என் உரைகள் – ஒரு தயக்கத்துடன்…

அன்புள்ள ஜெ

இந்த இணைப்பு ஷேர் செய்யப்பட்டு எனக்கு வந்தது. நாவலாசிரியர் சரவணக்கார்த்திகேயன் தொகுத்தது. கிட்டத்தட்ட இணையத்தில் இருக்கும் உங்கள் உரைகள் அனைத்தும் இத்தொகுப்பில் உள்ளன.

சிவக்குமார்

Jeyamohan Speeches Playlist

அன்புள்ள சிவக்குமார்

203  உரைகள். ஏறத்தாழ இருநூறு மணிநேரமிருக்கும் என நினைக்கிறேன். இது எனக்கு ஒரு சின்ன ‘சம்மல்’ மனநிலையையே அளிக்கிறது

ஏனென்றால் சமீபகாலமாக எனக்கு ஒர் எண்ணம் உள்ளது. நாம் வாசிப்பு என்னும் செயல்பாட்டில் இருந்து விலகிச் செல்கிறோமா என்று. இது உலகளாவிய போக்கு அல்ல. அமெரிக்கா- ஐரோப்பா இன்றும் வாசித்துக்கொண்டேதான் இருக்கிறது—மின்வாசிப்பு வந்தபின் பலமடங்கு வாசிக்கிறது. இங்கே இந்தியாவில் நாம் வாசிப்பிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறோம்

சமீபத்தில் முனைவர் ஆய்வுசெய்யும் ஒரு பெண்ணை சந்தித்தேன். முனைவர் ஆய்வுக்கே கூட எவரும் எதையும் வாசிப்பதில்லை என்றார். இணைய உரைகள், காணொலிகளையே நம்பியிருக்கிறார்கள். கல்லூரிகளில் வாசிப்பென்பதே மறைந்துவிட்டது. நூலகங்களுக்கு மாணவர்கள் செல்வதே இல்லை. முன்பெல்லாம் இலக்கியம் போன்றவை வாசிக்கப்படாவிட்டாலும் அறிவியல் போன்ற துறைசார் நூல்களை வாசிப்பார்கள். இன்று அவ்வழக்கமும் இல்லை

என் வழக்கறிஞர் நண்பர்கள் சொல்வது, வழக்கறிஞர்களிலும் வாசிப்பவர்கள் அருகிக்கொண்டிருக்கிறார்கள் என்று.அவர்களும் உரைகளையே நாடுகிறார்கள். ஆய்வுமாணவர்கள்,வழக்கறிஞர்கள்தான் வாசித்தேயாகவேண்டிய நிலையில் இருப்பவர்கள். அவர்களுக்கும் வாசிப்புப் பழக்கம் இல்லை.

இளமையிலேயே காட்சியூடகத்திற்குப் பழகிய ஒரு தலைமுறை உருவாகிவந்துவிட்டது. அவர்களால் எழுத்துக்களை தொடர்ந்து பார்ப்பதே இயல்வதில்லை. எழுத்துக்களை மொழியாக, மொழியை கற்பனையாகவும் கருத்துக்களாகவும் மாற்றிக்கொள்ளும் பயிற்சி இல்லை.ஆகவே வாசிப்புப்பழக்கம் குறைகிறது

வாசிப்புக்கு ஈடு வேறில்லை. அது அந்தரங்கமானது, விரிவான சுயமான அறிதலை அளிக்கிறது. முதல் உலகுக்கும் இரண்டாமுலகுக்கும் உள்ள வேறுபாடே வாசிப்புப்பழக்கத்தால்தான் உருவாகிறது. ஆகவே முதல் உலகமாக ஆகநினைக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் வாசிப்புப்பழக்கத்தை வளர்க்க பெருஞ்செலவு செய்கின்றன.நாம் இருக்கும் வாசிப்பை இழந்துகொண்டிருக்கிறோம்

குறைந்தது இலக்கியமாவது வாசிப்புக்கு உரியதாக இருக்கவேண்டும், ஏற்கனவே கொஞ்சம் வாசிப்பவர்களை வெளியே அனுப்பிவிடலாகாது என்பது என் எண்ணம். என்னிடம் நோய்த்தொற்று காலத்தில் இலக்கியக் காணொலிகள் போடும்படி நண்பர்கள் சிலர் சொன்னார்கள். கூடாது என மறுத்துவிட்டேன். மாறாக எழுதித்தள்ளினேன், அவர்களை கூடுமானவரை வாசிக்க வைத்தேன்.

கூடுமானவரை தவிர்த்தாலும் நானே ஒருவருடம் கேட்குமளவுக்கு பேசி பதிவாகியிருக்கிறேன் என்பதை கொஞ்சம் சோர்வுடனேயே எதிர்கொள்கிறேன். வேறுவழியே இல்லை, இக்காலகட்டத்தின் அலை. இந்த உரைகள் இளையவர்களை வாசிக்கச்செய்யுமென்றால் சரிதான் என எண்ணிக்கொள்கிறேன்.

ஜெ