விக்கிக்கு வாழ்த்துக்கள்

இணையத்தில் இன்று கோடிக்கணக்கானோர் தினமும் அணுகும் ஒரே நேர்மறை இணையதளம் எது என்றால் அது கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாதான் . மிகக் கறாராக இணையப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் பணியிடங்கள் கூட அனுமதிக்கும் ஒருசில இணைய தளங்களில் இதுவும் ஒன்று.

அந்த அளவு நம்பகத்தன்மையையும் பயன்பாட்டையும் அது தனக்கென உருவாக்கிக்கொண்டுள்ளது . ஆரம்பப் பள்ளி குழந்தைகள் கூட பயன்படுத்தும் அளவு எளிமையும் பாதுகாப்பும் உள்ள தளம் . இன்று பள்ளிகளில் கற்பிப்பதில் புத்தகங்களுக்கு இணையான துணைக்கருவி விக்கிபீடியா.

இருபது வருடங்களுக்கு முன் இந்த தளம் ஆரம்பிக்கப்பட்ட போது எனக்கே இது குறித்த அவநம்பிக்கை இருந்தது . என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவை பார்த்த்து பழகியோருக்கு அதே போன்ற தரமுள்ள ஒரு களஞ்சியத்தை எப்படி crowd sourcing முறையில் உருவாக்க முடியும் , யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்றால் அதன் நம்பகத்தன்மை எப்படி இருக்கும் , எல்லா துறைகளிலும் நிபுணர்களை கண்டுபிடிக்க முடியுமா என்றெல்லாம் .

இன்று அந்த சந்தேகங்கள் அனைத்துமே விலகிவிட்டன . இன்றைய நிலவரத்தில் மூன்று லட்சத்திற்கும் மேலானோர் விக்கியில் பதிவுகளை சேர்க்கவும் சரிபார்க்கவும் செய்கிறார்கள் – அதாவது மூன்று லட்சம் ஆசிரியர்கள் ! .ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 170 கோடி பயனர்கள் இந்த தளத்தை பயன்படுத்துகிறார்கள்.கூகுளில் நாம் இன்று எதை தேடினாலும் அது குறித்த ஒரு விக்கி பதிவு இருப்பதை காணலாம்.

முக்கியமாக மற்ற தளங்களை போல இது ஆங்கிலம் மட்டுமே கோலோச்சும் தளம் அல்ல . விக்கியில் பத்து சதவிகித பதிவுகள் மட்டுமே ஆங்கிலத்தில் உள்ளவை ஏனையவை பிற மொழி பதிவுகளே. கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட மொழிகளில் தற்சமயம் விக்கி பதிவுகள் இருக்கின்றன .விக்கியில் இருக்கும் பல ஆப்பிரிக்க மொழிகளில் மரபான சஞ்சிகைகளோ புத்தகங்களோ கூட கிடையாது , அவர்களின் ஒரே இணைய ஊடக வெளி விக்கி மட்டும்தான் .

எல்லா மொழிகளையும் சேர்த்து விக்கியில் ஒட்டுமொத்தமாக ஜந்தரை கோடி பதிவுகள் உள்ளன .பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தில் இருக்கும் பதிவுகள் மொத்தமே ஒன்றரை லட்சத்துக்கும் குறைவு தான் ஒப்பு நோக்க தமிழில் மட்டுமே 1 லட்சத்து முப்பதாயிரம் பதிவுகள் உள்ளன. விக்கியில் இருப்பது போன்ற விரிவும் விஸ்தீரணமும் மரபான கலைக்களஞ்சிய அமைப்பில் சாத்தியமே இல்லை.

இன்னொரு அற்புதமான விஷயம் இதன் உடனுக்குடன் புதுப்பிக்கப்படும் தன்மை .தமிழகத்தின் நடராஜன் டெஸ்ட் மாட்ச்களில் இந்தியா சார்பாக அறிமுகமாகிறார் என்று செய்தி வந்த ஒரிரு மணி நேரங்களில் அவரின் விக்கிபீடியா பதிவு புதுப்பிக்கப்படுகிறது .மேட்ச் தொடங்கி சிறிது நேரத்திலேயே அவரின் முதல் விக்கெட் யார் என்பது உட்பட புதுப்பிக்கப்படுகிறது , இதை சாத்தியமாக்கியிருப்பது crowd sourcing தான் .

Crowd sourcing என்னும் “மக்களின் கூட்டுப் பங்களிப்பு” அணுகுமுறையின் வெற்றிகரமான உதாரணம் என்று இதை சொல்லலாம் . உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் , எந்த நேரமானாலும் ,யாரும் இதில் எழுதலாம் , யாரும் அதை சரிபார்க்கலாம் , திருத்தலாம் , செப்பனிடலாம் என்றாகும் போதும் விக்கி தளம் ஒட்டுமொத்தமாக அசுரபலம் மிக்க authorship ஐ அடைகிறது .

ஆனால் இந்த ஆசிரியத்துவம் ஒற்றைப்படையானது அல்ல . எந்த ஒரு தனிப்பட்ட சமூகத்தின் , நாட்டின் , பண்பாட்டின் , மொழியின் , கருத்தியலின் தனிச்சொத்து அல்ல . அதில் எல்லோருடைய குரலும் முட்டி மோதி ஒரு புறவய தகவல் நம்பகத்தன்மையை வந்து அடையும் புள்ளி இருக்கிறது . அதையும் கூட யாரும், எப்போதும் மறுக்கலாம் தக்க தரவுகளுடன்.

இன்று இணையத்தில் மிக அதிகமான நம்பத்தன்மை கொண்ட ஒரு சேவை அல்லது பிராண்ட் என்றால் அது விக்கிபீடியா தான் . இதை தங்கள் சட்டைப் பையில் வாங்கிப்போட எத்தனையோ நிறுவனங்கள் முயன்றாலும் , இதை இறுதிவரை லாப நோக்கற்ற அமைப்பாகவே நடத்துவேன் என்று பிடிவாதமாக இருந்துவரும் விக்கி நிறுவனர் ‘ஜிம்போ’ ஜிம்மி வேல்ஸ் , இந்த நூற்றாண்டின் நாயகர்களில் ஒருவர்.

அதன் நம்பகத்தன்மைக்கு இரண்டு காரணங்களை சுட்டலாம் . ஒன்று இது லாப நோக்கற்றது எனவே லாபம் அதிகமாகவில்லையே என்ற பங்குதாரர் அழுத்தம் இல்லை .மற்றோன்று விளம்பரம் இல்லை , விளம்பரங்கள் வந்தால் மக்களை ஈர்க்க வேண்டும் என்ற அழுத்தம் வரும் பின் அதன் பொருட்டு பதிவுகளை சுவாரசியமாக்க வேண்டும் என்பதும் வரும் , மிகைகள் , பொய்கள், கவன ஈர்ப்புகள் ஊடுருவும்.

அவர் நினைத்ததிருந்தால் இதை ஏதோ ஒரு வகையில் monetise செய்து இன்னேரம் பல ஆயிரம் கோடிகளில் புரண்டு கொண்டிருந்திருக்கலாம் . ஆனால் இந்த தளம் லாப நோக்கற்றுதான் இயங்கும் என்பதில் அவர் ஆரம்பம் முதலே பிடிவாதமாக இருந்தார் . இன்றும் விக்கிபீடியா பவுண்டேஷன் அதை அவ்வாறே நடத்துகிறது

இணையம் ஆரம்பித்த புதிதில் அதன் பயன்பாடு குறித்தும் , சாத்தியங்கள் குறித்தும் எவ்வளவோ கனவு காணப்பட்டது . அதில் பல கனவுகள் நனவாகி உள்ளன ஆனால் அவை பல எதிர்மறை விளைவுகளையும் கூடவே உருவாக்கின . அப்படி எதுவுமே இல்லாத ,இணையத்தின் மொத்த லட்சியவாத நோக்கின் நேர்மறை விளைவுகளை மட்டுமே கொண்ட ஒரு சேவை என்றால் அது விக்கிபீடியாதான்.

பிழைத் தகவல்களும் , குறை தகவல்களும் , பொய் தகவல்களும் நம்மை மூழ்கடித்துக்கொண்டிருக்கும் இருளில் சிறு சுடராக எரிந்தபடி நமக்கு இன்னும் நம்பிக்கையூட்டியபடி இருப்பது விக்கி.

விக்கிபீடியாவில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக பங்களித்து வரும் , கொடையளித்து வரும் நண்பர்களுக்கு பாராட்டுககளும் , வாழ்த்துக்களும்.

கே.வீ kay.vee

இணையத்திலிருந்து

முந்தைய கட்டுரைஅறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதம்
அடுத்த கட்டுரைஇருதிசையிலும் புதைகுழிகள்