குப்பைநெருக்கடி

இன்ஃபெர்னோ

அன்புள்ள ஜெ..

உங்கள் கட்டுரையின் சில வரிகள் நீங்கள் உத்தேசித்திருந்தைவிட அதிகமாக −சில சமயம் வேறோரு கோணத்தில்/ தளத்தில் − விவாதத்துக்குள்ளாவதுண்டு. உதாரணமாக இன்ஃபெர்னோ கட்டுரையில் இப்படி எழுதியிருக்கிறீர்கள்

“”பால்கனிகளில் துருப்பிடித்த பொருட்களை சேமிப்பது மும்பையின் பண்பாடு. ஆகவே பத்தடுக்கு மாளிகை என்பது இருநூறடி உயரமான துருப்பிடித்த பொருட்களின் குவியல்தான்.””

இந்த வரியை என் நண்பர்களுடன் வெகு நேரம் விவாதித்தேன். ஒரு காலத்தில் வீட்டில் இருக்கும் எதையும் தூக்கி எறிய விரும்பாத மனநிலையை இங்கும் பார்க்க முடிந்தது. துணி பழையதானால் தூக்கி எறிந்து விட மாட்டார்கள். தம்பிக்கு கொடுக்க வீடு துடைக்க தலையணையாக பயன்படுத்த முயல்வர்

டூத்பிரஷ் அதன் பழையதானால் ஜன்னல் கம்பியை சுத்தப்படுத்த, சைக்கிள் சக்கர மைய அச்சை சுத்தப்படுத்த என பலவாறாக உழைத்து ஓடாக தேய்ந்தபின்பே ஓய்வு பெறும்.தினசரி காலண்டர் பேப்பரைக்கூட பவுடர் திருநீறு மடிக்க, பேப்பரின் பின்புறம் மளிகைப்பட்டியல் எழுத பயன் படுத்துவார்கள். இட்லி மீதமானால் அதை வைத்து உப்புமா செய்வார்கள்.மறு சுழற்சி என்பது ஒரு வாழ்க்கை நெறியாக இருந்தது.இன்று அதெல்லாம் பழைய கதை

ஒன்று, எதற்கு சேர்க்கிறோம் என தெரியாமலேயே ஓட்டை உடைசல்களை − நீங்கள் குறிப்பிட்டதுபோல −வீட்டில் குவித்து வைக்கிறார்கள்.அல்லது அனைத்தையுமே யூஸ் அண்ட் த்ரோ ஆக்கிவிட்டனர்.ஒரு பொருளை பழுது பார்ப்பதற்கான செலவைவிட  அதை கடாசிவிட்டு புதிதாக வாங்குவது மலிவானது என்ற சூழலை பெரு நிறுவனங்கள் உருவாக்கி , புதிதாக  வாங்கிக் கொண்டே இருக்கும் நுகர்வுவெறியை ஊக்குவிக்கின்றன

நவீன வகை தொலைக்காட்சிப் பெட்டிகளை பழுது பார்ப்பதைவிட தூக்கி எறிந்து புதிதாக வாங்குவது மலிவு என்பதால் ஏராளமான தொகா பெட்டிகள் ஆண்டுதோறும் குப்பைக்கு செல்கின்றன.

அலைபேசி கருவிகள் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களால் சேரும் குப்பை மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது

சில ஆண்டுகள் முன்புகூட ,  தண்ணீரை தேத்தாங்கொட்டை மூலம் சுத்தப்படுத்தி அதை பயன்படுத்துவார்கள். வெளியே சென்றால் தண்ணீரை எடுத்துச்செல்வர் .இன்று எங்கெங்கும் யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிக்.  தண்ணீர் குளிர்பானங்களை குடித்துவிட்டு எறியும் பிளாஸ்டிக் குப்பைகள் ஏற்படுத்தும் பேரழிவு பலருக்குப் புரியவில்லை

அறுந்து விட்டால் தைத்து பயன்படுத்தும் செருப்புகள் இன்று அருகிவிட்டன.  பழுது என்றால் தூக்கி எறிய வேண்டியதுதான்

காந்திய வாழ்வியலில் மறுசுழற்சிக்கு ஒரு முக்கிய இடமுண்டு.  ஆண்டு தோறும் பசியால் மடியும் கோடிக்கணக்கான இந்தியர்களைப் பற்றி கற்பனைக்கதை எழுதுவோர் (குமரப்பாவும் மொண்ணைப்பொருளியலும்) அன்றாடத்தில்  காந்திய வாழ்வியல் குறித்துப்பேச வேண்டிய அவசியம் இன்று இருக்கிறது

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

***

அன்புள்ள பிச்சைக்காரன்,

விவசாய வாழ்க்கையில் சிறியபொருட்களை சேமிக்காமல் இருக்க முடியாது. மாடு வைத்திருந்தால் மாட்டுக்கு பயன்படும் பொருட்களை சேர்த்தாகவேண்டும். ஏன் சாணியையே எடுத்து எடுத்து ஓரிடத்தில் சேர்த்தாலொழிய எரு உருவாகாது.

ஆகவே விவசாயப்பின்னணியில் இருந்து வருபவர்கள் எல்லா பொருட்களையும் பாதுகாப்பார்கள். எதற்காவது எப்போதாவது பயன்படுமென நினைப்பார்கள். பெட்டிகள், புட்டிகள், சாக்குகள், காகிதங்கள், கம்பிகள், நூல்கள், கயிறுகள் எல்லாம் திரும்பத்திரும்ப பயன்படுத்தப்படும். விவசாயம் இன்றும் அப்படியே நடைபெறுகிறது

ஆனால் விவசாயக்களத்தில் அதற்கு இடம் இருக்கிறது. அதே மனநிலையை நகரங்களின் சிறிய இல்லங்களில் தொடரும்போது வீடு குப்பைமலையாக ஆகிவிடுகிறது. அதிலும் இன்றுள்ள பெரும்பாலான பொருட்கள் பயன்படுத்தியதும் தூக்கி எறியும் தன்மையில் உருவாக்கப்பட்டவை. அவற்றை பயன்முடிந்தபின் சேர்த்துவைப்பது கிறுக்குத்தனம்.

இன்று ‘பேக்கிங்’ பொருட்கள் மலிந்துவிட்டன.  முன்பெல்லாம் நானே பிளாஸ்டிக் டப்பாக்களை வீசிவிடமாட்டேன். இன்று ஒரே ஒரு சாப்பாடு வரவழைத்தால் ஏழெட்டு பிளாஸ்டிக் டப்பாக்கள் வந்துசேர்கின்றன

இவை இன்றைய காலத்து வழக்கமாக ஆகிவிட்டன. இவற்றை செய்யக்கூடாது என்று சொல்லமுடியாது. ஆனால் நீங்கள் சொல்வது போல மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்யலாம். மறுபயன்பாடு செய்வது என்பது சேர்த்துக்குவித்து வைப்பது அல்ல. தேவையானவற்றை பிரித்து பகுத்து வைப்பது.  தேவையற்றவற்றை உடனே மறுசுழற்சிக்கு அளித்து விடவேண்டும். பகுத்து பிரித்து அளிப்பதுதான் மறுசுழற்சிக்கு உதவும், வீசிவிடுவது அல்ல.

மறுசுழற்சியும் ஆற்றல்,நீர்,உழைப்பு ஆகியவற்றை வீணடிப்பதே. ஆகவே குறைந்த அளவு நுகர்வே வழி. அதற்கு சில நிபந்தனைகளை நாமே கொள்ளலாம். கூடுமானவரை ஒருமுறைப்பயன்பாடுகொண்ட பொருட்களை பயன்படுத்தாமலிருக்கலாம். நான் அதை எப்போதுமே கடைப்பிடிக்கிறேன். தூக்கிவீsaவேண்டியவற்றை வாங்குவதில்லை.

உதாரணமாக இன்று சீனாவிலிருந்து வரும் வீட்டுப்பயன்பாட்டு பொருட்கள் பல சில ஆண்டுகளிலேயே தூக்கி வீசப்படவேண்டியவை. நான் ஒரு சோபா வைத்திருந்தேன். நான்காண்டுகளில் தளர்ந்துவிட்டது. அதன் அடிப்பகுதியில் சுருள்வில்லுக்குப் பதிலாக ரப்பர்நாடாக்களை கட்டியிருந்தனர். நான்காண்டுகளில் தளர்ந்து குழியாகிவிடும். அதன்பின் மரத்தாலான சோபாக்களை வாங்கினேன். ஐம்பதாண்டுகள் உழைப்பவை.

ஓரிருமுறை பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி போட்டு அவற்றின் விலையை கூட்டலாம் என்று நினைக்கிறேன். தூக்கிவீசும் பொருட்களை கூடுமானவரை குறைத்துக்கொள்வதொன்றே செய்யக்கூடுவது.

ஆனால் உலகின் குப்பைநெருக்கடியை மறுசுழற்சியோ மறுபயன்பாடோ கொண்டு நிறுத்திவிடமுடியாது. உலகம் அதை பொருட்படுத்தாமல் முன்சென்றுகொண்டே இருக்கிறது. ஒரு முட்டுச்சந்து வந்தபின்புதான் பொருட்படுத்தி யோசிக்கத் தொடங்கும்.

ஜெ

முந்தைய கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 12
அடுத்த கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் திரையிடல்- நியூஜெர்ஸி