[ 7 ]
மறுநாள் காலையில் நான் எழுந்தபின்னரும் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். அவளை தட்டி எழுப்பினேன். பலமுறை உசுப்பியபிறகுதான் அவள் விழித்தாள்.
கடுமையான குரலில் “என்ன?” என்றாள், அவள் என்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்று கண்கள் காட்டின. விழிகள் சிவந்திருந்தன.
“அறைக்குள்ளே போய் ஒளிந்துகொள்…”
“ஏன்?”
நான் சிலகணங்கள் பேசாமல் அமர்ந்திருந்தேன். அவளுக்கு அதன் பின்னர்தான் எல்லாம் புரிந்தது. எழுந்து வாயைத்துடைத்துக்கொண்டு “நான் ஒன்றுக்கு போகவேண்டும்” என்றாள்.
”பின்னால் கதவு இருக்கிறது. அதுவழியாக இப்போது வெளியே போ …” என்றபின் “பகலில் வெளியே போகக்கூடாது. இங்கே ஒரு பாத்திரம் ஏதாவது கொண்டு வைக்கிறேன். பகலில் அந்த அறைக்குள்ளேயே இரு” என்றேன்.
சரி என்று தலையசைத்தாள். நான் கைதூக்கி சோம்பல் முறித்தேன். வெளியே ஓசைகள் கேட்கவில்லை. ஒருவேளை ரங்கா ரெட்டியின் ஆட்கள் அவளுக்காக தேடிக் கொண்டிருக்கலாம். ஆனால் அந்த நாளை மிக பரபரப்பாக நிகழ்த்தவிருக்கிறோம் என்ற உற்சாகம்தான் என்னிடமிருந்தது.
வெளியே வந்து இருட்டில் ஒளிவிட்ட நிலவை பார்த்தேன். ஆங்காங்கே ஓரிருவராக எழ ஆரம்பித்து விட்டார்கள். நான் சென்று முகம் கழுவி பல் தேய்த்துவிட்டு வந்தேன். இவளுக்கு ஏதாவது உணவு கொண்டுவரவேண்டும். ஆனால் அதற்கு எந்த வழியும் இல்லை.
அவள் வழக்கமாக விடியற்காலைகளில் ஆழ்ந்து உறங்குபவள் என்று தோன்றியது. வெளியே போய்விட்டு வந்ததும் அப்படியே அமர்ந்து வாய் திறந்து மீண்டும் தூங்க ஆரம்பித்தாள்.
“ஏய், ஏய்” என உசுப்பினேன்
“என்ன” என்று தூக்கத்தால் கம்மிய குரலில் கேட்டாள்
“உள்ளே போய் தூங்கு.”
“ம்” என தலையைச் சொறிந்தபின் எழுந்து தள்ளாடி நடந்துசென்றாள். விழுந்துவிடுவாள் போலிருந்தது. உள்ளே சென்றதுமே அப்படியே தூங்க ஆரம்பித்துவிட்டாள். மெல்லிய மூச்சொலி கேட்டது.
சீக்கிரமே வேலை ஆரம்பமாகி விட்டது. ஆடைகளை கொடுத்தனுப்பி கணக்கு முடித்தபோது ஏழுமணி. அப்போது அவ்வழியாக ரங்கா ரெட்டியின் ஆட்கள் அனைத்து முகங்களையும் கூர்ந்து பார்த்தபடிச் செல்வதைக் கண்டேன். மீண்டும் ஒரு விரிவான தேடலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது.
எட்டுமணிக்கு காலையுணவு வந்தது. பெரிய பித்தளைப் போணிகளில் கொண்டுவந்து இறக்கிவைத்து வெள்ளை எனாமல் தட்டுகளில் உப்புமா, பொங்கல், இட்லி பரிமாறினார்கள். நான் அதை எடுத்துக்கொண்டு என் வீட்டுக்கு வந்தேன். பலநாட்கள் அப்படி வந்து அமர்ந்து எதையாவது வாசித்தபடி சாப்பிடுவது வழக்கம்.
அதை அந்த அறைக்குள் கொண்டுசென்று வைத்தேன். அவளை உசுப்பி எழுப்பினேன் “சாப்பிடு. நான் வெளியே சாப்பிட்டுக்கொள்கிறேன்… என்ன ஏது என்று விசாரித்துவிட்டு வருகிறேன். அவர்கள் மிகத்தீவிரமாக உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். சந்தடி காட்டாமல் இரு” என்றேன்.
அவள் பயம் எதையும் காட்டவில்லை. என் கையில் இருந்து தட்டை ஆவலாக வாங்கிக்கொண்டாள். அப்படியே கைகழுவாமல் சாப்பிட ஆரம்பித்தாள்.
“போதுமா?” என்றேன்.
“பசிக்கிறது” என்றாள். “நல்ல பசி. வயிறு எரிகிறது. நான் நேற்றிரவு அவர்கள் தந்த ஏதோ சாராயத்தை மட்டும்தான் குடித்தேன்.”
நான் அப்பேச்சை அப்படியே உதறி வெளியே வந்தேன். வீட்டுக்கதவை பூட்டிவிட்டு பண்ணைவீட்டிலிருந்து வெளியே சென்றேன். முடிதிருத்தும் சாம்ராஜின் சைக்கிளை இரவல் வாங்கிக்கொண்டு துணைநடிகர்கள் தங்கியிருக்கும் பண்ணைவீட்டுக்குச் சென்றேன்.
அங்கே ஏன் செல்கிறேன் என்பதை உள்ளே செல்வது வரை யோசிக்கவில்லை. உள்ளே நுழைந்தபின் தயாரிப்பு உதவியாளன் நாராயண ராவை பார்த்தேன். “என்ன?” என்றான்.
அப்போது தோன்றிய எண்ணம் பொருத்தமாகவே இருந்தது. “போர்க்காட்சிகளை எப்போது எடுப்பார்கள்? படைவீரர்களின் உடைகளை தனியாக அடுக்கி வைக்கவேண்டும்” என்றேன்.
“அது இப்போது ரெட்டிகாருவுக்குக் கூட தெரியாது” என்று அவன் என் தோளில் தட்டினான். “நீ அராமாக இரு தம்முடு. உனக்கு என்ன? துணி இருந்தால் கொடு. இல்லாவிட்டால் பேசாமலிரு. நீ பணக்கார வீட்டுச் செல்லப்பிள்ளை. என்னைப்போல சோற்றுக்கில்லாமல் வந்தவனா? ஒரு ஐந்து ரூபாய் இருந்தால் கொடு. நாளைக்கு தருகிறேன்.”
அங்கே அத்தனைபேரும் இயல்பாகத்தான் இருந்தனர். ஏதேதோ வேலைக்காக அலைந்துகொண்டிருந்தனர். இருவர் இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளை தூக்கிக் கொண்டு சென்றார்கள். அது எதற்கு என்று தெரியவில்லை. ஆனால் இங்கே எல்லாமே எல்லாவற்றுக்கும் தேவைப்படுவதுண்டு.
அங்கே கொஞ்சநேரம் வெறுமே சுற்றிவிட்டு திரும்ப வந்தேன். அங்கும் சாலையிலும் எல்லாம் ரங்கா ரெட்டியின் ஆட்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் கண்களின் அலைவு எனக்கு அச்சமூட்டவில்லை, ஒளிந்திருக்கும் இன்பத்தையே அளித்தது.
சைக்கிளிலேயே ஹம்பிக்குச் சென்றேன். நாகலிங்க ஆசாரியைப் பார்த்தேன். அவனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. படப்பிடிப்பு வழக்கம்போல நடந்து கொண்டிருந்தது. பொதுவாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு திரும்ப எங்கள் பண்ணைவீட்டிற்கே வந்தேன்.
கோதண்டம் அண்ணன்தான் என்னை தனியாக அழைத்துச்சென்று “தம்முடு ஒரு பிரச்சினை” என்றார்.
“சொல்லுங்கள்” என்றேன்.
”இங்கே எல்லாருக்கும் தெரியும். ஆனால் பேசாமலிருக்கிறார்கள்.” என்றார் கோதண்டம். “நேற்று இந்த ரங்கா ரெட்டியும் ஆட்களும் துணைநடிகை ஒருத்தியை கூட்டி வந்திருக்கிறார்கள். அவள் அவர்களில் ஒருவனை மண்டையில் புட்டியால் அடித்துவிட்டு ஓடிவிட்டாள். அவளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவளை வெறிகொண்டு தேடிக்கொண்டிருக்கிறார்கள். சிக்கினால் அடித்தே கொன்று விடுவார்கள் போல.”
“அந்த ஆள் என்ன ஆனான்?”
“நல்ல அடி… ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கிறான். நிறைய தையல்கள் போடவேண்டும். இன்னும் நினைவு வரவில்லை. நேற்றே ஜீப்பில் தூக்கிப்போட்டு ஹொஸ்பெட் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனதனால் பிழைத்தான். போலீஸில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இங்கே போலீஸ் உடனே கம்ப்ளெயிண்ட் எடுப்பதில்லை. ஆளைப் பிடித்து ரங்காரெட்டியிடம் கொடுப்பதுதான் போலீஸின் வழக்கமாம். போலீஸ் அந்தப்பெண்ணின் அம்மாவை கூட்டிக்கொண்டு போயிருக்கிறது… பிரகாஷ் ராவ் போலீஸ் ஸ்டேஷனில்தான் இருக்கிறான்”
”சரி, இதில் நமக்கென்ன?” என்றேன்.
“நமக்கு ஒன்றுமில்லை. ஆனால் அந்தப்பெண் இங்கிருந்து எங்கே போனாள் என்று தெரியவில்லை. ரங்கா ரெட்டியின் ஆட்கள் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.”
“ஓகோ.”
”அந்தப்பெண் சிக்கவில்லை என்றால் ரங்கா ரெட்டி எல்லாருக்குமே சிக்கல் கொடுப்பான்.”
“அவனைச் சமாளிக்க பிரகாஷ் ராவுக்கு தெரியாதா என்ன?”
”ஆமாம், பிரகாஷ்ராவ் பெரிய கிரிமினல்.”
காலை கொஞ்சம் பிந்தி, வெயில் ஏறியபிறகுதான் நான் வீட்டுக்குள் சென்றேன். கதவை உள்ளே தாழிட்டுக்கொண்டேன். பகலில் சிலசமயம் அப்படி தாழிட்டுக்கொண்டு நான் தூங்குவதுண்டு. காலையில் துணிகள் சென்றபின் உதிரி தையல் வேலைகள் மட்டும்தான் இருக்கும். ஸ்டாக்கை எடுக்கவேண்டியிருக்காது.
அவளிடம் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று சொன்னேன். அவள் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை. “நிலைமையைப் பார்த்தால் இன்று இரவு வெளியே கிளம்புவதுகூட ஆபத்து. நீ இந்த ஊரிலிருந்து போய்விட்டாய் என்று அவர்கள் நினைக்கவேண்டும்… அந்த மாதிரி எதையாவது பரப்பி விட்டுவிட வேண்டும்… அதன்பிறகுதான் வெளியே வரமுடியும்.”
அவள் “உம்” என்றாள். ஆனால் அதை அவள் கவனித்ததாகவே தெரியவில்லை.
“பார்க்கிறேன்” என்றேன் “எதாவது வழி இல்லாமல் போகாது.”
அங்கே வீட்டை பூட்டிக்கொண்டு இருப்பதும் ஆபத்துதான். யாரோ ஒருவர் ஏதோ வேண்டுமென வந்து கதவைத்தட்டி திறந்து உள்ளே வர வாய்ப்பிருந்தது. நிரந்தரமாக பூட்டியும் வைக்கமுடியாது. நான் வழக்கமாக பூட்டுவதோ தாழிடுவதோ இல்லை. அங்கே இருக்காமலிருப்பதே ஒரே வழி. வெளியே போகும்போது நான் ஸ்டாக் அறையை பூட்டிக்கொண்டுதான் வழக்கமாகச் செல்வேன்.
ஆகவே அறையையும் முன்வாசலையும் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கே போய்விட்டேன். அங்கே பெரிய திறந்த வெளி செட்டில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. என்.டி.ஆர், பானுமதி இருவரும் இரும்பு நாற்காலிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுக்குமேல் மிகப்பெரிய வண்ணத் துணிக்குடை நிழல் அளித்தது. சற்று அப்பால் நாடா நாற்காலியில் என்.என்.ரெட்டி மல்லாந்து கண்மேல் கைக்குட்டையைப் போட்டுக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார்.
தொப்பியை கவிழ்த்துக்கொண்டு, கறுப்புக்கண்ணாடி மாட்டிய மெல்லி இரானி ஒளி அமைத்துக்கொண்டிருந்தார். அவருடைய கையசைவுக்கு ஏற்ப உதவியாளர்கள் ஓடி ஓடி வேலைபார்த்தனர். முதல் உதவியாளர் யூ.ராஜகோபால் ஒரு விசிலை வாயில் வைத்து ஊதி ஆணைகளை பிறப்பித்து அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார். ஒளிப்பதிவு இலாகாவினர் முழுக்கவே வெள்ளை சட்டையும் காக்கி கால்சட்டையும் அணிந்திருந்தனர். மெல்லி இரானி வெள்ளை பாண்ட் அணிந்து ஷூ போட்டிருந்தார்.
வெள்ளிபோல மின்னும் பிரதிபலிப்பான்கள், இரும்புக் குழாய்களாலான சட்டகத்தில் கறுப்புத் துணியை இழுத்து கட்டிய மிகப்பெரிய இரும்புத்தட்டிகள். ஒருபக்கம் வெள்ளித்தாளும் மறுபக்கம் கருப்புத்தாளும் ஒட்டப்பட்ட கனமற்ற மரப்பலகைகள். மினி, பேபி லைட்டுகள் மரமேடைகளின் மேல் வைக்கப்பட்டு அருகே லைட்பாய்கள் நின்றிருந்தனர். மாக்ஸி லைட்டுகள் பெரிய வெந்நீர் அண்டாக்கள் போல அப்பால் வைக்கப்பட்டிருந்தன. இரவுக்குத்தான் அவை தேவை. தொலைவில் ஜெனரேட்டர் உறுமிக்கொண்டிருந்தது. பூசணி கொடிகள் போல மின்சார ஒயர்கள் தரையில் கிடந்தன.
லைட் அமைக்க தேவையான மரத்தாலான கோடாக்கள், அவற்றில் ஏற சிறிய ஏணிகள் போன்றவற்றை தூக்கிக்கொண்டு ஓடினர். குட்டிக்குட்டியான மர ஸ்டூல்கள் எங்கும் கிடந்தன. அமர்வதற்கும், உயரத்துக்கு ஏற்ப அடுக்குவதற்கும் உரிய பலவகையான பெட்டிகளை எடுத்துக் கொண்டு அங்குமிங்கும் பாய்ந்தார்கள். குழம்பிப்போய் திரும்பக் கொண்டுவந்து வைத்தார்கள். வசைபாடப்பட்டு மீண்டும் கொண்டு சென்றார்கள்.
படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு அப்பால் அடுத்த காட்சிக்காக டிராலி அமைத்துக் கொண்டிருந்தனர். மரக்கட்டைகளை அடுக்கி அதன்மேல் தண்டவாளத்தை பொருத்தினர். ரசமட்டம் வைத்துப் பார்த்து ஆப்புகளை அடித்துச் சீரமைத்தனர். அருகே டிராலி நான்கு இரும்புச் சக்கரங்கள் மேலெழுந்து தெரிய, பக்கவாட்டில் மண்ணில் பாதி ஊன்றிக்கிடந்தது. அதன் சக்கரங்களில் மண் படக்கூடாது, தண்டவாளத்தில் நொடிப்பு உருவாகும். அதைப் பார்த்தாலே அதன் எடை தெரியும். அதை கையாள்பவர்கள் எல்லாருமே பயில்வான்கள். எடைதான் அதற்கு அந்த சீரான நிதானத்தை அளித்தது.
அதற்கு அப்பால் இருபதடி கிரேன் பல இரும்புச்சட்டங்களாக பிரிக்கப்பட்டு அடுக்கப்பட்டிருந்தது. கிரேனில் மாட்டவேண்டிய எடைமிக்க உருளைகள் புழுதியில் மூழ்கியவை போல கிடந்தன. காமிரா அனைத்துக்கும் நடுவே ஒரு கறுப்புத் துணியால் மூடப்பட்டு கருவறைத் தெய்வம் போல, மண்ணில் ஊன்றிய மூன்று கால்களின்மேல் நின்றிருந்தது. அதன் காவலர்கள் இருவர் எந்நேரமும் உடனிருப்பார்கள். அவர்களை துவாரபாலகர் என்போம்.
அருகே லென்ஸ் பெட்டியுடன் இருவர். லென்ஸ்களை எடுத்து துருத்தியால் காற்றை ஊதி தூசியைத் துடைத்து அளிப்பது திரும்ப வாங்கி வைப்பது மட்டும்தான் அவர்களின் வேலை. இந்த படப்பிடிப்புத் தளத்தில் என்.என்.ரெட்டி, மெல்லி இரானிக்கு பிறகு மதிப்பு மிக்கவை காமிராவும் லென்ஸ்களும்தான். அவற்றை அழுக்கு நீக்க இறக்குமதி செய்யப்பட்ட திரவம் ஒன்று உண்டு. சாராயம் போல வாடை வரும்.
ஒருவன் குடிக்க குளிர்பானத்தையும் மோரையும் அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தான். மிக அப்பால் காக்கித் துணியாலான குடைக்கு கீழே நாகராவுடன் ஒலிப்பதிவாளர் அமர்ந்திருந்தார். அதன் அருகே சென்று நின்றேன், அதற்கு அப்பால் கலை இலாகாவினரின் இடம். அங்கே காக்கி துணியால் மூடப்பட்டு ஏராளமான பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தன. அங்கே நின்ற நரசிங்கன் என்னை பார்த்துவிட்டான். “வாடா, மோர் சாப்பிடு” என்றான் ”நெல்லிக்காய் போட்ட மோர். வெயிலுக்கு நல்லது”
“நீ எப்போது வந்தாய்?”
“நேற்றே வந்துவிட்டேன். செகண்ட் அசோசியேட் டைரக்டர் கூட வந்தேன். நீ எங்கே தங்கியிருக்கிறாய்?”
“தையல் இலாகா இருக்கும் பண்ணை வீட்டில்தான்… இங்கே என்ன காட்சி?”
“இங்கேயா? இங்கே விஜயேஸ்வரியை தேடி நல்லமராஜு விஜயநகரத்திற்குள் நுழைந்துவிடுகிறான். மாறுவேடமிட்டு அரண்மனையை அடைந்து அங்கே நந்தவனத்தில் ஒரு கோயிலில் ஒளிந்திருக்கிறான். அங்கே பிற அரசிகளுடன் சாமி கும்பிட வரும் விஜயேஸ்வரியை பார்த்துவிடுகிறான். அவளை தனிமையில் சந்தித்து பேசுகிறான். அப்போது பெரிய அரசி திருமலாதேவி வந்துவிடுகிறார். விஜயேஸ்வரி அவனை தன் அரண்மனைக்குள் கொண்டுசென்று தன் படுக்கையறையிலேயே ஒளித்து வைத்துக்கொள்கிறாள்.”
“படுக்கையறையிலேயா? அங்கே எவரும் பார்க்க மாட்டார்களா?”
“சினிமாவில் பார்க்க மாட்டார்கள். அவன் தந்திரமாக அந்த மாளிகையிலேயே அவளுடன் இருக்கிறான். பகல் முழுக்க ஒளிந்திருக்கிறான். இரவில் நிலவில் அவன் அவளுடன் வெளியே வந்து உத்தியானத்தில் பாடுகிறான்.”
“அதை யாரும் கேட்கமாட்டார்களா?”
”சினிமாவில் கேட்க மாட்டார்களடா மடையா” என்றான் நரசிங்கன் “அந்த பாட்டுதான் எடுக்கப்போகிறார்கள்.”
“பாட்டா? இரவில் அல்லவா பாடுகிறார்கள்?”
“ஆமாம், அதற்காக இரவில் எடுத்தால் படத்தில் தெரியுமா? பகலில்தான் இரவையும் எடுப்பார்கள்.”
“அதெப்படி?”
”காமிராவுக்கு ஃபில்டர் போடுவார்கள்… கறுப்புக் கண்ணாடி மாதிரி. நிலாவெளிச்சம் மாதிரி ஆகிவிடும்… அங்கே பார் நிலவு.”
அங்கே வானத்தில் ஒரு கரிய துணி இழுத்து கட்டப்பட்டு அதற்குப் பின்னால் ஒரு வட்டவடிவ விளக்கு வாயை துணியில் ஒட்டிக்கொண்டு இருந்தது.
“லைட் போட்டதும் அது நிலவாக ஆகிவிடும்.”
மெல்லி இரானி வைக்கோல் தொப்பியை கழற்றி வியர்வையை துடைத்துக் கொண்டு காமிரா அருகே சென்றார். விளக்கொளிகள் பலமுறை போட்டு அணைத்து போட்டு அணைத்து கோணங்கள் மாற்றப்பட்டு அமைக்கப்பட்டு விட்டன. ஒருவன் இடம் மாறி இடம் மாறி நின்று சிறிய வெண்குமிழி போன்ற லைட் மீட்டரைக்கொண்டு ஒளியை அளந்து சைகையால் சொல்லிக் கொண்டிருந்தான்.
மெல்லி இரானி கைகாட்டி ஓசையின்றிச் சொன்ன இடங்களில் அவர் உதவியாளர்கள் நின்றனர். அவர் கையை செங்குத்தாக மேலே தூக்கி காட்டியதும் எல்லா விளக்குகளும் எரிந்தன. அந்தப்பகுதி கண்கூசவைக்கும் ஒளிகொண்டதாக ஆகியது.
“பகலில் இத்தனை வெயில் வெளிச்சம் இருக்கிறதே, இது போதாதா? எதற்கு இத்தனை லைட்?”
“போதாது, வானம் பளிச்சென்று இருக்கிறதே, முகம் நிழலாக ஆகிவிடும். ஆகவே முகத்தில் வானத்திலிருப்பதை விட அதிக வெளிச்சம் வேண்டும்” என்றான் நரசிங்கன்.
“நீ இதையெல்லாம் எப்படி தெரிந்துகொண்டாய்?” என்றேன்.
”நான் மூன்று வருடங்களாக இதில் இருக்கிறேன். பார், ஒருநாள் நானும் படம் இயக்குவேன்.”
நான் ஒன்றும் சொல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். விளக்குகள் அணைந்தபோது வெயிலிலேயே அந்த இடம் இருள்வதைப்போல தோன்றும் விந்தையை நான் எண்ணிக்கொண்டேன்.
நரசிங்கன் அவனுடைய உலகிலேயே இருந்தான். “அது இதேபோல அரசர்களையும் காதலையும் பற்றிய படமாக இருக்காது. மக்கள் படும்பாடுகளைப் பற்றிய படமாக இருக்கும்.”
“மனதேசம் மாதிரியா?”
”அது படமா? வெள்ளைக்காரன் கதையை திருடி எடுப்பது. நான் சொல்வது மக்களின் கதை. மக்கள் எப்படி விடுதலை அடைவது என்பது பற்றிய படம். பார், ஒருநாள் நான் எடுப்பேன். இதெல்லாம் மாறவேண்டும். அதை மக்களிடம் சொல்ல சினிமாதான் நல்ல வழி.”
டிராக் அமைந்துவிட்டது. டிராலியை தூக்கி அதன்மேல் வைத்தார்கள். மெல்லி இரானி டிராலியில் ஏறி அமர்ந்து வலக்கையை சதுரமாக குவித்து கண்மேல் வைத்துக்கொண்டு ஃப்ரேம் பார்த்து கைகளை காட்டினார். யூ.ராஜகோபால் அதைக்கண்டு கைகளை வீசினார். அவை ஆணைகளாகப் பரவின. மெல்லி இரானியின் கைகள் முணுமுணுக்க யூ.ராஜகோபாலின் கைகள் கூச்சலிடுவதுபோல நினைத்துக்கொண்டேன்.
அனைத்து விளக்குகளும் எரிந்தன. மெல்லி இரானியின்உதவியாளர்கள் தரையில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த இலைகளை அடையாளம் வைத்துக்கொண்டு அவற்றின் மேல் கால்வைத்து, பேசியபடி நடந்து வந்து, கடைசி புள்ளியில் நின்றனர். அதற்கேற்ப கோடாக்களின் மேல் லைட்டுகள் மெல்லத் திரும்பின. அந்தக் கூட்டத்தில் அவர்கள் மட்டும் கண்கூச ஒளிகொண்டிருந்தனர். டிராலி டிராக்கில் தள்ளப்பட்டு வழுக்கியபடி மெல்ல ஓடிவந்து நின்றது. அது நின்ற இடத்தை சாக்பீஸால் அடையாளப்படுத்தினர். திரும்பச் சென்று நின்றபோது அந்த இடமும் அடையாளப்படுத்தப்பட்டது.
“மெல்லி இரானி வெறும் கையாலேயே ஃப்ரேம் மட்டுமல்ல ஃபோகஸையும் அளவிட்டுவிடுவார்” என்று நரசிங்கன் சொன்னான். “ஒருவர் ஒன்றிலேயே மூழ்கி இருந்தால் அவருக்கு எல்லாமே எளிதாகிவிடுகிறது.”
மீண்டும் அதே ஒத்திகை. அதேபோல பேசியபடி அவர்கள் வந்து நின்றனர். அவர்கள் பேசவில்லை, அப்படி நடித்தனர். ஆகவே தலையசைவுகளும் கையசைவுகளும் செயற்கையாக இருந்தன.
மெல்லி இரானி மேலும் சில திருத்தங்கள் சொன்னார். அதை இருவர் ஓடிப்போய் செய்தார்கள். இலைகளை கொஞ்சம் மாற்றி வைத்து இரண்டு பேபி விளக்குகளை இடம் மாற்றினார்கள். யூ.ராஜகோபால் நடனம் ஆடுவதுபோல தெரிந்தது.
“நீ இந்த காட்சி காமிராவில் எப்படி இருக்கிறது என்று பார்க்க ஒரு வழி உண்டு” என்றான் நரசிங்கன். தன் பையில் இருந்து இரண்டு ஃபிலிம் நெகெட்டிவ்களை எடுத்து தந்தான். “இவற்றை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து அதன் வழியாகப்பார்…”
நான் அப்படிப் பார்த்தபோது மெய்யாகவே நிலவொளி போலத்தான் தெரிந்தது. இலைகள் எல்லாம் மென்மையாக பளபளத்தன. மண்டபங்களின் கூரைவளைவுகள் மெருகு கொண்டிருந்தன. தரை பட்டாலானதுபோல் இருந்தது.
“ஏறத்தாழ இந்த ஃபில்டர்தான் போட்டிருக்கிறார்” என்று நரசிங்கன் சொன்னான்.
மெல்லி இரானி திருப்தி அடைந்து இரு கட்டைவிரல்களையும் காட்டினார். ஓர் உதவியாளர் போய் என்.என்.ரெட்டியிடம் சொன்னார். அவர் எழுந்து கைநீட்ட ஒருவன் ஈரமான டவலை அளித்தான். அதைக்கொண்டு முகத்தை அழுத்தி துடைத்துவிட்டு அவர் எழுந்தார்.
காமிரா மிகமிகக் கவனமாக கொண்டுவரப்பட்டது. அதை டிராலியில் பொருத்தி ஸ்க்ரூக்களால் இறுக்கினர். காமிராவில் லென்ஸ்கள் போடப்பட்டன. லென்ஸ்களை எப்போதுமே ஒரு மஞ்சள்நிற பூந்துவாலையால் எடுத்தனர். மிகமிக மெல்ல அதை காமிராவில் பொருத்தினர். லென்ஸ்களை கைக்குழந்தை என்று சொல்வார்கள். மெல்லி இரானியே சைல்ட் என்றுதான் சொல்வார்.
என்.டி.ஆர், பானுமதி இருவரிடமும் உதவியாளர்கள் போய்ச்சொன்னார்கள். அவர்கள் இருவரும் கடைசி டச்சப் செய்துகொண்டு எழுந்தார்கள். அதன்பின் முடியமைப்பாளன் அவர்களின் கன்னத்துமுடியை சரி செய்தான். இன்னொருவன் பானுமதியின் ஆடை மடிப்பை சரிசெய்தான். இதையெல்லாம் அவர்கள் எவரையும் கவர்வதற்காகச் செய்யவில்லை. உண்மையிலேயே அவர்களுக்கு ஒரு பதற்றத்தால்தான் செய்தனர்.
பாடல்காட்சி ஆனதனால் பெரிதாக ஒத்திகை இல்லை. நடன இயக்குநர் அவரே வந்து என்.டி.ஆருக்கு அசைவுகளைச் சொல்லிக் கொடுத்தார். செயற்கைப் படிகளில் ஏறியபடியே நிலவைப் பார்த்து கைவிரித்து அவர் பாடினார். பாடியபடியே திரும்பிப் பார்க்க ஒரு கோயிலின் பின்னாலிருந்து பானுமதி தோன்றவேண்டும். அவர்கள் இருவரும் பாடியபடியே நடந்து வரவேண்டும். அவர்கள் வந்து நிற்கும் இடத்தில் காமிரா வந்து நிற்கும்.
அவர்கள் இருவரையும் நிற்க வைத்தும் நடக்க வைத்தும் அசைவுகளைச் சொல்லிக் கொடுத்தார்கள். திரும்பத்திரும்ப அது நடந்தது. காமிரா நீரில் மிதப்பது போல டிராலிமேல் மெல்ல ஓடி அவர்களை தொடந்தது. ஃபோகஸ் புல்லர் மெல்லி இரானியின் இணையாக டிராலியில் அமர்ந்து ஃபோகஸ் டிராக்கை காமிரா வாயின் வளையவட்டத்தில் சிவப்புப் பென்சிலால் அடையாளப்படுத்தினார்.
மெல்லி இரானி கையசைத்ததும் மீண்டும் விளக்குகள் எரிந்தன. என்.டி.ஆரும் பானுமதியும் அவரவர் இடங்களில் சென்று நிற்க நாகராவில் பாடல் ஒலித்தது. முழு விளக்கொளியில் அந்த ஒத்திகை மீண்டும் நடந்தது. என்.டி.ஆரும் பானுமதியும் அந்த ஒளியில் வேறொரு உலகில் இருப்பவர்களாக தோன்றினர். ஆடைகளும் நகைகளும் மின்ன அவர்கள் கந்தர்வர்கள் போல தெரிந்தனர். மற்றவர்கள் மானுடர்கள். உண்மையிலேயே அப்படித்தான். அங்கே அந்த ஒளியில் நின்றால் அவர்களே அப்படி தன்னை நினைத்துக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள்.
முதல் கிளாப் அடிக்கப்பட்டது. முதல் ஷாட் எடுக்கப்பட்டது. இந்த நாளின் இரண்டாவது ஷாட் இது. ஏதோ சின்ன பிழை. என்ன என்று தெரியவில்லை. மெல்லி இரானி ரீடேக் கேட்டார். காமிராவில் ஃபோகஸ் சற்று மாற்றப்பட்டது. என்.டி.ஆர் பானுமதியிடம் தனியாக ஏதோ சொன்னார் போலிருக்கிறது. பானுமதி முகம் சிவக்க சிரித்தார். என்.டி.ஆரின் குரல்வளை உற்சாகமாக ஏறியிறங்கியது.
நரசிங்கன் “என்னால் இந்த கூத்தை பார்க்க முடியாது, வேலை கிடக்கிறது” என்றான். அவன் சென்றபின் நான் பார்த்துக் கொண்டு நின்றேன். ஒரே அசைவை திரும்பத் திரும்ப எடுத்தார்கள். அதற்கு வெவ்வேறு லென்ஸ்கள் போடப்பட்டன. அதற்குள் வானத்தில் மேகம் வந்து வெயில் மங்கிவிட்டது. மெல்லி இரானி தலையசைத்து காத்திருந்தார். விளக்குகள் அணைய அத்தனைபேரும் வானைப் பார்த்துக்கொண்டிருந்தனர். என்.டி.ராமராவுக்கும் பானுமதிக்கும் டச்சப் நடந்தது. நடன இயக்குநர் என்.டி.ஆரிடம் அந்த நடன அசைவை மீண்டும் நடித்துக்காட்டினார். என்.என்.ரெட்டி கூழ் போல எதையோ கொஞ்சம் அருந்தினார்.
சூரியன் விலகியபோது ஓர் ஓசை எழுந்தது. மெல்லி இரானி புறங்கையை நீட்டி ஒளியை அளந்தார். அவர் ஒளியை அளப்பதற்குரிய கருவிகளை பயன்படுத்துவதில்லை. ஃபோகஸ் புல்லர் ஏதோ சொல்ல மெல்லி இரானி ஒளியின் அளவைச் சொன்னார். ராஜகோபால் வெண்குமிழி போன்ற கருவியை வைத்து ஒளியை அளந்து சரிதான் என்பதுபோல தலையசைத்தார்.
மீண்டும் விளக்குகள் ஒளிவிட்டன. என்.டி.ஆரும் பானுமதியும் சென்று தங்கள் இடங்களில் நின்றுகொண்டனர். ராஜகோபால் வெறியுடன் அங்குமிங்கும் ஓடினார். விசில் சத்தம் ஒலித்தபடியே இருந்தது. மீண்டும் என்.டி.ஆரும் பானுமதியும் மீண்டும் பாடியபடியே மெல்ல நடந்தனர். காமிரா தொடர்ந்து வந்தது. அதனுள் ஃபிலிம் ரோல் ஓடும் ஓசை வண்டு ஒன்றின் சிறகடிப்போசை போல கேட்டது. அது ஓடியபோது அனைவரும் அமைதியடைந்தமையால் அது ஓர் ஆணை போல ஒலித்தது.
நான் சலிப்புடன் சென்று அப்பால் ஓர் மண்டபத்தில் அமர்ந்தேன். அங்கே நல்ல நிழலாகவும் தண்மையாகவும் இருந்தது. கல்மண்டபங்களில் வெயில் தெரிவதில்லை. கால்களை நீட்டிக்கொண்டு வானை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பால் ஷூட்டிங்கின் ஓசைகள். விசில் ஓசை அவ்வப்போது எழுந்தது.
மதிய உணவை நரசிங்கனுடன் உண்டேன். “அங்கே அரண்மனையிலேயே நல்லமராஜு இருந்துவிடுகிறானா?” என்றேன். உண்மையில் நான் திரைக்கதையை வாசித்திருந்தேன். ஆனால் அப்போது கதையையே கவனிக்கவில்லை.
”ஆமாம், உள்ளேயே கொஞ்சம் காட்சிகள். கடைசியில் அவனை பிடித்துவிடுகிறார்கள். அவனை கொன்றால் அரசிக்கு கெட்டபெயர் வந்துவிடும் என்பதனால் அமைச்சர் ருத்ரையா தயங்குகிறார். நீ விஜயேஸ்வரியை மறந்துவிடுவாய் என்றால் உன்னை போகவிடுகிறேன். நீ வேறு நாட்டுக்குச் சென்று வாழலாம். உனக்கு இருபது கழஞ்சு பொன்னும் தரச்சொல்கிறேன். அவளை மறப்பேன் என்று உன் புல்லாங்குழல்மேல் தொட்டு சத்தியம் செய்யவேண்டும் என்று சொல்கிறார். அவன் மறுத்துவிடுகிறான். இல்லாவிட்டால் அவனை கழுவிலேற்றுவேன் என்று அவர் சொல்கிறார். கழுவில் புல்லாங்குழலுடன் அமர அனுமதிவேண்டும், வாசித்தபடியே சாகிறேன் என்கிறான் நல்லமராஜு. அவனை மிரட்டியோ கெஞ்சியோ பணியவைக்க முடியவில்லை.”
”ஆமாம், அப்படித்தான் கதை” என்றேன்.
”அவனை தூக்கிலிடப் போகிறார்கள். அவனுடன் தானும் செத்துவிடுவேன் என்று விஜயேஸ்வரி சொல்கிறாள். அரசபோகம் மரியாதை எதுவுமே அவளை மயக்கவில்லை. அவன் தூக்குமேடையில் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே இருக்கிறான். அவள் அரண்மனையில் இருந்து அவனை நோக்கி ஓடிவருகிறாள். கடைசியில் அவர்களின் காதலை அறிந்த ராயர் அவர்களை மன்னித்து இணைத்துவைக்கிறார். அவளுக்கு பரிசுகள் கொடுத்து அவளை கூட்டிவந்த பல்லக்கிலேயே ஊருக்கு அனுப்புகிறார். நல்லமராஜுவுக்கு ராஜகுடும்பத்தினருக்குரிய முத்திரை மோதிரமும் உடைவாளும் அளிக்கப்படுகிறது. அவன் அத்தனை காவல்களையும் மீறி அரண்மனைக்குள் நுழைந்தவன். ஆகவே கோட்டையின் காவல்பொறுப்பு அவனிடமே ஒப்படைக்கப்படுகிறது. உண்மையைச் சொன்னால் நல்ல கதை.”
”ஆனால் இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கிறது?”
“நம்ப விரும்புவார்கள். ஒரு சாமானியன் அரசனை ஜெயிக்கவேண்டும். கோட்டையை ஊடுருவவேண்டும். ஆனால் கிருஷ்ணதேவராயர் பெரிய சரித்திரபுருஷன். அவரை கெட்டவராகவும் காட்டக்கூடாது. இதுபோன்ற சமரசங்கள் கொண்ட படங்கள் மக்களுக்குப் பிடிக்கும்.”
“நான் கேட்பது அதை அல்ல. அப்படி ஒரு பெண்ணுக்காக உயிரையே கொடுப்பார்களா என்ன? எந்தப் பெண்ணாவது அப்படி அவனுக்காக அரசபதவியை துறப்பாளா? அவளுடைய குழந்தைகள், தலைமுறைகள் எல்லாருக்கும் நல்லது அரசகுடும்பமாக ஆவது தானே? ஒரு காதலனுக்காக அதை வேண்டாம் என்று சொல்வாளா?”
“சொல்லியிருக்கிறார்களே. எல்லாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் சொல்பவர்கள் கண்டிப்பாக இருக்கிறார்கள்.”
“காதல் எல்லாம் அவ்வளவு முக்கியமா என்ன?”
”இதோபார், வாழ்க்கையில் எதுவுமே முக்கியம் இல்லை. ஆனால் எதையாவது முக்கியமாக நினைத்துக்கொண்டால்தான் வாழ்க்கைக்கு அர்த்தமுண்டு. இப்போது நான் சினிமா யூனியனுக்காக வேலைசெய்கிறேன். பின்னால் யோசித்துப் பார்த்தால் இதெல்லாம் அர்த்தமில்லாததாகக்கூட தோன்றலாம். ஆனால் இப்போது அது எனக்கு ஒரு நம்பிக்கையையும் நிமிர்வையும் அளிக்கிறது. நான் என்னை முக்கியமானவனாக உணரவைக்கிறது. உருப்படியாக எதையாவது செய்கிறோம் என்று எண்ணிக் கொள்கிறேன். நாளை ஒரு யூனியன் உருவாகி நாமெல்லாம் மானம் மரியாதையுடன் வாழமுடிந்தால் எனக்கு நிறைவுதான். அதேபோலத்தான். காதலிப்பவர்களுக்கு அந்த தீவிரம் இருக்கிறது. அது அவர்களுக்கு வாழ்க்கையின் அர்த்தமாகத் தெரிகிறது.”
”நீ யாரையாவது காதலிக்கிறாயா?”
“நானா? காதலா? என் சம்பாத்தியத்தில் என் வீடே தின்கிறது.”
நான் தலைகுனிந்து அமர்ந்திருந்தேன். சாகும்வரை, வாழ்க்கையையே தூக்கி கொடுப்பதுபோல, கொஞ்சம்கூட மிச்சமில்லாமல் அடிபணிந்து காதலிக்கிறார்கள். சினிமாவில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் எங்கோ அப்படிக் காதலிக்கிறார்கள். அப்படி காதலிக்காதவர்கள்கூட அதை விரும்புகிறார்கள். கற்பனையில் அப்படி வாழ நினைக்கிறார்கள். ஆகவேதான் சினிமாக்களில் அதை விரும்பிப்பார்க்கிறார்கள்.
“உனக்குத்தெரியுமா, நேற்று உன் பண்ணைவீட்டில் ஒரு அடிதடி. ஒரு துணைநடிகையை கூட்டிச்சென்றிருக்கிறார்கள். அவள் அந்த வீட்டிலிருந்த ஒரு தடியனை பாட்டிலால் அடித்துப்போட்டுவிட்டு ஓடிவிட்டாள்.”
”தெரியும்.”
“நன்றாகச் செய்தாள்… பெண்கள் அவ்வப்போது இப்படிச் செய்தால் இந்த நாய்களுக்கு ஒரு பயம் இருக்கும்”
”அவளை உனக்கு தெரியுமா?” என்றேன்.
“தெரியாது. ராஜமந்திரிக்காரி என்றார்கள். அவள் அம்மாவை போலீஸ் கொண்டுபோயிருக்கிறது” என்றான் நரசிங்கன் “ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும்? பிரகாஷ்ராவ் அதை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான். அந்த ஆள் பரம அயோக்கியன். கூட்டிக்கொடுக்கும் சில்லறை. ஆனால் மிகவும் செல்வாக்கானவன். ஏகப்பட்ட பணம், ஏராளமான தொடர்புகள்… ஒரு யூனியன் இருந்தால்கூட நாமும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாம்.”
“ஆமாம்” என்றேன். என் முகத்தை உறைந்ததுபோல வைத்துக்கொண்டேன்.
“நான் நம் ஸ்டுடியோவில் யூனியன் அமைக்க பேசிப்பார்த்தேன். சி.நரசிம்மாச்சாரியுடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. பி.சுந்தரையா வரும்போது என்னைக் கூட்டிச் செல்வதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் தொழிலாளர்களும் ஒத்துவரவில்லை. முதலாளிக்கும் யூனியன் என்றால் கசப்பு… இப்போது நம்மால் எதுவுமே செய்யமுடியாது. அவர்கள் அந்தப் பெண்ணை கொன்றால்கூட ஒன்றும் சொல்லமுடியாது. அவளை வெறிகொண்டு தேடிக்கொண்டிருக்கிறார்கள். பிரகாஷ் ராவ் இங்கிருந்து தப்ப வேண்டுமென்றால் அந்தப் பெண்ணை பிடித்து அவர்களிடம் கொடுத்தாகவேண்டும்…”
”அவளுடைய ஊர்க்காரன் ஒருவன் அங்கே இருக்கிறான். அவன் சொன்னான் அவள் ஒரு லாரியில் பெல்லாரிக்கு போய்விட்டாள் என்று” என்றேன்.
“பெல்லாரிக்கா? ஏன்?” என்றான் நரசிங்கன்.
“அந்த லாரி பெல்லாரிக்குத்தான் போயிருக்கிறது” என்றேன்.
“நல்லவேளை… தப்பித்தாள்” என்றான் நரசிங்கன்.
நரசிங்கன் ஓட்டைவாய், அதை சொல்லிப்பரப்பி மறுநாள் காலைக்குள் அனைவரும் பேச ஆரம்பித்துவிடுவார்கள் என்று எனக்கு தெரியும். நான் பெருமூச்சுவிட்டேன்.
[மேலும்]