அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-6

[ 6 ]

நாலைந்து நாள் கழித்துத்தான் படப்பிடிப்பு தொடங்கியது. நாளை படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லிச்சொல்லியே நாலைந்துமுறை தள்ளிவைத்தார்கள். ஏதோ ஒன்று வந்துசேரவில்லை. ஏதோ ஒன்று மக்கர் செய்தது. கட்டக்கடைசியாக ஜெனெரேட்டர் ஓடவில்லை. ஒவ்வொன்றுக்கும் அலைந்து ஆள்களை தேற்றிக்கொண்டுவந்து தொடங்கியபோது உண்மையிலேயே தொடங்கிவிட்டார்களா, இல்லை நின்றுவிடுமா என்றுதான் சந்தேகமாக இருந்தது. படப்பிடிப்பு ஒரு புதிய இடத்தில் தொடங்குவது பற்றிய எல்லா பதற்றங்களும் ஆர்வங்களும் வடிந்து அன்றாட வேலைபோல அது ஆரம்பித்தது.

ஆனால் படப்பிடிப்பு தொடங்கியபிறகு ஒரு பெரிய புயல் வந்து எல்லாவற்றையும் சுழற்றியடிப்பது போல ஆகியது. ஸ்டுடியோவில் எல்லாமே பல ஆண்டுகளாக நிலைபெற்று விட்டவை. ஒவ்வொன்றுக்கும் வழிகளும் மாற்றுவழிகளும் வழிகாட்டிகளும் கண்காணிப்பாளர்களும் உண்டு. இங்கே எல்லாமே புதியவை. எவருக்கும் எவரும் வழிகாட்டவோ ஆலோசனை சொல்லவோ முடியாது. ஆகவே முட்டிமோதிக்கொண்டோம். கூச்சலிட்டு வசைபாடிக்கொண்டோம். ஒவ்வொருவருவரும் சுழன்று பறந்து கொண்டிருந்தோம். என்ன செய்கிறோம் என்று ஒருவரை ஒருவர் நின்று கேட்டுக்கொண்டால் வெடித்துச் சிரித்திருப்போம்.

ஒவ்வொரு பொருளும் தேவையானபோது மறந்துவிட்டது. ஒன்றை எடுக்க பலவற்றை கலைத்தோம். ஒருவர் செய்யும் வேலை இன்னொருவரை வேலைசெய்ய முடியாமலாக்கியது. ஆனால் வேலை நடந்துகொண்டிருந்தது. ஏனென்றால் அந்தப் பதற்றத்தில் அகங்காரங்களும் தங்கள் இடம் பற்றிய சந்தேகங்களும் மறைந்துவிட்டிருந்தன. ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு உதவினார்கள். ஒருவரை ஒருவர் சார்ந்திருந்தார்கள். ஆகவே ஒற்றை விசையாக மாறினார்கள்.

ஒரு வேலை தீவிரமடையும்போது அது ஒரு புள்ளியில் மையம்கொண்டுவிடுகிறது.  அதைத்தவிர வேறு உலகமே இல்லை. இருந்தால் அது அந்தப்புள்ளியைச் சுற்றிச் சுழல்கிறது. எனக்கு தையல்கொட்டகை, என்னுடைய வீடு தவிர நினைப்பே இல்லை. எங்கோ படப்பிடிப்பு நடக்கிறது என்பதே ஞாபகத்தில் இல்லை. என் வேலை துணிகளை அடுக்கி அனுப்புவது. கணக்குவைப்பது. படப்பிடிப்பு முடிந்தபின் திரும்ப வரவழைத்து அதேபோல மறுபடியும் அடுக்குவது. துணிகளில் திருத்தங்கள் செய்வது, புதிதாக தைப்பது.

துணைநடிகர்களுக்கான ஆடைகளை துவைப்பதில்லை, துவைத்தால் அவை சாயம்போய் அழிந்துவிடும். அவை வாரக்கணக்கில், சிலசமயம் மாதக்கணக்கில் வெவ்வேறு மனிதர்களால் மாற்றி மாற்றிப் போடப்படும். வியர்வையும் அழுக்குமாக மீண்டும் போட்டாக வேண்டும். துணைநடிகர்கள் துணிகளை எடுத்ததுமே முகர்ந்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். புதிய துணிகளைக்கூட எடுத்து முகர்ந்து முகம் சுளிப்பார்கள்.

உண்மையில் புதிய துணிகளில்கூட எலிப்பாஷாண நாற்றம் அடிக்கும். அத்துடன் துணிகளில் கஞ்சிபோடும்போதே நவச்சாரமும் கலந்து விடுவோம். இல்லையேல் எலிகளையும் கரப்பான்களையும் சமாளிக்க முடியாது. பெருங்குவியலாக ஆகும்போது எல்லா பொருளுமே வேறு ஒன்றாக ஆகிவிடுகின்றன. மலையென குவிக்கப்பட்ட துணி ஒருவகை குப்பை, ஆடை அல்ல. புதியதே ஆனாலும்.

ஸ்ரீபாலாவுக்கான ஆடைகளை மட்டும் நானே அடியில் பருத்திவைத்து தைத்தேன். அவற்றை தனியாக அனுப்பிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு பொட்டலத்திலும் நீல ரிப்பனால் கட்டப்பட்ட ஏழெட்டு உடைகளாவது இருக்கும். மற்றவர்களை ஏமாற்றுவதற்காக மஞ்சள் சிவப்பு பச்சை ரிப்பன்களாலும் வேறு பொட்டலங்களை கட்டி அனுப்புவேன். அவை அவளை அடைந்தனவா என்று கேட்க எனக்கு நேரமில்லை. எதையுமே எண்ண பொழுதில்லை.

படப்பிடிப்பு எப்படி நடைபெற்றது என்று தெரியவில்லை. அதன் தொலைதூர அலை மட்டுமே என்னை அடைந்துகொண்டிருந்தது. என் இடத்தில் இருந்து படப்பிடிப்பை என்னால் கற்பனை செய்யவே முடியவில்லை. நான் செய்ததெல்லாம் தையல்கள், தையல் மாற்றங்கள், எண்ணிக்கை  பார்த்து அனுப்பிவைத்து எண்ணிக்கை பார்த்து திரும்ப எடுத்தல் மட்டுமே. ஆனால் ஓடும் வண்டியிலேயே இருந்து கொண்டிருப்பது போலிருந்தது. எப்போது விடிகிறது, எப்போது இருட்டுகிறது, எப்போது படுத்து எப்போது விழிக்கிறோம் என்றே தெரியாத ஓட்டம். அப்படி ஓர் இளமையை கழித்தவர்கள் அதை மறக்கவே மாட்டார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக ஓர் கால ஒழுங்கு அமைந்தது. படப்பிடிப்பு மாலை ஐந்துமணிக்கு முடியும். எல்லாரும் கலைய ஆறுமணி ஆகிவிடும். ஆடைகள் திரும்பிவர எட்டுமணி. அதன்பின் இனம்பிரித்து எண்ணி அடுக்கி பட்டியலில் சரிபார்த்து முடிக்க பத்துமணி. அதன்பிறகுதான் நான் குளித்து சாப்பிடுவேன். தூங்கும்போது பதினொருமணி ஆகிவிடும். கொஞ்சநேரம் அதுவரைச் செய்த வேலைகளின் விசை இருக்கும். மனம் பரபரப்பு அடங்கி ஓய அரைமணிநேரம் ஆகிவிடும்.

அதிகாலை நான்கு மணிக்கே பண்ணைவீடு எழுந்துவிடும். அதன்பின் தூங்க முடியாது. கூச்சல்கள், பாத்திர ஓசைகள். நான்கு மணிக்கெல்லாம் அன்றைக்கான ஆடைகளை எடுத்து அடுக்கி கொடுக்க ஆரம்பிக்கவேண்டும். காலை எழு மணிக்கு முதல் ஷாட் வைப்பார்கள். துணைநடிகர்கள் ஆறு மணிக்கே சாப்பிட்டு முடித்து ஆடையணிந்து மேக்கப் முடித்து தயாராக இருக்கவேண்டும். அப்படியென்றால் ஐந்து மணிக்கே ஆடைகள் கிளம்பிச் சென்றால்தான் முடியும். உதவி இயக்குநர்கள், கலை உதவியாளர்கள் ஐந்துமணிக்கே அங்கே இருப்பார்கள்.

ஆனால் மெல்லி இரானி காலை ஐந்து மணிக்கே வந்துவிடுவார். ஹம்பியின் பின்னணியில் சூரிய உதயத்தையே அவர் ஒவ்வொருநாளும் எடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஃபில்டர்கள் மேல் மோகம் அதிகம். அப்போதுதான் அவற்றில் விதவிதமான சோதனைகள் நடந்துகொண்டிருந்தன. கறுப்புவெள்ளையை வெளியே இருக்கும் வண்ண உலகத்துடன் இணைப்பதற்கான முயற்சி. வண்ணங்களை ஒளிநிழலின் விளையாட்டுக்களாக, கருமையின் அழுத்த மாறுபாடுகளாக உருமாற்றிக் காட்டும் வித்தை.

உண்மையில் இல்லாத ஒன்றை உருவாக்குவதுதான் கலை. வண்ணத்தால் உருவாகி கண்ணுக்குத்தெரியும் அனைத்தையும் கறுப்புவெள்ளை வழியாக காட்டித்தருவதற்கு அன்றைய சினிமா செய்த முயற்சி மனிதகுலம் ஒரு புதிய கலையைக் கண்டு கொண்ட அற்புத தருணம். மனிதன் இசையை, ஓவியத்தை கண்டுபிடித்ததற்குச் சமானமானது அது. சினிமா உருவான முதல் இருபத்தைந்தாண்டுகளிலேயே கலையாக அது உச்சம்தொட்டுவிட்டது என்று என்னைப்போன்ற வயோதிகர்கள் சொல்வார்கள். ஆனால் அது உண்மை.

பிற்பாடு ஓரிரு வண்ணப்படங்களை நான் டிவியில் துண்டுகளாகப் பார்த்தபோது அதிலிருந்த அப்பட்டம் எனக்கு அருவருப்பையே ஊட்டியது. கறுப்பு வெள்ளை என்பது பூடகமானது. உண்மையில் அது எங்குமில்லாத ஓர் உலகம். ஒரு கனவு அது. முழுக்க முழுக்க ஒளிப்பதிவாளரால் உருவாக்கப்படுவது. மனிதன் காணவே முடியாத ஓர் உலகை உருவாக்கி முப்பது நாற்பது ஆண்டுகள் மனிதனை அது வாழ்க்கைதான் என நம்பவைத்திருக்கிறார்கள். அது இயற்கைதான் என எண்ணி மயங்க வைத்திருக்கிறார்கள். அதை இன்று எண்ணிப்பார்ப்பவர்களே இல்லை.

மெல்லி இரானி காலையில் வரும்போது அவர் மனதில் அன்றைய படப்பிடிப்பின் காட்சிகள் ஏதாவது இருக்கிறதா என்பதே சந்தேகம்தான். அவருக்கு அந்த விரிந்த இயற்கைதான் முக்கியம். அவருடைய உதவியாளர்கள் நான்கு மணிக்கே வந்து முந்தைய நாள் அவர் குறித்துக் கொடுத்த இடத்தில் காமிராவை பொருத்தியிருப்பார்கள். ஹம்பி கடல் தொலைதூரத்தில் இருக்கும் மையநிலம், ஆகவே மேகங்கள் குறைவு. கிட்டத்தட்ட பொட்டல் போல விரிந்த சமவெளி. ஏதாவது சிறிய பாறைக்குன்றின்மேல் காமிராவை பொருத்தினால் பிரம்மாண்டமான அகண்ட காட்சி கிடைக்கும்.

ஹம்பியில் காலை ஐந்தரைக்கே வானம் செக்கச்சிவப்பாக ஆகிவிடும். மெல்லி இரானி ஃபில்டர்களை மாற்றி மாற்றி அமைத்து கறுப்புவெள்ளையில் செக்கச்சிவப்பையும் பொன்வண்ணத்தையும் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருப்பார். பலநாட்கள் நான் சென்று பார்த்திருக்கிறேன். அவர் முகம் ஒரு வகை பரவசம் கொண்டதாக, விளையாடும் குழந்தைபோல, வெறிகொண்டதாக மாறிக்கொண்டே இருக்கும்.

நான் ஐந்துமணி நேரம்கூட இரவில் தூங்கமுடியாது. புது இடம், புதுவேலை என்பது ஆழத்தில் படிந்திருக்கும் கனவுகளை கலைத்துவிடுகிறது. என்னென்னவோ கனவுகள். பலசமயம் பொருளற்ற துண்டுகள், அரிதாக முழுமையான வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள். என் கனவில் ஸ்ரீபாலா வரவே இல்லை. மெல்லி இரானியும் சூரிய உதயங்களும்தான் வந்தன. ஒருநாள் அவள் ஏன் கனவில் வரவில்லை என்று எண்ணிக்கூட பார்த்தேன். பதில் தெரியவில்லை, மனம் என்ன செய்கிறதென்றே தெரியவில்லை.

அந்த இரவின் உச்சநிலைப் பரவசத்திற்கு பின் மறுநாள் காலையில் அப்படியே நிலத்துக்கு வந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் இதுவே நிகழ்கிறது. கனவின், பரவசத்தின் உச்சத்தில் உலவினால் அது உடனே மிகமிக யதார்த்தத்திற்கு கொண்டு வருகிறது. எப்போதெல்லாம் அவளை எண்ணி நெஞ்சம் களியாட்டமிட்டதோ அப்போதெல்லாம் மிக விலகி வந்திருக்கிறேன்.

கலைந்து கலைந்து தூங்கியதனால் இரவில் ஐந்து மணிநேரத் தூக்கம் என்பது மூன்று மணிநேரத் தூக்கத்திற்குச் சமம்தான். ஆனால் பகலில் ஒரு மணிநேரம் தூங்குவேன். வெளியே வெயில் எரிந்து கொண்டிருக்கும்போது கொட்டகைக்குள் புழுதிக்காற்றில் முகத்தின்மேல் துண்டை போட்டுக்கொண்டு தூங்குவது இனிய அனுபவம். அது ஆழ்ந்த தூக்கம் அல்ல. என்னைச்சுற்றி தையல் இயந்திரங்கள் ஓடிக்கொண்டிருக்கும் ஓசை. பேச்சொலிகள்.

ரேடியோவில் மதியம் பழைய தெலுங்கு பாட்டுகளை போடுவார்கள். மதியத்தூக்கத்தின் மயக்கத்தில் அவற்றை கேட்பது மனதை உருகி வழியச்செய்துவிடும். ஒரு புகைப்படலமாக பறந்துகொண்டு கரைந்துகொண்டு இருப்பேன். மென்மையான அழகான கனவுகள் வரும். நனவென்றே தோன்றும் கனவுகள். ஏனென்றால் நனவின் ஒசைகள் ஊடே கேட்டுக்கொண்டிருக்கும்.

ஒருநாள் அக்கனவில் அவள் வந்தாள். ஏதோ ஒரு தெலுங்குப்பாட்டின் இசைக்குழைவு அளித்த நெகிழ்வினூடாக. ஆனால் கனவில் அவள் மிக யதார்த்தமாக இருந்தாள். எப்போதும் ஏதோ ஒரு வேலைக்காகவே என்னைத் தேடிவந்தாள். ஆடையை திருத்தியமைக்க. புதிய ஆடைக்காக. ஒருமுறை அல்லூரி ரங்கராஜுவின் ஒரு பாட்டின் ஒருவரிக்கு பொருள் தெரிந்துகொள்ள.

அவள் எப்போதுமே ஒப்பனை இல்லாமல் இருந்தாள். மெழுகால் பாலீஷ் போடப்பட்ட குதிரைச்சேணம் போல மெருகேறிய மாநிறக் கன்னங்களில் மெல்லிய சிவந்த பருக்களும், செம்பருத்தி இதழ்போல சிவந்த சுருக்கங்கள்கொண்ட உதடுகளும், காதோரம் ஆடும் குறுமயிர்களுமாக. அவளுடைய உடலின் மணம், ஆடையின் தொடுகை, மூச்சின் அலைவு என்னை அடைந்தது. அவள் கைகளின் மென்மயிர். கண்விழித்து அவை கனவென உணர்ந்தபின்னரும் அந்த உணர்வு நீடித்தது. சிலசமயங்களில் மெய்யாகவே அவள் வந்தாள் என்றே என் நினைவு பதியவைத்துக்கொண்டது.

அப்போது தெரியவில்லை, பிறகெப்போதோ தான் அதை உணர்ந்தேன். அந்தக் கனவுகள் அனைத்துமே கறுப்பு வெள்ளை. அவளும் கனவில் கருப்பு வெள்ளைதான். அவளுடைய தோற்றத்திற்குக் கருப்புவெள்ளை போல உகந்தது வேறில்லை. ஹம்பியையே கறுப்புவெள்ளையில் மட்டும்தான் கற்பனைசெய்ய முடியும். பாறைகள், கரிய பாறையே உருகி உருவெடுத்ததுபோல கோயில்கள், ஒளிரும் மணல், மொட்டை வானம், வெயில்.

அன்றிரவு நான் தூங்க பன்னிரண்டு ஆகிவிட்டது. பலமுறை கதவு தட்டப்பட்டபோது விழித்துக்கொண்டேன். என் மேல் ஏதோ பலகைகள் விழுவதுபோல அந்த ஓசையை என் கனவு எனக்கு காட்டியது. ஆகவே ஒரு நிமிடம் கழித்தே கதவு தட்டப்படுகிறது என்பதை புரிந்துகொண்டேன். அதற்குள் விடிந்து விட்டதா என்று வியந்தபடி எழுந்தேன். என் வாய் உலர்ந்திருந்தது. கண்கள் எரிந்தன. உடலில் களைப்பு எடைபோல அழுத்தியது. எந்த எண்ணமும் இல்லாமல் விளக்கைப்போட்டுவிட்டு கதவை திறந்தேன்.

என்ன நடக்கிறது என்று நான் புரிந்துகொள்வதற்குள் வெளியே நிழலுருவாக நின்றிருந்த ஒரு பெண் என் அறைக்குள் நுழைந்தாள். அதேவேகத்தில் கதவை மூடினாள்.

“யார்? யார்?” என்று குழறினேன்.

“விளக்கை அணையுங்கள்… தயவுசெய்து … உடனே” என்றாள். அப்போதுதான் அது ஸ்ரீபாலா என்று கண்டேன். அவள் ஒரு பெரிய ஆண்சட்டை மட்டும் அணிந்திருந்தாள்.

நான் “ஏன்? யார்?” என்றேன். என்ன நிலையில் இருக்கிறேன் என்பதே எனக்கு தெரியவில்லை.

அவளே பாய்ந்து விளக்கை அணைத்துவிட்டு சுவரில் சாய்ந்து நின்று நெஞ்சை அழுத்தியபடி பெருமூச்சுவிட்டாள்.

“என்ன ஆயிற்று? என்ன?” என்றேன்.

“என்னை துரத்தி வருகிறார்கள்”

“யார்?” என்றேன்.

“இந்த பண்ணைவீட்டு ஆள்… அவனுடைய ஆட்கள்… அவர்களிடமிருந்து தப்பி ஓடிவந்தேன்”

அந்தச் சட்டைக்குள் அவள் நிர்வாணமாக இருந்தாள். நான் மெல்ல நிதானமடைந்தேன்.

“சரி, நீ இங்கே இருக்கும் ஆடைகளில் ஒன்றை அணிந்துகொள்”என்றேன்.

அவள் அங்கே குவிந்துகிடந்த ஆடைகளில் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டாள். “கொஞ்சம் தண்ணீர் வேண்டும் எனக்கு”

”பானையில் இருக்கிறது”

அவள் நெடுந்தூரம் ஓடியிருக்கவேண்டும். பானையில் இருந்து இரண்டுமுறை குடித்தபோது இருமினாள். இருமல் ஓசை கேட்காமலிருக்க நெஞ்சை அழுத்திக்கொண்டாள்.

பின்னர் சுவரில் சாய்ந்து அமர்ந்தாள். அப்படியே மல்லாந்து மூச்சிழுத்து விட்டுக்கொண்டாள். நான் சற்று தள்ளி துணிக்குவியல்மேல் அமர்ந்தேன். மெல்ல மெல்ல மூச்சடங்கி அமைதியடைந்தாள்.

“என்ன ஆயிற்று?” என்றேன். என் குரலில் எச்சரிக்கை வந்திருந்தது.

“இருங்கள்… அவர்கள் தேடிவருவார்கள். பேச்சுக்குரல் அவர்களுக்கு கேட்கவேண்டாம்” என்று அவள் சொன்னாள்.

நாங்கள் இருட்டில் அமர்ந்து காத்திருந்தோம். நெடுநேரம் ஓசை ஏதும் இல்லை. நான் ஏதோ சொல்ல வாயெடுக்க அவள் வேண்டாம் என சைகை காட்டினாள்.

அதன்பின்னர்  டார்ச் லைட் ஒளியை சுழற்றி வீசியபடி மூவர் வருவது தெரிந்தது.

“வருகிறார்கள்” என்றேன். ”அந்த அறை துணிகள் வைக்கும் ஸ்டோர். உள்ளே போய் ஒளிந்துகொள்”

அவள் உள்ளே போனாள். நான் எழுந்து பாதிமூடிய சன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அவர்கள் டார்ச் விளக்குகளை திருப்பித்திருப்பி கொட்டகையில் படுத்திருந்தவர்களை பார்த்தார்கள். மரங்களுக்கு கீழேயும் மேலே கிளைகளிலும் மூன்று வெளிச்சங்கள் அலைந்தன.

மிகக்கவனமாக அவர்கள் தேடினார்கள். ஒரு சிறு இடம்கூட விடவில்லை. மெல்லிய குரலில் பேசிக்கொண்டார்கள். இதைப்போன்ற செயல்களில் நல்ல பழக்கம் கொண்டவர்கள் என்று தெரிந்தது.

அவர்கள் என் வீடு நோக்கி வர ஆரம்பித்தபோது நான் சென்று பாயில் படுத்துக் கொண்டேன். அவர்களின் குரல்கள் அணுகி வந்தன. ஒளிவட்டங்கள் சுழன்றபோது சன்னலின் இடைவெளி ஒர் ஒளிக்கோடாக அறைக்குள் வளைந்து திரும்பியது.

என் நெஞ்சு படபடத்தது. அவர்கள் கதவைத் திறந்து என்னிடம் பேசினார்கள் என்றால், என் முகத்தைக்கொண்டே அனைத்தையும் புரிந்துகொள்வார்கள்.

ஆனால் அவர்கள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டனர். பேச்சொலிகள் தேய்ந்து மறைந்தன.

நான் மிக மெல்ல எழுந்து சன்னல் வழியாக பார்த்தேன். மிகத்தொலைவில் மூன்று ஒளிவட்டங்கள் சுழல்வதைக் கண்டேன்

“போய்விட்டார்கள்” என்றேன்.

”ம்” என்றாள்.

“இருந்தாலும் கொஞ்சநேரம் பொறு.”

”சரி.”

அந்தச் சரி எனக்கு அத்தனை தன்னம்பிக்கையை, நிறைவை அளித்தது. ஒரு பெண் தன்னை முழுமையாக என்னிடம் ஒப்படைத்ததன் வார்த்தை அது.

பின்னர் அமைதி நிலவியது. வெளியே பறவைகளின் ஒலி கேட்டது. வௌவால்களாக இருக்கும். நான் படுத்துக்கொண்டு அந்த ஓசையை கேட்டுக்கொண்டிருந்தேன். மெல்ல மெல்ல மிக அமைதியானவனாக, மிகவும் தர்க்கபூர்வமானவனாக ஆகிக்கொண்டிருந்தேன்.

அவள் மிக மெல்லிய காலடியோசைகளுடன் வெளியே வந்தாள்.

“இங்கே ஒரு பாய்தான் இருக்கிறது. அந்த விரிப்பை வேண்டுமென்றால் போட்டுக்கொள்… படுத்துக்கொள்ளலாம்” என்றேன்.

அவள் விரிப்பை போட்டு எனக்கு சற்று அப்பால் படுத்துக்கொண்டாள்.

“என்ன நடந்தது?” என்றேன்.

“என் அம்மா இந்த பண்ணை உரிமையாளனுடன் வரச்சொன்னாள். இவன் என்னை ஜீப்பில் கூட்டிவந்தான்.”

நான் ஒன்றும் சொல்லவில்லை. என் உடலெங்கும் கசப்பு நிறைந்தது. ஆனால் அதைக் கேட்கவேண்டும் போலவும் இருந்தது.

“ஒருவன் என்றுதான் சொன்னார்கள். இங்கே வந்தால் இவர்கள் நாலைந்துபேர். எல்லாரும் முரட்டுக் குண்டர்கள். சரியாகக் குடித்திருந்தார்கள். நான் பயந்துவிட்டேன். என்னிடம் ஆடும்படி சொன்னார்கள்.”

“என்ன ஆட்டம்?”

“சும்மா” என்றாள்.

“துணியில்லாமலா?”

“ம்”

நான் தொண்டையைச் செருமிக்கொண்டேன்.

“எனக்கு அப்படி ஆடத்தெரியாது என்றேன். அவன் என்னை அடித்தான். அவனும் அவன் நண்பர்களும் சேர்ந்து என் ஆடைகளை கிழித்தார்கள். என்னை நிர்வாணமாக்கி மிகவும் கேவலமாக நடந்துகொண்டார்கள்.”

”கேவலமாக என்றால்?”

அவள் ஒன்றும் சொல்லவில்லை. மூச்சொலி மட்டும் கேட்டது. பின்னர் “நான் வாந்தி எடுத்தேன். அதனால் ஒருவன் என்னை அடித்தான். அவனை நான் தள்ளிவிட்டேன். உடனே எல்லாரும் சேர்ந்து என்னை அடித்தார்கள். அதையே விளையாட்டாக ஆக்கிக் கொண்டு என்னை அவர்கள் அடித்துக்கொண்டே இருந்தார்கள். வலி தாங்கமுடியாமல் நான் புட்டியால் ஒருவன் மண்டையில் அறைந்தேன். அவன் அலறிக்கொண்டு விழுந்தான். மற்றவர்கள் அவனை தூக்க ஓடினார்கள். நான் அப்படியே தப்பி வெளியே ஓடினேன்.”

”அவன் செத்திருப்பானா?”

“அதெல்லாம் இல்லை. சாதாரண அடிதான். ஆனால் ரத்தம் வந்தது.”

அவள் நீள்மூச்சுவிட்டாள். மீண்டும் ஒரு சிறு அமைதி.

“நான் வெளியே ஓடியபோது உங்கள் நினைவு வந்தது. நீங்கள் சொன்னதெல்லாம் அப்படியே படம்போல தெரிந்தது. நேராக ஓடி வந்துவிட்டேன்.”

நான் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். எதுவும் என் மண்டைக்குள் எழவில்லை. சிந்தனை அதுவரை நடந்தவற்றையே உழற்றிக் கொண்டிருந்தது.

“அவர்கள் என்னை விடமாட்டார்கள்” என்றாள்.

“உன் அம்மாவிடம் நான் போய் சொல்லவா?”

”அது என் அம்மா இல்லை.”

ஒரு கணம் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு “சரி, யாரிடம் சொல்லவேண்டும்?” என்றேன்.

“அம்மா பணம் வாங்கியிருப்பாள். ஆகவே அவளே என்னை பிடித்துக்கொடுக்கத்தான் நினைப்பாள்…”

“பிரகாஷ்ராவ் தானே துணைநடிகர்கள் ஏஜெண்ட்?”

“அவனும்தானே பணம் வாங்கியிருப்பான்? இந்த ஆளை கொண்டுவந்ததே அவன்தான்.”

ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. பொதுவாக சினிமா கம்பெனி இந்த விஷயங்களில் தலையிடாது. போலீஸ் கேஸ் வந்தாலும்கூட துணைநடிகர்கள் ஏஜெண்ட்தான் பார்த்துக்கொள்ளவேண்டும். அப்படி ஒரு ஆள் இருப்பதே இந்த சிக்கலான உலகத்தை சினிமாக் கம்பெனிகளில் இருந்து அகற்றி நிறுத்துவதற்காகத்தான். ஸ்டுடியோவுக்கு எல்லா தொடர்பும் அவன் வழியாக மட்டும்தான். ஆகவே அந்த உலகில் அவன் ஒரு அரசன். ஒரு கொடூரமான சர்வாதிகாரி. அவனுடைய குற்றவுலகத் தொடர்பு மிகப்பிரம்மாண்டமானது.

“நான் ராஜமந்திரிக்கு எப்படியாவது போனால் போதும்” என்றாள்.

“அங்கே யார் இருக்கிறார்கள்?”

“என் அம்மா.”

நான் அதைப்பற்றி அதிகம் யோசிக்காமல் “இங்கிருந்து ராஜமந்திரிக்கு நேரடி ரயில் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஹொஸ்பெட் போகவேண்டும். ஆனால் அங்கே ரயில்நிலையத்திலேயே இவர்கள் வந்துவிடுவார்கள்”

”என்ன செய்வது?” என்று அவள் கேட்டாள்.

“எதையாவது செய்வோம். இந்த வீட்டுக்குள் எவரும் வரமாட்டார்கள். நீ இன்றிரவு இங்கேயே இரு. நாளை என்ன செய்யமுடியும் என்று பார்ப்போம்”

அவள் “ம்” என்றாள்.

“இப்போது நன்றாக தூங்கு… நான் காலையில் எழுப்புகிறேன்”

”சரி”

அவள் படுத்துக்கொண்டு பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் விரைவிலேயே தூங்கிவிட்டாள். அவளுடைய மெல்லிய குரட்டையோசை கேட்டுக்கொண்டிருந்தது.

அந்த நெருக்கடியிலும் நான் மனதுக்குள் மிகமிக இதமான ஓர் உணர்வையே அடைந்தேன். மிக அருகே அவள் படுத்திருக்கிறாள். அவளுடைய மூச்சொலி கேட்டுக்கொண்டிருக்கிறது. அவளை என்னால் கைநீட்டி தொடமுடியும். அவளுடன் நேருக்குநேர் கண்களை நோக்கிப் பேசமுடியும். பெண்ணுக்கு காவலாக பொறுப்பேற்றுக் கொள்ளும்போதுதான் ஆண் தன்னை முழுமையானவனாக உணர்கிறான் போல.  சிறுவன் ஆண்மகனாக ஆவது அந்த இடத்தில்தான். எனக்கு அந்த இரவு அப்படிப்பட்ட ஒரு தருணம். அதன் நிறைவில் பெருமிதத்தில் நான் திளைத்துக்கொண்டிருந்தேன்.

அவள் அந்த ஆபத்தில் என்னை நாடி வந்திருக்கிறாள் என்பதுதான் என்னை அப்படி உளம்பொங்க வைத்தது. அதைவிட ஓர் அங்கீகாரம் வேறென்ன? அவள் என்னை நேருக்குநேர் பார்த்ததே குறைவாகத்தான். பேசியது அதைவிட குறைவாக. ஆனால் நெருக்கடியில் அவளுக்கு நான் நினைவுக்கு வந்திருக்கிறேன்.

என்ன செய்வது என்று நான் திட்டமிட்டேன். நாளை பகலில் அவளை வெளியே கொண்டுசெல்லவே முடியாது. பகல் முழுக்க கமலாப்பூரிலும் ஹொஸ்பெட்டிலும் ஹம்பியிலும் ரங்கா ரெட்டியின் ஆட்கள் அவளை தேடி அலைவார்கள். ஒரு இடம் மிச்சம் வைக்க மாட்டார்கள். அவள் அம்மாவும் பிரகாஷ் ராவும் தேடுவார்கள்.

ஆனால் அதுகூட நல்லதுதான். நாளை பகல் முழுக்க தேடிவிட்டார்கள் என்றால் அவள் வெளியேறிவிட்டாள் என்று எடுத்துக்கொள்வார்கள். அவர்களின் தேடல் நின்றுவிடும். நாளை பகல் முழுக்க அவள் இங்கே உள்ளேயே இருக்கவேண்டும். நாளை இரவு முடிந்தால் அவளை இங்கிருந்து வெளியே கொண்டுபோகலாம்.

ஆனால் ரயிலில் போகமுடியாது. எங்கள் வண்டிகள் எதிலும் போகமுடியாது. வேறு ஏதாவது வழி கண்டடையவேண்டும். நான் அதை விதவிதமாக யோசித்துக்கொண்டிருந்தேன். அப்படியே தூங்கிவிட்டேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைஓஷோ உரை – தன்முனைப்பின் நூறு முகங்கள்
அடுத்த கட்டுரைஇளம் எழுத்தாளன் மொழியாக்கம் செய்யலாமா?