யூமா வாசுகிக்கு வாழ்த்து

தன்னறம் இலக்கிய விருதின் முதல் விருது, எழுத்தாளர் யூமா வாசுகிக்கு அளிக்கப்படுவதில் நிறைகூர்ந்த உவகையடைகிறோம். இந்த விருது, தமிழ்ச்சூழலில் அவருடைய இத்தனைக்கால படைப்புமுகத்திற்காக வழங்கப்படுகிறது. பொதுவாக, இலக்கியச்சூழலில் ஒருசில படைப்பாளிகளே அடுத்த தலைமுறைக்கான ஆசிரியர்களாக எழும் அகத்தகுதி உடையவர்களாக மாறிநிற்கிறார்கள்.

அப்படி ஒரு வரிசையை நாம் உருவாக்கிக் கொண்டால், அதில் தவிர்க்கமுடியாத படைப்பாளியாக யூமா வாசுகி தனித்துநிற்பார். காலம் அவருக்காக அளிக்கக் காத்திருக்கும் உயரங்களை நாங்களறியோம்; ஆனால், இவ்விருதின் வழியாக நாங்கள் அவருக்குச் சொல்வது ஒன்றே ஒன்றுதான். இத்தனை படைப்புகளை படைத்தபின்பும் தனக்குள் வாழும் குழந்தைமையைத் தொலைத்துவிடாத அந்த தூயமனதை நாங்களும் வழிதொடர முயல்கிறோம் என்பதே அது.

ஒரு படைப்பாளியின் குரலிலேயே அவர் கடந்துவந்த வாழ்வுப்பாதை குறித்தும் வழிநினைவுகள் குறித்தும் அறியநேர்வது என்பது, அவரை விரும்புகிற எல்லா வாசிப்புமனங்களுக்கும் பெருநிறைவை அளிக்கக்கூடிய ஒன்று. இக்காணொலி, தமிழெழுத்தாளர் யூமா வாசுகி அவர்கள் தன்னுடைய வாழ்வுக்கதையை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் அனுபவநினைவுகளின் சிறுதொகுப்பு.

ஓர் எளிய படைப்புமனம் தன் வேரின் மெளனத்தை மொழிபெயர்க்க முயல்கையில், வார்த்தைகளில் கோர்வைகூடல் தவறிப்போகலாம். ஆனால், உண்மையைச் சுமந்திருக்கும் ஒரு இருதயம் தன்னைத் தத்தளித்தே வெளிப்படுத்திக் கொள்கிறது.

தமிழ் எழுத்துலகத்தைத் தனது கள்ளமின்மையாலும் கருணையாலும் மொழிப்படுத்திய ஒரு முன்னோடிக் கலைஞனின் வாழ்வுரையாடல் இது. இதைக் காட்சிப்படுத்தும் வாய்ப்பு தன்னறத்திற்கு நிகழ்ந்தை காலவாய்ப்பு என்றே கருதுகிறோம்.

தன்னறம்

http://thannaram.in/

https://www.facebook.com/Thannaram-Noolveli-104162358359986

முந்தைய கட்டுரைபுதிரும் புனைவும்
அடுத்த கட்டுரைஇமைக்கணம் – கர்ணனுக்கான கீதை