சென்ற மார்ச்சில்…

மார்ச்,2020

சென்ற ஆண்டு மார்ச் மாதத்தை எண்ணிக்கொள்கிறேன். 2020 மார்ச் 6,7,8 தேதிகளில் ஈரோடு புதியவாசகர் சந்திப்பை நடத்தினோம். அப்போதே கொரோனா எச்சரிக்கைகள் வரத்தொடங்கியிருந்தன. அன்று அது பெரிதாக தெரியவில்லை. அச்சம் உருவானது அதன்பின்னர்தான்.

கொரோனாவை அன்று இத்தனைபெரிதாக, உலகளாவிய அச்சமாக, கருதிக்கொள்ளவில்லை. அதற்கு கடுமையான தொடர்ச்சியான தடுப்புநடவடிக்கைகள் மட்டும் போதும், உலகையே மூடிவிடுவது மாபெரும் பொருளியலழிவை உருவாக்கும் என்பது என் எண்ணமாக இருந்தது. அப்பொருளியலழிவு காரணமாக மருத்துவ உதவிசெய்ய நிதியில்லாமலாகும் என நினைத்தேன். எபோலா, சிக்கன்குனியா போன்ற தொற்றுகளை கையாண்டதுபோலவே இதையும் கையாளலாம் என்று எண்ணினேன். பெங்களூரைச் சேர்ந்த இரு மூத்த மருத்துவர்களின் கருத்தை ஒட்டியே அந்த எண்ணம் உருவாகியது. [கொரோனா]

பின்னர் யுவால் நோவா ஹராரியும் அதையே சொல்லியிருந்தார். ஆறுமாதங்களுக்குப் பின் நான் சொன்னதைப்போலவே அரசின் அதீத எச்சரிக்கை தேவையற்றது என்று தெளிவாகியது. குமரிமாவட்டத்தில் மட்டும் பத்தாயிரம் படுக்கைகளை முன்னெச்சரிக்கையாக தயாரித்திருந்தனர். இரண்டாயிரத்துக்குமேல் எப்போதுமே தேவைப்படவில்லை. ஜூலையிலேயே அரசும் கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொண்டு வணிகத்தை முன்னெடுத்தது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையால் பெரிதாக ஒன்றும் ஆகவில்லை.

ஆனால் அக்கடுமையான எச்சரிக்கைநிலை இருந்தமையால் நோய்விழிப்புணர்ச்சி மக்களிடையே சென்று சேர்ந்தது என்று சொல்லலாம். அதோடு மூன்றுமாத முழுஅடைப்பால் உருவாகுமென அஞ்சிய மாபெரும் பொருளியலழிவும் உருவாகவில்லை. பொருளியல் சிக்கல் நீடித்தாலும் அழிவு என அதைச் சொல்லமுடியாது. நல்லதுதான்

சென்ற மார்ச்சில் தமிழக அரசு கொரோனாவை கையாள்வதைப் பற்றிய என் மதிப்பை எழுதியிருந்தேன். வைரஸ் அரசியல் இன்று ஓராண்டுக்குப்பின் அந்த மதிப்பு பலமடங்கு கூடியிருக்கிறது. தனிப்பட்ட அனுபவங்களால். [பின்னர் விரிவாக எழுதுகிறேன்]. கேரளம், தமிழகம் இரண்டு மாநிலங்களிலேயே எனக்கு நேரடி அனுபவம். ஆகவே உறுதியாக அதைப்பற்றியே சொல்லமுடியும். ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் ஏறக்குறைய இதே நிலையில் தான் என்றே செய்திகள் சொல்கின்றன

நமது பெரிய தேசத்தின் மக்கள்தொகையை வைத்துப் பார்க்கையில் நம் மருத்துவக்கட்டமைப்பு ஒரு மாபெரும் சாதனை என்றுதான் நினைக்கிறேன். தமிழக – கேரள மருத்துவக்கட்டமைப்பின் நேர்த்தியும், செயல்திறனும், ஊழியர்களின் அபாரமான அர்ப்பணிப்பும் உண்மையில் மெய்சிலிர்க்கவைப்பவை. எதுவுமே தெரிந்துகொள்ளாமல், அசட்டு அரசியல் காழ்ப்புகளிலேயே அன்றாடம் உழலும் மனங்கள் உருவாக்கும் எதிர்மறைச்சித்திரமும் கசப்பும் வெறும் உளச்சிக்கல்களே அன்றி உண்மைக்கு தொலைதூரமானவை.

நாம் கொரோனாவை எதிர்கொண்டதைப்போல உலகில் எந்த நாடும் இத்தனை மாபெரும் ஒருங்கிணைந்த இயக்கமாக செயலாற்றி வென்றிருக்காது. நமது மருத்துவர்கள் மேல் மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட்டு தாங்களே மருத்துவவழிகளை, மருத்துக்கூட்டுகளை உருவாக்கிக்கொண்டு உயிர்களை மீட்டனர். சட்டச்சிக்கல்கள், நடைமுறைச்சிக்கல்களை அவர்கள் பொருட்படுத்தவில்லை. நமது அரசு மருத்துவமனைகள் பொதுவாக மிகத்தரமானவை, முற்றிலும் இலவசமானவை. அங்குள்ள கடைநிலை ஊழியர்வரை ஒவ்வொருவரிடமும் இருந்த அர்ப்பணிப்பை எண்ணி தலைவணங்குகிறேன்

முழு அடைப்பின்போது நோய் பற்றியே எண்ணிக்கொண்டிருக்காமல் ஆக்கபூர்வமாக இருப்போம் என ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறேன்.தனிமைநாட்கள், தன்னெறிகள்.ஊடகம் நோய் பற்றிய செய்திகளை அள்ளி வைத்துக்கொண்டே இருந்திருக்கிறது. அதை கவனிப்பது நம்மைச் சோர்வுக்குள் தள்ளும். நாம் நோய் பற்றி அறியவேண்டிய எச்சரிக்கைகளை அறிந்தபின் மேற்கொண்டு அதிலேயே வாழவேண்டியதில்லை. ஊடகம் எதிர்மறைச் செய்திகளால், பதற்றங்களால்தான் வாழமுடியும். அதற்கு நாம் நம்மை பலிகொடுக்கவேண்டியதில்லை

சென்ற பிப்ரவரி 2 அன்று இயக்குநர் பாலாவைப் பார்த்தேன். எட்டு மாதம் டிவி செய்திகளைப் பார்த்து உச்சகட்ட பதற்றத்தில் இருந்ததாகச் சொன்னார். நான் விடுத்த அந்த அறிவிப்பைப் பற்றிச் சொன்னேன். ‘அடாடா, நான் படிக்கவில்லையே, படித்திருந்தால் இந்த டிவியை அணைத்துப் போட்டிருப்பேனே. ஆறுஏழு மாசம் மரணபயத்திலேயே வாழவைச்சிட்டுதே’ என்றார். நான் வீட்டில் கொண்டாட்டமாகவே இருந்தேன் என்று சொன்னேன் [வீடுறைவு ] நாளும் பொழுதும் இனிதாகவே கடந்தன.

என் அறிவிப்பை பலர் பின்தொடர்ந்தனர். செய்திகளை தவிர்த்து அந்நாட்களை ஆக்கபூர்வமாக ஆக்கிக்கொண்டனர். அவர்களுக்கு வீடடங்கும், வீட்டிலிருந்தே வேலையும் உற்சாகமான நாட்களாக அமைந்தன என்று இப்போது சந்திப்புகளில் சொல்கிறார்கள். வாசிப்புப்பழக்கம் பெருகியது. குடும்பத்துடனான அணுக்கம் ஓங்கியது. வழக்கமான வாழ்க்கைச்சுழற்சியிலிருந்து விலகி இன்னொருவகையான வாழ்க்கையின் சுவையை அறியமுடிந்தது. நானும் கோடையின் எல்லா கொண்டாட்டங்களையும் அனுபவித்துக்கொண்டிருந்தேன். [கோடை.] மார்ச்சிலேயே இங்கே கோடைமழை வேறு தொடங்கிவிட்டது. [கோடை மழை]

மார்ச் மாதம் புனைவுக்களியாட்டு என ஒன்றை அறிவித்திருக்கிறேன்.[தனிமையின் புனைவுக் களியாட்டு] அதாவது வெறும் பதினைந்து நாட்களுக்கு. நான் சில கதைகள் எழுத நண்பர்கள் சில கதைகளை எழுத ஒரு பதினைந்துநாள் கதைகளில் வாழலாமே என்னும் அறிவிப்பு. ஆனால் அது நூறுகதைகளாக நீடித்து ஜூலை மாதம் 10 ஆம் தேதிவரை நீடித்திருக்கிறது. ஆச்சரியமான ஒரு நிகழ்வுதான் அது.

ஜனவரியில் காலம் இதழுக்காக எழுதிய எண்ண எண்ணக் குறைவதும்,  மலேசியாவின் வல்லினத்துக்காக எழுதிய யாதேவியும் நூறுகதைகளின் தொடக்கம் என்றாலும் புனைவுக்களியாட்டு என்றபேரில் தொடர்ச்சியாக எழுதியது மார்ச் 19ல் வெளிவந்த ஆனையில்லா கதைவழியாக. அது ஓர் உற்சாகமான கதை. இப்போது வாசிக்கையிலும் என்னையே வெடித்துச் சிரிக்கவைக்கிறது.

இன்று யோசிக்கும்போது அன்று சிக்கிக்கொண்டிருந்த நெருக்கடியையே அப்படி பகடியாக மனம் மாற்றிக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்தக்கதை வழியாக அந்த சிக்கலை உடனே கடந்துசென்றுவிட்டேன். நூறுகதைகளுக்கும் ஊற்றுமுகம் அதுதான். சிக்கிக்கொண்ட யானை ஒன்று எளிதாக எடுக்கப்பட்டுவிட்டது. எல்லா நெருக்கடிகளையும் சிறியதாக ஆக்கிக்கொள்ள முடியும் என்று கண்டுகொண்டேன்.

நாளை முதல் சிலகதைகளை எழுதலாம் என நினைக்கிறேன். புனைவுக்களியாட்டின் நினைவுகூர்தலாக

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020

கொரோனோவும் இலக்கியமும்
தனிமைநாட்கள், தன்னெறிகள்.
வைரஸ் அரசியல்
தனிமையின் புனைவுக் களியாட்டு
கொரோனா
கோடை 
கோடை மழை

நாளிரவு

பொற்கொன்றை!

இன்றைய மலர்

வான் அலை

நாற்புறமும் திறத்தல்

வீடுறைவு

முந்தைய கட்டுரைஇந்துவும் இந்துத்துவரும் – கடிதம்
அடுத்த கட்டுரைகாந்தியும் தருமனும்