அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-4

[ 4 ]

எங்கள் படப்பிடிப்பு ஹம்பியில் நடக்கிறது என்று ஆறுமாதம் முன்பே எனக்கு தெரியும். அந்நாளில் விஜயநகரம் பற்றியே ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. பாடப்புத்தகங்களில் ஒரு குறிப்பு உண்டு, அவ்வளவுதான். ஹம்பியில்தான் விஜயநகரம் இருந்தது, அங்கேதான் கிருஷ்ணதேவராய நாயக்கர் ஆண்டார் என்பதெல்லாம் தெரிந்தவர்கள் அனேகமாக கிடையாது.

ஆகவே ஹம்பிக்குப் படப்பிடிப்புக்குப் போகிறோம் என்ற செய்தியை நான் சொன்னபோதும் யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஹம்பியில் அதற்குமுன் படம் எடுத்திருக்கிறார்களா என்று தெரியாது, ஆனால் ஆந்திராவில் எங்கள் படம்தான் ஹம்பியை அறிமுகம் செய்தது. அதன்பிறகு பல படங்கள். அங்கே எப்படி ஷாட் வைக்கவேண்டும் என்பதையே மெல்லி இரானிதான் சொல்லிக்கொடுத்தார் என்பார்கள்.

நான் வெளிப்புறப் படப்பிடிப்புக்கு போகும் வழக்கமில்லை. ஆகவே ஹம்பிக்கு நான் போகவேண்டியிருக்கும் என்று நினைக்கவில்லை. மாமா என்னை அழைத்து ஹம்பிக்கு நான்தான் பொறுப்பேற்றுச் செல்லவேண்டும் என்றும், அவர் கொஞ்சம் பிந்தித்தான் வரமுடியும் என்றும் சொன்னார். அவர் சூரத் செல்லவேண்டியிருந்தது. கடைசிக்காட்சிக்கான ஆடைகளுக்கு துணிகளை ஒட்டுமொத்தமாக எடுக்கவேண்டும்.

எனக்கு அது பெரிய பொறுப்பு, பதற்றமாகவும் பெருமிதமாகவும் உணர்ந்தேன். முதல்நாள் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்கிருந்து தொடங்குவது, என்ன செய்வது? நரசிங்க ரெட்டியிடம் கேட்டேன்.

“நீ உதவி இயக்குநர்களிடம் என்னென்ன காட்சிகள் அங்கே எடுக்கப்போகிறார்கள் என்று கேட்டு வாங்கு” என்றான்.

அதைத்தான் முதலில் செய்யவேண்டும் என்பது அதற்குப்பின்னர்தான் உறைத்தது. ஆனால் உதவி இயக்குநர்கள் பொதுவாக காட்சித்தாள்களை கொடுக்கவே மாட்டார்கள். அதனால் சரியான கலையமைப்பும் ஆடையமைப்பும் இல்லாமலாகி அவர்கள்தான் எல்லாரிடமும் வசை வாங்குவார்கள். ஆனாலும் காட்சித்தாள்களை கொடுப்பது தங்கள் அதிகாரத்தை இழப்பதாக நினைத்துக்கொள்வார்கள். அதை புதையல் ரகசியம் போல பாதுகாப்பார்கள். பொதுவாக எவரும் தங்கள் வேலையைப்பற்றிய செய்திகளை எவரிடமும் சொல்வதில்லை. தையல் இலாகாவிலேயே எதை தைக்கிறார்கள் என்பதை வெட்டுபவர்கள் அவற்றைத் தைப்பவர்களிடம் சொல்வதில்லை.

நான் உதவி இயக்குநர் வெங்கடேஷ் நாயிடுவிடம் கேட்டுப்பார்த்தேன். உதவி இயக்குநர்களுக்கெல்லாம் அக்காலத்தில் ஐம்பது வயது தாண்டியிருக்கும். அனேகமாக அனைவருமே உதவி இயக்குநர்களாகவே வாழ்க்கையை முடித்துக் கொள்பவர்கள். உதவி இயக்குநர் இயக்குநராகும் வழக்கம் அன்றில்லை. இயக்குநர்கள் மேலிருந்தே வந்தார்கள். இவர்கள் அடிமைகள். நான் வெங்கடேஷிடம் திரைக்கதையில் ஹம்பி காட்சிகள் எவை என்று கேட்டேன்.

வெங்கடேஷ் புகையிலை நிறைந்த வாயை நீட்டி “உண்மையைச் சொன்னால் எனக்கே தெரியாது. சதானந்த ராவுக்கு மட்டும்தான் தெரியும். அவர் அதை மெல்லி இரானிக்கே சொல்வதில்லை” என்றார்.

எனக்குப் புரிந்துவிட்டது, அவர் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் அனைவருமே சொல்லும் ரெடிமேட் பதில் அதுதான். நான் அவரிடம் மேலே பேசவில்லை. ஆனால் அதற்கு அடுத்தநாள் அவருக்கு இரண்டு அருமையான சட்டைகளைப் பரிசளித்தேன். அவருடைய அளவிலேயே. மகிழ்ந்துபோய்விட்டார். “என் அளவு எப்படி தெரியும்?” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.

அவர் தனக்கு பதினைந்து வயதில் ஒரு மகளும் எட்டுவயதில் ஒரு மகனும் இருப்பதாகச் சொன்னார். நான் “இந்த அளவு இருக்குமா?” என்று ஒரு பையனைச் சுட்டிக்காட்டி கேட்டுக்கொண்டேன். அவருக்கு நம்பிக்கையை அளித்தேன். அதன்பிறகு காட்சித்தாள்களை கேட்டேன்.

அப்போதுதான் மெய்யாகவே வெங்கடேஷ் அதை எவ்வளவு பெரிய விஷயமாக நினைக்கிறார் என்று தெரிந்தது. அந்த காட்சித்தாள்களை அவர் அளித்துவிட்டது தெரிந்தால் அவர் வாழ்க்கையே அழிந்துவிடும் என்றார். பதறிக்கொண்டே இருந்தார். “என்னை ஒழிச்சிடுவாங்க” என்றார்.

பலமுறை சத்தியங்கள் வாங்கிக்கொண்டபின் அவர் திரைக்கதை எழுதப்பட்ட தாளை எடுத்துக்கொண்டுவந்து என்னிடம் தந்தார். அதை அன்று சீன்பேப்பர் என்பார்கள். “இதைக் கொண்டுபோய் நீயே அமர்ந்து நகல் எடுத்துவிட்டு என்னிடம் திருப்பிக்கொடு, நான் கொண்டுப்போய் அங்கேயே வைக்கவேண்டும்” என்றார்.

”இது கார்பன் காப்பிதானே?” என்றேன்.

“ஆனால் எல்லா நகல்களையும் எண்ணிக்கை போட்டு வைத்திருக்கிறார்கள். இதோபார்.”

அது ஐம்பத்தெட்டு என்ற எண். அறுபதுபேருக்கு அளிக்கப்பட்ட ஒன்று எப்படி ரகசியமாக நீடிக்கமுடியும்? முதலில் அது ஏன் ரகசியமாக நீடிக்கவேண்டும்? அதில் வேலைசெய்பவர்களுக்கு அது கிடைக்காது என்றால் வேறு யாருக்கு அது?

எனக்கு வந்த வெறிக்கு அதை நகலெடுத்து நூற்றுக்கணக்கில் செட்டில் வினியோகம் செய்யவேண்டும் என்று தோன்றியது. ஆனால் புன்னகையுடன் அவரை ஆறுதல் படுத்திவிட்டு கொண்டுபோய் ஒரே இரவில் நகல் எடுத்துவிட்டேன். மூலத்தை திருப்பி கொடுத்தேன். அவருடைய மகனுக்கும் மகளுக்கும் இரண்டு உடைகளை தைத்துக்கொடுத்தேன்.

பிறகு பேசிக்கொண்டிருந்தபோது எனக்கு வெங்கடேஷ் மேல் பரிதாபம்தான் வந்தது. அங்கே எவருக்கும் எவரும் தொழில்சொல்லிக் கொடுப்பதில்லை. நீண்ட கால அனுபவத்தால் கற்றுக்கொண்ட ஒரு சின்ன விஷயம்தான் பிழைப்புக்கே ஆதாரம். சட்டென்று முதலாளி கோபித்துக்கொண்டு அருகே நின்றிருக்கும் ஒருவனிடம் ‘டேய் நீ இதைச் செய்வாயா?’ என்று கேட்டு அவனும் ‘ஆமாம், தெரியும், செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டால் அவ்வளவுதான், வேலை போயிற்று.

அன்றெல்லாம் ஒருவேலை போனவர் அப்படியே அழிந்துவிடுவார். இன்னொரு வேலையில் சென்று நீடிப்பவரால் எதையும் எப்போதும் செய்யமுடியும். ஆனால் அத்தகையவர்கள் குறைவு. அவர்கள் காலப்போக்கில் என்.என்.ரெட்டி ஆகிவிடுவார்கள். பெரும்பாலானவர்கள் அவமானத்தால் வடிவமைக்கப்பட்டவர்கள். அவமானப்படாமல் இருக்க, அவமானப்பட்டதை செரித்துக்கொள்ள பழகியவர்கள். வேலைக்கான தகுதி, பிழைப்பதற்கான தந்திரம் அது மட்டும்தான்.

நான் ஸ்டுடியோவில் கண்டது ஒன்றுதான். பொதுவாக அவமானப்பட தயாராக இருப்பவர்கள் எதிலும் திறமைசாலிகள் அல்ல. திறமைசாலிகளால் சொற்களை பொறுத்துக்கொள்ள முடியாது. நான் முதல்வகையானவன், ஒளிந்து ஒளிந்து தப்பித்துவந்தேன். இரண்டாம் வகையானவன் என்று என்னை கற்பனை செய்துகொண்டேன்.

காட்சித்தாள் கையில் வந்ததுமே என் வேலை ஒழுங்குக்கு வந்துவிட்டது. என்னென்ன ஆடைகள் தேவை என்பதை முடிவுசெய்தேன். அவற்றை காட்சிவாரியாக பிரித்து, தனித்தனியாக பொதி கட்டி, அவற்றின்மேல் காட்சி எண்ணையும் எழுதிக்கொண்டேன். காட்சித் தொடர்ச்சிக்கான ஆடைகளை தனியாக கட்டி எடுத்துக்கொண்டேன். மாற்று ஆடைகளையும் தனியாக எடுத்துக்கொண்டேன்.

நல்லையாவும் அவருடைய குழுவும் பிரதான நடிகர்களுடன் ஹம்பிக்கு வருவதாக இருந்தது. நானும் என் கூட்டமும் இரண்டு நாட்களுக்கு முன்னரே கிளம்பி ஹம்பி செல்லவேண்டும். எங்களுக்கென இரண்டு லாரிகள் ஏற்பாடாகியிருந்தன. ஒரு லாரியில் ஆடைகள். இன்னொரு லாரியில் ஊழியர்கள், தையல் இயந்திரங்கள் முதலியவை. இரண்டு லாரி தேவையா என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் ஒவ்வொன்றாக லோடு ஏற்றத்தான் எவ்வளவு சரக்கு இருக்கிறது என்று தெரிந்தது. நூறு பொதிகளுக்குமேல் இருந்தன ஆடைகள். மேலே மேலே அடுக்கி தார்ப்பாய் போட்டு கட்டவேண்டியிருந்தது.

ஹம்பியின் இடிபாடுகளை மறைப்பதற்கு அவற்றின் மேலெல்லாம் சித்திரம் எழுதப்பட்ட விரிப்புகள் போடவும், இரும்பு தூண்களில் மண்டபங்கள் வரையப்பட்ட திரைச்சீலைகளை இழுத்துக் கட்டவும் தொங்கவிடவும் கலை இயக்குநர் திட்டமிட்டிருந்தார். காமிரா பார்க்கும் கோணத்தில் ஓர் எல்லைக்குமேல் எல்லாமே இரட்டைப்பரிமாணம் கொண்டவைதான். முப்பரிமாணம் கொண்ட செட்டுக்குப் பின்னால் இரட்டைப் பரிணாம சித்திரம் கொண்ட திரை இருந்தால் கண் அதையும் புடைப்புருவம் என மயங்கிவிடும்.

இரவுபகலாக திரைச்சீலைகளில் கருப்புவெள்ளையில் மண்டபங்கள், மரங்கள் என வரைந்துகொண்டிருந்தார்கள். அவையெல்லாம் எங்களிடம்தான் இருந்தன. அவை மட்டுமே பதினெட்டு பொதிகள். தையல் இயந்திரங்களை ஏற்றிக்கொண்ட லாரியில் இடம் கொஞ்சம் தாராளமாகவே இருந்தது. அவற்றில் தையல்காரர்கள் ஏறிக்கொண்டார்கள். பகலில் திறந்த லாரியில் வெயிலில் போகமுடியாது. ஆகவே இரவில்தான் பயணம்.

நான் இரண்டாவது லாரியில் டிரைவர் இருக்கை அருகே ஏறி அமர்ந்துகொண்டேன். நாங்கள் கிளம்பும்போது அத்தனைபேருமே உற்சாகமாகத்தான் இருந்தார்கள். அன்றெல்லாம் வெளிப்புறப் படப்பிடிப்பு என்பது அபூர்வத்திலும் அபூர்வம். ஆகவே தையல்காரர்களுக்கு அது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே செல்வதற்கான வாய்ப்பு. அவர்களின் மாற்றமே இல்லாத வாழ்க்கையில் சுவாரசியமான சிலநாட்கள். ஆனால் எவருக்குமே ஹம்பி எங்கே இருக்கிறது, அங்கே என்ன இருக்கிறது என்று தெரிந்திருக்கவில்லை. கிளம்பிச் செல்கிறோம் என்பதே போதுமானதாக இருந்தது.

நான் ஹம்பி பற்றி தேடி படித்து வைத்திருந்தேன். அந்தப் படம் எடுக்கும் செய்தி வந்தபோதே விஜயநகரம் பற்றி சூரி ரங்கய்யா எழுதிய புத்தகம் ஒன்றை மூர்மார்க்கெட்டில் வாங்கி படித்தேன். கிருஷ்ணதேவராயர் என்னை மெய்சிலிர்க்க வைத்த அரசராக இருந்தார். கிருஷ்ணதேவராயரின் ஹம்பி எப்படி துரோகத்தால் அழிந்தது, எப்படி அதை சுல்தான்கள் சூறையாடினர் என்பதெல்லாம் எனக்கு தெரிந்திருந்தது. ஆனால் அதையெல்லாம் சொன்னால் கேட்கக்கூடியவர்கள் எவருமில்லை.

இப்போது ஒன்று தோன்றுகிறது, மக்களுக்கு இயல்பாக சரித்திரத்தில் ஆர்வமே இல்லை. அது அவர்களின் வாழ்க்கை அல்ல. நம் சினிமாக்கள்தான் சரித்திரத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லின. சினிமாவின் வழியாக சரித்திரம் அறிமுகம் ஆனபிறகுதான் அந்தச் சரித்திரத்தில் மேலே ஏதாவது தெரிந்துகொள்ள மக்களால் முடிகிறது. 1950-ல் அப்போதுதான் சினிமாக்களே வரத் தொடங்கியிருந்தன. பெரும்பாலான சினிமாக்கள் புராணக்கதைகள். சரித்திரக்கதைகளே புராணக்கதைபோலத்தான் இருக்கும்.

நான் ஒவ்வொரு கணமும் என ஹம்பியை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். ஹம்பியை மங்கலான கறுப்புவெள்ளை படங்களில்தான் பார்த்திருந்தேன். அந்த கையொடிந்த நரசிம்மரின் சிலைதான் நினைவில் தெளிவாக இருந்தது. ஆனால் சூரி ரங்கய்யாவின் நூலில் நான்கே படங்கள்தான். அதைக்கொண்டே ஹம்பியை என் கற்பனையில் உருவாக்கிக்கொண்டேன். இரவெல்லாம் அந்த நிலத்தில் பித்துப்பிடித்து அலைந்துகொண்டிருந்தேன்.

அந்தப் பயணத்தில் நான் அவளை நினைக்கவே இல்லை என்பதை பின்னர் நினைத்து நினைத்து வியந்திருக்கிறேன். பலசமயம் மனம் நிகழும் விதம் நமக்குப் புரிவதே இல்லை. அவள் ஹம்பிக்கு வருவாளா என்று தெரியவில்லை. மீண்டும் நான் மதராசுக்கு வரும்போது அவள் அங்கிருப்பாளா என்றும் சொல்ல முடியாது. அவளிடம் நான் விடைபெறவில்லை. ஏனென்றால் விடைபெறுமளவுக்கு நான் அவளுக்கு நெருக்கமாக ஆகவில்லை.

அன்று அந்த இரவில் என் உள்ளம் உருகி உருகி, இனித்து இனித்து, நெகிழ்ந்து கரைந்து எப்போதோ தூங்கி காலையில் எழுந்தபோது தெளிவாக இருந்தது. அவள் மிக விலகிச் சென்றுவிட்டிருந்தாள். அவள் நினைவே அவ்வப்போது மெல்லிய இசை ஞாபகத்தில் ஒலிப்பது போல வந்து சென்றது. ஆனால் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். என் புலன்கள் கூர்மையாக மாறியிருந்தன. கண்ணிலிருந்து ஒரு படலத்தை உரித்து எடுத்துவிட்டதுபோல உலகமே துலங்கியது. தோட்டத்துப் பூக்கள் மட்டுமல்ல காம்பவுண்டு சுவரின் செங்கல்கூட வண்ணம் பொலிந்து தெரிந்தது. சின்னச்சின்ன ஓசைகள்கூட தெளிவாகக் கேட்டன.

அத்தனை மகிழ்ச்சியான நிலை தன்னளவிலேயே பரிபூர்ணமானது. அதற்கு மேற்கொண்டு எதுவும் தேவையில்லை. கற்பனைகள் கூட. எந்த மனிதரும் உடனிருக்காமல் நாம் மட்டுமே கொண்டாடிக் கொண்டிருக்க அந்த மனநிலையில் முடியும். என் சுவைமொட்டுக்கள் கூர்மையடைந்திருந்தன. நான் இனிப்பு சாப்பிட்டேன். மாமிச உணவு சாப்பிட்டேன். நல்ல சட்டைகளை அணிந்துகொண்டேன். மனதுக்குள் பாடிக்கொண்டே இருந்தேன். என்னையறியாமலேயே மனம் பாடல்கள் வழியாகச் சென்றுகொண்டே இருந்தது. அத்தகைய பரவசநிலையில் இசை தவிர எதுவுமே நம்முடன் இசைந்துபோவதில்லை.

நாலைந்து நாள் அவளைப் பார்க்கவே இல்லை. அதன்பின் பாடல்காட்சிகள் எடுக்கப்படவுமில்லை. அவளை பார்க்கவேண்டுமென நான் நினைக்கவுமில்லை. ஏனென்றால் அவள் எனக்குத் தேவையிருக்கவில்லை. அவள் ஒரு பெண். எனக்குத்தேவையாக இருந்தது ஒரு காதல். அதற்கு பெண் எதற்கு? பெண்ணின் தோற்றமே போதும். முகம் மட்டும் போதும் முகத்தின் நினைவுகூடப் போதும்.

அந்த இரவில் நட்சத்திரங்கள் வானத்தில் நிறைந்திருந்தன. மதராசின் வானம் புழுதியால் மறைந்தது. கடற்கரை என்பதனால் மேகங்கள் நிறைந்தது. நட்சத்திரங்கள் குறைவாகவே தெரியும். ஆனால் ராயலசீமாவின் வானம் துல்லியமானது. பகலில் அது வெறும் நீலநிற வளைவு விதானம். இரவில் பல்லாயிரம்கோடி நட்சத்திரங்கள் செறிந்த கரும்பட்டு விதானம். சித்திரை மாத விண்மீன்கள். அவற்றில் மிகமிகச் சிறிய விண்மீன்கள்கூட முழுத்து எழுந்து வந்திருந்தன.

நான் அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன். இரவெல்லாம். வேறொரு நினைப்பில்லாமல். ஆனால் விண்மீன்களைப் பற்றி நினைக்கவில்லை. நான் என்னைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். நான் நான் நான் என நினைத்துக்கொண்டிருந்தேன். இருக்கிறேன் இருக்கிறேன் இருக்கிறேன் என நினைத்துக்கொண்டேன். இதோ இதோ இதோ என. இங்கே இங்கே இங்கே என. இக்கணம் இக்கணம் இக்கணம் என.

நாங்கள் ஹொஸ்பெட் சென்று சேர காலையாகிவிட்டது. வழியில் எல்லாரும் தூங்கிவிட்டனர். டிரைவரும் நானும் மட்டும்தான் விழித்திருந்தோம். டிரைவர் பீடா போட்டு சாலையிலேயே எட்டி எட்டி துப்பிக்கொண்டிருந்தார். இந்தியில் கிளீனரிடம் பேசிக்கொண்டே இருந்தார். அவன் அவருடைய ஒரு வார்த்தையையும் கேட்காமல் தூங்கிவிட்டான். ஹொஸ்பெட்டில் ஒரு டீ சாப்பிட்டோம். அங்கிருந்து காலை ஏழரை மணிக்கு கமலாப்பூரில் நாங்கள் செல்லவேண்டிய இடத்துக்குச் சென்று சேர்ந்தோம்.

அது ஒரு பெரிய பண்ணை. நூறு ஏக்கருக்குமேல் இருக்கும். பண்ணைக்குள்ளேயே கரடுமுரடான பாறைகளால் ஆன இரண்டு சிறு குன்றுகள் இருந்தன. பெரும்பகுதியில் கரும்புதான். மேடான பகுதியில் சோளம். விவசாயக்கூலிகள் தங்குவதற்கு குடிசைகளும், பொருட்கள் வைக்கும் கொட்டகைகளும் இருந்தன. பண்ணையின் உரிமையாளர்கள் நடுவே ஒரு பெரிய ஓட்டுக்கட்டிடத்தில் தங்கியிருந்தனர்.

முன்னரே அங்கே வந்துவிட்டிருந்த எங்கள் ஸ்டுடியோவின் வேலையாட்கள் எங்களுக்கு அந்தப் பண்ணைக்குள் இருந்த சிறிய கட்டிடங்களை காலிசெய்து வைத்திருந்தனர். புதிதாக நிறைய கொட்டகைகளும் குடிசைகளும் அமைக்கப்பட்டிருந்தன. துணிகள் இருந்தமையால் எங்களுக்கு ஒரு சிறிய ஓட்டுவீடு கிடைத்தது. மூன்று அறைகளும் ஒரு கூடமும் கொண்ட வீடு. ஆனால் அது மிகவும் தள்ளி மாமரங்களுக்கு நடுவே மறைந்தது போல இருந்தது. அதில் துணிகளை அடுக்கி வைத்தபோது ஒரு அறை மட்டும்தான் மிஞ்சியது. அதில் நான் தங்கிக்கொள்வதாக ஏற்பாடாயிற்று.

எங்கள் தையல் அணிக்கு பெரிய கொட்டகை ஒன்று சற்று அப்பால் இருந்தது. அதை ஒட்டி எட்டு குடில்களில் தையல்காரர்கள் தங்கலாம். அனைவருக்கும் குளிப்பதற்கு பம்புசெட் ஒன்று இருந்தது. அங்கேயே தட்டிவைத்து மறைத்து ஏழெட்டு கழிப்பறைகளை கட்டியிருந்தனர். குழி எடுத்து மேலே பலகை போட்ட கழிப்பறைகள். எல்லா இடங்களிலும் மூங்கில் நட்டு ஒயர் இழுத்து மின்விளக்கு அளிக்கப்பட்டிருந்தது. என் கட்டிடத்தில் ஏற்கனவே மின்சார வசதி இருந்தது. மண்ணாலான தரையோடுகள் பதிக்கப்பட்ட அறைகள். கட்டில் இல்லை, தரையிலேயே பாய்போட்டு படுத்துக்கொள்ள வேண்டும்.

ஹொஸ்பெட்டில் மொத்தம் நான்கு பண்ணைகளிலாக அனைவரும் தங்க வைக்கப்பட்டிருந்தோம். நடிகர்களும் நடிகைகளும் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் மற்ற முக்கியமானவர்களும் சற்று அப்பாலிருந்த பெரிய பங்களாக்கள் இரண்டில் இருந்தனர். துணைநடிகர்கள் மட்டும்தான் இரண்டு பண்ணைவீடுகளில் கூட்டமாகத் தங்கவைக்கப்பட்டிருந்தனர். எங்கள் பண்ணைவீட்டில் தையல், ஒப்பனை, முடிதிருத்துநர் போன்றவர்கள் இருந்தோம். அந்த பண்ணை பெரிதாகையால் அத்தனைபேர் அங்கே தங்கியும் நெரிசல் தெரியவில்லை.

கலையமைப்பாளர்களும் உதவியாளர்களும் ஒருமாதம் முன்னரே வந்து ஹம்பிக்கு உள்ளேயே கூடாரங்களில் தங்கியிருந்தனர். தொடர்ந்து லாரிகளில் எடுத்து வரப்பட்ட அவர்களின் பொருட்களெல்லாம் அங்கேயே கொண்டு சென்று வைக்கப்பட்டிருந்தன. பிளாஸ்டர் ஆஃப் பாரீஸிலும் களிமண்ணிலும் துணியோடு குழைத்துச் செய்யப்பட்ட தூண்கள், மண்டபங்கள், நந்திகள், யாளிகள், இன்னும் என்னென்னவோ சிற்பங்கள். முன்னரே ஹம்பிக்கு வந்து புகைப்படங்களும் களிமண் மாடல்களும் எடுத்துவந்து மதராசில் செய்யப்பட்டவை அவை.

அலுமினியத்தை உருக்கி களிமண் அச்சில் வார்த்து எடுத்த உடைவாள்கள், கேடயங்கள், நகைகள், கிரீடங்கள் என ஏகப்பட்ட பொருட்கள். அவையெல்லாம் காட்சித்தொடர்புக்காக எண்கள் இடப்பட்டு பெட்டிகளில் வைக்கப்பட்டு அந்தப் பெட்டிகளுக்கும் எண்கள் இடப்பட்டிருந்தன. எல்லா பொருட்களுக்கும் எண்களுடன் ஏ, பி, சி என்று இருக்கும். ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு டம்மிகள். எல்லாமே ஒன்றுபோலத்தான் இருக்கும். ஏ என்று ஒன்றுக்கு எண் போடப்பட்டதனாலேயே மற்ற இரண்டும் டம்மிகளாக ஆகிவிட்டன.

மூன்று காகிதக்கூழாலான பெரிய நந்திகள், எட்டு மெய்யுருவ யானைகள். அவற்றை வைக்கோலில் சுருட்டிக் கட்டி மதராசிலிருந்து கொண்டுவந்தார்கள். ஹம்பியில் களிமண் இல்லை. ஆகவே அருகே எங்கிருந்தோ களிமண் கொண்டுவரப்பட்டது. அங்கேயே மாதக்கணக்கில் தங்கி அவர்கள் அங்கே அவர்கள் களிமண்ணும் துணியும் சேர்த்து பிசைந்த தட்டிகளால் ஒரு கோட்டையையே கட்டியிருந்தார்கள். களிமண்ணை குழைத்து மர அச்சில் அழுத்தி மேலும் யானைகளையும் நந்திகளையும் செய்து குவித்தார்கள். அவற்றுக்குக் காவலாக தடியுடன் பதினைந்துபேர் ஸ்டுடியோவிலிருந்தே கொண்டுவந்து அங்கே நிறுத்தப்பட்டார்கள்.

ஒரு சரித்திர சினிமாவுக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதற்கு எல்லையே இல்லை. தலைப்பாகைகள், கச்சைகள் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்டவகை. எங்கள் தையல் இலாகாவே கிறுக்கு பிடித்ததுபோல இயங்கிக்கொண்டிருந்தது. கலை இலாகா பத்து மடங்கு பெரியது. ஸ்டுடியோ ஓர் அரசாங்கம் என்றால் அவர்கள் அதற்குள் இன்னொரு அரசாங்கம் போல. அங்கே பொருட்களை பட்டியல் இட்டு கொடுத்து எண்ணிப்பார்த்து திரும்ப வாங்குவதற்காக மட்டுமே இருபது முப்பது ஊழியர்கள் இருந்தார்கள்.

நாங்கள் பண்ணைவீட்டுக்கு வந்த முதல் ஒருநாள் ஒரே குழப்பமாக, சந்தடியாக இருந்தது. ஒவ்வொருவரும் எதையோ ஒன்றை கேட்டுக்கொண்டு அலைந்தார்கள். சிலருக்கு இடம் கிடைக்கவில்லை, சிலருக்கு பைகளைக் காணவில்லை, சிலரையே காணவில்லை. ஆனால் அன்று அந்திக்குள் எல்லாம் எப்படியோ நுரை படிவதுபோல ஆங்காங்கே அமைந்துவிட்டன. பலர் படுத்துக்கொண்டு பயணத்தின் அலுப்பைப் பற்றிப் பேசத்தொடங்கினர். பலருக்கு பயணமே திகட்டிவிட்டிருந்தது.

எட்டுமணிக்கு ஆளுயர கேரியர்களில் இரவுச்சாப்பாடு வந்தது. கமலாப்பூரில் இருந்த அனைவருக்கும் சாப்பாடு ஒரே இடத்தில் செய்யப்பட்டது. அங்கிருந்து வேன்களிலும் லாரிகளிலும் கொண்டுவந்து பரிமாறினார்கள். முதல்நாள் வெறும் பருப்புசாதம் மட்டும்தான். அப்பளம் நமுத்திருந்தது. ஆனால் உருளைக்கிழங்கு வறுவல் இருந்ததனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். அன்று உருளைக்கிழங்கு ஒரு பெரிய ஆடம்பரம்.

சாப்பிட்டதுமே அத்தனைபேரும் ஆங்காங்கே விழுந்து தூங்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப்பகுதியின் நில அமைப்பு ராயலசீமா போல. அள்ளிக்கொட்டிய பாறைக்குவியல்கள்தான் எல்லா பக்கமும். மரங்கள் குறைவு. ஆகவே தொடுவானம் வரை அலையலையாக கிடக்கும் மண்ணை பார்க்கமுடியும். பகலெல்லாம் கொடுமையான வெயில். ஆனால் மாலையானதும் மலைப்பாறைகள் நடுவே சீறிக்கொண்டு காற்றுவீசியது. அதில் வெந்த மணம்கொண்ட புழுதியும் சருகுத் துகள்களும் நிறைந்திருந்தது. முகத்தின்மேல் வேட்டியைப் போட்டுக்கொண்டு தூங்கவேண்டும். பலர் படுத்ததுமே குறட்டை விட்டனர். சிலர் வெற்றிலையை மென்றுகொண்டு மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர்.

நான் ஒருவழியாக எல்லாவற்றையும் ஒழித்து, அறையில் ஒரு பகுதியை புழங்குமிடமாக ஆக்கிக்கொண்டு, தரையில் பாயை விரித்து அதன்மேல் ஒரு கம்பளத்தை போட்டுக்கொண்டு தூங்குவதற்காக படுத்தபோதுதான் அந்த பண்ணையின் உரிமையாளராகிய ரங்கா ரெட்டி அவனுடைய ஆட்களுடன் வந்தான். பேச்சுக்குரல்கேட்டு நான் எழுந்து வெளியே வந்தேன்.

அவன் எருது போன்ற உடல்கொண்ட ஆள். அப்படி ஏன் தோன்றியது என்று அப்படி தோன்றிய பிறகுதான் புரிந்தது. அவன் கழுத்து மடிப்பு மடிப்பாக காளைபோல இருந்தது. கழுத்திலும் கன்னத்திலும் ஏராளமான பாலுண்ணிகள் மாடுகள் மேல் வண்டுகள் கவ்வியிருப்பதுபோல ஒட்டியிருந்தன. மிகச்சிறிய கண்கள். மீசையை நீவிக்கொண்டே பேசும் வழக்கம் அவனுக்கு இருந்தது. பத்துபவுனுக்கு மேல் எடைகொண்ட செயின் அணிந்திருந்தான். காதுகளில் வைரம் பதித்த கடுக்கன்கள்.

என்னிடம் அவன் எந்த முகமனும் இல்லாமல் கைசுட்டி “தெலுங்கு தெரியுமா?” என்று கேட்டான்.

“நான் ஓங்கோல்காரன்” என்று பதில் சொன்னேன். “என் பெயர் மோட்டூரி ராமராவ்.”

“ஓகோ… நம்ம ஆள்” என்று அவன் உரக்கச் சிரித்தான். அவனுடன் இருந்தவர்களும் புன்னகைத்தனர்.

“நான் இந்த பண்ணை உரிமையாளன். என்னை ரங்கா ரெட்டி என்பார்கள்” என்றான். திரும்பி தூங்குபவர்களைப் பார்த்தான். “எல்லாம் குறக்கூட்டம் போல இருக்கிறார்கள். எங்கே வேண்டுமென்றாலும் தூங்கிவிடுகிறார்கள்” என்றான்.

நான் மையமாக புன்னகைத்தேன்.

”இவர்களெல்லாம் அரவாடுகள்தானே?”

“இல்லை, பெரும்பாலும் எல்லாருமே மனவாடுகள்தான்”

“நம்ம ஆட்கள் இப்படி கஷ்டப்படுகிறார்கள்” என்றான். பின்னர் குரலை தாழ்த்தி “ஆண்கள் மட்டும்தானா? பெண்கள் இல்லையா?” என்றான்.

அவனுடைய நோக்கம் எனக்குப் புரிந்தது. நான் பொறுமையுடன் “இல்லை, எங்கள் குழுவில் ஆண்கள் மட்டும்தான்” என்றேன்.

“நிறைய பெண்கள் வருவார்கள் என்றார்களே… டான்ஸ் ஆடுவதற்கு பெண்கள் வேண்டுமே?” அவனால் எந்த உணர்வையும் ஒளிக்க முடியாது, அறிவின்மையே உருவான முகம்.

”எனக்கு அதெல்லாம் தெரியாது” என்று நான் சொன்னேன்.

”பெண்கள் வந்தார்கள். நானே பார்த்தேன். நிறைய அழகான பெண்கள். கொண்டையா பார்த்திருக்கிறான். அவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்கள்?”

”தெரியாது, நானே இப்போதுதான் வந்தேன்” என்றேன்.

அவன் ஒரு பத்து ரூபாயை எடுத்து எனக்கு நீட்டி “வைத்துக்கொள்” என்றான்.

“இல்லை வேண்டாம்”

”பரவாயில்லை, இருக்கட்டும்” என்று அவன் கண்ணைச் சிமிட்டினான்.

“இல்லை, நான் வாங்குவதில்லை. நான் இந்த தையல் பகுதியின் உரிமையாளரின் மருமகன்” என்றேன். “இவர்களெல்லாம் என் ஊழியர்கள்”

“சரி, பரவாயில்லை” என்று அவன் அந்த ரூபாயை திரும்ப தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டான். ”இங்கே பெண்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டுவந்து என்னிடம் சொல்… அவர்களை எப்படி பார்ப்பது என்று சொன்னால் நான் உனக்கு நிறைய உதவிசெய்வேன்.”

நான் பேசாமல் நின்றேன்.

அவன் கண்களைச் சிமிட்டி சிரித்து “பெண்கள் இருக்குமிடமெல்லாம் உனக்கு தெரியாமலிருக்காது. நீ தையல்வேலை செய்கிறாய். அவர்களுக்கு அளவெல்லாம் எடுப்பாய்” என்றான்.

நான் அதற்கு இறுகிய முகத்தால் எதிர்வினை ஆற்றினேன்.

“உன் தொடர்பில் ஏதாவது நல்ல பெண் இருந்தாலும் சொல்… எல்லாம் பார்த்துக்கொள்ளலாம். நான் இந்தப்பகுதியின் ராஜா போல. கேட்டுப்பார் சொல்வார்கள்.”

“சரி” என்றேன், அவனை போகவைக்க விரும்பினேன்.

அவன் “வருகிறேன்” என்று கிளம்பிச் சென்றான். நான் அவனுடைய நடையைப் பார்த்துக்கொண்டே நின்றேன். எருதுநடை. ஒரு மனிதன் வெறும் மாமிசத்தால் மட்டுமே ஆனவன் என்றால்தான் அப்படித் தெரிவான். அத்தகையவர்களை நான் சினிமாவில் நிறையவே பார்த்திருக்கிறேன். அவர்கள் மாமிசமல்லாமல் வேறேதும் அல்ல. ஆகவே அவர்களுக்கு மாமிசம் மீது அவ்வளவு வெறி. மாமிச உணவு, பெண்களின் சதை.

குமட்டல் எழுவதுபோலிருந்தது. திரும்ப சென்று படுத்துக்கொண்டபோது நீண்டநேரம் எனக்கு தூக்கம் வரவில்லை. வெளியே வெந்த காற்று கொதிக்கும் பாறைகளின் மேல் பரவி ஊடுருவி ஊளையிடுவதையே கேட்டுக்கொண்டிருந்தேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைகவிதை உரைகள்- கடிதம்
அடுத்த கட்டுரைபற்றற்றான் பற்று