[12 ]
இருபத்தேழு ஆண்டுகள் நான் அந்த ஒரு படத்திலேயே நிலைத்து நின்று விட்டேன். ஸ்ரீராஜவிஜயேஸ்வரி 1951 தீபாவளிக்கு வெளியாகியது. அதை நான் ஓராண்டு கழித்தே பார்த்தேன். அதன்பிறகு அந்த ஒரு படத்தைத் தவிர எந்தப் படத்தையும் பார்க்கவே இல்லை. இத்தனை ஆண்டுகளில் இருநூறு முந்நூறு தடவை பார்த்திருப்பேன். ஆயிரம் தடவை? இருக்கும், சென்ற பத்துப் பதினைந்தாண்டுகளில் வீடியோ டேப்பில் எப்போதுவேண்டுமென்றாலும் அதைப்பார்க்க முடியும் என்று ஆகிவிட்டது. என்னிடம் பல டேப்களில் அந்தப்படம் இருந்தது.
ஆனால் வெளியானபோது நான் அதைப் பார்க்கவில்லை. அன்று நான் கொந்தளிப்பான, நிலையற்ற வாழ்க்கையில் இருந்தேன். என்ன செய்வதென்று இல்லாமல் அலைந்து கொண்டிருந்தேன். நான் ஊருக்கு திரும்பி வந்த அன்றே மாமாவின் தந்தியும் ஊருக்கு வந்தது, என்னை உடனே சென்னைக்கு வரச் சொல்லும்படி சொல்லியிருந்தது. நான் உடனே பையை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி விட்டேன். குண்டூரில் என்னுடன் படித்த நண்பன் ஒருவன் இருந்தான். அவன் விலாசம் தோராயமாக தெரிந்திருந்தது.
சைலபதி ரெட்டி குண்டூரில் ஒரு மார்பிள் கம்பெனியில் வேலைபார்த்தான். அவனுடன் சென்று தங்கினேன். குண்டூரிலேயே வேலைதேடினேன். அப்போது தையல் தொழில் பரவலாகி வந்த காலம். அனைவருமே சட்டைகள் தைக்க ஆரம்பித்திருந்தனர். தைப்பதற்கு போதுமான ஆட்கள் இல்லை. நான் இரண்டே நாட்களில் நியூ பாம்பே டெய்லர்ஸில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அங்கே குடிபெயர்ந்தேன்.
ஆனால் அதற்குப்பிறகுதான் என் கொந்தளிப்பு ஆரம்பித்தது. என்னுடைய திறமையை முதலாளி உணர்ந்திருந்தமையால் வேலையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் சூட் தைப்பதில் நிபுணன் என்ற பெயர் வந்துவிட்டது. ஆனால் நான் எவரிடமும் பேசுவதில்லை. எனக்கு நானே ஏதோ பேசி தலையை அசைத்துக்கொள்வேன். சட்டென்று கைகளை முட்டிசுருட்டி இறுக்கி, பற்களை இறுகக்கடித்து தலையை அசைப்பேன். எதிர்பாராமல் கண்கள் கலங்கி உதடுகள் துடிக்க ஆரம்பித்துவிடும். கண்ணில் இருந்து நீர் பெருகி கன்னம் வழியாக சொட்டும். மூக்கை உறிஞ்சும், விம்மும் ஓசை கேட்டு மற்றவர்கள் திரும்பிப் பார்ப்பார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வார்கள்.
நான் என்னவாக இருந்தேன், என்னென்ன நினைத்தேன் எதுவுமே நினைவில்லை. பிற்பாடு நினைத்து நினைத்துப் பார்த்ததுண்டு. அந்த ஓர் ஆண்டும் அப்படியே என் நினைவிலிருந்து அழிந்துவிட்டது. பிறகு மற்றவர்கள் என்னைப்பற்றிச் சொன்னவை மட்டுமே என் நினைவில் நின்றிருக்கின்றன. நான் மெலிந்து, தலைமுடியும் தாடியும் வளர்ந்து, சாலையில் என்னைப் பார்த்தால் மற்றவர்கள் ஒதுங்கிப்போவது போல இருந்தேன். என் அம்மாவும் இளைய மாமாவும் வந்து என்னைப் பார்த்தார்கள். என்னை ஊருக்கு கொண்டு செல்ல முயன்றார்கள். நான் உறுதியாக மறுத்துவிட்டேன்.
ஆனால் டெய்லராக மிகக் கடுமையாக வேலையும் பார்த்தேன். உண்மையில் அப்படி வேலைபார்க்க அந்த மனநிலை உதவியாக இருந்தது. ஒரு சூட்டை வெட்டி தைத்து மடித்து வைப்பதுவரை வேறேதும் நினைப்பில்லாமல், அதுவே உள்ளமாக இருப்பேன். எனக்கு நானே பேசிக்கொள்வேன், சிரிப்பேன், தலையை அசைப்பேன். என்னை வாடிக்கையாளர்கள் பார்க்கவேண்டாம் என்பதற்காக பக்கத்தில் ஒரு தனியறை ஏற்பாடு செய்திருந்தார்கள். என் கைத்திறனால் என் முதலாளியின் கடை நாளுக்குநாள் புகழ்பெற்றது. ’கிறுக்கு தையல்காரர்’ என்றே நான் அறியப்பட்டேன்.
எனக்கு திடீரென்று திருமணம் உறுதிசெய்தார்கள். ஒருநாள் வந்து கையோடு கூட்டிச் சென்றார்கள். தலைமுடியையும் தாடியையும் வெட்டி என்னை மீட்டு எடுத்தனர். திருமண நிச்சயத்திற்கு நரசிம்மர் கோயிலுக்குப் போவது வரை எனக்கு எதுவுமே தெரியாது. நிச்சயம் செய்துவிட்டு கோயில் முன் நிற்பது வரை நான் பெண்ணையும் பார்க்கவில்லை.
என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை. நான் எதையும் எவரிடமும் பேசும் நிலையிலேயே இருக்கவில்லை. எங்கிருந்தாலும் அங்கிருந்து அப்படியே என் எண்ணங்கள் நழுவி வேறெங்கோ சென்றுவிடும். அங்கே என் உடல் மட்டுமே இருக்கும். நெடுந்தொலைவில் திகைத்து நின்றிருப்பேன். என்னைச் சுற்றி நான் அறியாத உலகம் இருக்கும். அவர்களிடம் எதையும் கேட்க முடியாதவனாக வெறித்துப்பார்ப்பேன்.
அருகே பெண்ணைப்பார்த்தது எனக்கு ஒர் அதிர்ச்சி. என் கைகள் மேல்வேட்டியை பற்றி கசக்கிக்கொண்டே இருந்தன என்று அவள் பின்னர் சொன்னாள். அவளிடம் “நீ யார்?” என்று கேட்டிருக்கிறேன். அவள் திகைத்து என்னை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு நான் என்ன கேட்டேன் என்று புரியவில்லை. அவள் அதை எவரிடமும் சொல்லவுமில்லை.
ஒரே வாரத்தில் அதே நரசிம்மர் ஆலயத்தில் வைத்து திருமணம் நடந்தது. ஆனால் அதற்குள் எனக்கு கொஞ்சம் புரிந்துவிட்டது. திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தேன். உள்ளூரில் விவசாயம் பார்த்த பெரிய தாய்மாமா வந்து என்னை கட்டையால் அடித்தார். சினிமாவில் இருந்த தாய்மாமா என் தலையில் தண்ணீர் தவலையை கவிழ்த்தார். என்னை இழுத்துச்சென்று வீட்டுக்குள் ஓர் அறையில் அடைத்துப்போட்டனர். அம்மா வந்து ஜன்னல்வழியாக பார்த்து கதறி அழுதாள்.
நான் சம்மதித்தேனா இல்லையா என்று நினைவில்லை. என் திருமணம் நடைபெற்றது. முதல் இரவன்று அந்த அறையில் இருந்து கதவைத் திறந்து வெளியே போய் ஆற்றங்கரையில் இரவெல்லாம் அமர்ந்திருந்து காலையில்தான் திரும்பிவந்தேன். ஆனால் அதை ஜானகி யாரிடமும் சொல்லவில்லை. என் அம்மாவுக்கு மட்டும்தான் அது தெரிந்திருந்தது.
பழைய பாணி பெண்கள் மிகமிகப் பொறுமையானவர்கள். ஜானகியின் பொறுமையால்தான் நான் மீண்டு வந்தேன். அவளிடம் நான் பேச ஆரம்பித்ததே ஒரு மாதம் கழித்துத்தான். ஏழு மாதத்திற்கு பிறகுதான் அவளுடன் உறவு கொண்டேன். உடலுறவால்தான் நான் மீண்டேன் என்று சொல்லவேண்டும். அச்செயல் என்னை பேய்போல ஆட்கொண்டது. வேறு நினைப்பே இல்லாமலிருந்தேன். பகலும் இரவும் அதில் திளைத்தேன். இடம் பொருள் தெரியாதவனாக இருந்தேன்.
அது ஒரு குளியல்போல. உடலை உருவி கழற்றி வீசி எறிவதுபோல. எதனுடனோ மல்லிடுவதுபோல. எதையோ நெரித்து கொல்வதுபோல. எதையோ உடலில் இருந்து உமிழ்வதுபோல. ஜானகி அதை எப்படி தாங்கிக்கொண்டாள் என்று நெடுங்காலம் கழித்துத்தான் சொன்னாள். அவள் வாழ்க்கையின் மிகக் கொடூரமான காலகட்டம் அது. உடல்வலி, உள்ளத்தின் வலி மட்டுமே அன்றிருந்தது.
ஆனால் அவள் தன் பெரியபாட்டியிடம் அதைச் சொன்னபோது “நல்லதுடீ அது. பாம்பு நஞ்சை முழுக்க கக்கட்டும். கொஞ்சம் கூட மிஞ்சாமல் கக்கிவிடட்டும்” என்று சொன்னாளாம். ஆறு மாதத்தில் நான் நிதானமடைந்தேன். என் முகம் தெளிந்தது. கண்கள் பிறர் கண்களைப் பார்க்க ஆரம்பித்தன. முகத்தில் எப்போதுமிருந்த சிணுங்கலும் பதற்ற பாவனையும் மறைந்து புன்னகை வந்தது. பின்பு சிரிக்கத் தொடங்கினேன். நல்ல ஆடைகளை அணிந்தேன். அவளுடன் வெளியே சென்றேன். அவள் பேசுவதை கேட்டேன். அவளுக்கு அணுக்கமானவனாக ஆனேன்.
அவள் அதில் நிறைவடைந்தாள். அது அவளுடைய வெற்றி. அவள் உருவாக்கி எடுத்த கணவன் நான். ஆகவே என்னை கண்ணாடிப்பொருள் போல காத்தாள். என்னை சுற்றி ஒரு மாயக்கோட்டையை உருவாக்கிக் கொண்டாள். வாழ்நாளின் பிற்பகுதியில் அவள் என்னை எப்படி மீட்டாள், எப்படி என் வாழ்வை உருவாக்கினாள் என்று அவள் பெருமையுடன் சொல்லிக்கொள்வதுண்டு.
ஜானகியின் அப்பா அளித்த சீதனத்தொகையால் குண்டூரில் ஒரு தையல்கடை வைத்தேன். காமம், தொழில்வெற்றி, பணம் எல்லாம் என்னை மீட்டுக்கொண்டுவந்தன. பணம் காமத்துக்குச் சமானமான ஒரு போதை. அது நம் ஆணவத்தை வளர்க்கிறது. உலகை புன்னகையுடன் ஏறிட்டுப் பார்க்கச் செய்கிறது. 1963ல் நான் முதல் அம்பாசிடர் காரை வாங்கிய நாளை நினைவுகூர்கிறேன். அன்றே என் நடை மாறிவிட்டது. என் தோரணை மாறிவிட்டது.
ஜானகி சொன்னது உண்மை. நான் ஜானகியை நம்பியே அடுத்த முப்பதாண்டுகள் வாழ்ந்தேன். அவளிடம் எரிச்சலடைந்து சத்தம்போட்டதுண்டு. இரண்டு முறை அவளை அடித்ததும் உண்டு. ஆனால் அவள்தான் என்னுடைய ஆதாரம். சோகை பிடித்த குழந்தைகள் அம்மாவையே சார்ந்திருப்பதுபோல அவளுடன் ஒட்டிக்கொண்டிருந்தேன். என் அன்றாட வாழ்க்கையையே அவள் தீர்மானித்தாள். என்னுடைய உணர்ச்சிகளை அவள் கட்டுப்படுத்தினாள். என்னுடைய வாழ்க்கையின் எல்லா முடிவுகளையும் அவளே எடுத்தாள்.
அவள் நான் இன்றைக்கும் வணங்கும் தெய்வம். அவள் மறைந்த பின்பு நான் மீண்டும் என்னுள் சுருங்கிக்கொண்டேன். என் குழந்தைகளுடன் நான் பேசுவதே இல்லை. எனக்கு நண்பர்களே இல்லை. என்னுடன் அவளுடைய மாய உருவம் ஒன்றை வைத்துக்கொண்டேன். தெய்வமாக மாறிவிட்ட ஜானகி. என் அறையில் அவளுடைய மாலையணிந்த படம் இருக்கிறது. இன்றும் ஒவ்வொருநாளும் அதற்கு நான் மலர்கள் வாங்கிச் சூட்டி ஊதுவத்தி ஏற்றிவைக்கிறேன். குளிர்ந்த அவளுடைய கண்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அவளை குளிர்ந்தவள் என்று சொல்கிறேன். அதைத்தவிர எந்தச் சொல்லும் பொருத்தம் இல்லை. சில பெண்கள் அப்படித்தான். அவர்கள் நதிகளைப்போல குளிர்ந்தவர்கள். அள்ளி அணைத்து கரைத்துக்கொள்பவர்கள். நம்முடைய எரிமலைச் சூட்டை முழுக்க எடுத்துக்கொண்டு நம்மை நீரடிப்பாறை போல ஆக்கிவிடுபவர்கள். ஜானகியின் பேச்சு சிரிப்பு எல்லாமே குளிர்தான். அவளுடைய கோபமும்கூட தண்மையானதுதான். அவள் என்னை மண்ணில் நிலைநிறுத்தினாள்.
ஆனால் மனிதனின் ஆழம் எல்லையற்றது. நான் அவளிடம் ஸ்ரீபாலா பற்றிச் சொல்லவே இல்லை. இத்தனைக்கும் நான் ஸ்ரீபாலாவை ஒரு நிமிடம்கூட மறந்ததில்லை. ஜானகியிடம் நான் அதை மறைக்கவில்லை, அவளிடம் சொல்லத் தோன்றவே இல்லை என்பதே உண்மை. அவ்வாறு ஒருத்தி என் நினைவில் இருப்பதே தெரியாமல் முப்பத்தியாறு வருடம் என்னுடன் குடும்பம் நடத்திவிட்டு ஜானகி போய்ச்சேர்ந்தாள். அவள் வாழ்நாளெல்லாம் குளிரவைத்துக் கொண்டிருந்த அந்த அனல் என்ன என்பதை அவள் அறியவே இல்லை.
அதெப்படி அறியாமலிருந்திருக்க முடியும்? ஒருவேளை எப்படியோ அறிந்திருக்கலாம். ஆனால் கேட்டதில்லை. தெரிந்தும்கூட அதைப்பற்றி ஒரு சொல்கூட கேட்காமல் முழு வாழ்க்கையையும் கடந்து செல்வது என்பது மேலும் ஆழமானது. என்னுடைய ரகசியத்தைவிட பலமடங்கு ஆழமானது. ஆனால் நம் குடும்பங்களில் இதெல்லாம் நடந்து கொண்டேதான் இருக்கிறது. பேசிக்கொண்டே இருக்கும்போது நடுவே ஒரு தெய்வம் கடந்து செல்வது போல நம்மைச்சுற்றி நாம் சிந்தையாலும் தொடமுடியாத அதிமானுடர் வாழ்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நான் ஆழமற்றவன். ஆழமற்றவைதான் கொந்தளிக்கும். எப்படி என்னால் சொல்லாமல் மறைக்க முடிந்தது என்று நானே எண்ணி வியந்திருக்கிறேன். நான் மிகமிகச் சூழ்ச்சிக்காரன், என்னையே நான் ஏமாற்றிக்கொள்கிறேன் என்று நினைத்ததுண்டு. ஆனால் உண்மையில் என் மனதில் ஜானகியும் ஸ்ரீபாலாவும் வேறுவேறு இடங்களில் இருந்தனர். முற்றிலும் வேறுவேறு உலகங்களில். ஸ்ரீபாலாவை நான் நினைக்கும்போது ஒருமுறைகூட, ஒரு எளிய ஞாபகத் தீற்றலாகக்கூட ஜானகி வந்ததில்லை. ஜானகி புழங்கிய என் வெளியுலகில் ஸ்ரீபாலாவுக்கு இடமே இல்லை.
என் உற்றார் உறவினரில் எவருக்குமே ஸ்ரீபாலா பற்றி தெரியாது. மாமாவுக்குக் கூட நான் ஸ்ரீபாலாவுடன் கிளம்பினேன் என்று தெரியாது. நான் பணத்தை எடுத்துக்கொண்டு ஊர்சுற்றக் கிளம்பினேன் என்றுதான் மாமா நினைத்துக் கொண்டிருந்தார். ஸ்டுடியோவிலும் எவருக்கும் ஸ்ரீபாலாவையும் என்னையும் இணைத்துப் பார்க்க தோன்றவில்லை. அவர்களின் ஞாபகத்தில் அவள் அன்றே பெல்லாரிக்குச் சென்றுவிட்டாள். அதன்பின் எவருக்கும் அவளைப்பற்றி அக்கறையில்லை. பல்லாயிரம் துணைநடிகைகளில் ஒருத்தி. சினிமாவில் அவளுக்கு கண்டினியுட்டி கூட தேடவேண்டியதில்லை.
ஸ்ரீராஜவிஜயேஸ்வரியின் விளம்பரங்களை நான் பார்த்த ஞாபகமிருந்தது. என் பித்து நாட்களில் அந்தப் படம் வந்து ஓடி முடிந்தது. அதன் பாடல்கள் ஒரே எல்.பி.ரெக்கார்ட் ஆக வந்தபோது படம் மீண்டும் புகழ்பெற்றது. ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் ஒரு பெரிய ரிலீஸ். அப்போது குண்டூரே ஸ்ரீராஜவிஜயேஸ்வரி என்று பித்துப்பிடித்து அலைந்தது. ரேடியோவில் பத்து நிமிடங்களுக்கு ஒரு விளம்பரம் ஓடியது. ஸ்ரீராஜவிஜயேஸ்வரியின் ஒரு வசனக்கீற்று, ஒரு பாடல்வரி.
ஸ்ரீ கௌரிசங்கர் தியேட்டரில் நான் முதன்முதலாக ஸ்ரீராஜவிஜயேஸ்வரியைப் பார்த்தேன். முதல்முறை அந்தப்படம் முற்றிலும் நான் அறியாத ஒன்றாக இருந்தது. இடங்கள், செட்டுகள் மட்டுமல்ல என்.டி.ஆரும் பானுமதியும்கூட முற்றிலும் வேறுமாதிரியாக இருந்தார்கள். நாங்கள் கண்ணால் பார்த்ததையே காமிரா வேறொன்றாக பார்த்திருந்தது. ஒன்றுடன் ஒன்று அக்காட்சிகள் இணைந்தபோது அது வேறெங்கோ நடப்பதாக மாறியிருந்தது. அதில் என்.டி.ஆர் சிற்பங்கள் செய்தார். புல்லாங்குழல் இசைத்தார். நான் சில காட்சிகளிலேயே படத்தைப்பற்றிய பழைய நினைவுகளில் இருந்து விலகிவிட்டேன். விஜயேஸ்வரிக்கும் நல்லமராஜுவுக்குமான அந்தக்காதலில் நானும் ஒன்றிவிட்டேன்.
அந்தப்படத்தில் என்.டி.ஆரும் பானுமதியும் கள்ளமற்ற முகங்களுடன் இருந்தனர். அவர்கள் சின்னக் குழந்தைகளாகவே பழகி வளர்ந்தவர்களாக காட்டப்பட்டிருந்தனர். சின்னப் பிள்ளைகளாகவே நாலைந்து பாடல். மழலைக்குரலில் அமைந்த “ஓ பாவா” என்றப்பாட்டு படம் முழுக்க பானுமதியை எப்போது பார்த்தாலும் நினைவுக்கு வந்தது. அவர் செட்டில்கூட என்.டி.ஆரை பாவா என்றுதான் அழைத்தார் என நினைவுகூர்ந்தேன்.
என்.டி.ஆரின் முகம் அக்காலத்துப் படங்களில் எல்லாம் பிரியத்திற்குரிய, அழகான, முரட்டுத்தனமும் முட்டாள்தனமும் கொண்ட, ஒரு சிறுவனுக்குரியது. அதை ஆந்திர மக்கள் அப்படி பித்துப் பிடித்து ரசித்தனர். ஒன்றும் தெரியாத முரட்டு இளைஞனாக, கண்மண் தெரியாத காதல்கொண்டவனாக ஸ்ரீராஜவிஜயேஸ்வரியில் என்.டி.ஆர் நடிக்கவில்லை, அக்கதாபாத்திரமாகவே இருந்தார்.
பின்னாளில் நிறையபேர் என்.டி.ஆரை கிண்டல்செய்வதை கண்டிருக்கிறேன். அவர் முகத்தில் கடைசிவரை அந்த அழகிய முரட்டுத்தனம் இருந்தது. அவர்மேல் மக்கள் வைத்த பிரியத்தை அவர் கடைசிவரை நீட்டித்துக் கொண்டார், அவ்வளவுதான். அவர் நடிகரெல்லாம் இல்லை. அவர் கள்ளமற்ற எளிய மனிதர். ஆகவே மிக எளிதாக கதாபாத்திரங்கள் அவருக்குள் புகுந்துகொண்டன. அவர் என்ன செய்தாலும் அந்தக்கதாபாத்திரமாகவே தோன்றின.
அதைவிட இன்று தோன்றும் ஒன்று உண்டு. அந்தப்படம் கறுப்புவெள்ளையில் இருந்தது. அதனாலேயே அது ஒரு தனியுலகாக, அந்தரங்கங்களில் மட்டுமே இருக்கும் ஒரு காட்சிவெளியாக இருந்தது. அதற்கும் அன்றாடத்திற்கும் சம்பந்தமில்லை. அது இப்புவியில் பொருள்வயமாக எங்கும் இல்லை. அது முகில்களால் புனையப்பட்ட ஓர் உலகம். நான் கறுப்புவெள்ளை சினிமாவை மேகங்களில் நிகழும் ஒன்றாக மட்டுமே நினைத்தேன். முகில்களை குழைத்து மரங்கள், வீடுகள், மலைகள், மனிதர்கள் எல்லாவற்றையும் புனைந்து செய்திருக்கும் ஓர் உலகு. ஒருவேளை சொர்க்கம் அப்படித்தான் இருக்கும்.
கறுப்புவெள்ளையில் மனித முகங்கள் கனவுக்குள் இருந்து நம்மைப் பார்க்கின்றன என்று தோன்றும். கறுப்புவெள்ளையை அத்தனை பேரழகாக எப்போது பார்த்தேன்? ஹம்பியில் ஹொஸ்பெட் சாலையில் அந்த நிலவில். அது விண்ணுலகமேதான். அந்த முகிலும் இந்த முகிலும் ஒளியால் உருகி ஒன்றான வானத்தின் கீழே. கறுப்பு-வெள்ளையை கடவுளின் வண்ணங்கள் என்பேன். கடவுள் வானை அப்படித்தான் படைத்திருக்கிறார். ஒளி -இருள். உண்டு -இல்லை. இருப்பு- இன்மை. அவையிரண்டும்தான் கடவுளின் நிலைகள். அவற்றாலானது கறுப்பு-வெள்ளை சினிமா. இந்த வண்ணங்களெல்லாம் நமது மாயைகள், நம் ஆசாபாசங்கள், நமது அசட்டுத்தனங்கள்.
நான் மறுநாளும் அதே படத்திற்குப் போனேன். அதற்கு அடுத்தநாளும் சென்றேன். அதன்பின் அது ஓடியநாட்களில் ஒருநாள்கூட அதை பார்க்காமலிருக்கவில்லை. ஜானகி அதற்குப்பின் மூன்றாவது ரிலீஸில்தான் அந்தப்படத்தை பார்த்தாள். அப்போது அவள் குழந்தை உண்டாகியிருந்தாள். குழந்தை பிறந்து அதற்கு பால்குடி மாறியபிறகு ஸ்ரீராஜவிஜயேஸ்வரி மீண்டும் வந்தபோது அவள் ஓங்கோலில் இருந்தாள். தன் சகோதரிகளுடன் சென்று படத்தைப் பார்த்ததாக எழுதியிருந்தாள்.
நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். குண்டூரில் அதை ஒவ்வொரு தியேட்டராக மாற்றிக்கொண்டே இருந்தார்கள். நாள்தோறும் கடையை மூடிவிட்டு அதைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பினேன். பார்த்துப் பார்த்து சீனியர் மெல்லி இரானியின் கண்களை நான் அடைந்தேன். அவர் கண்டதை நான் காணலானேன். அன்று அங்கிருந்த எவரும் அவர் கண்டதைக் காணவில்லை. என்.என்.ரெட்டிகூட. மெல்லி இரானி கண்டதுதான் இந்த சினிமா. இன்று உலகமெல்லாம் பார்க்கும் இந்தப் படம். அவருடைய பதற்றம், சீற்றம், எரிச்சல், பரவசம் அனைத்தையும் அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
பத்து அல்லது பன்னிரண்டாவது முறையாக பார்க்கும்போதுதான் நான் கதையின் ஓட்டத்திலிருந்தும், பாடல்களின் போதையிலிருந்தும் விடுபட்டேன். அதன்பிறகுதான் ஸ்ரீபாலாவை பார்த்தேன். விந்தை அது. ஆனால் அதுவரை அந்தப்படத்துடன் நான் ஸ்ரீபாலாவை இணைத்து யோசிக்கவே இல்லை என்பதே உண்மை. அவள் அதில் நடித்திருப்பதே என் நினைவில் இல்லை. அவளை நான் அந்த ஸ்டுடியோ வளாகத்திலும் ஹம்பியிலும் தான் பொருத்திப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சட்டென்று ஒருகாட்சியில் ஸ்ரீபாலாவை பார்த்ததும் துணுக்குற்றேன். அவளுக்கு ஒரு மின்னல்வேக குளோஸப் இருந்தது. திரையில் இருந்து அவள் தோன்றி என்னை நேருக்குநேர் பார்த்து மறைந்ததுபோல் இருந்தது. எனக்கு மெல்லிய வலிப்புபோல வந்தது. இடது கையும் காலும் இழுத்துக்கொண்டன. கண்களிலிருந்து நீர் வழிந்தது. தியேட்டரில் சரிந்து விழுந்து கிடந்தேன். படம் முடிந்து விளக்குகள் போடப்பட்டு, வாட்ச்மேன் வந்து பிரம்பால் தட்டியபோதுதான் எழுந்தேன். ஒரு கையும் ஒரு காலும் இழுத்துக்கொண்டிருந்தன. தள்ளாடி தள்ளாடி நடந்து வெளியே சென்றேன். என் கண்களில் இருந்து நீர் வழிந்து சட்டையெல்லாம் நனைந்தது.
மறுநாள் நெஞ்சு படபடக்க மீண்டும் அந்தப்படத்தை பார்க்கப் போனேன். மிகச்சரியாக அந்த குளோஸப் வரும் இடத்தை அறிந்திருந்தேன். ஸ்ரீபாலாவின் முகத்தை அருகிலெனக் கண்டேன். அவள் களைத்திருந்தாள். கண்களில் அப்படியொரு தூக்கக் கலக்கம். அவளிடமிருந்த அந்த விலக்கம், அமைதி எல்லாமே தூக்கக்கலக்கம் மட்டும்தான் என்று நன்றாகவே தெரிந்தது. அன்றும் அதே அதிர்வு. வாய் கோணிக்கொண்டது. விரல்கள் இழுத்துக்கொண்டு ஒன்றுடன் ஒன்று பின்னி வலியெடுத்தன. அதே கண்ணீர்ப் பெருக்கு.
ஆனால் மறுநாளும் அந்தப்படத்தை பார்க்கப்போனேன். மீண்டும் மீண்டும் அந்த அதிர்வை அடைந்தேன். அந்த அதிர்வாலேயே ஒருவகையில் சமனமடைந்தேன். அனைத்தும் உள்ளூர இழுக்கப்பட்டுவிட்டன. வெளியே எந்த உணர்ச்சியும் இல்லாத உறைந்த முகமும் இறுகிய உடலும் கொண்டவனாக அமர்ந்திருக்கலானேன்.
நாள்தோறும் என அவளையே பார்த்துக் கொண்டிருந்தபோது ஒருமுறை ஸ்ரீராஜவிஜயேஸ்வரியில் வரும் ‘ஆகாச வீதிலோ’ என்ற பாடலுக்குப் பதிலாக ‘ஆ மப்பு ஈ மப்பு ஆகாச மத்யன’ என்ற பாட்டை கேட்டேன். மாலாப் பிள்ள படத்தின் காட்சியும் ஸ்ரீராஜவிஜயேஸ்வரியின் பாட்டும் ஒன்றேதான். ஏறத்தாழ ஒரே காட்சியமைப்புகள். முகில்கள் தழுவி தழுவி வானில் நிறைந்திருந்தன. வானையும் நிலவையும் நோக்கியபடி இருவர் மண்ணிலிருந்து பாடிக்கொண்டிருந்தனர்.
வானைப் பார்த்துக்கொண்டு இருவர் மண்ணிலிருந்து பாடுவது! எப்படி ஒரு திகிலூட்டும் வரி. அல்லது கனவூட்டும் வரி. கனவில் திகிலும் வியப்பும் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. யதார்த்தமான கனவுகள் உண்டா என்ன? சினிமா ஒரு கனவு. சினிமாவில் யதார்த்தமே இருக்க முடியாது. சினிமா ஓர் இளமைக்காலப் போதை. அங்கே எல்லாமே நுரைத்து ஒளிர்ந்து கொப்பளித்துக்கொண்டேதான் இருக்கமுடியும்.
வானைப் பார்த்துக் கொண்டிருத்தல். ஆனால் நான் நேரில் வானைப் பார்ப்பதில்லை. என்னால் மேகங்களைப் பார்க்கவே முடியாது. நிலாக்கால மேகங்களை ஒருகணம்கூட ஏறிட்டுப் பார்க்கமுடியாது. அவை கறுப்புவெள்ளை சினிமாவில் தெரியவேண்டும். சினிமாவின் சதுரத்தில் வானம் அடைபட்டிருக்கவேண்டும். நான் பார்த்த வானம் மெல்லி இரானி உருவாக்கிய வானம். மெய்யான வானுடனும் முகில்களுடனும், திரையோவியங்களையும் மின்விளக்குகளையும் கலந்து அவர் எனக்கென விரித்த வானம். உண்மையான வானம் பொருளற்றது. ஒரு மாபெரும் வெறுமைதான் அது.
அன்று நான் சைக்கிளில் வீடு திரும்பும்போது “ஓ மேகமாலா” என்று பாடிக்கொண்டிருந்தேன். அன்றும் நிலவு இருந்தது. முகில்கள் ஒளியில் நனைந்து உப்பி அசைவிழந்து வானில் நின்றன. நான் என்னையறியாமலேயே இரண்டு பாட்டுகளையும் கலந்து கொண்டேன். நான் வாய்விட்டு பாடியே இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கும் அப்போது. ஸ்ரீராஜவிஜயேஸ்வரியில் பானுமதியின் கண்கள் மிகவும் கனிந்திருந்தன. என்.டி.ஆர் இந்த உலகிலேயே இல்லை. அவர்கள் அந்த நாட்களில் அடைந்த ஏதோ ஒன்றை சினிமா நிரந்தரமாக பதிவுசெய்துவிட்டது. கல்லில் செதுக்கி வைப்பதுபோல.
இன்றுவரை நான் அந்தப்படத்தை தேடித்தேடி பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நாளிதழ்களில் சுற்றிலும் ஏதாவது ஊரில் அந்தப்படம் ஓடுகிறதா என்று பார்ப்பேன். எங்கு ஓடிக்கொண்டிருந்தாலும் கிளம்பிப்போய் பார்த்துவிட்டு வருவேன். அதற்கேற்ப அது எங்கோ ஒரு தியேட்டரில் ஓடிக்கொண்டுமிருந்தது.
ராஜமந்திரியில் மட்டும் அந்தப்படத்தை இருபது முப்பது முறைக்குமேல் பார்த்திருப்பேன். ஐம்பதுமுறை கூட இருக்கும். ராஜமந்திரியில் அந்தப்படத்தைப் பார்ப்பதில் ஒரு தீவிரமான உணர்ச்சி எனக்கிருந்தது. ஏதோ ஒரு காட்சியில் அந்தப் படத்தைப் பார்க்க ஸ்ரீபாலாவும் வருவாள் என நினைத்தேன். அவளும் திரையரங்கில் எங்கோ இருந்து அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று நான் கற்பனை செய்துகொள்வேன்.
நான் அன்று ஸ்ரீபாலாவை விட்டுவிட்டு வந்தபின் மறுமாதமே ராஜமந்திரிக்குப் போய் அங்கிருந்து பஸ் பிடித்து முனிப்பள்ளிக்குச் சென்றேன். அப்படிச் செல்வதை ஒவ்வொருநாளும் கற்பனைசெய்து, ஒவ்வொரு முறையும் முழு சிந்தனைபலத்தாலும் ஒத்திவைத்து, எல்லா தடைகளும் உடைந்தபிறகுதான் சென்றேன். அன்றுகூட ராஜமந்திரியிலேயே பஸ் ஏறுவதா வேண்டாமா என்று இரண்டுமணிநேரம் தயங்கி நின்றபிறகுதான் ஓடிப்போய் கிளம்பிக்கொண்டிருந்த பஸ்ஸில் ஏறிக்கொண்டேன்.
முனிப்பள்ளியில் அவளை எப்படி விசாரிப்பது என்று தெரியவில்லை. அவள் பெயர் விஜயலட்சுமி என்பதைத் தவிர எனக்கு எதுவுமே தெரியாது. அவள் அம்மா பெயரைக்கூட கேட்டிருக்கவில்லை. முதல்முறை போய்விட்டு வெறுமே சுற்றிவிட்டு வந்தேன். திரும்பி வரும்போது உண்மையில் அவளை அங்கே சந்திக்கவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலைக்கூட அளித்தது.
ஆனால் இரண்டு மாதம் கழித்து மீண்டும் முனிப்பள்ளிக்குப் போகும்போது கொஞ்சம் திட்டமிட்டிருந்தேன். முனிப்பள்ளியில் நடனமாடுவதற்கு போகும் பெண்கள் எந்த தெருவில் இருக்கிறார்கள் என்பதை விசாரிக்கவேண்டும் என்று முடிவுசெய்தேன். முனிப்பள்ளியில் ஒரு டீக்கடையிலேயே கேட்டேன். அங்கே பலவகையான நடனக்காரர்கள் இருந்தார்கள். பாண்ட் வாத்தியக்கோஷ்டிகள், ரிக்கார்டு டான்ஸ் ஆடுபவர்கள், பாரம்பரியமான கூத்துகளில் ஆடுபவர்கள். அவர்கள் ஏழெட்டு தெருக்களிலாக நிறைந்திருந்தனர்.
அங்கே சென்று விஜயலட்சுமியைப் பற்றி கேட்டேன். அங்கே பெரும்பாலானவர்கள் ஏதாவது லட்சுமிகள்தான். விஜயலட்சுமிகள், ஜெயலட்சுமிகள், கஜலட்சுமிகள், சென்ன லட்சுமிகள். சினிமாவைச் சொல்லி கேட்டேன். அங்கிருந்து பலபேர் சென்னப்பட்டினத்திற்கு சினிமாவுக்குக் கிளம்பிச் சென்றிருந்தனர். எவருக்கும் அதன்பின் ஊருடன் தொடர்பே இல்லை. சுற்றிச்சுற்றி விசாரித்துவிட்டு திரும்பிவிட்டேன்.
அதன்பிறகும் பலமுறை முனிப்பள்ளிக்குப் போய் விசாரித்திருக்கிறேன். சிலகாலம் வெறுமே அந்த தெருக்களில் ஒரு சுற்று சுற்றி வருவேன். அவள் எதிரே வருவாள் என்று எதிர்பார்த்தபடி. மெல்லமெல்ல அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் போய்விட்டது. முனிப்பள்ளியும் நினைவிலிருந்து விலகிவிட்டது. ஆனாலும் ராஜ்மந்திரிக்குச் சென்று ஸ்ரீராஜவிஜயேஸ்வரியை பார்ப்பது வழக்கமாகவே இருந்தது.
பார்த்துப் பார்த்து அந்தப்படம் என் வீட்டின் அறைகள் போல ஆகிவிட்டது. அந்தப் படத்தில் நான் கைப்பட தைத்த உடையையே என்னால் சுட்டிக்காட்ட முடியும். நாகலிங்க ஆசாரியுடன் நான் சென்று பார்த்த செட்களை தனியாக ஒவ்வொரு முறையும் கவனிப்பேன். ஸ்ரீபாலா வரும் நிறைய காட்சிகளை அடையாளம் கண்டுகொண்டேன். அந்தப்படமே அவள் நடித்தது என்பதுபோல. ஆகாச வீதிலோ என்று அவளே பாடுவதுபோல.
இரண்டாவது ஆட்டத்தையே பெரும்பாலும் தேர்வுசெய்தேன். சிலசமயம் முதல் ஆட்டம் முடிந்து ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு இரண்டாம் ஆட்டம் பார்ப்பேன். இரண்டாம் ஆட்டத்தின்போது களைப்பும் தூக்கமும் அழுந்த எங்கிருக்கிறோம் என்று தெரியாமல் நாற்காலியில் சரிந்திருப்பேன். அந்த இசை அந்தப்படத்தின் காட்சிகளை என் கனவுக்குள்ளும் ஓடச்செய்யும். அதில் ஹம்பியும் கமலாப்பூரும் ஹொஸ்பேட்டும் கலந்துவிடும். சென்னை ஸ்டுடியோ ஊடுருவும். ஆனால் இசை அனைத்தையும் உருக்கி ஒன்றாக்கும். நான் அந்த ஒரு படத்திலிருந்து நூறுநூறு படங்களைச் சமைத்துக் கொண்டே இருந்தேன்.
சட்டென்று கறுப்புவெள்ளையின் கனவுப்படலத்தில் இருந்து அவள் என்னை அணுகி துயரோ துயிலோ நிறைந்த நீண்ட கண்களுடன் ’ஆ மப்பு ஈ மப்பு’ என்று எனக்கு மட்டுமாகப் பாடினாள். நான் அவளுடன் இணைந்து பாடினேன். முகில் ஒளிகொண்ட வான்கீழ் பாடிக்கொண்டே சென்றோம். “முகில்களை அறிந்த அந்த வானம் அங்கேதான் இருக்கும் அல்லவா? என் அன்பே என் அன்பே அந்த வானம் அங்கேதான் இருக்கும் அல்லவா?”
[மேலும்]