செல்வேந்திரனின் ‘வாசிப்பது எப்படி?’-கடிதம்

செல்வேந்திரன் வாசித்தது எப்படி?

வாசிப்பது எப்படி வாங்க?

அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். செல்வேந்திரனின்’’வாசிப்பது எப்படி’’ குறித்த தகவல் வந்ததுமே அதற்கு அனுப்பாணை பிறப்பித்திருந்தேன். அது கைக்கு வருவதன் முன்பே மகனின் கல்லூரிக்கு வெளியூர் செல்லவேண்டி வந்தது. இன்று வீடு திரும்பியபோது புத்தகம் காத்திருந்தது. முக்கால் மணிநேரத்தில் முழுக்க வாசித்தேன்.

பல இடங்களில் கண் நிறைந்தே விட்டது, இளைஞர்கள் மீது எத்தனை அக்கறை எத்தனை கனிவு, எத்தனை பரிவு அன்பு இருந்திருந்தால் இதை எழுதியிருப்பார்? அடடா  இப்படி இருக்கிறார்களே என்று ஆதங்கப்பட்டிருக்கிறார், சில இடங்களில் கோபிக்கிறார், இன்னும் சில இடங்களில்  வருந்துகிறார்.

வெறுமனே இளைஞர்களை குற்றம் சொல்லிவிட்டு புத்தகத்தை முடித்து விடவில்லை அவர்கள் என் வாசிப்பதில்லை என்று ஆராய்ந்து காரணங்களையும் பட்டியலிட்டிருக்கிறார். வறுமை, வாசிக்கும் பழக்கமற்ற குடும்பம், பூசல்கள், அவர்களைக் கவரும், இழுக்கும், திசைதிருப்பும் ஏராளமான காரணிகளையும் பட்டியலிட்டுவிட்டு இத்தடைகளை எப்படி தாண்டுவதென்பதையும் சொல்லியிருக்கிறார்.

ஒரு தந்தையாக பிள்ளைகள் எப்படியாவது உருப்பட வழிசொல்லுவதும், ஒரு அன்னையாக குழந்தைகள் குறித்து கவலைப்படுவதும், மூத்த சகோதரனாக அறிவுரை சொல்லி கண்டிப்பதும், தோழனாக தோளில் கைபோட்டு நட்புடன் ’இதைபண்ணுடா’ என்பதுவும், குத்திக்காட்டுவது ,காயப்படுத்துவது பின்னர் அவரே காயத்துக்கு மருந்தும் தடவுவது என எந்தெந்த வழிகளிலெல்லாம் இளைஞர்களை திருத்த முடியுமோ, மாற்ற முடியுமோ அவற்றையெல்லாமே செய்கிறார்.

உண்மையிலேயே ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு பக்கத்திலும் இருப்பது இவர்களை எப்படியாவது முன்னுக்கு கொண்டுவரவெண்டுமென்னும் செல்வேந்திரனின் நெஞ்சடைக்கும் கூவல்தான். ஆச்சர்யமாக இருக்கிறது இதை எத்தனை மெனக்கெட்டு எத்தனை சிரத்தையுடன் எழுதியிருக்கிறார் என்று. எந்த பொருளாதார லாபமும்  இந்த புத்தகத்தினால் அவருக்கு பெரிதாக கிடைக்கப்போவதில்லை.  எத்தனை பேர் வாங்கிப்படிப்பார்கள் என்னும் உத்தரவாதமுமே இல்லை எனினும் ஒவ்வொரு வரியையும் மிககவனமாக, மிக உண்மையாக, மிக அக்கறையுடன் எழுதியிருக்கிறார்.

ஒர் ஆசிரியையாக இதோ 20 வருடங்களை நெருங்கவிருக்கிறேன் நான் படித்த அதே கல்லூரியில் அதே துறையில் இன்று பணியில் இருக்கிறேன் பெரிதாக எந்த மாற்றமுமே இல்லை, கல்லூரிச்சூழலிலும், மாணவர்களின் நடத்தை மற்றும் இயல்புகளிலும். ஸ்மார்ட் போன்களை, பைக்குகளை வைத்திருந்தாலும் மடிக்கணினி உபயோகித்தாலும், 35 வருடக்களுக்கு முந்திய மாணவர்களைப் போலவேதான் இவர்களும் இருக்கிறார்கள்.

7000 மாணவர்களில் தேடிக்கண்டுபிடித்தால் ஒரு பத்துப்பேர் வித்தியாசமானவர்களாக இருக்கக்கூடும். இது எனக்கு ஆயாசம் தரும் ஒன்று. இத்தனை வாய்ப்பு அவர்கள் முன்னே கொட்டிக்கிடக்கையில், இத்தனைபேர் உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கையில் எதையுமே அறியாமல் பெற்றுக்கொள்ளாமல் இப்படி வீணாய் போகிறார்களே என்று. செல்வேந்திரன் சொல்லியிருப்பது கொஞ்சம்தான் என்பதும் இத்தனை வருடங்களாக 7000 மாணவர்களுடன் தினசரி  5 மணி நேரங்கள் இணைந்திருப்பவள் என்னும் முறையில் உணர முடிகின்றது.

சின்ன புத்தகமாக ,கச்சிதமாக சொல்லவேண்டியவற்றை மட்டும் சொல்லி அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் சொல்லி இருக்கிறார்.  வாசிக்கவே உடல் வணங்காத காலத்தில் இது கொஞ்சம் பெரிய புத்தகமாக இருந்தால் இதையும் வாசிக்காமல் போய்விடும் அபாயமும் இருப்பதால் இது நல்லதுதானென்றூம் நினைத்தேன்.  சின்ன சின்ன பகுதிகளாக பொருத்தமான தலைப்பும் வைத்து எழுதியிருப்பதால் நிச்சயம் வாசிப்பார்கள் என்றும் நம்பினேன்.

மொத்தத்தையும் வாசிக்காவிட்டாலும் குறிப்பிட்ட இரண்டையாவது வாசிக்கச்சொல்லியிருக்கும் அவரின் பரிந்துரையை வாசிக்கையிலும் மனம் கலங்கினேன் .எத்தனை அக்கறையிருந்தால் இப்படி சொல்லி இருப்பார் என்று. மகிழ்ச்சியாக இருந்தது வாசிக்கையில். உடனே என் போனில் இணைந்திருக்கும் ஒரு சில மாணவர்களுக்கு புத்தகத்தை குறித்து பகிர்ந்துகொண்டு விலை 100 ரூபாய்கள் கூ ட இல்லை என்றும் குறிபிட்டு வாங்கச் சொன்னேன் நூ

லகரை நாம் மதிக்கிறோமா என்னும் பதிவின் 2 பக்கங்களையும் கல்லூரி நூலகருக்கு ஸ்கேன் செய்து அனுப்பினேன். அவர் அதை பார்த்துவிட்டாரென்னும் இரு நீல் டிக்குகள் வந்தபின்னர் 1 மணி நேரம் கழித்து என்க்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அத்தனை நேரமும் யோசித்திருப்பாராயிருக்கும். இந்தமாதிரி நிகழ்ச்சிகளை நாமும் நடத்தனும் மேம் என்று சொல்லி இருந்தார்.

வாசிக்காததினால் மாணவர்கள் எதிர்காலம் வீணாவது எத்தனை உண்மையோ அதற்கு இணையான உண்மை ஆசிரியர்கள் எதையும் வாசிக்காததும் அவர்களிடமிருந்து மாணவர்கள் எதையுமே கற்றுக்க்கொள்ள வழியில்லை என்பதுவும் கல்லூரிகளுக்கு செல்லுகையில் மாணவர்களிடம் கேட்கும்  என்ன வாசித்தீர்கள் சமீபத்தில், போன்ற கேள்விகளை பேராசிரியர்களிடம் கேட்டுப்பார்த்தாலும் பெரிதாக வித்தியாசம் இருக்காது. பணியில் அமர்ந்ததும்  பல ஆசிரியர்கள் முதலில் செய்வது கற்றலை நிறுத்தி அரைத்த மாவை அரைக்கும் பயிற்சி எடுத்துக்கொள்ளுவதுதான்.

கல்லூரிக்குள் பள்ளி வாசனையுடன் நுழைகையில் ஆங்கிலம் தெரியாமலிருக்கும் இவர்கள், 3 வருடங்கள் கழிந்து கல்லூரியை விட்டுவெளியே போகையிலும் ஆங்கிலம் தெரியமல்தான் போகிறார்கள். 3 வருடங்களில் ஒரு குழந்தை தன் குடும்பத்தினரின் மொழியை பேசக்கற்றுக்கொள்கையில் நீங்கள் வளந்தவர்கள், உங்களால் ஏன் ஆங்கிலமென்னும் தொடர்பு மொழியை கொஞ்சமேனும் 3 வருடங்களில் கற்றுக்கொள்ள முடியாது என்று நானும் வருடா வருடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

ஆங்கிலத்தை  பேசுவதை விட, அடையாள அட்டை தொலைந்துவிட்டது, ஒரு நாள் விடுப்பு வேண்டும், அனுமதி வேண்டும் ஒரு புத்தகம் வேண்டும் போன்ற  மிகச்சாதாரண காரியங்களுக்கு கூட ஓரிரண்டு வரிகளில் கடிதம் ஆங்கிலத்தில் மட்டுமல்ல தமிழிலும் எழுதத் தெரியாது அநேகம் முதுகலை மாணவர்களுக்கு. ஆனால் சேக்‌ஷ்பியரும் ஷெல்லியும் வாசித்து மனனம் செய்து பரீட்சை எழுதுவார்கள் .உலகத்தொடர்பு மொழியில் பேசவும் எழுதவும் தெரியாததை விட கடிதத்திற்கென ஒரு தாளை ஓரங்கள் கிழியாமல் நோட்டுபுத்தகத்திலிருந்து எடுக்கக்கூட தெரியாமல், அலங்கோலமான ஓரங்களுடனிருக்கும் தாளை அப்படியே கொண்டு வந்து கொடுக்கும் மாணவர்களைப்பார்த்து திகைத்து நின்றிருக்கிறேன் .

உலகம் போகும் வேகமும் திசையையும் குறித்தும் தம்மை சுற்றி இயங்கும் உலகைக் குறித்தும் எந்த சிந்தனையும் அற்றவர்களாக இருக்கும் இவர்கள் வாசித்தால் நிச்சயம் நல்ல மாற்றமேற்படும். செல்வேந்திரன் கடைசிப்பக்கங்களில் பரிந்துரைத்திருப்பவற்றில்  இரண்டை வாசித்தால் கூட போதும் பின்னர் புத்தக வாசிப்பென்னும் மாயக்கரங்களில் அகப்பட்டுக்கொள்வார்கள்.

என்குரலாகவே ஒலித்த இந்த புத்தகவரிகளுக்காக என் மனமார்ந்த நன்றிகளை செல்வேந்திரனுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். வரும் திங்கட்கிழமையன்றிலிருந்து  முதலாமாண்டு மாணவர்கள்  கல்லூரிக்கு வரப்போகிறார்கள். அவர்களிடமும் இப்புத்தகத்தை குறித்து பேசுவேன். கையடக்கமான புத்தகமாக இத்தனை முக்கிய செய்திகளிருக்கும் இதை வாசிக்ககிடைத்தால் அவர்களின் நல்லூழ் அது.

புத்தகம் வாசித்தால் அடிக்கும் அப்பாவுக்கு தெரியாமல் அவர் ஒளித்தும் மறைத்தும் வைக்கும் புத்தகங்களை அவரறியாமல் ரகசியமாய் வாசிப்போம் நானும் அக்காவும்.  என் மகன்கள் தீவிர வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பதற்கு வாசிப்பு எனக்கு மறுக்கப்பட்டதும் வாசிப்பின் பயன்களை நான் அறிந்திருப்பதுவும்தான் காரணங்கள். என் மகன்களைக்குறித்து ஏதும் பெருமையாக நான் சொல்லிக்கொள்ள முடியுமென்றால் அவர்களிருவருமே புத்தகவாசிப்பென்னும் வழக்கம் கொண்டிருப்பவர்கள் என்பதை மட்டும்தான்

அன்புடன்

லோகமாதேவி

மொக்கை’ – செல்வேந்திரன்

முந்தைய கட்டுரைவெண்முரசு – குமரிக்கண்டம்
அடுத்த கட்டுரைசாமானியர்களின் அடக்குமுறை- கடிதம்