இந்திய சிந்தனை மரபில் குறள் 5

உ. குறள் மறுப்பும் மீட்பும் .

சமூகங்கள் கட்டமைக்கப்படும் காலகட்டங்களிலும் மாற்றம் கொள்ளும் காலங்களிலும் நீதிநூல்கள் உருவாகின்றன. நீதிநூல்கள் சமூகக்கட்டமைப்பின் வரைபடங்கள். சமூகத்தின் எதிர்கால வளர்ச்சி பற்றிய கனவுகளும்கூட. குறள் தமிழ்ச்சமூகம் உதிரி இனக்குழுக்கள் ஒன்றாகத்திரண்ட ஒரு காலகட்டத்தின் ஆக்கம். அப்படி அவற்றை திரட்டிய கருத்தியல் விவாதத்தின் திரள்மையம்.

தமிழ்நிலத்தில் சமணமும் பௌத்தமும் மெல்லமெல்ல கைவிடப்பட்டு மறைந்தன. இந்திய அளவிலும் அவை மெல்ல மறைந்து பெயரளவுக்கே எஞ்சுகின்றன. அவற்றின் அழிவுக்கான காரணங்கள் பலவாறாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் ஆர்.எஸ்.சர்மா போன்ற மார்க்ஸிய ஆய்வாளார்களின் பொதுக்கருத்தை இங்கே எடுத்துக்கொள்ளலாம். இந்திய நிலப்பரப்பில் உதிரி இனக்குழுக்களையும் அரசுகளையும் வணிகரீதியாக ஒருங்கிணைக்கவும் அதற்கான அடிப்படை அற அடிப்படைகளை உருவாக்கவும் உதவியாக இருந்த இம்மதங்கள் அதற்கு அடுத்தபடியாக உருவாகி வந்த பேரரசுகளின் காலகட்டத்தின் தேவைகளை எதிர்கொள்ள முடியாமையினாலேயே அழிந்தன.

பௌத்த சமண மதங்களின் வீழ்ச்சியுடன் வணிக சமூகங்களின் அதிகாரம் வீழ்ச்சியடைந்ததும் பின்னிப்பிணைந்துள்ளது. சிலப்பதிகார காலத்தில் நாம் காணும் வணிக சமூகத்தின் மாண்பை பின்னர் வந்த காலகட்டங்களில் எப்போதுமே கண்டதில்லை. இந்திய நிலப்பகுதியில் வணிகம் உருவாகி அதன் விளைவாக மூலதனக்குவிப்பு நிகழ்ந்து அதன் அடுத்தபடியாக பேரரசுகள் பிறந்தபோது அதற்கு பெரிதும் உதவக்கூடிய வைதீக மதம் புத்துயிர்கொண்டது.

புத்துயிர்கொண்ட வைதீகமதம் வேள்விமதம் என்ற அடையாளத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு பெருவழிபாட்டுமதமாக தன்னை மறு ஆக்கம் செய்துகொண்டது. ஆலயங்கள், திருவிழாக்கள் என பெருவாரியான மக்கள் பங்கேற்பைக் கொண்ட மதமாக அது உருப்பெற்ற போது மெல்லமெல்ல பெருவாரியான மக்களால் பின்பற்றப்பட்டு வந்த பௌத்த சமண மதங்கள் பின்னகர்ந்தன.

இங்கே சமண- பௌத்த மதங்களின் இயல்பைப்பற்றி சில விவரங்களைச் சொல்லி முன்செல்லவேண்டியிருக்கிறது. இம்மதங்களில் மத அடிப்படையில் ஒன்று திரட்டப்பட்டு அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டவர்கள் துறவிகள் மட்டுமே. விஹாரங்களும் பள்ளிகளும் மட்டுமே அவற்றின் அமைப்புகள். அந்த துறவிகளையும் அமைப்புகளையும் பேணும் பின்புலமாக மட்டுமே  அவை இல்லறத்தாரைக் கண்டன. ஆகவே .அவர்களுக்கு தங்கள் அறநெறிகளையும் ஆசாரங்களையும் விரதங்களையும் மட்டும் அவை வழங்கின. அவர்களை அவை ஒருங்கிணைத்து மத அமைப்புகளை உருவாக்கவில்லை

ஆகவே சமண பௌத்த மதங்கள் ஓங்கி நின்றிருந்த காலகட்டத்திலும் பெருவாரியான மக்கள் தங்கள் குல ஆசாரங்களின்படி தங்கள் ஏராளமான குலதெய்வங்களையும் சிறுதெய்வங்களையும் வழிபட்டபடி தங்கள் மரபான வாழ்க்கையையே வாழ்ந்தார்கள். அவர்களை சமணர் என்றோ பௌத்தர் என்றோ சொல்ல முடியாது. அவர்கள் சமண பௌத்த மதங்களின் பின்புல ஆதரவாளர்கள் மட்டுமே. இந்த மதங்கள் முன்வைத்த கொல்லாமையும் கள்ளுண்ணாமையும் எப்போதுமே தமிழகத்தில் பரவலாக கடைப்பிடிக்கபட்டிருக்க வாய்ப்பில்லை.

மேலும் இவை விரதங்களை மையப்படுத்தும் மதங்கள். எளிய மக்களிடமிருந்து அவற்றை அன்னியப்படுத்தியவை அவையே. ஆகவே மக்களின் எல்லா வழிபாட்டுமுறைகளையும் சிறுதெய்வங்களையும் உள்ளிழுத்துக்கொண்டு அவர்களின் களியாட்டங்களையும் கலைகளையும் எல்லாம் மேலும் வளர இடமளித்துக்கொண்டு பெருவழிபாட்டு வைதீகமதம் எழுந்தபோது இயல்பாகவே அவர்கள் அங்கே சென்றார்கள்.

வடக்கே குப்தர் காலகட்டத்திலும் தெற்கே பலநூற்றாண்டுக்களுக்குப் பின்னர் பல்லவர் காலத்திலும் இத்தகைய வைதீக சமய எழுச்சி நடந்திருப்பதை நாம் காண்கிறோம். இரண்டுக்கும் உள்ள பொதுத்தன்மைகள் வியப்பூட்டுபவை. சம்ஸ்கிருதத்தின் எழுச்சி, பௌத்த சமய மறுப்பு இலக்கியங்கள் ஆகியவற்றுடன் திருவிழாக்களின் உருவாக்கமும் கட்டிடக்கலையின் மறுமலர்ச்சியும் நிகழ்ந்தது. இக்காலகட்டத்துக்குப் பின்னர் மேலும் பெரிய அரசுகள் தமிழகத்தில் உருவாயின. சோழர்களின் அரசே தமிழ்ப்பேரரசுகளின் உச்சகாலகட்டம்.

இக்காலகட்டத்துக்குரியதாக இருந்தது வைதீகசமயமே. வைதீக சமயம் பெருவழிபாட்டு மரபை ஏற்றபோது சைவ வைண மதங்கள் பெருமதங்களாக உருவாயின. அம்மதங்களைச் சார்ந்து பக்தி இயக்கம் உருவாகியது. சமண பௌத்த மதங்கள் எப்படி அடித்தள உழைக்கும் மக்களை உள்ளே இழுத்து பேரியக்கங்களாக ஆயினவோ அப்படியே பக்தி இலக்கியமும் அடித்தள மக்களின் இயக்கமாக ஆகியது. அதற்கான இலக்கியங்கள் உருவாயின.

இக்காலகட்டத்தில் குறள் என்னவாக இருந்தது என்பதை இன்று ஊகிக்க முடிவதில்லை. இடைக்காலத்தில் குறள் மறைந்து போயிருக்கலாமென கூறுவார்கள். அதற்கு வாய்ப்பில்லை என்றே படுகிறது.  சமண பௌத்த காலகட்டத்து நூல்களில் சில மறைந்துபோயிருக்கலாம். ஆனால் குன்றாத முக்கியத்துடன் குறள் இருந்துகொண்டேதான் இருந்தது என்று சொல்லலாம். குறளைப்பற்றிய ஏராளமான புகழ்மொழிகளும் பாமாலைகளும் அதற்கிருந்த முக்கியத்துவத்தையே காட்டுகின்றன.

மேலும் சமண மதமும் சமணர்களும் தமிழகத்தில் திடுமென மறைந்து போகவில்லை. ஆதரவில்லாமல் தேய்ந்துகொண்டே இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து தமிழகத்தில் இருந்தார்கள். கல்வி மருத்துவ தளங்களில் அவர்களின் பங்களிப்பு பல நூற்றாண்டுக்காலம் நீடித்தது. இன்றும்கூட அவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மேல்சித்தமூர் போன்ற ஊர்களில் இன்றும் அவர்களின் ஆலயங்களும் மடங்களும் சிறந்தநிலையில் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

ஆகவே குறளை ‘தன்வயப்படுத்தும்’ முயற்சிகள் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் ஆரம்பித்தன. சோழர் காலத்த்தில்தான் நாம் இன்று காணும் முக்கியமான உரைகள் குறளுக்கு இயற்றப்பட்டன. குறளைப் பொருள்கொள்வதற்கும் அதை நம் தொல்மரபுடன் இணைத்துப்பார்ப்பதற்கும் இந்த உரைகள் அளிக்கும் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனால் அவர்கள் சைவ-வைணவப் பெருமதங்களைச் சார்ந்தவர்கள். அம்மதங்களின் நோக்கில் குறளை அவர்கள் மறு விளக்கம் அளித்துக்கொண்டார்கள். இன்று வரை குறளை நாம் அந்த கோணத்திலேயே வாசித்துக்கோண்டிருக்கிறோம்.

மக்கள் நடுவே பரவிய ஒரு நீதிநூலை எளிதில் நிராகரிக்க முடியாது. மேலும் குறள் தொல்தமிழ்ச்சமூகத்தின் அற உரையாடலில் இருந்து உருவாகி வந்தது, தமிழ்ச்சமூக உருவாக்கத்தில் அது பெரும்பங்காற்றியிருக்கிறது. ஆகவே குறளை மறுப்பதற்குப் பதிலாக அதை இணக்கி எடுப்பதற்கே அக்கால அறிவுமையம் முயன்றிருக்கிறது.

குறள் மீது இந்த உரைக்காலகட்டம் அளிக்கும் வாசிப்பு இருவகைப்பட்டது. ஒன்று உரையில் குறள்பாக்களுக்கு அவர்கள் காலகட்டத்து நீதி சார்ந்து விளக்கம் அளிப்பது.

நன்று ஆற்றலுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை

நல்லது செய்வதிலும் பிழைநேரிடலாம் செய்யப்படுபவரில் இயல்பறிந்து செய்யாவிட்டால். இக்குறளுக்கு காளிங்கர் உரையில் ‘அந்தணர் முதலிய குடிப்பிறந்தோருக்கும் பிறருக்கும் அரசரானவர் நன்மைகளைச் செய்யுமிடத்து குற்றம் உண்டாம்…” என்று விளக்கம் அளிக்கிறார். பிறிதொரு இடத்தில் கொடை என்று வள்ளுவர் சொல்வதை காளிங்கர் ‘ அந்தணர் முதலாக இழிகுலத்தோரான புலையர் ஈறாக அனைவருக்கும் வரம்பற வழங்கும் வண்மை என்று அறிக’ என்கிறார்.பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியர் அனைவருமே அறம் என்பதை குலப்பாகுபாடு சார்ந்த நெறி என்ற மனு நீதியின் தளத்துக்கு நகர்த்தியிருப்பதைக் காணலாம்.

பேரா.ராஜ்கௌதமன் தன் நூலின் இறுதி அத்தியாயத்தில் முந்தைய தமிழ் நூல்கள் சொல்லும் அறநெறிகளில் இருந்து குறள் மாறுபடும் இடங்களை விரிவாகச் சொல்லிச் செல்கிறார். ‘வள்ளுவர் காலக்ட்டத்தில் அறம் என்பது நல்வினை என்பதைச் சுட்டும் கலைச்சொல் ஆகியது’ என்னும் ராஜ்கௌதமன் ‘ வள்ளுவர் காலத்தில் அன்பு என்பதை அறச்சட்டகத்துக்குள் பொருத்திப்பார்க்கபப்ட்டது’ என்கிறார்.

வள்ளுவர் காலத்து மாபெரும் அற விவாதத்தின் போது அறம், அன்பு, கற்பு போன்ற பெரும்பாலான பண்பாட்டுச் சொற்கள் நுண்ணிதாக மாற்றம் பெற்றன என்று சொல்லலாம். முன்பு அறம் என்ற சொல் ‘ஒழுகுநெறி’ என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது. இல்லறம் துறவறம் என்று. வள்ளுவர் அதை ‘ஒழுகியாகவேண்டிய நெறி’ என்று ஆக்கிவிடுகிறார். இதற்குச் சமானமாக நாம் தர்மம் என்ற சொல் வடமொழியில் பெற்ற மாற்றத்தைச் சுட்டலாம். நெறி என்று மட்டுமே தர்மம் பொருள் பட்டது. பௌத்த சமண மரபுகள் அச்சொல்லை பெருநெறி, முழுமைநெறி, ஆதி நெறி என்னும் பொருளில் மாற்றியமைத்தன. அறம் என்னும் சொல்லை சமண பௌத்த மரபுகளின் தர்மம் என்னும் சொல்லும் நிகரானதாக ஆக்கினார் வள்ளுவர்.

அன்பு காமத்தில் இருந்து விடுபட்டு ‘பிறர்க்கு என்பும் உடையவர்’ களின் பெருநெறியாக ஆகியது. கற்பு என்னும் சொல் மூதாதையர் சொன்ன வாழ்க்கைவழி என்னும் பொருளிலேயே சங்க காலத்தில் இருக்கிறது. களவும் ஓர் ஒழுக்கமாக இருந்த நாட்களில் அதற்கு எதிரானதாக கற்பு பார்க்கப்பட்டது. சமண மரபில் கற்பு என்பது ‘கற்று அறிந்த நெறி’ என்றே பொருள். ‘அமண் சமணர் கற்பழிக்க திருவுள்ளமே’ என்று  சம்பந்தர் அதையே குறிப்பிடுகிறார். பெண்களுக்கு கற்பு என்பது ஒழுக்க நூல்கள் சொல்லும் நெறிப்படி வாழ்தல் என்று பொருள் பட்டது.

அடிமைமுறையும் பிறப்படிப்படையிலான சாதிப்பிரிவினையும் பண்டைத்தமிழ் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியிருந்தன என்பதற்கு சங்கப்பாடல்களே ஆதாரம். பிறப்பாலேயே அடிமையாக்கப்பட்டு கடும் உழைப்புக்குத் தள்ளப்பட்ட அடித்தள மக்கள் தொழும்பர் என்று சொல்லப்பட்டார்கள். சிறுகுடி மக்கள் என்று குலமில்லாதவர்கள் குறிக்கப்பட்டார்கள். விலையடிமைகள் உரிமைமாக்கள் என்று சொல்லப்பட்டார்கள். அது இயல்பானதே. ஒரு பழங்குடிச்சமூகம் அடிமைமுறைமூலம் ஈட்டிச் சேர்க்கப்படும் உபரி மூலமே பண்பாட்டின் அடுத்தபடிக்கு நகர்கிறது.

சங்கப்பாடல்கள் காட்டும் சமூகம் பாலியல் களியாட்டத்தை ஆதரித்தது. புதுப்புனலாட்டு, கடல்நீராட்டு, இந்திரவிழா போன்ற விழாக்கள் என்று பலவகையான கொண்டாட்டங்களை நாம் காண்கிறோம். உயர்குலப்பெண்டிருக்கு மட்டுமே அது ஓரளவுக்கு பாலியல் கட்டுப்பாடுகளை வகுத்தது. ஆண்கள் பரத்தமையில் திளைத்தார்கள்.

வள்ளுவரின் குறள் தமிழ்மரபின் இத்தகைய பெரும்பாலான ஆசாரங்களை விலக்குகிறது. ஆண்களுக்கும் பாலியல் ஒழுக்கத்தை வலியுறுத்துகிறது. வரைவின் மகளிரைச் சேர்வதையும் பிறன்மனை நோக்குவதையும் அது விலக்கி அதுவே பேராண்மை என்று சொல்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்லி அடிமைமுறையின் அடிப்படைகளை நிராகரிக்கிறது.

குறள் உருவான காலகட்டத்துக்கு அடுத்த காலகட்டமாகிய பேரரசுகளின் காலகட்டத்தில் தமிழகத்தில் ஆண்டான் -அடிமை சாதியமைப்பு ஓரு பெரும் சுரண்டல்முறையாக நிலைநாட்டப்பட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் குறளுக்கு உரையாசிரியர்கள் அளிக்கும் பொருள் வேறுபாடுகள் கவனிக்கத்தக்கவை. எல்லா உயிருக்கும் பிறப்பு சமானமானதே என்றாலும் செய்யும் தொழில்கள் வரையறுக்கப்பட்டிருப்பதனால் அவை சிறப்பு அடிப்படையில் சமானமல்ல என்று இக்குறள் சொல்வதாகப் பரிமேலழகர் சொல்கிறார்.

முந்தையவினைப் பயனால் உடல் எடுத்து அதன்படிச் செயல்பட்டு அதன் விளைவுகளை அனுபவித்தல் எல்லாவருணத்தாருக்கும் சமம். ஆகவேதான் வள்ளுவர் பிறப்பொக்கும் என்கிறார் என்று விளக்கும் பரிமேலழகர் செய்தொழில் பாகுபாடுகள் வருணம்தோறும் யாக்கை தோறும் வேறுபடுவதனால் சிறப்பு ஒவ்வாது என்கிறார் என்று சொல்லி  ‘பிறப்புக்கும் ஏனை சிறப்புக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்’ என்ற குறளை ஆதாரமும் காட்டுகிறார்.

பரிதியார் ‘நற்குலத்தாராவர் என்பதால் இழிதொழிலால் இழிகுலமாவர் என்பதாம்’ என்று விளக்குகிறார். தொல்காப்பியத்துக்கு எழுதிய உரையில் இளம்பூரணர் இந்தக்குறளை மேற்கோள் காட்டி ‘பிறரும் குலத்தின்கண் சிறப்பு ஒன்று உண்டு என்று கூறினாராகலின்…’என்று சொல்கிறார்.

ஆக, பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற வள்ளுவரின் கருத்து ‘தொழில் சார்ந்த இழிவும் சிறப்பும் இருப்பதனால் மனிதர் நடுவே பிறப்பு ஒவ்வாது’ என்று சொல்வதாக உரையாசிரியர்களால் விளக்கப்பட்டுவிட்டது. இங்கே இக்குறள்களின் சொற்கள் பொருள்கொள்ளப்பட்டிருக்கும் விதமும் கவனிக்கத்தக்கது. வள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றுதான் சொல்கிறார், மானுடர்க்கு என்று சொல்லவில்லை. உயிர்கள் அனைத்தையுமே சமானமாக காணும் ‘சர்வாத்மவாதம்’ சமண மதத்தின் அடிப்படையாகும். எல்லா உயிர்களும் பிறப்பால் ஒன்றே, அவை உலகில் ஆற்றும் செயல்களினால் சிறப்பும் சிறப்பின்மையும் சேர்கிறதென்பதே அக்குறளின் சரியான பொருளாக எடுக்க முடியும்.

அதேபோல பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் என்ற குறளில் கருமம் என்ற சொல்லை முன்னைவினை என்ற பொருளில்தான் எல்லா உரையாசிரியர்களும் கொள்கிறார்கள். கருமம் என்பதை செயல் என்று எடுத்துக்கொள்வதே மேலும் பொருத்தமானதாக இருக்கமுடியும்

அதேபோல பல குறள்களில் மனிதர்களுக்குப் பொதுவான நீதி மன்னர்களுக்குரிய அரசநீதியாக உரையாசிரியர்களால் விளக்கப்பட்டிருக்கிறது. மன்னர்களுக்குரிய அரசநீதி குறளில் விரிவாகவே பேசப்பட்டிருக்கிறது என்பது உண்மையே என்றாலும் ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ [எண்ணுவதெல்லம் உயர்வே எண்ணுக] என்ற குறளை ‘அரசராயினர் கருதுவது எல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக’ என்று பரிமேலழகர் கொள்ளும் பொருள் எவ்வகையில் பொருத்தம் என்று தெரியவில்லை. உயர்வு என்பது தம் உயர்வாக எங்கே மாறுக்¢றது? உயர்வையே எண்ணுக என்ற குறளில் உள்ள இலட்சிய அம்சம் இங்கே இல்லாமலாக்கப்படுகிறது.

மலர்மிசை ஏகினான் என்ற வள்ளுவரின் சொல்லாட்சியை தேவர்கள் போட்டு பூசித்த மலர்கள் மேல் நடந்த சிவன் என்றும் அறவாழி [அறச்சக்கரம்] என்ற வள்ளுவரின் சொல்லாட்சியை அற ஆழி [அறக்கடல்] என்றும் பொருள்கொள்ளும் பரிமேலழகரின் நோக்கு வைதீக மதத்தைச் சேர்ந்ததாகவே உள்ளது.

பக்தி இலக்கிய காலகட்டத்திலும் பின்னர் புராணகாலகட்டத்திலும் மணிமேகலை சிலப்பதிகாரம் சிந்தாமணி முதலிய நூல்கள் மறுக்கப்பட்டு பின்னகர்ந்தன., ஆனால் குறள் அதன் இடத்தை இழக்காமலேயே இருந்தது. உ.வே.சாமிநாதய்யரின் என்சரித்திரத்தில் ஸ்ரீலஸ்ரீ சாமிநாத தேசிகர் இலக்கணக்கொத்து என்ற நூலில் எழுதியவரிகள் எடுத்துக்கொடுக்கப்பட்டிருக்கின்றன.அதை ராஜ்கௌதமன் சுட்டுகிறார்.  ” அழகிய திருச்சிற்றம்பலமுடையார் அவர் [மாணிக்கவாசகர்] வாக்குக்கு அலந்து இரந்து அருமைத்திருக்கையால் எழுதினார். அப்பெருமையை நோக்காது சிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை சங்கப்பாட்டு கொங்குவேள் மாக்கதை முதலிய செய்யுட்களோடு அச்செய்யுட்களையும் ஒன்றாக்குவர். பத்துப்பாட்டு எடுத்தொகை பதினெண்கீழ்க்கணக்கு இராமன் கதை நளன் கதை அரிச்சந்திரன் கதை முதலிய இலக்கியங்கலையும் ஒரு பொருட்டாக எண்ணி வாணாள் வீணாய் கழிப்பர்”

ஆனால் சாமிநாத தேசிகர் குறளை ஏற்றுக்கொள்கிறார். இந்த நோக்குதான் பின்னர் விரிந்து கா.சு.பிள்ளை முதலியோரை திருக்குறள் ஒரு சைவநூலே என்று வாதிட்டு நூல்களை எழுதச்செய்தது. திருக்குறள் ஒரு சைவநூல் என்ற தரப்பு இப்போது வலுவாக மறுக்கப்பட்டுவிட்டாலும் இன்றும் இருந்துகொண்டிருக்கிறது

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதசார்பில்லாத இலக்கியங்களை நோக்கிய கவனம் விழுந்தபோது குறள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது. குறளில் குறிப்பிட்ட ஒரு தெய்வத்தைப்பற்றிய குறிப்பு இல்லை என்றே கொள்ளப்பட்டது. நவீனகாலகட்டத்தின் ஜனநாயகப்பண்புகளுடன் ஒத்துப்போகின்றவையாக பெரும்பாலான குறள்நீதிகள் இருந்தமை அடையாளம் காணப்பட்டது. தமிழின் தொன்மையையும் மாண்பையும் தேடிச்சென்ற ஐரோப்பிய ஆய்வாளர்களும் தமிழியக்க முன்னோடிகளும் குறளைக் கண்டடைந்தார்கள். பின்னர் தமிழ்த்தொன்மையை ஓர் அரசியல் கருத்துருவாக வளர்த்தெடுத்த திராவிட இயக்கத்தால் குறள் தமிழரின் பண்பாட்டுச்சின்னமாக முன்னிறுத்தப்பட்டது. திராவிட இயக்கத்தின் ஆகப்பெரிய கருத்தியல் சாதனை என நான் எண்ணுவது அவர்கள் குறளை வெகுஜனமயமாக்கியதையே.

குறள் மீண்டும் கண்டடையப்பட்டு நவீன யுகத்தில் மறுவாசிப்புகளுக்கு உள்ளாகியது தனியான ஆய்வுக்குரிய விஷயம். குறள் இன்று என்னென்னவாக பொருள்படுகிறது என்பது குறளுக்கு அளிக்கப்பட்டுள்ள ஏராளமான உரைகளையும் ஆய்வுகளையும் விரிவாக ஒப்பாய்வுசெய்து கண்டடையவேண்டிய ஒன்று . அது இன்றைய தமிழ்ச்சமூகம் நவீனகாலகட்டத்தில் கருத்தியல் ரீதியாக தன்னைத்திரட்டிக்கொண்டதன் வரலாறாகவும் அமையும்.

ஆனால் இப்போதும் விடுபடும் ஒரு வாசிப்பு உள்ளது, ஒரு மகத்தான கவிதைநூலாக குறளை வாசிப்பதுதான் அது. விளக்கங்கள் ஆய்வுகள் வழிபாட்டுரைகள் நடுவே அந்த வாசிப்பு ஒவ்வொருகணமும் நழுவிச்சென்றுகொண்டே இருக்கிறது.
உதவிய நூல்கள்

தமிழ்

1.  பண்டைய இந்தியா .டி.டி.கோஸாம்பி.  மொழியாக்கம் : எஸ்.என்.ஆர் சத்யா நியூ செஞ்சுரி புக்ஸ் சென்னை

2  தமிழகத்தில் ஆசீவகர்கள். டாக்டர் ர விஜயலட்சுமி . உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை

3  பாட்டும்தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் . பேரா ராஜ்கௌதமன். தமிழினி பதிப்பகம்

4.  திருக்குறள் ஆராய்ச்சிப்பதிப்பு :கி.வா.ஜகன்னாதன், ராமகிருஷ்ணமிஷன் வித்யாலயம் வெளியீடு

5.  ரிக்வேதம் மொழியாக்கம்  ம.ரா. ஜம்புநாதன் அலைகள் வெளியீட்டகம் சென்னை

6.  வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் சுவீரா ஜெயஸ்வால் நியூ செஞ்சுரி புக்ஸ் சென்னை   

7. இந்திய நிலமானிய முறை   நியூ செஞ்சுரி புக்ஸ் சென்னை                                                                                                                                                                                             
மலையாளம்
1. யாக்ஞவால்கிய ஸ்மிருதி . மொழியாக்கம் பேரா சி.வி.வாசுதேவ பட்டதிரி கேரளக் கலாச்சார துறை வெளியீடு.
2  ஹிந்து தர்ம சர்வஸ்வம்.    ராவ்பகதூர் செறியான்  கரண்ட் புக்ஸ் திரிச்சூர்
3. புராணிக் என்ஸைக்ளோபிடியா வெட்டம் மாணி கரண்ட் புக்ஸ் திரிச்சூர்

 

ஆங்கிலம்

1.  History of Dharma sastras              P.V.Kane . Asiatic Society of Bombay
2.  Essays on Gita.                      Aurobindo Gosh Arabindo Asharam Pondicheri 
3  An Introduction to the history of India   D.D.Kosambi Popular Book depot Bombay
4  India’s Ancient Past,                   R.S.Sharma Oxford University Press,
உதவிய இணையதளங்கள்

1.   http://www.hindubooks.org
2   http://www.sacred-texts.com/jai/index.htm

முந்தைய கட்டுரைஇந்திய சிந்தனை மரபில் குறள் 4
அடுத்த கட்டுரைதனியார்மயம் ஒரு விவாதம்