[ 10 ]
நாங்கள் சைக்கிளை உருட்டிக்கொண்டு மிகமெல்ல வெளியே சென்றோம். அந்தப் பண்ணைவீட்டுக்கு மைய வாசல் தவிர நாலைந்து சிறிய வழிகள் இருந்தன. அதில் ஒன்றில் ஏறி வெளியே சென்று அங்கிருந்த சிறிய மண்பாதையை அடைந்தோம் “ஏறிக்கொள்” என்றேன். அவள் ஏறியதும் நான் சைக்கிளை மிதித்து அந்த வழியினூடாக மிகமெல்ல ஓட்டிச்சென்றேன்.
“இந்த வழி எங்கே போகிறது?”
“இப்படியே வளைந்து பெரிய சாலைக்குத்தான் போகும். ஹொஸபேட்டை போக தார்ச்சாலை மட்டும்தான் ஒரே வழி.”
”ஹொஸ்பெட் எவ்வளவு தூரம்?”
”பன்னிரண்டு கிலோமீட்டர்… இரண்டு மணிநேரத்தில் போய்விடலாம்… மெதுவாகவே போவோம்… லைட் போடாமல் போகவேண்டும்.”
இருட்டிலேயே சைக்கிளில் சென்றோம். தார்ச்சாலையிலும் விளக்குகள் இல்லை. தார்ச்சாலையில் ஏறிக்கொண்டதும் உண்மையில் பயம் வரவேண்டும், அது திறந்தவெளி போலிருந்தது. ஆனால் பயத்திற்குப் பதிலாக சுதந்திர உணர்வுதான் வந்தது.
என் உள்ளம் இதமான ஓர் உணர்வை அடைய ஆரம்பித்தது. இதம் என்றுதான் சொல்லவேண்டும். அது மகிழ்ச்சி இல்லை. நிறைவும் இல்லை. கொந்தளிப்போ அலைக்கழிப்போ இல்லை. இதம். வெயிலுக்குப்பின் நிழலில் வந்ததுபோல, குளிரில் கம்பிளிக்குள் தங்கிய உடலின் வெம்மை போல.
நிலவொளியில் நிழல்கள் கலந்து உருவாக்கிய நிலப்பரப்பு. சாலையோர மரங்கள், வானத்து முகில்கள் எல்லாமே நிலவால் உருவாக்கப்பட்டவை. சட்டென்று ஓர் அகவிழிப்பு போல அந்த எண்ணத்தை அடைந்தேன். அந்த உலகமே கறுப்புவெள்ளையால் ஆனது. ஃபில்டர் போடப்பட்டு எடுக்கப்பட்டது. கறுப்பு வெள்ளை கனவின் நிறம். அங்கே தெய்வங்களின் ஆடல் இல்லை. அங்கே எல்லாமே கதைதான். அங்கு அழிவும் துக்கமும் இருக்கலாம், ஆனால் அவைகூட உண்மையல்ல. கனவும் கற்பனையும்தான்.
நான் சைக்கிளை மிதித்தபடி வானை நோக்கி அண்ணாந்து முழுமைகொள்ளத் தொடங்கியிருந்த நிலவின் ஒளியை முகத்தில் வாங்கிக்கொண்டேன். எப்போதும் இதை நான் உணர்ந்திருக்கிறேன். நிலவொளியோ சூரிய ஒளியோ விளக்கொளியோ முகத்தில் ஒளிவிழுந்தால் அது உள்ளத்திலும் பரவுகிறது. ஒளி நம்மை அனைத்தில் இருந்தும் விடுதலை செய்துவிடுகிறது. அறியா மகிழ்ச்சியை உருவாக்கிவிடுகிறது. நம் அகமும் முகமும் மலர்ந்துவிடுகின்றன.
மலர்களைப் போல. மலர்கள் ஒளியில்தான் இதழ்விடுகின்றன. கதிரொளியில் தாமரை, நிலவொளியில் அல்லி. மனிதர்களும் அப்படித்தான். புவ்வுல பாபு எங்கோ ஒருமுறை சொல்லியிருந்தார். மேடையில் விளக்கொளியில் நிற்காமல் வாழமுடியாது என்று. விளக்கு வெளிச்சத்தில் தன் உடல் மட்டுமல்ல உள்ளமும் ஜொலிக்க ஆரம்பித்துவிடுகிறது என்று. உண்மை அது. தூங்கும்போது முகத்தின்மேல் ஒளி விழுந்தால் அற்புதமான கனவுகள் வருகின்றன. அதை நானே கண்டிருக்கிறேன்.
இந்த ஒளியில் என் முகம் புன்னகையில் பொலிவு கொண்டிருக்கிறது. இது ஒரு மிகப் பெரிய நாடகமேடை. அந்த குளிர்ந்த வெண்ணிற ஒளியில் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். மிக மிக மெல்ல இந்த சைக்கிளை மிதிக்கிறேன். என் ஆடைகளை குளிர்ந்த காற்று அலைவுறச் செய்கிறது. இப்படியே நான் நெடுநேரம் மிதித்துக் கொண்டிருக்கக்கூடும். ஏனென்றால் இது கனவு. இங்கே காலம் இல்லை. இங்கே விசையும் இல்லை. எடையில்லாதிருக்கிறேன். அந்த முகில்களைப்போல.
வான் நிறைய விண்மீன்கள். அவற்றை மறைத்தபடி இரண்டு மேகங்களைப் பார்த்தேன். அவை இரண்டு யானைகள் துதிக்கையை பிணைத்து நிற்பவைபோல வானில் மிதந்தன. என் சித்தம் திரும்பி வந்தது.
“அந்த மேகத்தை பார்த்தாயா?”
“ஆமாம்”
“ஆ மப்பு ஈ மப்பு ஆகாச மத்யனா… அந்த பாட்டை கேட்டிருக்கிறாயா?”
“ஆமாம், எனக்கு பிடித்த பாட்டு அது”.
“அப்படியா?”
“ஏன்?”
“அந்தப் பாட்டை அவ்வளவு விரும்பக்கூடிய இன்னொருவரை நான் பார்த்ததில்லை.”
“அதை யாரால் மறக்க முடியும்? நான் சின்னப்பெண்ணாக இருக்கும்போதே கேட்ட பாட்டு” அவள் மெல்ல பாடினாள். “ஆ மப்பு ஈ மப்பு ஆகாச மத்யன.”
“நீ நன்றாக பாடுகிறாய்” என்றேன்.
“அய்யே, என் குரலே நல்ல குரல் அல்ல” என்றாள். “காலி வெங்கடேஸ்வர ராவ் குரல் என்ன ஒரு கம்பீரம்… அதோடு ஒப்பிடும்போது காஞ்சனமாலா குரல் அவ்வளவாக பொருத்தமாக இல்லை.”
அவள் எந்தப்பெண்ணைப் பற்றியாவது ஏதாவது நல்லவாறாகச் சொல்லியிருக்கிறாளா என்று எண்ணிக்கொண்டேன். “காஞ்சனமாலா நாடகப்பாடகி. அதற்காக அப்படி பாடி பழகியவர்.”
”காலி வெங்கடேஸ்வர ராவ் கூடத்தான் நாடகப்பாடகர்” என்றாள்.
”அவர் பெயரிலேயே காற்று இருக்கிறது…” என்றேன். “காலி வெங்கடேஸ்வர ராவ்… ஒரு பாடல் பாடிவிட்டால் போதும், சாவே வராது”
“ஆமாம், அவர் குரலில் ஒரு கனவு இருக்கிறது… வானத்தைப் பார்த்து பாடுவதுதான் பாடல். மண்ணையோ மனிதர்களையோ பார்த்துப் பாடுவது பாட்டே அல்ல” என்றாள்.
“உண்மையில் இது நாடகப்பாடல். பசவராஜு அப்பாராவ் இதை ஒரு புரஃபஷனல் நாடகத்திற்காகத்தான் எழுதினார். இரண்டு மேகங்கள் கரைவதுபோல மனம் ஒப்பி காதலிப்பதைப்பற்றி… “
”ஆமாம்” என்று அவள் சொன்னாள். வானை அண்ணாந்து பார்த்தபோது அவள் முகவாய் என் முதுகில் முட்டியது. அவளுடைய நீண்ட கழுத்தின் வளையங்களை, மென்மையான சருமத்தின் மெருகை நான் மனக்கண்ணில் கண்டேன்
அவள் பெருமூச்சு விட்டாள். என் மேல் சாய்ந்துகொண்டாள். மீண்டும் பெருமூச்சு விட்டாள். அவள் உடலே வெம்மையாக இருப்பதுபோலிருந்தது.
“என்ன?” என்றேன்.
“ஒன்றுமில்லை”
“நீ பெருமூச்சுவிட்டாய்”
“ஆமாம்” என்றாள். பிறகு ஒன்றும் சொல்லவில்லை. நானும் ஒன்றும் கேட்கவில்லை. சற்றுக்கழித்து அவள் “நிலாவில் மேகங்களைப் பார்ப்பது ஒருமாதிரி இருக்கிறது”.
“ஒருமாதிரி என்றால்?”
“ஒருமாதிரி பித்துப் பிடிக்க வைப்பதுபோல”.
“ஆமாம்” என்று நான் மூச்சிளைப்புடன் சொன்னேன். “ஆனால் இந்த மேகங்கள் இருப்பது நன்றாக இருக்கிறது”.
“ஏன்?”
“தலைக்கு மேல் அவை மிதக்கின்றன. எவருமே தொடமுடியாது. அவற்றுக்கு பயமே இல்லை”.
அவள் மிகமெல்லச் சிரித்தாள். இனிய சிறிய பறவை ஒன்றின் ஒலிபோல. “அவற்றுக்கு என்ன பயம்?” என்றாள்.
“நமக்குத்தான் பயம்” என்றேன்.
“நமக்கு என்ன பயம்?” என்று அவள் சொன்னாள்.
“பயம் இல்லையா?” என்றேன்.
“என்ன பயம்?”
“என்ன பயமா? என்ன நினைக்கிறாய் நீ? எப்போது வேண்டுமென்றாலும் ரங்கா ரெட்டியின் ஆட்கள் நம்மை பிடிக்கலாம்… அந்த ஆள் இன்னும் நினைவு திரும்பாமல் ஆஸ்பத்திரியில் கிடக்கிறான்… போலீஸும் உன்னை தேடிக்கொண்டிருக்கிறது.”
“எனக்கு பயமே இல்லை.”
“ஏன்?”
“நீங்கள் கூடவே இருக்கிறீர்கள் அல்லவா?”
“அப்படியா?” என்றேன் “நான் என்ன செய்யமுடியும்? நானும் நீயும் ஒரே வயதுதான் என்று நினைக்கிறேன்.”
”அதனாலென்ன? நீங்கள் ஆண்” என்றாள்.
“ஆண் ஆனால் என்ன?” என்றேன் “வேண்டுமென்றால் பாடுகிறேன். தப்பி ஓடிவிடுவார்கள்”
அவள் என் நகைச்சுவையைக் கவனிக்காமல், “நான் இப்போதுதான் ஓர் ஆணுடன் இருக்கிறேன்… அவ்வளவு நன்றாக இருக்கிறது. எந்த பயமும் இல்லை. எந்தக் கவலையும் இல்லை” என்றாள்.
நான் ஒன்றும் சொல்லவில்லை. மேகங்கள் அசையாமல் அங்கேயே நின்றன. அவற்றைப் பார்த்தபடியே சைக்கிளை மிதித்தேன். மீண்டும் “ஆ மப்பு ஈ மப்பு ஆகாச மத்யனா” என்று பாடினேன்.
அந்த முகில் இந்த முகில், ஆகாய நடுவினிலே. அதுபோல உள்ளம் இணையவேண்டும் நாம் அன்பே இப்புவியினிலே.
”சத்தமாக பாடுங்கள்” என்று அவள் சொன்னாள்.
“விளையாடுகிறாயா?” என்றேன்.
“இந்தக் காற்றில் யாருக்கும் கேட்காது… “ என்று சிரித்தாள்.
“வேண்டாம்” என்று நான் எரிச்சலுடன் சொன்னேன். ஆனால் அவளுடைய அந்தச் சிரிப்பு அவ்வேளையில் அத்தனை தித்திப்பாக இருந்தது.
”உங்கள் குரல் நன்றாக இருக்கிறது… நீங்கள் சூரிபாபு மாதிரியே பாடுகிறீர்கள்”
நான் சைக்கிளை காலூன்றி நிறுத்திவிட்டேன். திரும்பிப்பார்த்து “யார்?” என்றேன்.
“புவ்வுல சூரிபாபு… அவரைப்போலவே பாடுகிறீர்கள்.”
மூச்சு இறுகி நெஞ்சை நிறைப்பதுபோலவே உணர்ந்தேன். பலமுறை மூச்சை இழுத்துவிட்டபின் “நான் சூரிபாபு பற்றி உன்னிடம் சொன்னேனா?” என்றேன்.
“இல்லையே, ஏன்?”
”நான் அவரைப் போல ஆக விரும்புகிறேன். அவராகவே என்னை கற்பனை செய்துகொள்வேன்.”
“அவரைப் போலத்தான் இருக்கிறீர்கள்”
“பொய் சொல்ல தெரிந்து வைத்திருக்கிறாய்” என்றேன்.
“இல்லை, உண்மை. நான் முதலில் பார்த்ததுமே நினைத்தேன்.”
நான் அந்த தருணத்தின் உச்சத்தை எதிர்கொள்ள முடியாதவனாக அதை மழுங்க வைத்து அப்படியே கடக்க விரும்பி இன்னொன்றுக்குள் நுழைந்தேன். சரசரவென பேசிக்கொண்டே சென்றேன். அவள் என்னுடன் நடந்து வந்தாள்.
“இந்தப்பாட்டு சினிமாவில் கொஞ்சம்தான் வந்தது. நிறைய மாற்றிவிட்டார்கள். சினிமாவில் இது மிகவும் சின்ன பிளேட். பழைய படம் மாலாப் பிள்ள என்று ஒரு படம்… ஆனால் இந்த பாட்டு நாடகத்தில் பெரிய பாட்டு. இரண்டுபக்க பிளேட் அளவுக்கு இருக்கும். என் மாமாவிடம் ஒரு பழைய பிளேட் இருக்கிறது. அதில் எட்டு சரணங்கள் உண்டு… சினிமாவுக்காக நிறைய மாற்றிவிட்டார்கள். அதை புவ்வுல சூரிபாபு நிறைய மேடைகளில் பாடியிருக்கிறார்.”
“அப்படியா?”
“சூரிபாபுவின் குரல் காலி வெங்கடேஸ்வர ராவ் போல கம்பீரமானது இல்லை. கொஞ்சம் மென்மையான குரல்… கொஞ்சம் பெண் போலவே இருக்கும். அவர் பெயர் போலவே பூ போன்ற குரல்…”
”அது நல்லதுதான்… எனக்கு மென்மையான ஆண்குரல் பிடிக்கும்… எனக்கு என்ன தோன்றும் தெரியுமா? ரொம்ப பழைய அம்மிகள் இருக்குமே. பழைய வீடுகளில். கருங்கல்தான் ஆனால் மழமழவென்று தளிர்வாழை இலை போல மென்மையாக ஆகியிருக்கும்… அதைப்போல” என்று அவள் சொன்னாள் “அதாவது கல்லாகவும் இருக்கவேண்டும், பூவிதழாகவும் இருக்கவேண்டும்”
நான் நின்று அவளைப்பார்த்தேன். அவள் கண்கள் நிலவொளியில் ஈரமானவைபோல மின்னின. இமைமயிர்கள் வெள்ளிபோல ஒளிகொண்டிருந்தன.
“நீ எப்படி இப்படியெல்லாம் சொல்கிறாய்?”
“ஏன்?”
“இல்லை, இப்படியெல்லாம் யாருமே பேசமாட்டார்கள் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.”
“நான் இப்படியெல்லாம் மனசுக்குள் நினைப்பேன். இன்றைக்குத்தான் பேசுகிறேன்.”
“நீ கதை படிப்பாயா?”
“ஆமாம், கிடைக்கிற காசுக்கெல்லாம் புத்தகம் வாங்கிவிடுவேன். மூர்மார்க்கெட்டில் அப்துல் ரசாக் பாய் எல்லா தெலுங்கு புத்தகமும் வைத்திருக்கிறார்.”
“அய்யோ, நானும் அவரிடம்தான் வாங்குவேன்” என்றேன் “கடைசியாக என்ன வாங்கினாய்?”
“எட்டு கதைகள் என்று ஒரு புத்தகம். புச்சிபாபு எழுதியது.”
“புச்சிபாபுவா? அவர் நாடகங்கள் எழுதுபவர் அல்லவா?”
”கதைகளும் எழுதியிருக்கிறார்” என்றாள்.
”நான் அதிகமாக கதைகள் படிப்பதில்லை. கவிதைதான். தேவுலப்பள்ளி கிருஷ்ண சாஸ்திரியின் எல்லா கவிதைகளும் என்னிடம் இருக்கின்றன” என்றேன் “நிறைய கவிதைகளை நானேகூட மெட்டு போட்டு பாடுவதுண்டு.”
”நான் அதிகமும் கதைகள்தான் படிப்பேன்…”
“யார் உனக்கு பிடித்தமானவர்?” என்று நான் கேட்டேன். ஒரு பெண்ணிடம் அப்படி கேட்கும் ஒரு தருணம் வரும் என்று நான் எண்ணியதே இல்லை. சினிமாக்களில்தான் அப்படிப் பெண்களிடம் பேசமுடியும்.
“கவிராஜு திரிபுனனேனி ராமஸ்வாமி” என்று அவள் சொன்னாள்.
”அவரா? ஒரு நாடகம் படித்தேன். எனக்கு பிடிக்கவில்லை” என்று நான் சொன்னேன்.
“ஏன்?” என்றாள்.
”உணர்ச்சிகளே இல்லை. கருத்துக்களாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்”
“அவர் நல்ல கருத்துக்களை எழுதுகிறார். பெண்கள் படிக்கவேண்டும், விதவைகளுக்கு மறுமணம் செய்யவேண்டும் என்கிறார்” என்றாள்.
“ஓகோ” என்றேன்.
“ஏன் அது உங்களுக்குப் பிடிக்காதா?”
“பிடிக்காதென்றில்லை” என்றேன்.
“பெண்கள் படிக்கவேண்டும். படித்து விட்டால் போதும், கௌரவம் வந்து சேரும்.”
“ஏன், கௌரவத்துக்கு என்ன இப்போது?”
”நான் மட்டும் படித்திருந்தால்…” என்று அவள் சொன்னாள். அப்போது அவள் குரல் இறங்கி விட்டது.
“ஆனால் எல்லாரும் உன்னைப்போல இல்லை.”
அதை ஏன் சொன்னேன் என உடனே எண்ணினேன். அந்த முள் வந்துகொண்டேதான் இருக்கிறது.
ஆனால் அவள் அப்போது வேறொரு மனநிலையில் இருந்தாள். “எல்லா பெண்களும் ஒன்றுதான். அக்கவுண்டண்ட் சீதாராம சாஸ்திரி குழந்தைக்கு மருந்து வாங்க பணம் கேட்ட மனைவியை ஸ்டுடியோவில் வைத்து அறைந்து முகத்தில் துப்பினார்.”
நான் அந்தப் பேச்சை மாற்ற நினைத்தேன். “எனக்கு கதைகளில் இந்த மாதிரி வாழ்க்கைப் பிரச்சினையை பேசுவது பிடிக்கவில்லை. வாழ்க்கைப் பிரச்சினைதான் எங்கேயும் இருக்கிறதே. ஏன் அதை புத்தகத்திலும் படிக்கவேண்டும்?”
“பிறகு என்ன வேண்டும்?”
“இதே போன்ற நிலவு… சினிமா போன்ற நிலவு.”
“சினிமாவில்கூட நிலவுதான் அழகாக இருக்கிறது” என்றாள். “நான் சினிமாவில் நிலவைப்பார்த்தால் அய்யோ இப்படி ஒரு நிலவை நேரில் பார்த்ததே இல்லையே என்றுதான் நினைப்பேன்.”
“நிலவும் பனியும்தான் சினிமாவின் லைட்டுக்கு அழகாக இருக்கும்” என்றேன்.
“இந்த நிலவில் என்ன நினைப்பீர்கள்?”
“நான் இங்கே இருக்கிறேன், இதோ இதோ என்று” என்றேன். “நீ?”
அவள் “தேவுலப்பள்ளியின் கவிதை ’முந்து தெலிசினா பிரபு..’ அதை கேட்கும்போதெல்லாம் நான் அழுவேன்.”
“ஏன்?”
”நாம் அப்படித்தானே முறையிட்டுக்கொண்டே இருக்கிறோம். ’என்னை தெரியவில்லையா? என்னை புரியவில்லையா?” என்று அவள் சொன்னாள். ”தியாகையா, புரந்தர விட்டலா எல்லாருடைய பாடல்களிலும் இதேபோன்ற வரிகள் உண்டு.”
“சாஸ்த்ரீய சங்கீதம் கேட்பாயா?”
“நான் முறையாகவே படித்தேன்… ஆனால் என்னால் நன்றாக பாடமுடியவில்லை… எனக்கு பாடுவதைவிட மனசுக்குள் பாட்டை ஓடவிடுவதுதான் பிடித்திருக்கிறது”
“எனக்கும்தான்” என்றேன்.
“எனக்கு பாட்டைவிட பாட்டின் வரிகள்தான் பிடிக்கும்.”
“உண்மையிலேயே எனக்கும் அப்படித்தான்” என்றேன்.
எப்படி இவளை முதற்கணத்திலேயே எனக்கு பிடித்தது? இவள்தான் இவள்தான் என எது சொன்னது? இதெல்லாம் இவள் உடலில் இருந்தனவா? அசைவில் வெளிப்பட்டனவா?
அவள் “அந்த பாடலைப் பாடுங்கள்…ஆ மப்பு ஈ மப்பு ஆகாச மத்யன…”
”நான் பசவராஜு அப்பாராவ் எழுதிய கவிதையையே பாடுகிறேன். நாடகப்பாட்டில் அந்த வாத்திய சங்கீதமெல்லாம் இல்லை. ஆர்மோனியம் மட்டும்தான். தபலாகூட இல்லை”
“சரி பாடுங்கள்”
“ஏறிக்கொள்”
அவள் ஏறிக்கொண்டதும் நான் பாடிக்கொண்டே ஓட்டினேன்.
அந்த முகில் இந்த முகில்
ஆகாயத்தின் நடுவினிலே
அதுபோல உள்ளம் இணையவேண்டும் நாம்
அன்பே இப்புவியினிலே
ஒருவரான பின்னர்
இருவராக கூடாது.
கொடுப்பதுமில்லை பெறுவதுமில்லை
தழுவுதலும் கூட இல்லை.
அங்கிருப்பது ஒற்றை மேகம்.
அந்த முகில் நிலவொளியில்
காணும் கனவொன்று உண்டு.
அந்த நிலவுதான் இந்த முகிலில்
அந்தக் கனவை நிறைத்திருக்கிறது.
கனவல்லவா அன்பே,
இரண்டு முகில்களையும் ஒன்றாக்குகிறது?
நிலவில் ஊறிய முகில்கள்
ஒளிகொண்டு நின்றிருக்கின்றன.
வானம் அத்தனை பெரியது
அதன் பாதையோ முடிவற்றது.
ஆனால் முகில்களுக்கு அவசரமே இல்லை.
அன்பே அவை எங்கும் செல்ல விரும்புவதுமில்லை.
ஒன்றை ஒன்று தழுவிய முகில்களுக்கு
வானம்தான் எதற்கு?
ஒருவரை ஒருவர் அறிந்தபின்னர்
விண்மீன்களை எண்ணி கணக்கிடுவது எதற்காக?
எத்தனை உயரத்தில் அந்த முகில்கள்!
மண்ணிலிருந்து எத்தனை உயரத்தில் அந்த முகில்கள்!
கால்களில்லை,எனவே மண்ணுக்கு உறவே இல்லை.
சிறகுகள் இல்லை ,எனவே காற்றையும் அறிவதில்லை..
ஒளியை அள்ளும் உடல்மட்டும் இருக்கிறது
உடலே ஒளியாகும் காதல் மட்டும் இருக்கிறது.
அந்த முகில் இந்த முகில்
ஆகாய நடுவினிலே
இரண்டு முகில்களும் மெல்ல கரைகின்றன
அன்பே வானில் அவை பரவுகின்றன
வானம் மட்டுமே எஞ்சியிருக்கும்
முகில்கள் மறைந்துவிடும்
அன்பே வானம் அங்கிருக்கும் அல்லவா?
முகில்களை அறிந்த
அந்த வானம் அங்கேதான் இருக்கும் அல்லவா?
என் அன்பே என் அன்பே
அந்த வானம் அங்கேதான் இருக்கும் அல்லவா?
நான் நீண்டநேரம் பாடினேன். பல சரணங்களை திரும்பத்திரும்ப ஆலாபனை செய்தேன். பாடப் பாட பாட்டு தீரவே கூடாது என்று தோன்றியது. அந்த வானம் அங்கிருக்கும் அல்லவா? அந்த வானம் அங்கேதான் இருக்கும் அல்லவா? என் அன்பே அந்த வானம் அங்கேதான் இருக்கும் அல்லவா?
ஹொஸ்பெட் சாலையில் ஒரு வண்டிகூட இல்லை. நிலாவன்றி ஒரு வெளிச்சம்கூட இல்லை. எங்கள் சைக்கிள் மட்டும் ஒரு சிறிய பறவைபோல சென்றுகொண்டிருந்தது.
[மேலும்]