கே.கே.பிள்ளை- கடிதங்கள்

தமிழக வரலாறும் பண்பாடும்- ஒரு முழுச்சித்திரம்

வணக்கம் ஜெ

கே.கே.பிள்ளையின் புகைப்படத்தையே நான் இப்போதுதான் பார்க்கிறேன். இதற்குமுன் இணையத்தில் தேடி கிடைக்கவில்லை. தமிழக வரலாறு நூல் ஒரு முழுமையான வாசிப்புக்குரிய தொடக்கக்கட்ட நூலாகும். அவருடைய பல நூல்கள் தற்போது அச்சில் இருப்பதாகத் தெரியவில்லை.

சங்ககாலம் முதல் இருபதாம் நூற்றாண்டு காலம் வரையிலான தமிழகத்தின் சுருக்கமான வரலாற்றை சொல்கிறார் பிள்ளை. குறிப்பிட்ட சில விஷயங்களைப் பற்றிய செய்திகள் முக்கியமானவை. குறிப்பாக ராஜராஜ சோழனின் ‘காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி’, வலங்கை இடங்கை விவகாரம், தேவரடியார்கள் போன்றவை. காந்தளூர்ச் சாலை விஷயத்தில் பொதுவாகக் கருதப்படும் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள ஊர் என்பதையும், ‘கலமறுத்து’ என்பதை ‘கல்விச்சாலையை அழித்து’ அல்லது ‘கப்பற்படையை அழித்து’ என்ற பொருளில் ராஜராஜனின் செயல்கள் விளக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறார். மேலும் கருநந்தடக்கனின்  செப்பேட்டின் அடிப்படையில் அச்சாலை ஒரு கல்விச்சாலையாக இருக்கலாம் என்றும் ஊகிக்கிறார்.

மேலும் இவ்விவகாரத்தை ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் வேறு ஒரு கோணத்தில் ஆராய்கிறார். ‘கலமறுத்து’ என்பதனை ‘வில்லங்கத்தை தீர்த்து வைத்து’ என்ற பொருளிலும், காந்தளூர் என்பது மலபார் பகுதியிலுள்ள ஊர் என்பதனையும் விளக்குகிறார்.

பிள்ளை, வலங்கை இடங்கை பிரிவினரின் தோற்றம் பற்றி நிலவிய புராணக் கதைகளை விவரிக்கிறார். வரலாறை சோர்வளிக்கும் விதமாக சம்பவங்களின் வரிசையாக மட்டும் சொல்லிச்செல்லாமல், ஆய்வு நோக்கில் விவரிப்பது இந்நூலின் சிறப்பாகும்.

விவேக் ராஜ்

தமிழ் இணைய நூலகம்- கே கே பிள்ளை

காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி- இராமச்சந்திரன்

அன்புள்ள ஜெ

கே.கே.பிள்ளை பற்றிய அறிமுகமும் நூல்மதிப்புரையும் சிறப்பாக இருந்தது. நூலைச் சுருக்கி அளிக்கவில்லை. ஆனால் அந்நூல் எழுதப்பட்ட பின்புலம், அந்நூலாசிரியரின் தனித்தகுதி மற்றும் ஆய்வுமுறை, அந்நூலின் உள்ளடக்கத்தின் சிறப்புக்கூறுகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி முழுமையான மதிப்புரையாக எழுதியிருந்தீர்கள். ஒரு நூல்மதிப்புரை எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கான முதன்மை உதாரணம். கே.கே.பிள்ளை மக்கள் வரலாற்றையும் கலந்துகொள்கிறார், வரலாற்றின் சிறுதகவல்களையும் சேர்த்து எழுதுகிறார். பண்பாட்டின்மேல் ஆர்வமூட்டும் கேள்விகளை முன்வைக்கிறார். பண்பாட்டு புதிர்களைச் சுட்டிக்காட்டுகிறார்—இவ்வளவும் சுருக்கமான உதாரணங்கள் வழியாக அம்மதிப்புரையில் சொல்லப்பட்டுள்ளன.

நன்றி

ஆர், கிருஷ்ணசாமி

முந்தைய கட்டுரையானை டாக்டர்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் -கடிதம்