[ 13 ]
இருபத்தேழு ஆண்டுகளுக்கு பின்னர் அவளை சந்தித்தேன். ஸ்ரீராஜவிஜயேஸ்வரி ஓடிக்கொண்டிருந்த அதே திரையரங்கில். ராஜமந்திரியில் நகருக்கு வெளியே அப்போது புகழ் இழந்து ’பிட்’ படங்கள் மட்டும் வெளியிடும் இடமாக மாறிவிட்டிருந்த ஸ்ரீவெங்கடேஸ்வரா என்ற திரையரங்கில். நான் குண்டூரிலிருந்து அந்த அரங்கில் அந்தப் படத்தைப் பார்ப்பதற்காகவே வந்திருந்தேன்.
அந்த திரையரங்குக்கு அதேபடத்தைப் பார்க்க நான் நான்குமுறை முன்னரே வந்தது உண்டு. அங்கிருந்து திரும்ப ராஜமந்திரி போக ஆட்டோ கிடைக்காது. ஆகவே அங்கேயே ஓர் ஓட்டலில் அறை போட்டேன். அதுவும் பழைய ஓட்டல். கருங்கல்லில் வெட்டிய பழைய பாணி கழிப்பறை கொண்ட இடுங்கலான நீளவடிவ அறை. ஆஸ்பத்திரிபோல பச்சைநீல நிறமான படுக்கைவிரிப்புகள். சுவரில் பலவகைக் கறைகள். ஆனால் தண்ணீர் நன்றாக இருந்தது. குளித்துவிட்டு அறையை பூட்டிவிட்டு நேராக திரையரங்கு நோக்கிச் சென்றேன்.
வெங்கடேஸ்வரா திரையரங்கத்தைச் சுற்றி பெரிய சேரிதான் இருந்தது. நகரை ஒட்டி உருவாகும் அத்தகைய சேரிகளை நகரின் குப்பைக்கூடைகள் எனலாம். கழிப்பறை என்றும் சொல்லலாம். அது பெரும்பாலும் தாழ்வான நிலம். ஆகவே நகரின் மொத்தச் சாக்கடையும் அங்கேதான் வந்துசேரும். நகரம் அப்பகுதிமேல் மலம் கழித்துக் கொண்டே இருப்பதுபோல. அங்குள்ள நீர்நிலைகள் சாக்கடையால் நிறைந்திருக்கும். அத்துடன் நகரிலிருந்து லாரிகள் குப்பைகளை கொண்டுவந்து அங்கே கொட்டிக் கொண்டிருப்பார்கள்.
அந்தக் குப்பைமேடுகளை ஒட்டியே இடுங்கலான தெருக்களில் தகரக்கூரையும் ஓலைக்கூரையும் கொண்ட சிறுவீடுகள். உள்ளே இடமே இருக்காது. பெரும்பாலானவர்கள் சாலையில்தான் அமர்ந்திருந்தார்கள். அந்த திரையரங்கம் ஓட்டுக்கூரை போடப்பட்டது. வாசலின்மேல் இருந்த சுதையாலான இரண்டு சிங்கங்களில் ஒன்று உடைந்துவிட்டிருந்தது. திரையரங்கைச் சுற்றி முள்மண்டிக் கிடந்தது. மாலையில் அங்கே பெண்கள் மலம் கழிக்க செம்புகளுடன் சென்றுகொண்டிருந்தார்கள்.
நான் செல்லும்போது பாட்டு போட்டிருந்தார்கள். படம் பார்க்க ஒரு பதினைந்து பேர்தான் இருந்தார்கள். பலர் வெளியே சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் வெவ்வேறு வேலை விஷயமாக வந்து பொழுதைக் கொல்ல அங்கே வந்தவர்கள். ஒருவரை ஒருவர் பார்க்காமல் சிகரெட் பிடித்தபடி குனிந்து நின்றனர் சிலர். இளைஞர்கள் நாலைந்துபேர், தோற்றத்திலேயே அடிமட்ட வாழ்க்கையும் போதையும் குற்றப்பின்னணியும் தெரிந்தது. மூன்றாவது பாட்டு போடப்படும்போது இரண்டு பெண்கள் சேர்ந்து வந்தனர். மணியோசை ஒலித்து டிக்கெட் கொடுக்கப்பட்டதும் நான் டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றேன்.
பழங்காலத்து மரநாற்காலிகள். மூட்டைப்பூச்சிகள் கண்டிப்பாக இருக்கும். இரண்டு தூண் வரிசைக்கு நடுவே அழுக்கான பழைய திரைச்சீலை. சமீபகாலமாக வர ஆரம்பித்த சினிமாஸ்கோப் படங்களுக்காக திரையை இருபக்கமும் விரிவாக்கியிருந்தனர். அந்தப்படங்கள் திரையிடப்பட்டால் படத்தில் ஒருபகுதி தூண்களின் மேல்தான் ஓடும். நான்கு படிகளாக இறங்கிச் சென்ற தரை திரைச்சீலையைச் சென்றடைந்தது. தூண்களில் கரிய தார் பூசப்பட்டு சிவப்பு நிற தீயணைக்கும் உருளைகள் தொங்கின. திரையை ஒட்டி சிவப்பு நிறமான வாளிகளில் தீயணைக்கும் மணல். அவற்றை வெற்றிலைச் சாற்றை துப்புவதற்காகத்தான் பயன்படுத்துவார்கள்.
கால்களை நீட்டி இயல்பாக சாய்ந்துகொண்டேன். முதல்வகுப்பில் என்னையும் சேர்த்து மூன்றே பேர்தான். பெஞ்சில்தான் ஆளிருந்தது. மின்விசிறிகள் ஒட திரையின்மேல் அவற்றின் நிழல்கள் சுழன்றன. கதவு திறந்து மூடியபோது சரிந்த நிழல்கள் விழுந்து சினிமாவே ஓட ஆரம்பித்ததுபோல் இருந்தது. கறுப்பு வெள்ளை சினிமா என்பது ஒருவகை நிழல்தான். வாழ்க்கையின் ஒரு நிழல்காட்சி.
பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மனிதர்களை வெள்ளைத் திரைமுன் நிறுத்தி நிழல்விழச்செய்து அந்த நிழல்களை வரைந்து கொடுப்பார்கள். போட்டோ வருவதற்கு முந்தைய காலகட்டம். ஏழைகளின் ஓவியம் அது. ஆனால் அந்நிழல்கள் திகைப்பூட்டும் அளவுக்கு அந்த மனிதர்களைப் போலிருந்தனர் என்கிறார்கள். மனிதர்களை தொடர்ந்தே அலைந்து நிழல்கள் மனிதர்களை நகல் செய்ய கற்றுக்கொண்டிருந்தன போல.
என் அம்மா சினிமாவை ’நிகல்’ என்றுதான் சொல்வாள். நிகல் என்பது பேயும்கூடத்தான். அம்மா சினிமாவே பார்த்ததில்லை. சினிமாவில் தெரிவது பேயுருவங்களே என அவள் நம்பினாள். என்.டி.ஆரின் பேய். பானுமதியின் பேய். அவர்கள் மறைந்தாலும் பேய்கள் அப்படியே இருக்கும். அவற்றுக்கு மூப்பு இல்லை, மாற்றமும் இல்லை. அவர்கள் என்றோ எப்போதோ காட்டிய சில பாவனைகள் அழியாமல் அப்படியே நிலைத்து விடுகின்றன. ஹம்பியே விஜயநகரின் பேய்தான்.
நான் ஹம்பியில் பேயால் ஆக்ரமிக்கப்பட்டேன் என்று அம்மா நினைத்தாள். ஆகவே தொடர்ச்சியாக எனக்காக பிரார்த்தனைகளும் பூஜைகளும் செய்தாள். ஜானகி வந்தபின் என்னிடமிருந்து பெரும்பாலான பேய்கள் விலகின என நம்பினாள். ஆனால் பேய்கள் அப்படி முற்றாக விட்டுச் செல்வதில்லை. அடங்காத பேயை விட அடங்கும் பேய்தான் ஆபத்தானது. அடங்காத பேயை அடக்கி துரத்தலாம். அடங்கிய பேய் ஒளிந்திருக்கும். சமையல் பாத்திரத்தில் எஞ்சிய கரிபோல எங்கோ இருந்துகொண்டிருக்கும்.
விளக்குகள் அணைந்தன. ஏதோ பாட்டு ஒலித்தது. விளம்பரங்கள் போட ஆரம்பித்தனர். எப்போதுமே ஸ்ரீராஜவிஜயேஸ்வரி பார்க்க ஆரம்பிக்கும்போது எனக்கு இதமான, சொகுசான ஓர் உணர்வு ஏற்படும். மிக வசதியான இருக்கையில் அமரும்போது ஏற்படுவதுபோல. மிக நல்ல ஒரு செய்தியை கேட்டபின் வருவதுபோல. வயிறுபுடைக்கச் சாப்பிட்டபின் தோன்றுவதுபோல. முன்பொரு நாள் ஸ்ரீபாலாவுடன் பஸ்ஸில் அருகருகாக அமர்ந்தபோது ஏற்பட்ட அதே நிறைவுணர்வு. படம் பார்த்து முடிக்கும்போது ஒரு மிதப்பு, போதை. ’ஆகாச வீதிலோ’ என்ற பாடல் என்னை நிறைத்திருக்கும். அப்படியே ’அந்த முகில் இந்த முகில்’. அவை வேறுவேறல்ல.
மறுநாள் காலையில் எழும்போது நெஞ்சில் ஒரு பெரிய எடைபோல முந்தையநாள் இரவு பார்த்த படம் நினைவுக்கு வரும். கைகால்களை அசைக்கவே முடியாது. மச்சை பார்த்தபடி அப்படியே நெடுநேரம் கிடப்பேன். எதையெதையோ தொட்டுத்தொட்டு எண்ணிக்கொண்டிருப்பேன். பிறகு என் அகத்தை அப்படியே போர்வை போல சுருக்கி எழுந்து, உதறிவிட்டு எழுந்து என் வேலைக்குத் திரும்புவேன். ஆனால் அன்றுமுழுக்க ஏக்கமும் சோர்வும் இருந்துகொண்டிருக்கும். மீண்டும் இந்தப்படத்தைப் பார்க்கவே கூடாது என்று நினைப்பேன். ஆனால் அகத்தில் மீண்டும் அந்தப் படத்தை தேட ஆரம்பித்திருப்பேன்.
ஸ்ரீராஜவிஜயேஸ்வரி போட்டுவிட்டார்கள். மோகினி ஸ்டுடியோவின் கொடிபறக்கும் முத்திரை தோன்றியது. நான் படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். நான் வைத்திருந்த ஒவ்வொன்றும் அங்கேயே இருக்கிறதா என்று பார்ப்பவன் போல. கண்களால் தொட்டுத்தொட்டு பார்த்துக்கொண்டே சென்றேன். என்.என்.ரெட்டி பெயர் எழுந்து கண்முன் வந்து நின்று நடுங்கியது. மெல்லி இரானி சீனியர் தோன்றி மறைந்தார்.
இடைவேளை விட்டதும் உடனே எழும் வழக்கம் எனக்கில்லை. படத்தில் இருந்து என்னை விலக்கிக்கொள்ள வேண்டும். கண்களை மூடி சற்றுநேரம் அமர்ந்திருப்பேன். பிறகு பெருமூச்சுடன் என்னை நானே அசைத்துக்கொண்டு எழுவேன். விளக்கு எரிந்தபோது முதல்வகுப்பில் ஏழெட்டுபேர் இருப்பதைக் கண்டேன். படம் போட்டபின் வந்திருந்தார்கள். இரண்டு பெண்கள். ஒரு பெண் எழுந்து வெளியே சென்றாள். இரண்டாவது பெண் அவளிடம் ஏதோ சொன்னாள். அதன்பின் என்னை கூர்ந்து பார்த்தாள். மீண்டும் கூர்ந்து பார்த்தபின் எழுந்து என்னை நோக்கி வந்தாள்.
“நீங்கள் ராமராவ் தானே? மோட்டூரி ராமராவ்?” என்றாள்.
“ஆமாம்” என்றேன் “நீங்கள்?”
அவள் சிரித்து “என் பெயர் விஜயலட்சுமி, நாம் முன்பு மோகினி ஸ்டுடியோவில் சந்தித்திருக்கிறோம்… இந்த படம் அங்கே எடுக்கும்போது நாம் சேர்ந்து வேலைபார்த்தோம்.”
நான் வாய்திறந்து திகைத்து அமர்ந்திருந்தேன். இது என்ன ஏதாவது விளையாட்டா என்பது போல சுற்றிலும் பார்த்தேன். அதன்பின் மூச்சொலியுடன் “ஸ்ரீபாலா?” என்றேன்.
“ஆமாம், அந்தப்பெயரையே மறந்துவிட்டேன்” என்றாள். என் அருகே வந்து அமர்ந்துகொண்டு “இப்படிப் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. அதிலும் இந்தப்படம் பார்க்க வரும்போது..”
“நான் இந்தப்படத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்… “ என்றேன்.
“இங்கேதான் இருக்கிறீர்களா?”
“இல்லை, குண்டூரில் இருக்கிறேன்… இந்தப்படத்தைப் பார்ப்பதற்காக இங்கே வந்தேன்.”
“இதைப்பார்க்கவா?” என்று சிரித்தாள். அந்தச் சிரிப்பில் முதல்முறையாக பழைய ஸ்ரீபாலாவை கண்டேன். அவளுடைய நீளமான கூந்தல் முடி உதிர்ந்து கைப்பிடியளவே இருந்தது. நீண்ட கண்கள் கூட மாறிவிட்டன. கண்களின் நீளமே மறைந்துவிட்டது. இமைகள்கூட சிறிதாகிவிட்டன. கண்களுக்கு கீழே ஆழமான கருமைச் சுருக்கம். கன்னம் ஒட்டியதில் பற்களுடன் முகவாய் கொஞ்சம் முன்னுந்தியிருந்தது. சிறிய மேலுதடு இழுபட்டு வெற்றிலைக்கறையுடன் பற்கள்மேல் படிந்திருந்தது.
“நீ மிகவும் மாறிவிட்டாய்” என்றேன்.
“வயதாகிறதே” என்றாள்.
“ஆனால் சிரிக்கும்போது பழைய ஸ்ரீபாலாவைபோல் ஆகிவிடுகிறாய்”
அவள் புன்னகைத்தாள். “கொஞ்சம் எங்காவது மிஞ்சியிருக்கும் இல்லையா?” என்றபின் “கல்யாணம் ஆகிவிட்டதா? எத்தனை குழந்தைகள்?” என்றாள்.
“ஆமாம், மூன்று குழந்தைகள். இரண்டுபையன்கள் ஒரு பெண். எல்லாரும் கல்யாணமாகி குழந்தைகுட்டி ஆகிவிட்டார்கள்.”
“மனைவி பெயர் என்ன?”
“ஜானகி, அவள் இப்போது இல்லை. இரண்டு வருடம் முன்பு தவறிவிட்டாள். நான் மகளுடன் இருக்கிறேன்.”
“அடாடா” என்றாள்.
”உனக்கு கல்யாணமாகிவிட்டதா?” என்றேன்.
”கல்யாணமா, எனக்கா?” என்றாள். சிரித்துக்கொண்டு “என்னைப்போன்ற பெண்களுக்கு கல்யாணமெல்லாம் சரியாக வராது. ஒரு ஆள் கூட இருந்தேன். அவனுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை.”
“இப்போது என்ன செய்கிறாய்?”
“இங்கே பக்கத்திலேதான் இருக்கிறேன். அதோ என் கூட வந்தாளே அவளும் என்னைப் போலத்தான். இப்போது ஒரு சின்ன கடை வைத்திருக்கிறேன்… நானும் அவளும் சேர்ந்து இருக்கிறோம்.”
அவள் அங்கிருந்து கையை காட்டினாள். வருகிறேன் என்று இவள் கையை காட்டினாள்.
நான் என்ன கேட்பதென்று தெரியாமல் திகைத்தேன். அவளே சொன்னாள். “நான் எப்படி வாழ்ந்தேன் என்று கேட்க வேண்டாம்… அதெல்லாம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.”
நான் பெருமூச்சுவிட்டேன்.
“நீங்கள் என்னை நினைத்துக்கொள்வது உண்டா?”
“நான் மறக்கவே இல்லை” என்றேன்.
“நினைத்தேன்” என்றாள்.
அதற்குள் படம் போட்டுவிட்டார்கள். நான் அவளிடம் “வெளியே போகலாமா?” என்றேன்.
“என்னை இங்கே எல்லாருக்கும் தெரியும். நான் உங்களிடம் தனியாக நின்று பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தால்…” என்றாள்.
“என்னை இங்கே யாருக்கும் தெரியாது.”
“சரி அப்படியென்றால் போகலாம்” என்றாள்.
நாங்கள் வெளியே சென்றோம். டீக்கடையை மூடிக்கொண்டிருந்தார்கள். நான் இரண்டு டீ சொன்னேன். டீக்கடைக்குள் மிகப்பெரிய சாய்பாபா படம். அவருடைய கைகளிலிருந்து கொட்டும் பொற்காசுகள். டீ பிளாஸ்கில்தான் இருந்தது. பழைய பாலின் நெடி கொண்ட டீ அது. எப்போதும் அப்படித்தான்.
நாங்கள் சுவர் ஓரமாக நின்றோம். எங்கள் மேல் எதிரிலிருந்த குண்டு பல்பின் வெளிச்சம் விழுந்தது. கொசுக்கள் சுற்றி சுற்றிப் பறந்தன. டீயை வாங்கிக்கொண்டோம்.
“நீங்கள் என்னை மறக்க மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்…”என்றாள்.
“எப்படி?”
“நான் நினைத்துக்கொண்டே இருப்பேன், நீங்கள் மறந்திருப்பீர்கள் என்று நினைத்துக் கொண்டால் கொஞ்சம் வருத்தமாக இருக்கும். கொஞ்சநேரம் அழுவேன்.”
“அழுவாயா?”
“அழுவேன்… இதற்காக இல்லை. வேறு பலவற்றுக்காக அழவேண்டியிருக்கும். அப்படி துக்கமாக இருக்கும்போது இதை நினைத்து அழுவேன். இதற்காக அழுதால் ஒரு நிம்மதி வரும்” அவள் புன்னகை செய்து “எதையாவது நினைத்து அழவேண்டுமே. இதை நினைத்து அழுதால் அழுது முடித்தபின் நிம்மதியாக இருக்கும்… மகிழ்ச்சியாகக்கூட இருக்கும்.”
நான் புன்னகைசெய்தேன்.
“ஆனால் எனக்கு தெரியும், நீங்கள் என்னை மறக்கவே மாட்டீர்கள் என்று.”
“எப்படி?”
“அன்றைக்கு நான் குளித்தேனே?”
நான் நெஞ்சில் ஓர் உதைபோல உணர்ந்தேன். “ஆமாம்”
”அது வேண்டுமென்றேதான்.”
“தெரியும்” என்றேன். எனக்கு மூச்சுத் திணறியது. “அப்போது உன் கண்கள் எப்படி இருந்தன என்பதெல்லாம் நன்றாக ஞாபகமிருக்கிறது”
“அப்போது என்ன நினைத்தேன் என்றால் நீங்கள் என்னை விரும்புகிறீர்கள், ஆனால் என்னுடன் ஓர் உறவு உருவாவதை நினைத்து பயப்படுகிறீர்கள் என்று. உங்களுக்கு நான் எதையாவது தரவேண்டும் என்று நினைத்தேன். என்னை அப்படிப் பார்த்தால் உங்கள் ஆசை பாதி நிறைவேறியதுபோல. ஆனால் நீங்கள் குற்றவுணர்ச்சியும் அடையவேண்டியதில்லை. நீங்கள் தவறான உறவையும் தொடங்கியதாக இருக்காது… அதனால்தான் அப்படிச்செய்தேன்.”
“ஓ” என்றேன்.
“அப்படித்தான் அப்போது நினைத்தேன். ஆனால் பிறகு தெரிந்தது, எல்லாம் என்னை நீங்கள் மறக்கக்கூடாது என்பதற்காகத்தான்” என்று மீண்டும் சிரித்தாள்.
நான் புன்னகைசெய்தேன்.
“நான் கூந்தலை பஸ்ஸில் அவ்வப்போது பறக்கவிட்டதுகூட அதற்காகத்தான்” என்றபோது அவள் கண்களில் பழைய ஸ்ரீபாலாவின் குறும்பு தோன்றியது.
”அப்படியா?” என்றபோது உண்மையாகவே சிரித்துவிட்டேன்.
“என்னைப் பார்க்கத்தான் இந்தப்படத்தை பார்க்கிறீர்களா?”
“உன்னைப் பார்க்க மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாகவே இந்தப்படத்தில் எல்லாமே இருக்கிறது. அந்தக் காலகட்டம் முழுக்க…”
“ஆமாம், நானும் அதற்காகத்தான் பார்க்கிறேன்… எங்கு ஓடினாலும் பார்ப்பேன்.”
“எத்தனை முறை பார்த்திருப்பாய்?”
”அது இருக்கும், ஆயிரம் முறை. என்னிடம் கேஸட் இருக்கிறது. இருந்தாலும் தியேட்டரில் இந்தப்படம் வந்தால் பார்ப்பேன். எங்கே எப்போது வந்தாலும் எடுப்பதுவரை பார்த்துக்கொண்டே இருப்பேன்” என்றாள்.
“நானும்தான்” என்றேன் “ஆனால் நாம் எப்படி சந்திக்காமல் போனோம்?”
“நான் இருபது ஆண்டுகள் பெல்காமில் இருந்தேன். அதற்குப்பிறகு ஹைதராபாதில். இரண்டு ஆண்டுகளாகத்தான் இங்கே இருக்கிறேன்”
“அப்படியா?” என்றேன்.
என் நெஞ்சு கனமாகவே இருந்தது. அந்தச் சந்திப்பை முடித்துக்கொண்டு கிளம்பத்தான் ஆசைப்பட்டேன். ஏதாவது பேசவேண்டியிருக்கிறதா? ஏதாவது மிச்சமிருக்கிறதா?
நாங்கள் விலகி தனியாக அரையிருளில் நின்றோம். சாலையில் ஓடும் வண்டிகளின் வெளிச்சம் மட்டும் சுழன்று சுழன்று எங்களை கடந்துசென்றது. அதில் அவள் ஒளியுடன் தெரிந்து மீண்டும் இருண்டாள்.
“நான் உன்னைத்தேடி உன் ஊரில் பலமுறை அலைந்திருக்கிறேன்” என்றேன்.
“என் ஊரிலா? எங்கே?”
“முனிப்பள்ளியில்”
“முனிப்பள்ளியில் நான் ஒருவாரம் கூட இருக்கவில்லை. அங்கேபோன நான்காவது நாளே அம்மா என்னை பெல்காமுக்கு அனுப்பிவிட்டாள்”
“எனக்கு தெரியாது, நான் ஒருமாதம் கழித்து தேடிவந்தேன். நாலைந்து வருடம் தோன்றும் போதெல்லாம் அங்கே போய்க்கொண்டே இருந்தேன்”
“அங்கே என்னைப் பார்த்தால்கூட என்ன செய்ய முடியும்? அந்த இடமே தவறான இடம். உங்களைப்போன்றவர்கள் அங்கெல்லாம் போகவே கூடாது” என்றாள்.
“நான் அதன்பிறகு கிறுக்கு போலவே இருந்தேன். ஒருவருடம் என்னவாக இருந்தேன் என்றே தெரியாது… என் மனைவி மட்டும் வரவில்லை என்றால் முழுக்கிறுக்கனாகியிருப்பேன். இப்போது வாழ்க்கை முடிந்துவிட்டது. ஆனாலும் மிகப்பெரிய ஒரு பள்ளம் இருக்கிறது வாழ்க்கையில்…” என்றேன். நினைவுகூர்ந்து “கொடவட்டிகண்டி குடும்பராவ் வாசித்திருக்கிறாயா?” என்று கேட்டேன்.
“ஆமாம், காருண்யம் என்று ஒருநாவல்”
“இன்னொரு நாவல், காலபைரவுடு என்று. அதில் ஒரு வரி வருகிறது. செய்யவேண்டியதை செய்யாவிட்டால் அது ஒரு பள்ளமாகிவிடுகிறது. அது இறந்தகாலத்தில் இருக்கிறது, நிகழ்காலத்தை வைத்து அதை நிரப்பவே முடியாது என்று.”
“ம்” என்றாள். அவள் இமைகள் சரிந்தபோது மீண்டும் அந்த ஸ்ரீபாலா தெரிந்து மறைந்தாள்.
“நான் என்ன செய்திருக்கவேண்டும் தெரியுமா? நீ என்னைவிட்டு பிரிந்து நடந்து போனாய் அல்லவா? ராஜமந்திரி பஸ் ஸ்டாண்டில். அப்போது உன் கையைப் பிடித்துக்கொண்டு, உன் கண்ணைப் பார்த்து சொல்லியிருக்க வேண்டும். எனக்கு உன்னை வேண்டும் என்று. உன்னை சொந்தமாக்கிக் கொள்ளப்போகிறேன் என்று. உன்னுடைய வாழ்க்கையில் நடந்த எல்லா தவறுகளையும் நான் சரிசெய்து விடுகிறேன் என்று சொல்லியிருக்கவேண்டும்” என் குரல் நடுங்கியது. பேசப்பேச உயர்ந்து சற்று உடைந்து ஒலித்தது.
அவள் சட்டென்று சிரித்துவிட்டாள். பின்னர் சிரிப்பை அடக்கியபோது கண்களில் கண்ணீர் இருந்தது. முந்தானையால் கண்களை துடைத்தாள்.
“ஏன் சிரிக்கிறாய்?” என்றேன்.
“ஒன்றுமில்லை” என்று தலைகுனிந்து சொன்னாள்.
”அர்த்தமில்லாமல் பேசுகிறேன் என்று சொல்கிறாய்…”
“இல்லை, இப்போதாவது அதைச் சொன்னீர்களே. அதை நான் கேட்கவும் வாய்ப்பு அமைந்ததே… அதுவே போதும்.”
“காலம் கடந்த பிறகு சொல்லி என்ன பிரயோசனம் முட்டாள் என்று சொல்கிறாய் இல்லையா?”
“அய்யய்யோ, அப்படி இல்லை. அப்படியெல்லாம் இல்லை சுவாமி. காலம் எங்கே கடந்தது? நான் இங்கே இருக்கிறேன். இதோ நீங்கள் சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரே ஒருநாள் இதை நினைத்துக்கொண்டு வாழ்ந்தாலும் எனக்கு நிறைவுதான்.”
“அதெல்லாம் சும்மா சொல்வது… வாழ்க்கை அழிந்துவிட்டது.”
“அதெல்லாம் ஒன்றுமில்லை…” என்றாள் “நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். கடையில் சுமாரான வருமானம் இருக்கிறது. பேங்கில் கொஞ்சம் பணமும் இருக்கிறது. எல்லாம் நன்றாகத்தான் போகிறது. இன்னும் எவ்வளவுநாள்? அதுவரை எல்லாம் இப்படியே போகும். ஒன்றும் குறையில்லை… ”
“நீ எதிர்பார்க்கவில்லையா?” என்றேன்.
”என்ன?”
“அன்றைக்கு? பஸ் ஸ்டாண்டில்?”
அவள் புன்னகையுடன் “அதெல்லாம் இப்போது எதற்கு?” என்றாள்.
“சொல், நீ எதிர்பார்க்கவே இல்லையா?”
“என்ன எதிர்பார்க்க?”
“நான் அப்படிச் சொல்வேன் என்று? நான் பின்னால் அழைப்பேன் என்று?”
அவள் ஒன்றும் சொல்லவில்லை.
“சொல்”
“எதிர்பார்த்தேன்” என்றாள். ஆனால் முகத்தில் உணர்வுகள் மாறவில்லை. கண்கள் மிக இயல்பான புன்னகையுடன் என்னை பார்த்துக் கொண்டிருந்தன.
“ஏமாற்றமாக இருந்ததா?” என்றேன்.
“அதெல்லாம் போகட்டும்… பழையகதை… நான் கிளம்புகிறேன். இனிமேல் நாம் சந்திக்கவேண்டாம்” என்று அதே புன்னகையுடன் சொன்னாள்.
“ஏன்?”
”சந்தித்தால் நன்றாக இருக்காது. இது நன்றாக இருக்கிறது. எல்லாம் மிக அழகாக முடிந்துவிட்டது. இப்படியே இருக்கட்டும். நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு உறுதியாகிவிட்டது. நானும் நினைத்துக்கொண்டே இருக்கிறேன் என்று உங்களுக்கு தெரிந்துவிட்டது” அவள் திரும்பி அந்தபடத்தின் போஸ்டரைப் பார்த்தாள் “இந்தப் படம் இப்படியே மாறாமல் இருந்து கொண்டிருக்கும். நீங்கள் தைத்த ஆடையுடன் அதில் நான் அப்படியே இருந்து கொண்டிருப்பேன். உயிரோடு இருக்கும் வரை இதைப் பார்த்துக்கொண்டே இருப்போம்”
“ஆமாம்” என்று பெருமூச்சு விட்டேன்.
“நாம் போனாலும் இந்தப்படம் இருக்கும்” என்று அவள் அந்த போஸ்டரை அண்ணாந்து பார்த்தபடிச் சொன்னாள்.
நான் திடுக்கிட்டேன். நெஞ்சு துடித்ததில் என் உடல் தளர்ந்தது. கொடிமரத்தை பிடுங்கிக்கொண்டு பறக்கத்துடிக்கும் கொடி என் உயிர் என்று தோன்றியது.
“என்ன பாட்டுகள்! எல்லா பாட்டுமே அற்புதமானவை. இந்தப்படத்தையே நான் என்னுடைய கதையாக ஆக்கிக்கொண்டேன். நான் விஜயேஸ்வரி. நான் உங்களுடன் ஓர் அழகான ஊரில் மாடுகளை மேய்த்து வாழ்கிறேன். நீங்கள் என்னை பார்த்து சிற்பங்கள் செய்கிறீர்கள். என்னை பல்லக்கில் பொன் கொண்டு வந்து தந்து அழைத்துப் போகிறார்கள்” அவள் சிரித்து “நான் பாவா என்றுதான் உங்களை அழைக்கிறேன். மனசுக்குள் பாவா என்றுதான் நினைத்துக்கொள்வேன்.”
நான் பெருமூச்சுவிட்டேன். புன்னகையால் மலர்ந்த முகத்துடன்கூட நம்மால் பெருமூச்சுவிடமுடிகிறது!
“ஆகாச வீதிலோ என்ற பாடல்… பானுமதி பாடுவது. அதில்தான் பாவா என்று அழைப்பார்” என்று அவள் சொன்னாள். ”மேகங்களைப் பார்த்தே பாடுவார்கள். அங்கே மெல்லி இரானி மேகங்களை எடுப்பதை ஒருநாள் பார்த்தேன்…அவர் வானத்திலிருந்து எதையோ தொட்டுத் தொட்டு எடுப்பதுபோல இருந்தது. அந்த மேகம் அரைமணி நேரத்தில் கலைந்திருக்கும். ஆனால் அந்தப்பாட்டில் அப்படியே இருந்துகொண்டிருக்கிறது”
“ஞாபகமிருக்கிறதா, ஆ மப்பு ஈ மப்பு ஆகாச மத்யன… “ என்றேன்.
”மறப்பேனா? அந்த சைக்கிள் பயணத்தில் பார்த்த மேகங்களின் வடிவத்தையே அப்படியே பார்க்கமுடியும் என்னால்” என்று அவள் சொன்னாள். “புவ்வுல சூரிபாபு… நீங்கள் அவரைப்போல இருந்தீர்கள்”
“அவரை நான் நினைத்துக் கொள்வதே இல்லை. அவர் பாடல்களையே கேட்பதில்லை. எப்போதாவது ஞாபகம் வந்தால் திடுக்கிட்டு உடனே விலகிவிடுவேன்.”
அவள் அந்தப் பேச்சை இயல்பாக மாற்றினாள். “ஆ மப்பு ஈ மப்பு… அழகாக பாடினீர்கள். இந்த படம்போலவே கறுப்புவெள்ளையாக அந்த நிலா வெளிச்சம்.”
“இந்தப் படத்தில் உள்ள ஆகாச வீதிலோ பாட்டைத்தான் அன்றைக்குப் பாடினேன் என்றுகூட எனக்குச் சிலசமயம் தோன்றும்… என் மனதில் இரண்டு பாட்டுகளும் ஒன்றாகிவிட்டன.”
“எனக்கும்தான்” என்று அவள் சொன்னாள். தலைகுனிந்து மிகமெல்ல “ஆகாச வீதிலோ” என்று பாடினாள்.
“பாடுவாயா?”
“எப்போதாவது, எனக்கே எனக்காக. அதுவும் ஆ மப்பு ஈ மப்பு. அப்புறம் இந்தப்படத்தின் பாட்டுகள்… இவை மட்டும்தான்” என்றாள். முகவாயை தூக்கி, அக்கணத்தில் அவளில் கூடிய அழகான குழந்தைத்தனத்துடன், “அதைப் பாடுங்கள்.. மெல்லப் பாடினால் போதும்” என்றாள்.
“எதை?”
“ஆ மப்பு ஈ மப்பு”
நான் மெல்லப் பாடினேன்.
“அந்த முகில் இந்த முகில்
ஆகாயத்தின் நடுவினிலே
அதுபோல உள்ளம் இணையவேண்டும் நாம்
அன்பே இப்புவியினிலே
ஒருவரான பின்னர்
இருவராக கூடாது
கொடுப்பதுமில்லை பெறுவதுமில்லை
தழுவுதலும் கூட இல்லை
அங்கிருப்பது ஒற்றை மேகம்”
“அப்படியே பாடுகிறீர்கள். அன்று பாடியதுபோலவே” என அவள் முகம் மலர்ந்து சொன்னாள்.
“எத்தனை ஆயிரம் முறை பாடியிருப்பேன். வேறு படம் பார்த்ததும் இல்லை, வேறு பாட்டை கேட்டதும் இல்லை” என்றேன்.
அவள் பெருமூச்சுவிட்டாள். பிறகு அவளே பாடினாள்.
“ஆகாய நடுவினிலே
இரண்டு முகில்களும் மெல்ல கரைகின்றன.
அன்பே வானில் அவை பரவுகின்றன.
வானம் மட்டுமே எஞ்சியிருக்கும்”
அவள் குரல் உடைந்திருந்தது. பாடி நெடுநாள் இருக்கும். அது பாடுவதல்ல, பாட்டை சொல்லிப் பார்த்துக் கொள்வதுதான்.
அதன்பின் பேசுவதற்கு ஒன்றுமில்லை. பேசாமல் ஒருவரை ஒருவர் பார்க்கவும் முடியவில்லை. நான் சுவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் தொலைவில் இருண்டிருந்த முள்காட்டை பார்த்துக்கொண்டிருந்தாள்.
பிறகு “படம் விடப்போகிறது” என்றாள்.
“ஆமாம்” என்றேன். பின்னணியிசையைக் கொண்டே என்னால் காட்சிகளைச் சொல்லிவிடமுடியும்.
“நான் சொன்னேனே, நாம் இனி சந்திக்கவேண்டாம்”
“ம்” என்றேன்.
”நான் இப்போது இப்படி இருக்கிறேன். இன்னொரு முறை சந்தித்தால் இப்படி இல்லாமல் இருக்கலாம்….”
“எப்படி?”
“பறக்காதபோது பறவையல்ல. ஆத்ரேயா எழுதியது”
”நீ இப்போதும் நாவல்கள் படிக்கிறாயா?”
“படித்துக்கொண்டேதான் இருப்பேன். வாழ்க்கையில் பெரும்பாலான நேரம் சும்மாதானே இருக்கிறேன். அப்போதெல்லாம் படிப்புதான். இப்போது கடையிலும் படிப்புதான்.”
“நான் படிப்பதே இல்லை. ஆத்ரேயா பெயரைக் கேட்டபோது மனம் திடுக்கிட்டது. அந்த பெயர் காதில் விழுந்தே நீண்டநாட்களாகிறது” என்றேன். என் நினைவில் தேவுலப்பள்ளி என்ற பெயர் எழுந்தது. இவள் சொன்ன பெயர்தான். ஆனால் எங்கே?
“தேவுலப்பள்ளி” என்றேன். “ஞாபகமிருக்கிறதா?”
அவள் புன்னகையுடன் “மறக்கமுடியுமா? அவருடைய கவிதை ’முந்து தெலிசினா பிரபு…”
“ஆமாம், ஆமாம்” என்றேன் பரபரப்புடன்.”என்னை தெரியவில்லையா? என்னை புரியவில்லையா? அதுதான் அந்த வரி.” என் குரல் உடைந்து தழுதழுத்தது. ”அந்த வரிகளை நீ சொன்னாய். அதை அன்றைக்கு நான் உள்வாங்கிக் கொள்ளவே இல்லை.”
நான் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டேன். என் கைகள் அவள் கைகளுடன் சேர்ந்து நடுங்கின.
அவள் திரும்பி டீக்கடையைப் பார்த்தாள். டீக்கடைக்காரர் எங்களை பார்த்துக் கொண்டிருந்தார். அவள் கையை இழுத்துக்கொண்டாள். படம் முடியும் இசை எழுந்தது.
“வேண்டாம்” என்றாள்.
“ஆமாம்” என்று பெருமூச்சு விட்டேன் “நாம் மறுபடி சந்திக்கக்கூடாது என்றுதான் தோன்றுகிறது… ஏனென்றால் நாம் இருவருக்குமே வயதாகிவிட்டது…” என்றேன்.
“ஆமாம், இந்தப்படத்தை வாழ்நாள் முழுக்கப் பார்த்தால்போதும்” என்று அவள் மீண்டும் சொன்னாள். திரும்பி அங்கிருந்த பழைய போஸ்டரை ஏறிட்டுப் பார்த்தபின் “என்ன ஒரு அதிருஷ்டம், இப்படியொன்று மிச்சமிருக்கிறது!” என்றாள்.
இம்முறை என் இதயம் முழக்கமிடவில்லை. ஒரே கணத்தில் இந்த உலகத்திலுள்ள அத்தனை பொருட்களும் காணாமலாகிவிட்டால், மலைகள்கூட மறைந்துவிட்டால், எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. என் தொண்டை கரகரத்தது. நான் நிலத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
உள்ளே இசை ஓங்கி எழுந்தது. கிருஷ்ணதேவராயர் மன்னித்துவிட்டார். நல்லமராஜுவுக்கும் விஜயேஸ்வரிக்கும் திருமணம் நடக்கிறது.
“முன்பெல்லாம் நான் இந்தக் காட்சி வரும்போதெல்லாம் அழுவேன். அப்படி பொங்கிப் பொங்கி அழுவேன்…” என்று அவள் சொன்னாள். “இப்போது அழுகை வருவதில்லை. ஆனால் நெஞ்சில் பனிக்கட்டி போல ஏதோ இருக்கும்… வீடுபோவது வரை பேசவே முடியாது”
நான் பெருமூச்சு விட்டேன். பெருமூச்சுகள் வழியாக மீண்டு வந்தேன். அவள் பெருமூச்சுவிடவில்லை. கண்களைச் சுருக்கி அந்த போஸ்டரையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
கதவுகள் திறந்து ஆட்கள் களைத்த நடையுடன் வெளியேறினார்கள். சிலர் சிகரெட் பற்றவைத்துக்கொண்டார்கள்.
அந்தப்பெண் வந்து அப்பால் நின்றாள். “மல்லி வந்துவிட்டாள். நான் கிளம்புகிறேன். உங்களை மீண்டும் சந்திக்கவேண்டும் என்று நினைக்கவே இல்லை. ஆனால் சாமுண்டீஸ்வரி அந்த பாக்கியத்தை தந்துவிட்டாள்” என்றாள்.
”ஸ்ரீபாலா” என்றேன். என் தொண்டை அடைத்திருந்தமையால் எவருடைய குரலோ என ஒலித்தது.
அவள் தயங்கி நின்றாள். ஒருகணம் தோழியைப் பார்த்தாள். கடைசியாகச் சொல்வது எப்போதுமே முக்கியமானது. ஆனால் அது இனியதாக இருக்கவேண்டும் என்பதில்லை.
“அன்றைக்கு நான் பின்னாலிருந்து உன்னை அழைக்க வேண்டும், உன்னை என்னிடம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உண்மையாகவே விரும்பினாய் அல்லவா?”
அவள் சஞ்சலத்துடன் தோழியைத் திரும்பிப் பார்த்தாள்.
“நீ எனக்கு வேண்டும் என்று சொல்வேன் என்று நினைத்தாய் இல்லையா?” என்று மேலும் உரக்க கேட்டேன்.
”ஆமாம்”
”ஆனால் நீ திரும்பிப் பார்க்கவே இல்லை. வேகமாகப் போனாய்”
“ஆமாம்” என்றாள்.
“ஏன்?”
நிமிர்ந்து என் கண்களைப் பார்த்து “நீங்கள் அப்படிச் சொல்லிவிடுவீர்களோ என்று பயந்தேன்” என்றாள்.
“என்ன சொல்கிறாய்?” என்றேன்.
“ஆமாம்” என்று புன்னகைத்தபின் திரும்பி விலகிச் சென்றுவிட்டாள். தோழியுடன் ஓரிரு சொற்கள் பேசியபின் திரும்பியே பார்க்காமல் நடந்து இருட்டுக்குள் மறைந்தாள்.
[நிறைவு]
[மறைந்த கொண்டப்பள்ளி வி.நாகராஜுவுக்கு, எடைமிக்க நினைவுகளுடன்]
முந்து தெலிசினா பிரபு…
ஈ மந்திரமிடுலுஞ்சேனா
மந்தமதினி நீவு வச்சு
மதுர க்ஷணமேதோ காஸ்ட
*
https://gaana.com/song/aa-mabbu-ee-mabbu ஆ மப்பு ஈ மப்பு ஆகாச மாத்யான்ன
முந்து தெலிசினா பிரபு – https://www.raagabox.com/lyrics/?lid=999497