பற்றற்றான் பற்று

திருவள்ளுவர், சமணர்களின் சித்தரிப்பு

அன்பு ஜெ,

இந்தக் குறளை சிந்தித்துக் கொண்டிருந்தேன்..

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு”

பற்றுகளையெல்லாம் விட்டொழிக்க கடவுளை பற்றிக்கொள் என்பது மேலோட்டமான ஓர் விளக்கம். ஆனால் இங்கு “பற்றற்றான்” என்பதை ஒரு நிலை எனக் கொள்ளலாமா? அதாவது ”நான்” என்பது எந்தவொரு இச்சையையும் கைக்கொள்ளாமல் பற்றைக் கடந்த நிலை. அந்த நிலையை அடைய வேண்டுமானால் முதலில் அந்த நிலையைக் கடந்த அவனைப் பற்று எனக் கொள்ளலாமா? அவன் வழியில் அல்லது அவன் சென்ற மார்க்கத்தைக் கடைபிடிப்பது, கண்டறிவதே முதல்படி என்க் கொள்ளலாமா?

கடவுள் என்பதையும் கூட ஒரு நிலை/ பரிமாணம் என்று கொள்ளலாம் என்ற சிந்தனை வந்தது ஜெ.

அப்படியானால் கடந்து உள் சென்று கண்டடைவது என்பது நம்முடைய ஒரு பரிமாணம் தானா! ”நான்” என்ற ஒன்று தான் கடந்து உள் செல்ல வேண்டும். ”நான்” கடவுளாக உருப்பெரும் தருணம் பற்றுகளை வேரறுக்கும் தருணம் தானா. அந்த நிலையை அடைய சாமானியமாக அடைய முடியாது. அதுவும் உலகியல் ரீதியாக இயங்கிக் கொண்டிருப்பவர்களால் நிச்சயம் முடியாது ஆகவே பற்றற்றான் என்ற நிலையில் இருக்கும் இறைத்தன்னமையை பற்றுவதே நமக்கான செயல் என்று வள்ளுவர் கூறுகிறாரா.

விளக்க உரைகளைப் பார்த்தேன் ஜெ. சமீபத்தில் உள்ளவைகள் இறைவனைத் தொழுவது பற்றி மட்டுமே பேசுகின்றன. ஆனால் மணக்குடவர் மற்றும் பரிமேலழகர் உரையில் “தியான சமாதி அடைவது பற்றியெல்லாம் கூறுகிறார்கள். அதாவது பற்றற்றான் பற்றுவது தியான சமாதி என்று பொருள் தருகிறார்கள்

நான் மீண்டும் மீண்டும் குறளை சொல்லிப் பார்த்தேன். ”பற்றற்றானின் பற்று எது” என்று சரியாகப் பிடிபடவில்லை. உங்களுடைய எண்ணம் இந்த குறள் சார்ந்து என்ன என்று நேரம் கிடைக்கும்போது சொல்ல இயலுமா.

அன்புடன்

இரம்யா.

***

பார்ஸ்வநாதரும் பத்மாவதியும். அலங்காரம் வழிபாடு எல்லாம் பத்மாவதி யட்சிக்குத்தான். அருகர் முற்றும் துறந்த வெற்றுருவம்

அன்புள்ள இரம்யா

குறளின் பல பாடல்களுக்கு சமணமதத்தின் கோணத்தில் பொருள்கொண்டால் மிக எளிதாகப்புரியும். இன்று நாம் கொண்டிருக்கும் இறை என்னும் கோணத்தில் பொருள்கொள்வதன் சிக்கல் நீங்கள் கொண்டிருப்பது.

இந்து தெய்வங்களில் எதையும் பற்றற்றான் என்று சொல்லமுடியாது. கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில்கூட அளவற்ற அருளாளன், பெருங்கருணையாளன் என்றே தெய்வம் குறிப்பிடப்படுகிறது.

சமணர்களுக்கு ‘தெய்வங்கள்’ இல்லை. அவர்களுக்கு அருகர்களே முதன்மை வழிபாட்டுருவங்கள். அவர்கள் பற்றறுத்தவர்கள். முற்றிலும் பற்றறுத்தமையால்தான் அவர்கள் தெய்வத்திருக்கள் ஆனார்கள்.

சமண மதத்தில் அன்றாட வழிபாட்டுக்கு, வேண்டுதல்களுக்கு தீர்த்தங்காரர்களின் காவல்தேவதைகளான யட்சிகளையும் தேவர்களையுமே வழிபடுவார்கள். தீர்த்தங்காரர்களிடம் எதையும் வேண்டிக்கொள்ளலாகாது. அவர்களை வழிபடுவது உலகத்தின் பற்றிலிருந்து விடுபடுவதற்காக மட்டுமே. அந்த வீடுபேற்றை மட்டுமே அவர்களிடம் கோரவேண்டும்.

உதாரணமாக, பார்ஸ்வநாதரிடம் நாம் வாழ்க்கைநலன்களை வேண்டக்கூடாது. வாழ்க்கைப் பற்றை அறுத்து மீள்வதற்கான ஞானம், வைராக்கியம், தவம் ஆகியவற்றையே கேட்கவேண்டும். அவருடைய யட்சியான பத்மாவதி அனைத்துச் செல்வங்களையும் அருள்பவள்.

பற்றறுத்த தீர்த்தங்காரர்களைப் பற்றிக்கொள்க, இவ்வுலகத்துப் பற்றுகளை விட்டுவிடுவதற்கான வழி அதுவே—நேரடியாக இக்குறளின் பொருள் இதுதான்.

ஜெ

முந்தைய கட்டுரைஅந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-4
அடுத்த கட்டுரைஎன் உரைகள் – ஒரு தயக்கத்துடன்…