”ஒருவன் தன் சொந்த மொழியிலேயே பேரிலக்கியங்களை வாசிப்பதென்பது ஓரு பெரும் வரம். உலகின் மிகச்சில மக்களுக்கே அந்த அதிருஷ்டம் உள்ளது. கிரேக்கர், சீனர்… இந்தியாவில் தமிழர்களுக்கு மட்டுமே அது சாத்தியம். எனக்கு தமிழ் தாய்மொழியாக இல்லாவிடாலும் தாய்க்குத்தாய்மொழி அல்லவா” .
– ஆற்றூர் ரவிவர்மா http://www.jeyamohan.in/?p=2187
ஆனால் எனக்கும் இது சாத்தியமாகியிருக்கிறது. தமிழனாக இல்லாவிட்டாலும்.
எனவே….!!
நன்னய்ய பதினோராம் நூற்றாண்டில் ஆந்திர மகாபாரதமும், அதன் பின்னர் திக்கன்ன சோமயாஜி, எர்றப்ரகட ஆகியோர் அதை தொடர்ந்தும் எழுதியிருக்கிறார்கள். அல்லசானி பெத்தன்ன, கிருஷ்ணதேவராயர் சபையில் அஷ்டதிக்கஜங்களில் முதலாமவராக இருந்திருக்கிறார். இவர் ச்வரோசிஷமனு சம்பவம் எழுதியவர். இன்னும் பலர் உள்ளனர். கண்டுகூரி வீரேசலிங்கம் பல இலக்கிய வடிவங்களை தெலுகில் முதலில் எழுதியவர்.
விஸ்வநாத சத்யநாராயணா என்பவர் வேயி படகலு என்ற அற்புதமான நாவலை எழுதியிருக்கிறார். ஆயிரம் பக்கம். இருபத்தியெட்டு நாட்களில் எழுதப்பட்டது. எழுதப்பட்டது என்று சொல்வதை விட சொல்லப்பட்டது என்று சொல்லலாம். சீட்டாடிக்கொண்டே இருக்கும்போது டிக்டேட் செய்யப்பட நாவல் அது. நமது முன்னால் பிரதமர் நரசிம்ஹா ராவ் அதை ஹிந்தியில் மொழிபெயர்த்திருக்கிறார். வேயி படகலு என்பது ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன் விஷ்ணுவை தாங்கி இருப்பது, நாவலில் இது பெரும் படிமமாக வருகிறது. நான் இந்த புத்தகத்தை தேடி தேடி அலைந்து கடைசியில் விலாலாந்திரா பப்ளிகேஷன்ச்ல் கிடைக்கப்பெற்று சுமார் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால் படித்தேன். நல்ல நாவல். விஷ்ணுபுரம் இதன் பிறகு தான் படித்தேன். :)
ஆனால் இன்றைய நிலையில் தெலுங்கில் இலக்கியவாதிகள் என்று யாரும் இல்லை என் அளவுகோல்களில் . எனவே தமிழில் மட்டும் தான் என்று சொல்வது கொஞ்சம் அதிகம். மிகப்பழமையான இலக்கியங்கள் தமிழில் உள்ளன. அதை தமிழின் பெருமையாக சொல்லலாம். ஆனால் அது மற்றவற்றில் இலக்கியங்களும் பேரிலக்கியங்களும் இல்லை என்று மறுப்பதாக இருக்கக்கூடாது.
இது எனது வேண்டுகோள் மட்டுமே.
-ராம்
[குழும விவாதத்தில்]
ராம்,
கலைச்சொல்லை கொஞ்சம் பின்னணியுடன் புரிந்துகொண்டால் இச்சிக்கல்வராது.பொதுவாக கிளாசிக்ஸ் என்ற பொருளில்தான் பேரிலக்கியம்,செவ்விலக்கியம்என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிளாசிக் லாங்வேஜ் என்ற சொல்லாட்சிசெம்மொழி என்று மொழியாக்கம் செய்யப்படுகிறது
ஒரு குறிப்பிட்ட வகைமையில் ஒரு குறிப்பிட்ட தளத்தில் சிறந்ததையும் ஒருகுறிப்பிட்ட இலக்கியப்போக்குக்கு முன்னுதாரணமாக இருப்பதையும் கிளாஸிக்என்று சொல்வதுண்டு. கிளாசிக் என்ற சொல் இடமறிந்து புரிந்துகொள்ளபடவேண்டிய
ஒன்று. பார்க்க [what is a classic. T.S.Eliot]
ஆற்றூர் போன்ற மரபான மொழியியல்வாதிகளின் நோக்கில் கிளாசிக் என்பது இன்னும் குறிப்பான சில
பொதுவரையறைகளைக் கொண்டது. செம்மொழி அல்லது கிளாசிக்கல் லாங்வேஜ் என்பது குறைந்தது 1000 வருட பழைமை கொண்டதாக இருக்க வேண்டும் எனபதே பரவலான அளவுக்கோல்.
அத்துடன் அந்த மொழி இன்னொரு மொழியில் இருந்து பிரிந்து, வளர்ந்து
உருவானதாக இருக்கலாகாது, அதற்கான சொற்களஞ்சியம் மூலத்தன்மை கொண்டதாக இருக்கவேண்டும், அதற்கான இலக்கணம் இன்னொரு மொழியில் இருந்து பெற்றுக்கொண்டதாக இருக்கலாகாது – போன்ற இரண்டாம்கட்ட இலக்கணங்களும் உண்டு.
இந்திய மொழிகளில் சம்ஸ்கிருதமும் தமிழும் பிராகிருதமும் பாலியும்மட்டுமே கால அடிப்படையில் செம்மொழிகள். இரண்டாம் கட்ட இலக்கணத்தின்அடிப்படையில் தமிழும் சம்ஸ்கிருதமும் மட்டுமே செம்மொழிகள்.
அந்த செம்மொழியில் உருவாகிய நூல்களே செவ்விலக்கியம் அல்லது பேரிலக்கியம்எனப்படுகின்றன. அவை குறைந்தது 1000 வருடம் பழையவையாக இருக்கவேண்டும்.அந்தமொழி மற்றும் பண்பாட்டின் அடிப்படைகளை நிறுவக்கூடியவையாகஇருக்கவேண்டும். மேலும் அவை அந்தமொழி எல்லைக்கு அப்பால் விரிந்துமானுடத்தின் பொதுச்சொத்தாகக் கருதப்படும் அழகியல் தகுதியும் கருத்தியல்தகுதியும் கொண்டிருக்கவேண்டும்.
இதற்கும் அப்பால் செவ்விலக்கியத்திற்கு சில குண இயல்புகளும் உண்டு. கிளாசிஸம் , செவ்வியல் என்று அவை சுட்டப்படுகின்றன. அவை முறையே,
1.சமநிலைத்தன்மை. அதாவது உணர்ச்சிகள், தர்க்கங்கள், தரிசனம், கவித்துவம்ஆகியவை நடுவே மிகையில்லாத ஒரு சமநிலை அதில் இருக்க வேண்டும்.
2.எக்காலத்துக்கும் உரிய பண்புக்கூறுகளை முன்வைக்கும் தன்மை . ஒருகாலகட்டத்துக்கோ ஒரு இடத்துக்கோ உரியனவாக இல்லாமலிருக்கும் தன்மை.
3.அதில் இருந்து மேலும் மேலும் ஆக்கங்களை உருவாக்கும் தன்மைகொண்டிருக்கவேண்டும்.
இந்த அம்சங்களுக்கு நேர்மாறான தன்மை கொண்ட ஆக்கங்களை ரொமான்டிக் படைப்புகள் கற்பனாவாத படைப்புகள் என்பது வழக்கம். அவை
1. எல்லா தளங்களிலும் உச்சத்தை நோக்கிச் செல்வதையே இலக்காகக் கொண்டவை. சமநிலையைப்பற்றி கவலைப்படுவதில்லை
2. ஒருகாலகட்டத்தின், ஒரு பகுதியின் வரலாற்றுடனும் மனநிலையுடனும் பிணைந்தவை.
3. தங்கள் அளவில் தனித்தன்மை கொண்டவை. மறு ஆக்கம் செய்யப்படமுடியாதவை
செவ்வியலுக்கு நேர் எதிரான இன்னொரு போக்கு என்பது நாட்டார் அழகியல்எனலாம் [ஃபோக் டிரெடிஷன்] நாட்டார் மரபில் செவ்வியலில் உள்ள பலஅம்சங்கள் இல்லை.
1. ஆசிரியன் என்ற கருத்து இல்லை. அவை ஒரு சமூகத்தின் பொதுச்சொத்துக்கள்
2. இலக்கணம் என்ற கட்டமைப்பு அல்லது கட்டுப்பாடு இல்லை. அவை தன்னிச்சையானவை
3. நிலையான வடிவம் இல்லை. மாறிக்கொண்டே இருப்பவை.
உதாரணமாக கிரேக்க நாடகங்களை செவ்வியல் ஆக்கங்கள் எனலாம். வேர்ட்ஸ்வர்த்கவிதைகளை கற்பனாவாத ஆக்கங்கள் எனலாம்.
*
இந்த அடிப்படையில்தான் ஆற்றூர் பேரிலக்கியங்களை அவை உருவான மொழியையே தாய்மொழியாகக் கொண்டு வாசிப்பது பற்றி சொல்கிறார். ’நல்ல படைப்புகள்’ இல்லை என்று அல்ல. தெலுங்கில் நீங்கள் சொன்னது போன்ற நூல்கள் மலையாளத்தில் இருக்காதா? இந்தியாவின் வேறு மொழிகளில் இருக்காதா?
துளசிதாசரும் கபீரும் குருநானக்கும் சைதன்யரும் எல்லாம் இலக்கியம் படைக்கவில்லையா? இலக்கியப்பேராசிரியரான ஆற்றூர் அப்படி சொல்வாரா? இப்படி யோசித்திருந்தால் எளிதில் இந்த பதில்களை நீங்களே கண்டடைந்திருக்கலாம்
மேலே சொன்ன செம்மொழிகளில் தமிழ் மட்டுமே இன்று தாய்மொழியாக உள்ளது.தாய்மொழி என்னும்போது ஒருவன் அந்த மொழியிலேயே பிறந்து அதையே முதல்மொழியாக கற்று அதை தன் அன்றாட வாழ்க்கையின் எல்லா தளத்திலும் கையாண்டு அதில் வாழ்கிறான் என்று பொருள்.
இந்தியாவில் தமிழ், சம்ஸ்கிருதம் தவிட பிறமொழிகள் எதற்கும் செம்மொழி தகுதி உண்மையில் இல்லை. இன்று பல மொழிகளின் காலகட்டங்களை திட்டமிட்டு பின்னுக்குத்தள்ளுகிறார்கள்.கன்னடம், தெலுங்கு , வங்காளம் போன்ற மொழிகளை பொதுவாக அபப்ரம்ஸ பாஷா என்றுசொல்வதே மரபு. அதாவது மூலமொழியில் இருந்து மருவியமொழிகள். அவற்றின் சொற்களஞ்சியம் இன்னொரு மொழியில் இருந்து பெறப்பட்டது. அவற்றின் இலக்கணம் எடுத்தாளப்பட்டது. அவை செம்மொழிகளாக ஆகமுடியாதென்பதற்கு இவை எல்லாம் காரணம்.
கன்னடம் 11 ஆம் நூற்றாண்டில்தான் ஒரு தனிமொழியாக பரிணாமம் கொள்ளஆரம்பித்தது. 12 ஆம் நூற்றாண்டுக்குப்பின்னரே அதில் தனி கன்னடத்தில்அமைந்த நூல்கள் வந்தன. அவை பெரும்பாலும் சம்ஸ்கிருத பிராகிருத நூல்களின்மொழியாக்கங்கள். அந்த மொழியின் முதல், முன்னோடி ஆக்கங்கள் என்ற அளவிலேயே அவற்றுக்கு முக்கியத்துவம்.
தெலுங்கும் ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டிலேயே தனி மொழிக்கான அடையாளங்கள் கொள்ள ஆரம்பித்தது. 12க்கு பின்னரே தனிதெலுங்கு நூல்கள் உருவாயின. அவையும் மொழியாக்க நூல்கள். மலையாளத்தில் 16 ஆம் நூற்றாண்டுக்கு பின்னரே மலையாள மொழி என்ற அம்சம் அதிகம் கொண்ட நூல்கள் சில வந்தன. முழுமலையாள நூல் என்பது துஞ்சத்து எழுத்தச்சனின் ராமாயண மகாபாரத மொழியாக்கங்கள்.
இந்த அம்சத்தை நாம் குறிப்பாக கவனிக்க வேண்டும். இந்தியாவில் 10 ஆம்நூற்றாண்டுக்குப்பின்னரே மொழிகள் பிரிந்து புதிய மொழிகள் உருவாகஆரம்பித்தன. இது பக்தி இயக்கத்தின் கொடை. இந்த மொழிகள் சிறுஉள்வட்டமொழிகளாக [டைலக்ட்ஸ்] பல்வேறு பகுதிகளில் பேசப்பட்டு வந்தவை.சூத்திரர்களின் பேரியக்கமான பக்தி இயக்கம் இந்தமொழி பேசிய மக்களின்பண்பாட்டை மையத்துக்கு கொண்டுவந்தது. இந்த மக்களை ஒருங்கிணைத்தது. சிறியகுலமொழிகள் இணைந்தன. பெரியமொழிகளின் சொற்களையும் இலக்கணத்தையும்பெற்றுக்கொண்டன. அவ்வாறுதான் இந்தியாவின் இன்றைய பிராந்தியமொழிகள்
உதயமாயின
இந்த பிரம்மாண்டமான பண்பாட்டுஎழுச்சியை வேதகாலத்திற்குப் பின்னர் இந்தியநிலத்தில் நிகழ்ந்த மிகபெரிய வரலாற்று கொந்தளிப்பு என்று இ.எம். எஸ்சொல்கிறார். இத உபதேசிய அம்சங்கள் உருவான வரலாற்றை அவர் கேரளம்மலையாளிகளின் மாத்ருபூமி என்ற ஆரம்பகால நூலில் மிக அழகாக சொல்கிறார்.பலவகையிலும் ஒரு முன்னோடி நூல் இது. பின்னர் நெடுங்காலம் கம்யூனிஸ்டுக்கட்சியால் வெளியிடப்படாது தடுக்கப்பட்ட இந்நூல் இ.எம்.எஸ் ஆராய்ச்சிமையத்தால் 90களில் மறுபதிப்பாகியது.
மிக சுவாரசியமான அம்சம் என்னவென்றால் இந்தியாவை இன்றும்ஒருங்கிணைத்துக்கட்டியிருக்கிற ’பான் இண்டியன்’ பண்பாட்டுக்கூறுகள்பெரும்பாலானவை பக்தி இயக்கத்தால் உருவானவை. அதாவது எந்த அலை இந்தியாவை உருவாக்கியதோ அதுவே கன்னடம் தமிழ் மலையாளம் வங்கம் ஒரியா என்ற தனிக்கூறுகளையும் உருவாக்கியது. இவை அவற்றின் ஒரு பகுதியாகவே இயங்கமுடியும்.
இந்தியாவின் எல்லா பிராந்தியமொழிகளும் ராமா, கிருஷ்ணா என்றுகூவியபடித்தான் பிறந்தன என்கிறார் இஎம்எஸ்.பக்தி இயக்கத்தை சாமானியஇந்தியர்களின் முதல் புரட்சி என்கிறார். அந்த இயக்கத்தில் இருந்தே
இந்தியாவில் பின்னர் வந்த எல்லா மக்களியக்கங்களும் தங்கள் முன்மாதிரிகளைஉருவாக்கிக்கொண்டன என்கிறார். இடதுசாரிகளும் ஆழ்வார்கள் முதல் கபீர்வரையிலான பக்தி இயக்கத்தையே முன்னோடியாகக் கொள்ளவேண்டும் என்கிறார்.
திசை திரும்பிவிட்டேன், பசு செத்ததும் மோரின் புளிப்பும் போய்விட்டதுஎன்று மலையாளப்பழமொழி. கேரளத்தில் யாருக்குமே இ எம் எஸ் பற்றிஞாபகமில்லை. தமிழ்நாட்டில் வரலாற்றை பற்றி அடிப்படை வாசிப்புள்ளமார்க்ஸிஸ்டுகளும் இல்லை. சுயமான வரலாற்றாய்வு கருவிகள் இருந்தும் திராவிட இயக்கத்தின் வரலாற்றுபிரக்ஞை இல்லாத கோஷங்களை கடன்வாங்கிய அரைவேக்காடுகள் இவர்கள்.
மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட மொழிகளில் அந்தமொழிகள்ஆரம்பிக்கும்போதே செவ்வியல் அம்சம் இல்லை. அதைச்சுட்டிக்காட்டவே கொஞ்சம்வழிவிட்டு சென்றேன். இந்த மொழிகள் பக்தி இயக்கத்தின் கொடைகள். அதுகற்பனாவாதப் பண்புகள் கொண்ட ஒரு மக்கள் இயக்கம். ஆகவே கற்பனாவாதப்பண்பும் நாட்டார் பண்பும் கொண்டதாகவே இம்மொழிகளின் ஆரம்பகாலஇலக்கியங்கள் இருக்கின்றன. ஆகவே அவை பேரிலக்கியப் பண்புக்கு நேர் எதிரானவை. சிறந்த உதாரணம் துஞ்சத்து எழுத்தச்சனின் அத்யாத்ம ராமாயணம். அது கற்பனாவாத ஒளி பட்ட ஒரு நாட்டார் படைப்பு போல உள்ளது. இலக்கணத்திற்குள் வந்து அமைந்த நாட்டுப்பாடல் போல உள்ளது.
இந்த அம்சத்தையே ஆற்றூர் குறிப்பிடுகிறார். இன்று ஒரு செவ்வியல் படைப்பைசெம்மொழியையே தாய்மொழியாகக் கொண்டு வாசிக்க தமிழில் மட்டுமே முடியும்.
கடைசியாக ஒன்று, இன்று செம்மொழி போட்டிக்காக காலத்தை முன்னால்தள்ளி கன்னட தெலுங்கு மொழிகளில் உள்ள பழைய ஆக்கங்களை முன்வைக்கும்போது ஒரு பெரிய சிக்கல் உருவாகிறது. இவ்வாறு ஆகப்பழைய கன்னட நூலாக முன்வைக்கப்படும் நூலில் கன்னடமே குறைவு, அது கன்னட லிபிகளில் எழுதப்பட்ட பிராகிருத ஆக்கம். இது மலையாளத்துக்கும் பொருந்தும். எழுத்தச்சனுக்கு முந்தைய கண்ணச்ச ராமாயணம் போன்ற நூல்கள் 90 சதவீதம் தமிழ்தான். இணைப்பு ஒலிகள் மட்டுமே மலையாளம். பாஷா பாரத சம்பு போன்ற நூல்கள் முக்கால்வாசிசம்ஸ்கிருதம்தான்.
டாக்டர் கெ எம் ஜார்ஜ் அவர்கள் தொகுப்பாசிரியராக அமைந்து கேந்திர சாகித்ய அக்காதமி வெளியீடாக வந்துள்ள இந்திய இலக்கிய வரலாறு நான்கு பகுதிகள் ஒரு ஒட்டுமொத்த சித்திரத்தை உருவாக்க கூடியவை
ஜெயமோகன்