அறிவியலுக்கு அப்பாலுள்ள அறிதல்கள் தேவையா?.

யாக்கவ் பெரெல்மான்

அன்புநிறை ஜெ,

சங்கஇலக்கியம் மற்றும் பண்டைய இந்திய இலக்கியங்களில் வண்ணத்துப்பூச்சியின் இடம் காலியாக இருக்கிறது என்ற பார்வைக்கு காரணம் ‘குறைபட்ட வாசிப்பு’ என்பது மறுக்க முடியாத பதில். ‘வண்டு-இசை இங்கே பட்டாம்பூச்சியின் இடத்தை நிரப்புகிறது’, என்ற தெளிவை தந்தமைக்கு நன்றி. இது என்னில் ஒரு தொடக்கம் செய்தது. அது குறித்து விரிவாக மற்றொரு தருணத்தில் எழுதுகிறேன்.தொல்தமிழ் இலக்கியத்தில் பட்டாம்பூச்சி ஏன் இல்லை?

நான் பல வருடங்களாக பரவலாக கேட்கும், பார்க்கும் தலைப்பாக “இந்திய கலாச்சாரமும் அதன் அறிவியலும்” தொடர்ந்து வருகிறது. நாம் தினம் செய்யும் சடங்குகளில், வீட்டு பராமரிப்பு முறைகளில் அறிவியலைக் கொண்டு விளக்கினால் எண்ணற்ற பயன்கள் இருப்பதாய் உணரலாம் போன்ற பேச்சுக்கள் நுரைத்து பெருகுகின்றன. நம்மவர்கள் பொது அறிவையும், அறிவியலையும் குழப்புவதை அனுதினமும் காண்கிறேன்.

அறிவியல் உண்மை இருக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை ஆனால் ஏன் அனைத்திற்கும் ஆதாரம் தேடி அலையவேண்டும். மனம்-உடல் நெசவை ஒவ்வொரு செயலிலும் தர்க்கபூர்வமாக விளக்கும் அவசியம்தான் என்ன? ஒருபுறம் மேலை அறிவின் மேட்டிமைவாதத்திலிருந்து பாதுகாக்க இம்முயற்சிகள் நடைபெறுவதாக வைத்துக்கொள்வோம், ஆயினும் செயலின் தருணத்தில் தரவுகளை மட்டும் மனதில் வைத்திருப்பதால் வரும் ‘அனுபவித்தல்’ இழப்பை பற்றியே நான் அஞ்சுகிறேன். மேலேழும் பந்து கீழே விழுவது எறிவிசை, புவியீர்ப்பு விசை, எறிகோணம் ஆகியவற்றால் நிகழ்கிறது, இதில் ஆச்சரிய படுவதற்கு ஒன்றும் இல்லை. இப்படியே சென்றால் நான் விளையாட, பரவசம் கொள்ள முடியாமல் போய்விடுமே.

“என்னுடைய விருப்பம் அந்த பந்து மேலேசெல்ல வேண்டும் என்பது, இப்பூமியின் விருப்பம் அது கீழே வந்திறங்க வேண்டும் என்பது. நம்மைவிட பூமி பெரியதாகையால் அதன் விருப்பமும் பெரியது. அதனால் அதன் எண்ணமே கடைசியில் வெல்லும்”, இவ்வாறு நான் சிறு குழந்தைக்கு பதில் சொல்கிறேன். அறிவியல் காரணங்களை தாண்டி இம்மாதிரியான பதில்களே நிறைவை தருகின்றன. ‘ஏனென்றால் இது எண்ணில் எழும் பதில்’, என்ற ஆணவமாக இருக்கலாம். தத்துவங்களும் கதைகளும் ஒவ்வொரு நிகழ்வையும் பொருள்களையும் மனவெழுச்சியுடன் காணவைக்கிறது. அடிப்படை அறிவியல் அறிவை கொண்டு பல தருணங்களில் சிக்கலை தீர்த்துள்ளேன். இருந்தும் மனம் கொண்டாட ‘கற்பனையில்’ உள்ள எண்ணற்ற வாய்ப்புகள் அறிவியலில் இல்லை என்பதையே நம்பத் தலைப்படுகிறேன்.

இவர்கள் கூறும் மொண்ணையான காரணங்கள் மக்கள் அன்றாடத்தை சலிப்புநிறைந்ததாக மாற்றுவதையே காண்கிறேன். சற்று முயன்றால் அறிவியலை பயின்று விடலாம். கற்பனையை மேன்படுத்த செய்யவேண்டியதென்ன என்றே நான் சிந்திக்கிறேன். சடங்குகளில், பராமரிப்புகளில் கற்பனை வந்து சந்திக்கும் புள்ளி எங்குள்ளது? நிகழ்வுகளில் கற்பனையை விரிக்க, மாற்ற முடிந்த என்னால் இங்கே வரலாறு மற்றும் குறியீட்டு காரணங்களையே மனதில் பிரப்பிக்க இயல்கிறது. கோயில்கள், சிற்பங்கள், ஆகம முறைகளில் திகழும் குறியீட்டை இங்கு நான் வினவவில்லை.
நன்றி

ஆனந்த் குரு

அன்புள்ள ஆனந்த்,

சுவாரசியமான சிந்தனை. மானுடகுலத்திற்கு முழுக்க ஒரேவகையான சிந்தனைதான் இருக்கவேண்டுமா, ஏன் வேறுபார்வையில் சிந்திக்கக்கூடாது என்பது முக்கியமான கேள்விதான்.

முதலில் அறிவியல் உருவாக்கி அளிக்கும் தர்க்கப்பார்வையில் அழகியல் ஆன்மிகம் ஆகியவற்றை விளக்கும் அசட்டுத்தனத்தை முற்றாக நிறுத்திவிடவேண்டும். இவை வேறுவகையான அறிதலும் வெளிப்பாடும் கொண்டவை, வேறுவகையான உலகப்பார்வைகள் என்று புரிந்துகொள்ளவேண்டும்.

அறிவியல் இன்று உலகளாவிய ஒற்றைப் பார்வையை உருவாக்குகிறது. உலகையே சரசாரிப்படுத்துகிறது. இப்படி மானுடவரலாற்றில் என்றுமே இருந்ததில்லை. முன்பு ஒவ்வொரு பண்பாட்டுக்கும் உரிய பார்வைகள் இருந்தன. இன்று அந்த தனித்தன்மை இலக்கியம் – ஆன்மிகத்தில் மட்டுமே எஞ்சியிருக்கிறது.

இதில் இன்னொரு சிக்கல் உண்டு. நாம் சராசரிக்கு மாற்றான, இன்னொரு பார்வையை குழந்தைக்கு அளிப்பதன் வழியாக அதை சராசரிக்குக் கீழாக அமைத்துவிடக்கூடாது. நாம் அளிக்கும் கற்பனைகளோ, வேறுபட்ட தர்க்கங்களோ பொதுவான அறிதலை அக்குழந்தைக்கு இயலாததாக ஆக்கிவிடலாகாது.

இன்று அறிவியல் உருவாக்கி அளிக்கும் பார்வை மூன்று அடிப்படைகள் கொண்டது. புறவயப்பார்வை, பொதுநிரூபணத்தன்மை, பயன்பாட்டுநோக்கு. அந்த கோணத்தில் ஒவ்வொன்றையும் அறிமுகம் செய்து விளக்கியபின் அதற்கு மேலதிகமாக நீங்கள் கூறுவதுபோல தத்துவ – அழகியல் – ஆன்மிக நோக்கை அளிக்கமுடியுமென்றால் அது நன்று.

ஏனென்றால் அறிவியலே நம் புறவுலகை, சமூகத்தை உருவாக்கியிருக்கிறது. அதை முற்றாக அறியாமல்போகும் ஒருவர் புறவுலகை அறியமுடியாமல்,  சமூகத்துடன் உரையாடமுடியாமல் ஆகிவிடக்கூடும். அது ஒரு ஊனமாக ஆகிவிடக்கூடும்.

அறிவியலை முற்றுமுடிவானதாக சொல்லவேண்டியதில்லை. அறிவியல்கொள்கைகளை finite  ஆக கருதவேண்டியதில்லை. அதற்கப்பால் யோசிக்கலாம். ஆனால் நவீன அறிவியலில் அதற்கும் இடமுண்டு. அறிவியல் அளிக்கும் அந்த இடத்தை பயன்படுத்திக்கொண்டுதான் அறிவியல்புனைகதைகள் பேசுகின்றன.

அறிவியலை சலிப்பூட்டும் தர்க்கமாக, தகவல்களாக நாம் அளிக்கவேண்டியதில்லை. அதையே கற்பனைக்கு இடம்கொடுக்கும் புதிர்களாக மாற்றிக்கொள்ள முடியும். அறிவியலின் கொள்கைகளை பிரபஞ்ச விந்தைகளாகவே அறிமுகம் செய்யமுடியும். பத்தாம் வகுப்பு இயற்பியல் பாடபுத்தகம் சலிப்பூட்டுவது. யா பெரெல்மானின் பொழுதுபோக்கு பௌதிகம் என்ற நூல் ஒரு கொண்டாட்டமான கல்வியை முன்வைக்கிறது

ஒர் அடிப்படை அறிதலாக அறிவியலை அளித்துவிட்டு மேலதிக அறிதல்முறைகளை நாம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யலாம். கற்பனையும் உள்ளுணர்வும் அதற்குரிய வழிகள். புதியநோக்குகள் உருவாக அது வழிவகுக்கலாம்

ஜெ

முந்தைய கட்டுரைஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்– எதிர்வினை
அடுத்த கட்டுரைஅந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 4