அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் சில கரகாட்ட காணொளிகளை யூடியூபில் கண்டேன் https://www.youtube.com/watch?v=1W5bPH2NUxA. இதில் பெரும்பான்மையானவை பால் உணர்வுகளை தூண்டும் படியும் பால்உறவுகளை பற்றி பேசுவது போன்றே உள்ளன. இதுதான் உண்மையான கரகாட்டமா அல்லது காலப்போக்கில் இப்படி ஆகிவிட்டதா.
நான் நகரத்தில் வளர்ந்தவன் எனக்கு தெரிந்து இவ்வளவு பொதுவாக பாலியில் விஷயங்களை பொதுவெளியில் பேச மாற்றங்கள். நமது பண்பாட்டில் பாலியில் விஷயங்களை திறந்து பேசும் வழக்கம் இருக்கிறதா , மேலை கல்விமுறையில் இதெல்லாம் பொது வெளியில் பேசக்கூடாது என்ற உருவாக்கம் ஏற்பட்டுவிட்டதா?
நன்றி,
இராமகுமரன்
***
அன்புள்ள இராமகுமரன்
உலக அளவில் இரண்டு தளங்களில் இடக்கரடக்கலை கடந்து ‘ஆபாச’த்துக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. ஒன்று, நாட்டார்கலை. இரண்டு, பகடிக்கலை.
நாட்டார்கலை ஐரோப்பாவில் பெரும்பாலும் ஜிப்ஸிகளிடம் இருக்கிறது. அதன் தவிர்க்கமுடியாத அம்சம் பாலியல்பிறழ்வும் மீறலும் அவை சார்ந்த பகடியும். இந்தியாவிலும் எல்லா பகுதிகளிலும் நாட்டார்கலைகளில் இந்த கூறு உண்டு.
ஏறத்தாழ இந்த காணொலியில் உள்ள இதே வடிவை, இப்படியே, வடக்கே ஜாத்ரா என்ற பெயரில் நடத்துகிறார்கள். தாராசங்கர் பானர்ஜி எழுதிய கவி என்ற வங்காள நாவல் இந்த ஜாத்ரா என்னும் கலையில் ஈடுபடும் கலைஞனைப் பற்றியது
நாட்டார்கலைகளில் ஏன் ‘ஆபாசம்’ இருக்கிறது என்பதற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஒன்று, இவை உடல்சார்ந்த உழைப்பாளி மக்களுக்குரிய கலைகள். ஆகவே இவை கலைப் பயிற்சியற்ற பார்வையாளர்களுக்குரியவை. அவர்கள் ரசனையை இவை காட்டுகின்றன.
அத்துடன் உடல்சார் உழைப்பாளிகளின் இன்பம் உடல்சார்ந்தது. உடல் அவர்களுக்கு இடக்கரடக்கல்கள், பூடகங்கள் கொண்டது அல்ல. உடலை இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள். அதன் விழைவையும்கூட. ஆகவே நாம் ஆபாசம் என நினைப்பதை அவர்கள் அப்படி நினைப்பதில்லை.
இக்காரணங்களால், நம் உழைப்புக் களங்களிலேயே உழைப்பாளிகள் அல்லாதவர்கள் ‘ஆபாசம்’ என நினைக்கும் பேச்சுக்கள் நடந்தபடியே இருக்கும். வயல்வேலை செய்பவர்கள், கட்டிடவேலை செய்பவர்களின் பேச்சுக்களை கவனித்தால் இது தெரியும். அதை நான் காடு நாவலில் எழுதியிருக்கிறேன். அது அவர்களின் இளைப்பாறுதல் கொண்டாட்டம். அதுவே அவர்களின் கலையிலும் வெளிப்படுகிறது.
இன்னொரு விளக்கமும் இதற்கு அளிக்கப்படுகிறது. இந்த ’ஆபாசம்’ என்பதை மேலும் விரிவான பார்வையில் ‘மீறல்’ எனலாம். இதை ஆடுபவர்களும் ரசிப்பவர்களும் ஒடுக்கப்பட்ட அடித்தள மக்கள். அவர்கள் பலவகையிலும் அடக்கப்பட்டவர்கள். அவர்கள் அடக்குமுறைக்கு எதிர்வினையாற்றும் வழி இது.
சற்று கவனித்தால் தெய்வங்கள், அரசாங்கம், ஊர்த்தலைமை, ஆண்டைகள் ஆகியோர் இவற்றில் ஏளனம் செய்யப்படுவதைக் காணலாம். ஒழுக்கம், கட்டுப்பாடு, நல்லியல்பு எனச் சொல்லப்படுபவற்றைக் கிண்டல் செய்வார்கள். படிப்பு, அறிவு போன்றவையும் கிண்டல்செய்யப்படும். இவை ஒருவகை எதிர்ப்புச்செயல்பாடுகள். பண்பாட்டில் இயல்பாக எழுபவை. இவை கீழிருந்து எழும் குரல்கள் என்பதனாலேயே பண்பாட்டில் எவ்வகையிலும் தவிர்க்கமுடியாதவை.
இந்த ‘ஆபாசக்’ கிண்டல்களை ஆய்வுசெய்து பல்வேறு சமூக உளநிலைகளை கண்டறிந்திருக்கிறார்கள். தெய்வங்கள் ,அரசர்கள், பிராமணர்கள், நாட்டாமைகள், பண்ணையார்கள் ஆகியோருக்குச் சமானமாகவே செட்டியார்களும் கிண்டல்செய்யப்பட்டிருப்பதை ஓர் ஆய்வு சுட்டிக் காட்டியிருந்தது. அது இவற்றை ஆடும் மக்களின் வாழ்க்கையில் அவர்களுக்கு எதிரான உணர்வுகள் இருந்தமைக்குச் சான்று.
நிறைய தருணங்களில் உள்ளூரிலுள்ள அநீதிகளும் சுரண்டல்களும் இந்த ஆட்டங்களில் சுட்டிக்காட்டப்படும். அவற்றுக்கு தீர்வும் உருவாகும். சுடலைமாடன், இசக்கி போன்ற சில தெய்வங்களுக்கு இந்தவகை ‘ஆபாச’ பேச்சு பிடிக்கும் என்றும், இவை ஒருவகையான வழிபாடுகள் என்றும் பல இடங்களில் நம்பப்படுவதனால் இவற்றை அதிகாரவர்க்கம் தடைசெய்யவும் முடியாது.
கேரளத்தில் கொடுங்கல்லூர் பகவதி போன்ற சில தெய்வங்களுக்கு ஆபாசப்பாடல் பாடி வழிபடும் காவுதீண்டல் போன்ற சில வழிபாட்டுச் சடங்குகள் ஐம்பதாண்டுகளுக்கு முன்புவரை இருந்தன – இன்றும் சிறிய அளவில் காணப்படுகின்றன. தமிழகத்திலும் இருந்து வந்தது. இன்று வழக்கொழிந்துள்ளது
மூன்றாவது விளக்கமும் உண்டு. எந்த நாட்டார்கலையும், எந்த நாட்டார் சடங்கும் அதற்கு முந்தைய பழங்குடிக்காலத்தில் வேர்கொண்டிருக்கும். பழங்குடிகளிடம் ஆண்டுக்கு ஓரிருமுறை கொண்டாடப்பட்ட கட்டற்ற பாலியலுறவுகொள்ளும் விழாக்களில் இருந்தே இந்தவகையான களியாட்டுக்கள் தோன்றி, காலப்போக்கில் வெறும் சொல்விளையாட்டாக மாறி நீடிக்கின்றன என்று சொல்லப்படுகிறது.
வட இந்தியாவில் அறுவடைத்திருவிழாவான ஹோலி பண்டிகையை ஒட்டியே ஜாத்ரா நிகழ்கிறது. அறுவடைக்கொண்டாட்டங்கள் எல்லாவற்றிலும் கொஞ்சம் பாலியல் மீறலின் களியாட்டு இன்றும் அனுமதிக்கப்படுகிறது.
இம்மூன்று விளக்கங்களுமே நாட்டாரியலாளர்களால் முன்வைக்கப்படுபவை. இவற்றில் எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் உண்மையாக இருக்கலாம்.
பல வரலாற்றுத் தருணங்களில் இவற்றினூடாக மக்களின் எதிர்ப்பு ஒன்றுதிரட்டப்பட்டு பெரிய கிளர்ச்சியாக மாறியிருக்கிறது. கேரளத்தின் ரண்டிடங்கழி கிளர்ச்சி எனப்படும் இரண்டு கைப்பிடி கூடுதல்நெல் கோரும் போராட்டம் முழுக்கமுழுக்க இப்படித்தான் பரவியது. கேரளச்சூழலில் இக்கலையை மிக அதிகமாக கம்யூனிஸ்டுகள் பயன்படுத்திக்கொண்டனர். [தகழி சிவசங்கரப்பிள்ளை ரண்டிடங்கழி என்னும் நாவலை எழுதியிருக்கிறார்]
ஆனால் தமிழகத்தின் ஆரம்பகால கம்யூனிஸ்டுகள் பெரும்பாலும் உயர்சாதியினர், தூய்மைவாதிகள், செவ்வியல்பார்வை கொண்டவர்கள். அவர்கள் நாட்டார்கலைகளுக்கே எதிரானவர்கள். ஆகவே இங்கே கம்யூனிச இயக்கத்துக்கும் நாட்டார்கலைகளுக்கும் தொடர்பிருக்கவில்லை. நாட்டார்கலைகளுடன் இணைந்திருக்கும் நாட்டார் தெய்வங்களின் வழிபாடுகளும் சடங்குகளும் அவர்க்ளுக்கு மூடநம்பிக்கையாகவே தோன்றின.
நாட்டார்கலைகளை ஆராய்ந்த முன்னோடியான நா.வானமாமலை கூட அவற்றிலுள்ள ‘ஆபாச’ அம்சத்தை வடிகட்டி அவற்றை ‘தூய்மைப்படுத்தி’யபின்னரே பதிவுசெய்தார். இவற்றிலுள்ள கெட்டாவார்த்தைகள், சாதிப்பழிப்புகள் ஆகியவற்றை அவர் தணிக்கை செய்தார். பின்னர் எண்பதுகளில் ஆலன் டன்டிஸ் போன்ற ஆய்வாளர்களின் தொடர்பால் ஐரோப்பிய நாட்டாரியல் ஆய்வுநோக்கு இங்கே வந்தபின்னரே அப்பார்வை நிராகரிக்கப்பட்டது.
இன்று நாட்டார்கலைகள் அருகி வருகின்றன. அவற்றை நிகழ்த்துபவர்கள் மையச்சமூக அமைப்புக்கு வெளியே இருக்கும் புறனடையாளர்கள். பலசமயம் நாடோடிகள்.அவர்கள் இன்று இல்லாமலாகி வருகிறார்கள். இன்று இவற்றுக்குப் பார்வையாளர்களும் இல்லை. ஆகவே இவை சினிமா சம்பந்தமான கூத்துக்களாக உருமாறிவருகின்றன. அவற்றை நடத்த நகர்ப்புறத்திலிருந்து வேறு ஒரு தனிக்குழுவினர் உருவாகி வந்திருக்கிறார்கள். ’ஆபாச அம்சம்’ மட்டும் நீடிக்கிறது.
அதாவது நீங்கள் சுட்டும் இந்த ‘ஆபாச’ நாட்டார்கலையே அசல்தன்மையையை இழந்து ‘தரம்’ குறைந்து வருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஜெ