முதுநாவல்- கடிதம்

புனைவுக் களியாட்டு சிறுகதைகள் – தொகுப்பு 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

”முதுநாவல்”  சிறுகதையின் சுவையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதுநாவல் என்ற தலைப்பை சொல்லும்பொழுதே அந்த சொல்லின் முடிவில் சுவை வழிகிறது. ”மணிபல்லவம்”, ”மாயப்பொன்”, ”பொலிவதும் கலைவதும்” என  சில நேரங்களில் வெறும் தலைப்புகளை மட்டுமே ஆசை தீர உச்சரித்து மகிழ்வதுண்டு. நாவல் பழத்தினை உண்டு முடித்த பிறகும் கூட, அதன் சுவையும் நிறமும் நாவில் ஒட்டிக்கொள்வதால் அது நாவில் பழமா? நாவல் பழமா? முதுநாவல் சிறுகதையினை படித்து முடித்த பின்னரும் அதன் சாறும் சாரமும் என் நெஞ்சுக்குள் நினைவுக்குள் ஒட்டிக்கொண்டு பெருங்கிளர்ச்சியை தருகிறது.

”இருநூறு ஆண்டுகளுக்கு முன் திருவிதாங்கூர் திவான் இறந்தார்” என கதை  தொடங்கும்பொழுதே வாசிப்பவர் மனதில், ஒரு தலைமையற்ற ஆளுகையற்ற கட்டுப்பாடற்ற ஆடுகளம்  விரிகிறது.”இருளிலிருந்து ஒளிக்கு” என்பார்கள். (உங்கள் கட்டுரை வாசித்து கற்றதுதான்). ”இருண்ட மழைமூட்டம்போல துயரம் நிறைந்திருந்த ஒரு வெள்ளிக்கிழமை” – என்று கதையின் முதல் வரியே இருளுடன் தொடங்குகிறது. ஒரு அந்தியில் துவங்கி மறுநாள் அந்தியில் முடியும் கதை. ஒளியும் இருளும் சந்திக்கும் புள்ளி அந்தி. மனிதமும் மிருகமும் இணைந்து தெய்வமாய் அவதரிக்கும் நேரம் அந்தி.

பாறசாலை அந்திச்சந்தையின் வாசலில் இடும்பன் நாராயணன், ”எங்கேடா அந்த தலைக்கெட்டு காதர்? அவன் தன் அம்மையிடம் குடித்தது பால் என்றால் என் எதிரே நிற்கச்சொல்… மூத்திரம் என்றால் இந்நேரம் அது அவன் உடலில் இருந்து தானாகவே வெளியேறத் தொடங்கியிருக்கும்” என்ற அறைகூவல் கிட்டத்தட்ட  ஒரு மாஸ் பட ஹீரோவின் ஓப்பனிங் வசனம். இங்கு தொற்றிக்கொள்ளும் பரபரப்பு கிளைமாக்ஸ் வரை நீடிக்கிறது.

காதர் மற்றும் நாராயணன் என்ற  இரு பலசாலிகளின்  உடல்களை பற்றிய விவரிப்புகள், அவர்கள் உண்ணும் உணவு முறை, பழக்க வழக்கங்கள், அடியாள்கள், ஆரியசாலை பாறசாலை சந்தை மற்றும் சந்தைமனிதர்கள் பற்றிய நுண் சித்தரிப்புகள் மிகவும் ரசிக்கும்படியாகவும், அந்த காலகட்டத்தின் வரலாறு கலாச்சாரம் சார்ந்த தரவுகள் நிறைந்ததாகவும் உள்ளன. கருப்பட்டி விற்பவர்களை இலக்காக்கி மற்ற வியாபாரங்கள் வந்து ஒரு சந்தை பெரிதாக விரிவது அருமையான சித்திரம்.

சண்டை தொடங்கியவுடன் புழுதி பறக்கிறது. ஒரு நீண்ட ட்ராலி ஷாட் போல, இருவரும் சண்டையிட்டு உருண்டு செல்லும் இடமெல்லாம் காமிரா தொடர்ந்துபடி செல்கிறது. பக்கத்து ஊர்களிலிருந்து வேடிக்கை பார்க்க வந்த மக்கள், சந்தை மனிதர்கள், இவர்களோடு சேர்ந்தபடி வாசகர்களும் சண்டையை பார்த்தபடியே நகரும் அனுபவமென்பது உங்கள் எழுத்தின் ஜாலமே. சண்டையின் போது ஒலிக்கும் மலையாள சந்தைப்பாடல் அருமை. ”காட்டானை” போன்ற சொல் முதலில் புரியவில்லை. ”காட்டு யானை” என்று பிரித்து படித்தவுடன் பாடல்களை ரசிக்க முடிந்தது.

காதரும் நாராயணனும் சண்டையிட்டு செல்லும் வழியில் மசூதியும் கோவிலும் வருகிறது. ஆனால் பள்ளிவாசலுக்கும் கோவிலுக்கும் இடையில் ஒரு முதுநாவல் மரத்தை காண்பித்து அம்மரத்தடியில் ஒரு ஆன்மீக கிழட்டுப் பரதேசியை சந்திக்க வைத்தது இந்த சிறுகதையின் உச்சம் என நினைக்கிறேன்.   ”அந்த கைகால்தலையுடல் தொகுதி அப்படியே ஒரு பிண்டமாக கிடந்தது. அவர்கள் மேலும் அணுகியபோது அது மெல்ல அதிர்ந்தது. அக்கூட்டம் அலறி பின்னடைந்தது” – இந்த வரிகளை படிக்கும்பொழுது உள்ளம் சிலிர்த்து நடுங்குகிறது. தமோ, ரஜோ, சத்துவ ஆகிய மூன்று குணங்களும் பின்னி பிணைந்து குணமற்ற பிரம்மத்தின் தரிசனம்  என புரிந்து கொள்ளலாமா?

அந்தி நேரங்களில் முதிய மரங்களில் பறவைகள் கூடு திரும்பியபடி எழுப்பும் பேரோசைகள் பரவசமானவை. முதுநாவல் மரத்தடியில் குழந்தை போல் சிரித்தபடி  அந்த கிழட்டு பரதேசி  மௌனமாய் தண்ணீர் தருவதை நினைத்துப்பார்க்கிறேன். தலைகெட்டு காதர் பறவை வடிவத்தில் உருமால் அணிந்து அலைந்து திரிந்ததெல்லாம் , காலம் கனிந்தவுடன் பறவையாய் பரதேசியாய் மாறத்தானோ?   ”சில பறவைகள் அப்படித்தான்” என்ற கடைசி வரி  ஏற்படுத்தும் உணர்வை எழுத்தில் எப்படி சொல்வதென தெரியவில்லை.

கொரோனா காலத்தில்,  நீங்கள் எழுதிய நூறு கதைகள்தான் எங்களுக்கு மருந்து. அவை ஏற்படுத்திய தாக்கமும், நீங்கள் உருவாக்கிய உலகில் சஞ்சாரித்ததும் மூச்சுள்ளவரை எங்களால் மறக்க இயலாதது. வேதங்கள் சமஸ்க்ருதம்  போன்ற எந்த பின்னணியுமற்ற என் போன்றவர்க்கு ஆன்மிகத்தை நோக்கி செல்ல இயல்வதும், அதை புரிந்துகொள்ளவும்  முடிகிறதென்றால் அது நிச்சயம் உங்கள் எழுத்துக்களால் தான். நீங்கள் அறம் சிறுகதைகளை தினமும் வெளியிட்டீர்கள் என்றும், பல வருடங்களாக வெண்முரசு தினமும் எழுதி வெளியிட்டீர்கள் என அறியும்பொழுது, உங்கள் இணையதளத்துக்கு கொஞ்சம் முன்பே வராமல் அவ்வனுபவங்களை இழந்துவிட்டோமே என எண்ணியதுண்டு. அந்த குறையை நூறு கதைகள் தீர்த்து விட்டது. கிட்டத்தட்ட அர்ஜுனன் நேரடியாக பார்த்த விஸ்வரூப தரிசனம்தான் நாங்கள் கண்டதும். நினைத்தாலே ப்ரமிப்பாக இருக்கிறது.

நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் இன்னும் நூறாயிரம் கதைகள் எழுத இறைவனை வேண்டுகிறோம்.

அன்புடன்,
ராஜா.

அன்புள்ள ஜெ

நீங்கள் எழுதிய முதுநாவல் கதையை இன்றுதான் வாசித்தேன். என் சொந்த ஊர் பாறசாலை. இருபத்தெட்டு ஆண்டுகளாக டெல்லி. இந்தக்கதை என் இளமைநினைவுகளை கிளர்த்திவிட்டது. உண்மையிலேயே வாழ்ந்த இருவர் பற்றிய கதைகள் இவை. ஆனால் கதையில் பாதிப்பங்கு மாறியிருக்கிறது. இந்த தர்கா இன்றைக்கும் அங்கே இருக்கிறது. அந்த போலீஸ்காரச் சாமியார் இரண்டுபேர் என்று சொல்லப்படுவதுண்டு. தோட்டிகோடு மௌனகுரு சாமி என்று நான் நினைக்கிறேன்.

‘முதுநாவல்’ என்ற அந்த சூபி குமாரகோயிலுக்குமேல் வேளிமலையில் சமாதியானார் என்று சொல்வார்கள். ஒரு மாபெரும் மல்யுத்தத்தில் இரண்டுபேருமே ஜெயிக்கவில்லை, இரண்டுபேருமே ஞானி ஆனார்கள் என்பது ஒரு அற்புதமான கதை.

ஏறத்தாழ இதே கதையை ஆத்மானந்த சாமி [கிருஷ்ணமேனனை] வைத்தும் சொல்வதுண்டு. ஒரு மண்ணின் கலைஞன் என்றால் நீங்கள்தான். நீங்கள் சொல்லாத ஒன்றுமே குமரிமண்ணில் இல்லை என்று தோன்றுகிறது. சரித்திரம், வாழ்க்கை, ஆன்மிகம் எல்லாமே

சத்யன்

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி பயனற்றதா? கடிதம்
அடுத்த கட்டுரைராய் மாக்ஸாம்- மூன்று நூல்கள்