அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-3

[ 3 ]

அன்று அவளைப் பற்றி அவள் தோழி சொல்லி கேள்விப்பட்டபோது பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் திரும்பி வரும்போது இயல்பாக சிந்தனை அங்குமிங்கும் ஓடிக்கொண்டு, எங்கெங்கோ சென்று தொட்டுக்கொண்டு வந்தபோது முற்றிலும் ஒவ்வாத ஒன்றை தொட்டு விதிர்த்து துடித்து நின்றுவிட்டது. அது ஒரு காட்சி. முற்றிலும் கற்பனை. ஆனால் பிறிதொரு முறை நான் எண்ணிக்கூட பார்க்க விரும்பாதது.

நான் கிட்டத்தட்ட ஓடினேன். மூச்சிரைக்க பாய்ந்துசென்று தைக்கப்போட்டிருந்த துணிக்குவியல்கள் மேல் விழுந்தேன். அவற்றை அள்ளி என் மேல் போட்டுக்கொண்டு என் தலையை புதைத்துக்கொண்டேன். வலிகொண்டவன் போல புரண்டு நெளிந்தேன். நெஞ்சில் அறைந்துகொண்டு அலறி அழவேண்டும் என்று, தலையை எங்காவது முட்டிக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது. ஆனால் நான் அங்கே வீசியெறியப்பட்டவனாகக் கிடந்தபடி  கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தேன். ஓசையற்ற குளிர்ந்த கண்ணீர்.

நான் நாட்கணக்கில் தூக்கமில்லாமல் தவித்தேன். எனக்கு இதெல்லாம் இப்படியெல்லாம்தான் என்று நன்றாகவே தெரியும். ஆனாலும் இவள் அப்படியல்ல என்று நினைத்தேன். அதற்கு கற்பனை அன்றி வேறு அடிப்படையே இல்லை. முதல் நிலைகுலைவுக்குப் பின்பு அவள்மேல் கடுமையான எரிச்சலும் கசப்பும்தான் வந்தது. இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள், செத்து தொலைந்தால் என்ன? இதற்கு அப்பாலும் ஏன் உயிருடன் இருக்கவேண்டும்?

அவளை வெறுத்து வெறுத்து மனதுக்குள் பேசிக்கொண்டேன். அவளை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு முறைகளில் சந்தித்து அவமானப்படுத்துவதை பகற்கனவில் துளித்துளியாக நடத்திக்கொண்டிருந்தேன். வார்த்தைகள் பெருகிப்பெருகி மண்டை விம்மியது. எவரிடமாவது பேசியாகவேண்டும் என்ற நிலை வந்தது. இல்லாவிட்டால் கிறுக்கு பிடித்துவிடும். ஆனால் எப்படி எவரிடம் எதைச் சொல்வது?

மாலை நரசிங்க ரெட்டியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது இயல்பாகப் பேச்சை இந்தப் பெண்களைப்பற்றி கொண்டுசென்றேன். நாங்கள் பொதுவாக உரையாடிக் கொண்டிருந்தோம். அவன் எப்போதுமே தெலுங்கானா புரட்சியை தொட்டுத்தான் பேசுவான். நையாண்டியும் சீற்றமும் தகவல்களுமாக பொழிந்துகொண்டே இருப்பான்.

அவ்வழியாக ஒருத்தி சென்றாள். அவளைப் பார்த்தபின் “இவர்கள் எல்லாம் ஏன் இதற்கு வருகிறார்கள்?” என்றேன்.

“தானாக வருகிறவர்கள் ஒருவர்கூட இல்லை, அத்தனைபேரையும் அம்மா அப்பா தாய்மாமன் யாராவது இங்கே கொண்டுவருகிறார்கள்” என்றான் நரசிங்க ரெட்டி.

“அவர்கள் வேறுதொழில் செய்கிறார்கள் என்றால் இங்கே ஏன் வரவேண்டும்?” என்றேன். ஆனால் அதை கேட்கும்போது என் குரலில் வெறுப்பு வெளிப்படவில்லை. அது விசித்திரமாக நடுங்கியது. பார்வையை தாழ்த்தி நிலம் பார்த்துக் கொண்டிருந்தேன். சீற்றம் போதவில்லையா என்று தோன்றியதும் “வேசிகள்” என்றேன்.

“பாவம்” என்று நரசிங்க ரெட்டி சொன்னான்.

நான் என் சீற்றம் கொஞ்சம் மிகையோ என உடனே உணர்ந்தேன். அதைச் சமாளிக்கும்படியாக “சினிமாத் தொழிலையே கேவலமாக ஆக்கிவிடுகிறார்கள். நாலுபேரிடம் சொல்லவே கூச்சமாக இருக்கிறது” என்றேன்.

நரசிங்க ரெட்டி “பாவப்பட்ட பெண்கள்” என்றான்.

”இவர்களை இதிலிருந்து திருப்பி வேறுவேலைக்கு அனுப்பவேண்டும்” என்றேன்

“அவர்கள் வரமாட்டார்கள்” என்று நரசிங்க ரெட்டி சொன்னான் ”அவர்களில் இதை முழுநேரத் தொழிலாக செய்பவர்கள் கொஞ்சம் வயதானவர்கள். சின்னப்பெண்கள் எல்லாருமே ஹீரோயின் ஆகிவிடலாம் என்றுதான் வருகிறார்கள். அதைச் செய்வதாக இருந்தால் ஏன் இங்கே வந்து லைட்டில் நின்று கறுப்பாகவேண்டும்?”

“உண்மையாகவா?” என்றேன்.

“பேசிப்பார், ஒருத்தி மிகச்சுமாராக இருப்பாள். ஆனால் அவள் கூட ஹீரோயின் ஆகிவிடலாம் என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பாள். இப்போது அவள் படும் கஷ்டமெல்லாம் அதற்காகத்தான் என்று நினைப்பாள். அவளைவிட அவள் அம்மாவும் அப்பாவும் தாய்மாமனும் உறுதியாக நம்பிக்கொண்டிருப்பார்கள்.”

எனக்கு அது உண்மை என்று தோன்றியது. ஆனாலும் “அவர்களுக்கு ஒருபோதும் தெரியாதா?” என்றேன்.

“வயது கடந்து போவதுவரை தெரியாது… அவர்களிடம் பேசி உண்மையை புரியவைக்க முயன்றால் அவர்களே அதையெல்லாம் ஏற்கனவே யோசித்து அதற்கான நியாயங்களை சேர்த்து வைத்திருப்பார்கள். எஸ்.ஆர்.ராஜகுமாரி நல்ல கறுப்பு நிறம். அவள் பெரிய ஹீரோயின் ஆகவில்லையா என்பார்கள். எஸ்.ஆர்.ராஜகுமாரிமேல் ஃபோட்டோ ஃபிலிம் டெவெலெப் செய்யும் சில்வர் நைட்ரேட்டை மேக்கப் போல பூசி படமெடுத்தார்கள் என்பார்கள். உண்மையாக இருக்கலாம். ஒரு வெள்ளைக்கார டைரக்டர் அப்படிச் செய்தானாம். வெள்ளிபூசப்பட்டது போல இருப்பாள். படத்தில் லைட் அடிக்கும்போது அவள் பளபளவென்று தெரிவாள். ஆனால் பிற்பாடு தோல்நோய் வந்துவிட்டது.”

நான் பேச்சை திசைதிருப்ப விரும்பவில்லை “இதெல்லாம் ஏன் இப்படி இருக்கிறது?” என்றேன்.

“உண்மையைச் சொல்லப்போனால் எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கிறது. போனவாரம் என் சொந்தக்காரன் ஒருவன், இங்கே பஞ்சாலையில் வேலை பார்ப்பவனை பார்த்தேன். அங்கே வேலைசெய்யும் பெண்களின் நிலைமையும் இதுதான்… ஸ்வப்னதாராவுக்காக ஒரு டீ எஸ்டேட்டுக்கு போயிருந்தோமே, அங்கே என்ன நடக்கிறது? ஆபீஸ்களில்கூட பெண்களை விட்டுவைக்க மாட்டார்கள்.”

“அவர்கள் தப்பவே முடியாதா?” என்றேன். என் கசப்பு மறைந்து ஒரு ஆற்றாமை வந்துவிட்டிருந்தது.

“முடியும்… பாம்பேயில் எல்லாம் டிரேட் யூனியன் வந்துவிட்டது. அதெல்லாம் இங்கேயும் வரவேண்டும். ஏதாவது தப்பு நடந்தால் எல்லாரும் சேர்ந்து வேலையை நிறுத்திவிடவேண்டும். முதலாளிக்கு நஷ்டம் வந்தால் கையை நீட்டுகிறவன் கையைத்தான் முதலில் ஒடிப்பார்… இல்லை நாமே ஒடிக்கக்கூட முடியும். எல்லா தொழிலாளர்களும் ஒன்றாய்ச் சேர்ந்தால் அது நடக்கும்.”

“அதெல்லாம் நடக்கிற காரியமா என்ன?”

“நடக்கும். நடக்கத்தான் போகிறது. அன்றைக்கு நமக்கெல்லாம் சம்பளம் இப்படி ஐந்து பத்து என்று கெஞ்சி மன்றாடி வாங்குகிறதுபோல் இருக்காது… மாதம் பிறந்தால் சரியாக கைக்கு வந்துவிடும்.”

நான் புன்னகை செய்தேன்.

“நீ சிரிக்கிறாய், எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றான் நரசிங்க ரெட்டி.

ஆனால் அதன்பின் எனக்கு மனம் கொஞ்சம் ஆறுதலடைந்தது. அவன் சொன்னதில் ஆறுதலடைய ஒன்றுமே இல்லை, ஆனால் பேசியதனாலேயே அது சின்ன விஷயமாகிவிட்டது. ஒன்றை நாம் உள்ளே இருந்து வெளியே எடுத்தாலே மிகவும் சிறிதாகிவிடுகிறது.

நான் அவளுக்காக துணியை வைத்துத் தைப்பதா என்று யோசித்தேன். அதைப் பற்றியே யோசிக்க யோசிக்க வேண்டாம் என்றுதான் தோன்றியது. ஒன்றை யோசித்தால் அது எப்படியோ பேச்சில் வெளிப்படுகிறது. அது எப்படியும் அனைவருக்கும் தெரிந்துவிடும். வம்பர்கள் நடுவே வாய்ப்பேச்சு ஆகும். இங்கெல்லாம் ஒரு வதந்தி கிளம்பினால் மிக விரைவில் பரவும் “வதந்தி சொறி மாதிரி… நெரிசல் இருந்தால் வேகமாகப் பரவும்” என்று நாகலிங்க ஆசாரி சொல்வான். வதந்திக்குப்பின் நம்மால் யாரிடமும் எதுவும் சொல்லி விளக்க முடியாது. மக்கள் வதந்திகளை நம்பவே விரும்புவார்கள்.

ஆனால் அத்தனை யோசித்தாலும் இறுதியில் நான் அவளுக்காக ஆடையை தனியாக தைக்கத்தான் செய்தேன். அடியில் பழைய பருத்தித்துணி வைத்து தைத்து அதைச் சுருட்டி நீலரிப்பனால் கட்டி துணிகளுக்கு நடுவே போட்டுவைத்தேன். அந்த பொட்டலம் தையல் இலாகாவிலிருந்து செட்டுக்குச் சென்றபோது களைப்பாக உணர்ந்தேன். நெடுந்தொலைவு ஓடிவிட்டு வந்து அமர்ந்ததுபோல. ஒரு காதல் கடிதத்தை தபாலில் சேர்த்ததுபோல. திரும்ப மீட்கமுடியாத எதையோ செய்துவிட்டது போல. ஓடிப்போய் அதை திரும்ப எடுத்தாலென்ன என்றுகூட தோன்றியது.

ஆனால் அந்த துணியை வைத்துத் தைக்கும்போது அப்படி ஒரு பரவசத்தில் இருந்தேன். ஒரு திருட்டுத்தனத்தைச் செய்யும் கிளர்ச்சிதான் முதலில் இருந்தது. பின்பு மெல்ல மெல்ல மனம் கற்பனைகளை வளர்த்துக்கொண்டது. அந்த ஆடையை அவள் அணிவதை, அணிந்து எனக்கு வந்து தன்னை காட்டுவதை, அவளுடைய நீண்ட கண்களின் ஓரப்பார்வையை, இறுக்கமான முகத்தில் வரும் மெல்லிய புன்னகையை எண்ணிக்கொண்டே இருந்தேன். அந்த ஆடை அவள் உடலே என்று ஆயிற்று. நான் அதை தொட்டு வருடிக்கொண்டிருந்தேன். உள்ளம் கனிந்து புன்னகையுடன் தைத்தேன். “என்ன சிரிப்பு?” என்று தண்டபாணி அண்ணன் அதைப்பார்த்து கேட்கும்படி ஆயிற்று.

அதை அவள் போட்டிருக்கிறாளா என்று பார்ப்பதற்காக அவள் நடிக்கும் செட்டுக்கு போனேன். ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் வந்தபோது விழிகள் என்னை தேடுகின்றனவா என்று பார்த்தேன். இல்லை, அது சற்று ஏமாற்றத்தை அளித்தது. இன்னும் கொஞ்சம் முன்னால் சென்று நின்றேன். அவள் நன்றாகப் பார்க்கும்படி நின்றேன். அவள் என்னைப் பார்த்ததாகவே தெரியவில்லை.

ஷாட் முடிந்ததும் அவள் அமர்ந்திருக்கும் இடத்தருகே சென்றேன். அவள் தோழிதான் என்னை அடையாளம் கண்டாள். அவள் சுட்டிக்காட்டிய பின்னரே ஸ்ரீபாலா அடையாளம் கண்டாள். மிகக்குறைவான புன்னகை ஒன்றை அளித்தாள். கண்களில் எச்சரிக்கையோ ஆர்வமோ ஏதுமில்லை. அதே பாதிமூடிய இமைகள், தழைந்த பார்வை, சிறு சிணுங்கல் கொண்ட உதடுகள். மேலுதட்டில் வியர்வையின் மினுமினுப்பைக் கண்டேன்.

“எப்படி இருக்கிறது?” என்றேன்.

“நன்றாக இருக்கிறது… இங்கே மட்டும் கொஞ்சம் பிரிந்திருக்கிறது… கையை அசைக்காமல் வைத்திருக்கிறேன்” என்றாள்.

“எங்கே?” என்றேன்.

அவள் தன் விலாவை காட்டினாள். அங்கே தையல் பிரிந்திருந்தது. அது தையலின் பிழை அல்ல. அவள் மார்புகளுக்கு அவள் அளவை விட பெரிய பேட் வைத்திருந்தார்கள்.

நான் நினைத்து முடிப்பதற்குள் அவள் தோழி “பெரிதாக பஞ்சை கொண்டுவந்து அடைத்துவிட்டார் நாயிடு” என்றாள். “இரண்டு பெரிய பப்பாளி மாதிரி இருக்கிறது…”

நான் பார்வையை விலக்கிக்கொண்டேன். “கழற்றிக்கொடுங்கள், நான் தையல்போட்டு தருகிறேன்” என்றேன்.

“கழற்றுவதா? நல்ல கதை. எப்போது வேண்டுமென்றாலும் கூப்பிடுவார்கள். அப்படியே தைப்பதுதான் வழக்கம்” என்றாள் தோழி.

“அப்படியேவா?” என்றேன்.

அவள் “சாமி”என்று சாமிராஜை கூப்பிட்டாள். அசமஞ்சமான தையல் உதவியாளன் ஓடிவந்தான்.

“கொஞ்சம் பிரிஞ்சிருக்கு பாரு”

அவன் “ஆமா” என்றபடி தையல் ஊசியை எடுத்து தைக்க ஆரம்பித்தான். அவள் கையை தூக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

நான் பார்வையை விலக்கிக்கொண்டு அவள் தோழியிடம் “உங்கள் பெயர் என்ன?” என்றேன்.

“நாகலட்சுமி… இவளுடைய பெயர் விஜயலட்சுமி. எங்களூரில் எல்லா பெண்களும் ஏதோ ஒரு லட்சுமிதான்.”

“நீங்கள் குண்டூரா?” என்றேன்.

“அய்யே, இல்லை. நாங்கள் இரண்டுபேருமே ராஜமந்த்ரி… நீங்கள்? “

“நான் ஓங்கோல்…” என்றேன்.

“உங்கள் தெலுங்கைக் கேட்டதுமே தோன்றியது”

சாமி தைத்து முடித்தான். அந்த தையலை நான் போட்டேன் என்பதுபோல என் நரம்புகள் எல்லாம் அதுவரை உச்சத்தில் இருந்தன. அவன் சென்றதும் நான் தளர்ந்தேன்.

“நான் வருகிறேன்” என்றேன்.

அவள் அதே அரைப்புன்னகையுடன் தலையசைத்தாள். வேறெங்கோ வேறேதோ எண்ணி ஆழ்ந்திருப்பதுபோன்ற ஒரு பாவனை, புன்னகை.

அவள் என்னை நினைக்கவில்லை, அடையாளம்கூட காணவில்லை. அது எனக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கவேண்டும். ஆனால் நான் ஏனோ புன்னகை புரிந்து கொண்டிருந்தேன். புன்னகையுடனேயே தையல் கொட்டகைக்கு வந்தேன்.

“என்னய்யா தம்முடு?” என்றார் கோதண்டராமன்.

“ஒன்றுமில்லை” என்றேன்.

“இந்தப் புன்னகைக்கு ஒரே அர்த்தம்தான். தம்முடு சீனி தின்ன ஆரம்பித்துவிட்டான்” என்றார் கோதண்டராமன்.

அத்தனைபேரும் சிரித்தார்கள்.

“என்ன ராமுடு?” என்றான் சித்தலிங்கையா.

நான் முகம் சிவந்து “என்ன பேசுகிறீர்கள்? சும்மா, உளறக்கூடாது. நான் நரசிங்கனிடம் ஒரு விஷயம் பேசிவிட்டு வருகிறேன்”

“தம்பி, நீ ஆளே பூத்துவிட்டாய்… அப்படி ஒரு தேஜஸ் வந்துவிட்டது. இது வேறு ஒன்றுமே அல்ல, அதுதான். அது மட்டும்தான்”

“கிறுக்குத்தனமாகப் பேசக்கூடாது” என்றேன். என் குரல் உடைந்து ஒலித்தது.

“டேய் சிட்டிபாபு பாருடா, இது அதுதானே?”

“அதே தான் சந்தேகமே இல்லை” என்றான் சிட்டிபாபு. “நாம் எவ்வளவு பார்த்திருக்கிறோம். பௌர்ணமி என்று தெரிய வானைப் பார்க்க வேண்டுமா என்ன?”

அது சங்கமித்ரா  படத்தின் வசனம். நான் எரிச்சலுடன் தையல் எந்திரத்தை மிதித்துக் கொண்டிருந்தேன்.

“ஆகா, நம் கொட்டகையில் ஒருவன் சீனி தின்று எவ்வளவு நாளாயிற்று?”

“மணம் மட்டும் கிடைத்ததா, இல்லை சாப்பாடே ஆயிற்றா?”

”மணம் மட்டும்தான் இது. சாப்பாடு என்றால் முகம் வேறுமாதிரி இருக்கும்.”

ஆனால் உண்மையில் அந்தச் சிரிப்பும் கேலியும் எனக்குப் பிடித்திருந்தது. நான் எனக்குள் புன்னகைத்துக்கொண்டு, அது தெரியக்கூடாது என்று முகத்தை இறுக்கியபடி தைத்துக் கொண்டிருந்தேன்.

காதல்களை நான் அதன்பிறகு நிறையவே பார்த்திருக்கிறேன். காமவிசை கொண்டு தவித்து, காமத்தின் இன்னொரு வடிவமாக காதலை அறிபவர்கள்தான் பெரும்பகுதி. அவர்களுக்கு காதல் என்பது உடலில் உள்ளது. ஓரிரு உடலுறவுகளில் அவர்கள் அதை கடந்துவிடுவார்கள். நினைவில்கூட நீடிக்காமலாகிவிடும். இன்னொருசாரார் ஆணவத்துக்காக காதலிப்பவர்கள். வென்றெடுப்பதற்காக, பிறரிடம் காட்டிக்கொள்வதற்காக, அந்தப் பருவத்தை அதனூடாக கடந்து அடுத்த கட்டத்தை அடைவதற்காக. அவர்களின் ஆணவம் வென்றதுமே முடிந்துவிடும். அதன்பின் ஆட்சிசெய்வதே ஆணவத்தின் வழியாக இருக்கும். கட்டுப்படுத்துவது, அழுத்துவது, எதிரில்லாமலாக்குவது, தானன்றி ஒன்றும் எஞ்சாமல் செய்வது.

பிறிதொரு வகையான காதல் உண்டு. அது கள்ளமற்ற உள்ளத்தில் எழுவது. அவர்கள் இளமையில் தங்கள் காமத்தைக் கண்டு உள்ளூர அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். வெட்கிக்கொண்டிருக்கிறார்கள். அதை தவிர்க்கவும் கடக்கவும் முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆகவே அதைப்பற்றி அவர்கள் பேசுவதில்லை. பேசும்போதே மூச்சுத்திணறுவார்கள். முகம் சிவந்து சொல்குழறுவார்கள். கண்களை எதிர்கொள்ள மாட்டார்கள். காமத்தின் மீதான அச்சம் அவர்களை துறவறம் நோக்கிச் செலுத்துகிறது. யோகம், தியானம் என்று பேசுகிறார்கள். அல்லது தியாகம் சேவை என்கிறார்கள்

அவர்கள் அனைவருக்குமே ஆதர்சமானவர் விவேகானந்தர். அவர்களின் சட்டைப்பையில் விவேகானந்தர் இருப்பார். அவர்களின் அறைகளில் ஒட்டப்பட்டிருப்பார். கூர்மையான இடக்கும் குறுக்குப்புத்தியும் கொண்ட சிட்டிபாபு போன்றவர்கள்தான் இதை உடனே சுட்டிக்காட்டுபவர்கள். “விவேகானந்தரை வச்சிருந்தானோ அவன் செத்தான். அவன் தான் முதல்ல போயி வலையிலே சிக்குவான்” என்று அவன் சொன்னான்.

“ஏன் வள்ளலார் படம் வச்சிருந்தா?” என்றான் நாகலிங்க ஆசாரி.

“அது வேற, இது வேற” என்று சிட்டிபாபு சொன்னான்.

இது வேறுதான். ஏன் விவேகானந்தரைப் பிடிக்கிறதென்பது ஒரு ரகசியம். துறவு வேண்டும். ஆனால் அதனுடன் இளமையும் ஆண்மையும் அழகும் கலந்திருக்கவேண்டும். பெண்களை நினைத்து நினைத்து ஏங்கச்செய்யும் ஆண்மகனின் துறவாக இருக்கவேண்டும் அது. தாடி வளர்த்து மெலிந்து இருக்கும் துறவி அதற்குரியவர் அல்ல. விவேகானந்தர் ஆவேன் என்பவன் நேர் எதிர்த்திசையில் சென்றுகொண்டிருக்கிறான். மிக மிக ஆழத்தில். அவனே அறியாமல்.

அவன் எப்படி காதலில் விழுகிறான்? இதை நான் என்னை வைத்தே சொல்கிறேன். நான் என்னை அத்தனைதூரம் ஆராய்ச்சி செய்திருக்கிறேன். அவன் காதலைக் கண்டதும் காமம் என அருவருக்கிறான். விலகி ஓடுகிறான். ஆனால் அவன் காமத்தை அத்தனை தூரம் விலக்கி வைத்திருப்பதனாலேயே தூய காதலை அடைகிறான். அதன் மதுரத்தை, மென்மையை காண்கிறான். அது அளிக்கும் மேன்மையையும் விடுதலையையும் கண்டு அதில் திளைக்கிறான். அவனால் அதை அதன்பிறகு நிந்திக்கவோ நிராகரிக்கவோ முடியாது.

அவன் அதில் விழுந்துவிட்டான் என்று சொல்லலாம். இல்லை, அவன் அதை சிறகெனச் சூடிக்கொண்டு பறக்கிறான். அவன் அதுவரை எங்கும் பறக்காதவன். தன் எல்லைகளை தானே வரையறுத்துக்கொண்டு சிறையில் இருப்பவன். தூய்மை என்பது மிகப்பெரிய சிறை. அவன் அதை மீறிவிடுகிறான். மீறும்கணமே வானில் எழுகிறான். ஒளியில் காற்றில் இனிமையில் கும்மாளமிடுகிறான். அவன் கண்ட முதல்பேரனுபவம் அது. அதன்பின் அவனுக்கு வேறேதும் ஒரு பொருட்டு அல்ல. வீம்புக்கு அவன் பற்றிக்கொண்டிருந்த யோகமும் சேவையுமெல்லாம் வெறும் மாயைகள்.

அவன் முழுமையாக திளைப்பதனாலேயே அந்தக்காதல் அவனுக்கு காதல் மட்டுமல்லாமல் ஆகிறது. அது பிரேமை என்றாகிறது. இப்படிச் சொல்கிறேன், காதலென்பது ஒரு பெண்மேல் வருவது. பிரேமை என்பது அப்பெண்ணின் வடிவில் வந்த பெண்மை என்னும் தெய்வீகமான ஒன்றின்மேல் வருவது. அதிலிருந்து அவனுக்கு விடுதலையே இல்லை. பிரேமையிலிருந்து எவருக்கு விடுதலை வந்திருக்கிறது? எவர் விடுதலையை வேண்டுவார்? பிரேமை என்பது ஒரு வரமல்லவா? ஆயிரம் பல்லாயிர லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே அளிக்கப்படுவதல்லவா?

காதலின் பொருட்டு ஒருவன் சாவான் என்றால், அதனால் அணுவணுவாக அழிவான் என்றால் அவன் அதிருஷ்டசாலி அல்லவா? மானுடர் எவருமே வாழ்க்கையை எதன்பொருட்டும் விட்டுக்கொடுப்பதில்லை. வாழ்க்கையையே தூசென உதறச்செய்யும் ஒன்றை அடைந்தான் என்றால் அவன் பேறுபெற்றவன் அல்லவா?

அந்தக் காதல், பெரும்பாலும் அது முதற்காதல்தான். அவர்களுக்கு அதன்பின் காதல் இல்லை. அது அவன் நெஞ்சில் தேனாக ஊறி பளிங்காக உறைந்துவிடுகிறது. சிற்பமாகிவிடுகிறது. அவன் நினைவில் ஒரு நிரந்தரமான வடுவாக. வலியா இன்பமா என்று தெரியாமல் அவனுள் என்றென்றும் இருந்துகொண்டிருக்கிறது. அவனுக்கு வேறு என்னென்னவோ நிகழலாம். ஏதேதோ கிடைக்கலாம். ஆனால் அவனுள் இருப்பது அது மட்டுமே. அவன் சிந்தையை செயலை ஆள்வது அது மட்டுமே.

அன்றிரவு எல்லாரும் சென்றபின் நான் மட்டும் கொட்டகையில் இருந்தேன். தைத்த துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நடுவே என் பாயை எடுத்துப் போட்டுக் கொண்டேன். கொசுவலையை கட்டினேன். ஸ்டுடியோ இருக்குமிடம் சதுப்பு. பின்பக்கமே பெரிய ஏரிப்படுகை உண்டு. அங்கே எப்போதும் தண்ணீர் பளபளக்கும். எருமைகள் மேயும். ஆகவே ஸ்டுடியோவில் பகலிலேயே அங்கே கொசு கொஞ்சம் கடிக்கும்.

கொட்டகையில் எப்போதும் ஒலிக்கும் தையல் இயந்திரங்கள் அமைதியாக நின்றிருந்தன. ஸ்டுடியோவில் எங்கோ செட் வேலை நடந்துகொண்டிருந்தது. உளியும் கொட்டுவடியும் ஓசையிட்டன. எவரோ ஏதோ பேசிக்கொண்டே இருந்தனர். எவரோ வெற்றிலையை காறித்துப்பினர்.

இரவில் சிலசமயம் என்னுடன் படுத்துக்கொள்ள நரசிங்கன் வருவதுண்டு, அவன் வருவான் என்று எதிர்பார்த்தேன். அவன் வரவில்லை. நான் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். பின்னர் எழுந்து மறுநாளைக்கான ஆடைகளில் ஒன்றை எடுத்தேன். அது இக்கால சுடிதார் போன்ற ஓர் ஆடை. கீழே விசிறிக்குடைபோல விரியும். கணுக்கால்வரை வரும். மேலே தோளில் சிறகுகள்போல ஜிகினா. கையும் கணுக்கை வரை வருமளவுக்கு நீளம். முழு ஆள் அளவுக்கே இருந்தது அந்த ஆடை.

அதை நீட்டி நிற்கவைத்து பார்த்தேன். சட்டென்று அவள் அங்கே வந்துவிட்டதுபோலத் தோன்றியது. என் நெஞ்சில் பரவசம் நிறைந்தது. அந்த ஆடையை கண்ணாடி அருகே கொண்டுசென்று எனக்கு இணையாக நிற்கவைத்துப் பார்த்தேன். என் உடலுடன் ஒட்டவைத்தேன். அதை தொடும்போது எனக்கு உடல் சிலிர்த்துக்கொண்டே இருந்தது. அதை மிகமெல்ல, ஒரு மென்மையான கோழிக்குஞ்சை தொடுவதுபோல தொட்டேன். என் முகம் சிவந்து சூடாக இருந்தது.

என்னை நான் அப்பூரி வரப்பிரசாத ராவ் ஆக நினைத்துக்கொண்டேன். மேடையில் அவளுடன் நடித்துக் கொண்டிருக்கிறேன்.  “ஆ மப்பு ஈ மப்பு ஆகாச மத்யனா…” என்ற பாடல். அந்த முகில் இந்த முகில் வான் நடுவினிலே. பலர் பாடிய நாடகப்பாடல். பின்பு சினிமாவில்கூட வந்தது. அந்த இரண்டு முகில்கள் இணைவதுபோலே இணைவோம். ஒன்றாகி, இரண்டிலாதாகி, ஒளிர்ந்து, இருண்டு, மீண்டும் ஒளிர்ந்து, கலைந்து கூடி, முடிவில்லாத வான்வெளியில். முற்றிலும் ஒளி ஊடுருவும் தூய்மையுடன்.

அவளும் என்னுடன் பாடினாள். நாங்கள் ஆடிச் சுழன்றோம். தழுவியும் விலகியும் மீண்டும் தழுவியும் ஆடிக்கொண்டிருந்தோம். அங்கே எவராவது வந்து என்னைப் பார்த்திருந்தால் கிறுக்கன் என்று நினைத்திருப்பார்கள்.

அதன்பின் என்னருகே அந்த ஆடையை போட்டுக்கொண்டு தழுவியபடி படுத்திருந்தேன். பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருந்தேன். பின்னர் எப்போதோ மௌனமாக அழத்தொடங்கினேன். கண்ணீர் பெருகி கன்னங்களில் வழிய அழுதுகொண்டிருந்தேன். உடலெல்லாம் இனிக்க, சிந்தையெல்லாம் இனிக்க, சூழலே இனிப்பென்றாக, அப்படி அழுவது ஒரு தெய்வ அருள். ஒரு தெய்வ சாபம்.

[மேலும்]

முந்தைய கட்டுரைபுதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்- எதிர்வினை
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- கடிதம்