்த்ரநீலத்தில் தொடங்கி நேரடியாக புத்தகத்தில் மறுவாசிப்பு செய்யலாம் என தொடங்கி கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் படித்து இன்றைக்கு தான் இந்த்ரநீலத்தை முடித்தேன். பிறகு ராமகிருஷ்ணரின் கத்தாமிர்தத்தை திறந்து எதோ ஒரு பக்கத்தை படிக்கலாம் என்று படித்த பொழுது அவர் வ்ரிந்தாவனம் சென்று கண்ணனை தேடி அழுத பக்கங்கள் வந்தன. மனதுக்கு மிகவும் நெகிழ்வாக இருந்தது. முடித்துவிட்டு தற்செயலாக உங்களின் வீடியோ பார்க்க நேர்ந்தது. சில கணம் ஒரு ஏமாற்றமே இருந்தது. இப்படி சட்டையும் பேண்ட்டும் அணிந்து சாதாரணமாக வாழும் ஒரு சக கால மனிதர் எழுதியதா இந்த படைப்பு என்று எண்ணிய பொழுது வெண்முரசின் சிறப்பு ஒரு படி குறைந்து விட்டது போல் இருந்தது. இன்னும் ஒரு நூறு இருநூறு வருடங்களுக்கு பிறகு, உங்களைப்பற்றிய கதைகளும் தொன்மங்களும் உருவான பிறகு, இந்த பிரச்சனை இருக்காது என்று தோன்றுகிறது. அல்லது இப்பொழுதே ஒரு ரிஷி போன்ற தாடியும், எங்கோ முடிவிலியை நோக்குகின்ற தோரணையும் கொண்டுவிட்டால் ஓரளவு சமன் செய்து விடலாம் என்று நினைக்கிறேன் :).
கடந்த இரண்டு மாதங்களாக ஏதோ வேகம் வந்ததுபோல் நிறைய்ய படிக்கிறேன். சுத்தமாக அன்றாட செய்திகளில் மனம் செல்லாமல் ஏதோ படித்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது. சுராவின் ஒரு புளியமரத்தின் கதை, பின்பு ஜே ஜே சில குறிப்புகள் படித்தேன். இரண்டுமே எனக்கு ஒன்றும் பெரியதாய் படவில்லை. புளியமரத்தின் கதை முதலில் நன்றாகவும் பிறகு காற்றுஇறக்கிவிட்ட பலூன் போல சென்றதாக தோன்றியது. ஜே ஜேயில் ஆங்காங்கே சில அறிய முத்துக்கள் கிடைத்தாலும் எதோ ஆசிரியர் தன அறிவு பலத்தை ஒரு கதாபாத்திரத்துக்கு கொடுத்து அதை வைத்து முன் சென்றது மாதிரி இருந்தது. பின்பு உங்களின் விமர்சனங்களை படித்தேன். புளியமரத்தின் குறியீடுகளை எப்படி விரித்துக்கொணடே செல்லலாம் என்று எழுதியிருந்தீர்கள். புரிகிறது ஆனால் மனம் ஈடுபடவில்லை. உங்கள் தளத்தை தொடர்ந்து, பூமணி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், தீ ஜா இவர்களின் சில படைப்புகளை கடந்த சில வருடங்களாக படித்துள்ளேன். உங்கள் நாவல்களிலேயே காடு, ஏழாம் உலகம், அறம், ஆழ் நதியை தேடி, இன்றைய காந்தி படித்தேன். விஷ்ணுபுரம் இரு முறை தொடங்கி முடிக்கவில்லை. படிப்பதற்கான அழைப்பு வர வில்லை என்று நினைக்கிறேன். அதே போல் ஆங்கிலத்தில் பட்டியலிட்டு பல நாவல்களை படித்தேன். ஓரளவுக்கு விரிவாக எழுதலாம், ஆனால் இவற்றிக்கெல்லாம் பிறகு, நான் ஒரு இலக்கிய வாசகனோ இல்லை அந்த இடத்திற்கு செல்ல விழைபவனோ அல்ல என்று புரிந்துகொடுள்ளேன்.
இன்றைய காந்தி என்னை வெகுவாக பாதித்தது. காந்தியை பற்றிய கண்ணோட்டத்தை அரவிந்தரின் எழுத்துக்களில் இருந்து, பின்பு அஷோகானந்தா அவரின் எழுத்துக்களில் இருந்தே பெற்றுக்கொண்டிருந்தேன். இருவருமே பெரிய ஆளுமைகளென்பதால், அக்கருத்தை அப்படியே கொண்டிருந்தேன். (அஷோகானந்தாவின் மாணவி கார்கி தான் விவேகானந்தரை பற்றி மேற்கில் பல செய்திகளை திரட்டி 6 தொகுதிகளாக வெளியிட்டிருந்தார் ). உங்களின் புத்தகம் படித்த பிறகு, காந்தி எனக்கு ஒரு உளம் கனிந்த ஆசானாகிவிட்டார். பல விஷயங்களில் என் நோக்க்கே இதனால் மாறிவிட்டது. தங்களுக்கு நன்றி.
மன்னிக்கவும் எங்கெங்கோ சென்று கொண்டிருக்கிறேன். நான் எழுதவந்தது, உங்கள் மற்றும் நான் படித்த வேறு எழுத்துக்களிலேயே வெண்முரசு போல் என்னை உள்ளிழுத்து கொண்டது வேற ஏதும் இல்லை. அது என்னில் பலமுறை எழுப்பிய நெகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளவதே நானும் என் மனைவியும் பேசியதை வெளியுறைப்பது போல் ஆகும் என்று தோன்றுகிறது. பல முறை வேலை நிமித்தமாக சலிப்புடன் எழுந்த நாட்களில், உங்கள் வலைதளத்தில் வெண்முரசு படித்து பெரும் உந்துதல் பெற்றுள்ளேன். இந்த கடிதம் எழுதும் இடைவெளியில் காண்டீபம் புத்தகத்தை தொடங்கினேன். இதை நீங்கள் சித்பவானந்தருக்கு சமர்ப்பித்துள்ளீர்கள். நான் கல்லூரி முதல் ஆண்டில் அறிமுகம் இல்லாமல் கையில் கிடைத்த சித்பவானந்தரின் கீதை வ்யாக்யானம் படித்து பின்பு அதன் வழியாக சில புரிதல்களை அடைந்தேன். அதனால் அவர் எனக்கும் மிக அணுக்கமானவர். இந்த தொடர்புகளையெல்லாம் நோக்கும் பொழுது என் மீது நல்லாசிகள் விழுந்து கொண்டே இருக்கின்றது என்றே தோன்றுகிறது. நான் தான் கவனிப்பதில்லை போலும்.
மீண்டும் தங்களின் வெண்முரசு கொடைக்கும் சாதனைக்கும் வாழ்த்துக்கள். எனக்கு குழந்தைகள் இல்லை. முயற்சி செய்து இதுவரை பயனில்லை. இனியும் ஒரு குழந்தை பிறந்தால், அதற்க்கு வெண்முரசு தானாக படிக்கின்ற அளவுக்கு தமிழ் கற்றுத்தற வேண்டும் என எண்ணியுள்ளேன். அது குழந்தைக்கு நான் அளிக்கும் கொடை மற்றும் என் கடமை என்றே கருதுவேன்.
அன்புடன்,
ராஜ்
அன்புள்ள ராஜ்
சிலசமயம் சிலவற்றை ஓங்கிச் சொல்லவேண்டியிருக்கிறது- தன்னையும் தன் படைப்புக்களையும் பற்றிக்கூட. தமிழ்ச்சூழலில் எப்போதும் அதற்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது. ஏனென்றால் இங்கே பெருவாரியானவர்களுக்கு வாசிப்பு இல்லை. வாசிப்பவர்களிலேயே மிகச்சிலருக்குத்தான் அடிப்படை கலைப்புரிதலும் அறிவுத்தள அறிமுகமும் இருக்கிறது. சூழலில் உள்ள பாமரர்களை நோக்கி பேசும் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. அவையே பெரும்பாலான குரல்கள்.
அக்குரல்களால் நம் கலை, நம் பங்களிப்பு பலசமயம் அறிமுக வாசகர்களிடம் இருந்து மறைக்கப்படுகிறது. அவர்கள் வாசிக்காமலாகிறார்கள். அல்லது எளிதாக வாசிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு இது கிளாஸிக் என்று எழுதியவனே சொல்லவேண்டியிருக்கிறது. அது பாரதி முதல் ஜெயகாந்தன் வரை அனைவருக்குமே தேவையாக இருந்திருக்கிறது. பெரிய எடை உடைய ஒன்றை தக்கை என நினைத்து தூக்கமுயல்பவர்களிடம் அதன் மெய்யான எடையைச் சொல்வதுதான் அது.
அது வெற்றுத்தற்பெருமை அல்ல, தன் தகுதியையும் இடத்தையும் அறிந்து கூறுவதே. அதைக்கூறாத கலைஞர்கள் குறைவு. அதைக்கேட்டு பாமரர்கள், அவர்களை நோக்கிப்பேசும் முதிராக்குரல்கள் எரிச்சலுறும். அவர்கள் பொருட்படுத்தத் தக்கவர்கள் அல்ல. நாம் பேசுவது வாசிப்பவர்களை நோக்கி. உண்மையான ரசனையுடன் வெண்முரசை வாசிப்பவர்கள் அது எவ்வகையிலும் பெருமைக்கூற்று அல்ல என்று அகத்தே உணர்வார்கள். தன்னைப்பற்றிய அறிதலை அடையாதவன் கலைஞன் அல்ல
என்குரல் அரிதான ஒன்றை ஒருகணமேனும் கண்டுவிட்டவனின் நிமிர்வு கொண்டது. அரிதான சில உண்டு என அறிந்தவர்களுக்கு அது புரியும்
ஜெ