விக்கிக்கு வாழ்த்துக்கள்
அன்புள்ள ஜெ,
விக்கிபீடியா துவங்கப்பட்ட காலத்திலிருந்தே அதை நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஏறக்குறைய தினமும். ஆனால் இதுவரை அதில் எதுவும் எழுதியதில்லை. அந்த அளவுக்கு இன்னும் நான் எதிலும் தேர்ச்சி பெறவில்லை!
Crowd sourcing-ன் மிகச் சிறந்த எடுத்துகாட்டு விக்கிபீடியா என்றே நினைக்கிறேன்.
இதற்க்கிணையாகவே Citizen Science Projects-களையும் கூறுவேன். தனக்குப் பிடித்த துறையில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் அத்துறை சார்ந்த சில சிறு வேலைகளை செய்யும் வாய்ப்பை இவை அளிக்கின்றன. அந்த துறைக்கான பட்டப்படிப்பு எதுவும் தேவையில்லை. ஆர்வம் மட்டுமே வேண்டும். ஓரு வானியல் எடுத்துக்காட்டு : GalaxyZoo. இதில் பல லட்சம் galaxy-களின் படங்களை தொகுத்து வைத்திருக்கிறார்கள். நம் வேலை அந்த படங்கள் ஒவ்வொன்றையும் பார்த்து, அவர்கள் கேட்கும் சில எளிய கேள்விகளுக்கு விடை கூறுவதும், அவற்றில் ஏதேனும் வித்தியாசமாகத் தெரிந்தால் அவற்றை சுட்டிக் காட்டுவதும்தான். நம்மை விட அனுபவம் மிக்கவர்களுடனும், சில நேரங்களில் ஆராய்ச்சியாளர்கள் உடனும் உரையாடி மேலும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.
இத்தகைய projects மருத்துவம், உயிரியல், வரலாறு மற்றும் இன்னும் பல துறைகளிலும் இருக்கின்றன. zooniverse.org என்ற தளத்தில் இவற்றை பார்க்கலாம். விருப்பப்பட்ட துறையில் இல்லாதவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் இவற்றில் பங்கேற்கலாம்
Zooniverse : https://www.zooniverse.org/
GalaxyZoo : https://www.zooniverse.org/projects/zookeeper/galaxy-zoo/
Citizen Science Projects : https://en.wikipedia.org/wiki/Citizen_science
நன்றி
கார்த்திகேயன்
அன்புள்ள ஜெ
தமிழ் விக்கிப்பிடியா ஒரு பயனற்ற இடம். தகவல்கள் பிழையானவை. தானியங்கி மொழியாக்கத்தால் செய்யப்பட்ட பக்கங்கள் அபத்தமான மொழிநடை கொண்டவை. விக்கிப்பீடியாவில் பொறுப்புவகிப்பதாக நினைக்கும் கும்பல்கள் வேறுஎவராவது பதிவுபோட்டால் அதை போய் தனித்தமிழாக்குகிறேன் என்று சீரழிப்பார்கள். இந்த தானியங்கி மொழியாக்கத்தை சரியாக எழுத அவர்களுக்கு துப்பில்லை. விக்கிப்பீடியா ஒரு பெரிய வரப்பிரசாதம். ஆனால் இந்த கும்பல் அதைச் சீரழித்துவிட்டது
ஆங்கில விக்கிப்பீடியா ஒரு பெரிய அறிவுக்களஞ்சியம். கூடுமானவரை ஆங்கில விக்கியை நம்புவதே சரியானது.
செல்வக்குமார் எம்
அன்புள்ள ஜெ
தமிழ் விக்கிப்பீடியாவை பற்றிய ஆழமான கசப்பு எனக்கு இருக்கிறது. தனித்தமிழ் என்றபேரில் வாசிப்பில்லா மொண்ணைக்கூட்டத்தால் சீரழிக்கப்பட்ட நடை. கட்சியரசியலை புகுத்தி தகவல்களைச் சீரழித்துள்ளார்கள். மிகப்பெரிய வாய்ப்பை தமிழ் அரைவேக்காடுகள் சீரழித்துவிட்டன
அதில் வரலாறு உட்பட எல்லாவற்றிலும் பிழைகள். வேண்டுமென்றே சேர்க்கப்பட்ட பிழைகள்தான் அதிகமும். ஆனால் சினிமாச்செய்திகளில் பிழை கிடையாது. எனேன்றால் அதற்குத்தான் அதிகமானவர்கள் வருகிறார்கள். பிழை இருந்தால் உடனே சுட்டிக்காட்டப்படுகிறது. மற்றவற்றில் எந்த பிழை இருந்தாலும் யாருக்கும் ஒரு பொருட்டே இல்லை.
ஏன் தமிழ் விக்கிப்பீடியா தோற்கிறது என்றால் ஆங்கிலத்தில் அது கல்விக்கு பயன்படுகிறது. அங்கே அறிவுக்கு ஒரு மதிப்பு உள்ளது. தமிழில் அப்படி அல்ல. இங்கே அரசியல், சாதிக்காழ்ப்புகளே அறிவுக்குமேலே எழுந்து நிற்கின்றன
முத்து மணிமாறன்