மழைப்பாடல் வாசிப்பு

‘வெண்முரசு’ நாவல்தொடரில் இரண்டாவது நாவல் ‘மழைப்பாடல்’. இந்த நாவலைப் பொறுத்தவரை ‘மழை’ என்பது, நீரால் ஆனது அல்ல; வான் தேவர்களின் அருளால் ஆனது. அவர்களிடமிருந்து யாரெல்லாம் அருள்மழையைப் பெறுகிறார்கள் என்பதைக் குறிப்புணர்த்துவதாகவே இந்த நாவலின் ஒட்டுமொத்த நகர்வும் அமைந்துள்ளது.

நிலத்தில் அநீதி எழும்போதெல்லாம் அதை அழிக்க நீதியும் பூமிக்கு இறங்கி வருகிறது. அநீதிக்கும் நீதிக்கும் இடையே இணைவும் பிரிவும் அற்ற தொடர் போராட்டமாகவே ஒட்டுமொத்த உலக இயக்கமும் முடிவற்ற பகடையாட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அநீதியாகப் புழுதிப்புயலும் குருதிமழையும் வந்து நிற்க அவற்றுக்கு இணையான எதிரியாகப் பெருமழையாகவும் அருள்மழையாகவும் நீதி வந்து நிற்கிறது. இறுதியில், நீதியே அநீதியின் குருதியை முழுக்கக் குடித்து, நிமிர்கிறது.

காந்தாரியும் சகுனியும் அஸ்தினபுரிக்குள் நுழைகின்றனர். அவர்களுக்கு இணையான எதிர்த்தரப்பாகவும் நீதியின் பிரதிநிதியாகவும் குந்தி அஸ்தினபுரிக்குள் வருகிறாள். காந்தாரிக்குக் குருதிமழையென இருட்புதல்வர்கள் வந்து அவள் அருகில் விழுகின்றனர். குந்திக்கு அருள்மழையென அருட்புதல்வர்கள் வந்து அவள் மடியை நிறைக்கின்றனர்.

விசித்திரவீரியனை மணந்துகொள்வதற்காகக் கொண்டுவரப்பட்ட அம்பிகையும் அம்பாலிகையும் தாங்கள் சகோதரிகள் என்பதை மறந்து, தாய்-மகள் போல இணைந்து வாழ்வதும் அவர்களுக்குக் குழந்தை பிறந்த பின்னர் அந்தக் குழந்தைகளை முன்னிட்டு ஒருவருக்கொருவர் மனவிலகல் கொண்டு இருபதாண்டுகளாக முகத்துக்கு முகம் பார்த்துக்கொள்ளாமல் இருப்பதும் அரசர் பாண்டு இறந்தவுடன் இருவரும் மீண்டும் நல்லுறவு கொண்டு, இணைந்தே வனம் புகுவதும் காலத்தின் நகைமுரண்தான்.

எவை அவர்களைப் பிரித்தன? எது அவர்களை இணைத்தது? புதிய உறவுகளே (குழந்தைகள்) அவர்களைப் பிரித்தன என்றும் அந்த உறவுகளுள் ஒன்று நீங்கியதும் அவர்கள் இயல்பாக இணைந்து கொண்டார்கள் என்றும் கொள்ளலாம்.

வேறு வகையிலும் நாம் இதற்குப் பொருள்கொள்ளலாம்தான். அவர்கள் இருவருமே அஸ்தினபுரிக்குப் பேரரசியாகும் கனவுடன் இருந்தார்கள் என்றும் அந்தக் கனவுக்கு இடையூறுகளாக விசித்திரவீரியனின் மரணமும் அந்தக் குழந்தைகளின் பிறப்பும் இருந்தன என்றும் கொள்ளலாம். ஆட்சி அதிகாரத்தின் மீதான பெருவிருப்பின் காரணமாக அவர்களுக்கு அரண்மனை வாழ்வு தந்த இனிமையை ஒவ்வொரு கணமும் இழந்துகொண்டே இருந்தார்கள். அவற்றைத் தாங்கள் இழைப்பதை உணராமலேயே இழந்துகொண்டிருந்தார்கள். தொடர்ந்து இருபதாண்டுகள் இழந்தார்கள்.

காரணம், அவர்கள் இருவருக்குமே சக்கரவர்த்தினியாகும் திறன் இல்லை. அவர்களிடம் சக்கரவர்த்தினியாகும் வெறுங்கனவுமட்டும்தான் குடியிருந்தது.  தேவயானியின் மகுடம்தான் அவர்களின் ஆழ்மனத்தின் கண்களுக்குத் தெரிந்துகொண்டிருந்தது. அதை முறைப்படி அடைந்து, தொடர்ந்து அதைத் தக்கவைத்துக் கொள்ளும் வழியை அவர்களின் குறுகிய மனம் ஒருபோதும் அறியவே இல்லை. அவர்கள் ஒருபோதும் தாங்களும் தம் அக்கா ‘அம்பையைப் போலவே ஆக வேண்டும்’ என்று நினைக்கவேயில்லை.

ஆனால், பிருதையிடம் (குந்தியிடம்) சக்கரவத்தினியாகும் பெருங்கனவும் அதிதிறமும் இருந்தன. ஆனால், அவளிடமிருந்து அதற்குரிய வாய்ப்புகளைக் காலம் தள்ளி தள்ளி வைத்தபடியே இருந்தது. அதைத் துரத்தி துரத்தித் தொட்டுவிடும் முயற்சியில்தான் குந்தி இருந்தாள். அதற்காகவே அவள் பாண்டுவின் விருப்பத்துக்குப் புறம்பாகவும் தன் கனவினை நனவாக்கவும் ஐந்து குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வனத்திலிருந்து அஸ்தினபுரிக்குள் நுழைகிறாள்.

காலத்தின் பெருவிளையாட்டுகளுள் ஒன்று, ‘யார் எதை விரும்பவில்லையோ, அதை அவர்களுக்கு வழங்குவது. இதற்குச் சான்றுகளாக, துர்வாச முனிவர் குந்திக்கு மந்திரத்தை அளித்தது; அதிரதனுக்கு யமுனையில் குழந்தை கிடைத்தது; பாண்டுவுக்குக் குந்தி மணமாலையைச் சூட்டியது; பாண்டு அஸ்வதந்த மணியை விதுரனுக்கு அளித்தது; பாண்டுவை அஸ்தினபுரிக்கு அரசனாக்கியது ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றை எல்லாம் அவரவர்களுக்கு வழங்கப்பட்ட வரம் என்பதா, சாபம் என்பதா?.

விரும்பியது கிடைக்காதபோதும் விரும்பாதது கிடைத்த போதும் மனம் அடையும் தடுமாற்றங்களைச் சொல்லில் விளக்கிவிட முடியாது. இதற்குப் பல சான்றுகளைக் கூற முடியும். குந்தி துர்வாச முனிவர் வழங்கிய மந்திரத்தை விளையாட்டாய் உச்சரித்ததால் சூரியனின் கருவைத் தன் வயிற்றில் தாங்கியபோதும் அந்தக் கருவைக் கலைக்க முடியாதபோதும் தன் முதல் மகனை யமுனையில் இழந்தபோதும் அடைந்த தடுமாற்றம்.

குந்தியால் தன்னேற்பு அவைக்கு ரகசியமாக அழைக்கப்பட்ட கம்சன், குந்தி பாண்டுவுக்கு மணமாலை சூட்டியதும் அடையும் தடுமாற்றம். மூத்த வைதீகர்கள் திருதராஷ்டிரன் அஸ்தினபுரியின் அரியணையில் அமர எதிர்ப்புத் தெரிவிப்பதால், அவன் அடையும் தடுமாற்றம். காந்தாரி அஸ்தினபுரிக்குப் பேரரசி ஆகமுடியாததால் சகுனி அடைந்த தடுமாற்றம். காந்தாரிக்குக் குழந்தை தாமதமாகப் பிறந்ததால் பேரரசி சத்யவதி அடைந்த தடுமாற்றம். ‘உன் மகனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனையே அஸ்தினபுரிக்கு அரசனாக்குவேன்’ என்று குந்திக்கு வாக்களிக்கும் பாண்டு, குந்திக்கு இரண்டாவது மகன் பிறந்ததும் தன் முடிவை மாற்றிக் கொள்கிறார். அதனால், குந்தி அடையும் தடுமாற்றம். விதுரனின் திருமணத்தை முன்னிட்டு விதுரனின் தாய் சிவை அடையும் தடுமாற்றம். திருதராஷ்டிரன் யாழ்இசைக்கும் பெண் மீது விருப்பம் கொள்வதை அறிந்து காந்தாரி அடையும் தடுமாற்றம். பாண்டுவின் இறப்பை முன்னிட்டு அம்பிகையும் அம்பாலிகையும் பேரரசி சத்யவதியும் அடையும் தடுமாற்றம் என இந்த நாவலில் முக்கியமான திருப்பங்கள் அனைத்துமே பிறர் கொள்ளும் மனத் தடுமாற்றத்தில்தான் நிலைகொள்கின்றன.

மூடத்தனமும் புத்திசாலித்தனமும் சந்திக்கும் ஒவ்வொரு புள்ளியிலும் காழ்ப்பும் வெறுப்புமே மிகுகின்றன. அதனால்தான், திருதராஷ்டிரன் தனக்கு இளையவர்களான விதுரனையும் சஞ்சயனையும் பெரும்பாலும் ‘மூடா’ (முட்டாள்) என்றே அழைக்கிறார். அவ்விருவரின் அறிவின் கூர்முனைகளைக் கண்டு திருதராஷ்டிரனின் உள்ளம் அச்சம் கொள்கிறது. அந்த அச்சத்தைப் போக்க, தன்னுடைய அரச அதிகாரத்தைப் பயன்படுத்தியும் ‘தானே மூத்தவன்’ என்ற நிலையை வெளிப்படுத்தியும் அவர்களை ‘மூடா’ என்று கீழ்மையுடன் அழைக்கிறார் திருதராஷ்டிரன்.

திருதராஷ்டிரனின் வாயிலிருந்து அந்தச் சொல் வெளிவரும் போதெல்லாம் நாம், ‘அவர் தன்னைத்தானே அவ்வாறு அழைத்துக் கொள்கிறார்’ என்றுதான் நினைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. திருதராஷ்டிரனின் அறியாமைதான், ‘அவர்களைத் தனக்குக் கீழானவர்கள்’ என்று அவனை எண்ண வைக்கிறது.

திருதராஷ்டிரனுக்குப் பேரரசி சத்தியவதியின் நுண்ணறிவும் பிதாமகர் பீஷ்மரின் பேரறிவும் ஒரு பொருட்டே அல்ல. அவர் அவர்களின் அறிவுத்திறம் கொண்டு அஞ்சுவதே இல்லை என்பதையும் நான் கவனத்தில் கொள்ளவேண்டும். அதனால்தான் திருதராஷ்டிரன் பீஷ்மரிடம் துவந்த யுத்தம் செய்து, தோற்றபோது, உடனே தன்னை அவரின் மாணவராக மாற்றிக்கொள்ள திருதராஷ்டிரனால் முடிகிறது.

திருதராஷ்டிரனின் அன்புள்ளம் விதுரன் மீது மாறாத அன்பினைப் பொழிந்து கொண்டேயிருக்கிறது. திருதராஷ்டிரன் முதன் முதலாகக் காந்தாரியிடம் தனித்திருந்து பேசும்போது, “என் நெஞ்சில் என் அன்னைக்கும் அதற்கு அடுத்தபடியாக விதுரனுக்கும் அதற்கு அடுத்து உனக்குத்தான் எப்போதும் இடம்” என்று கூறுகிறார். அவர் அஞ்சுவது விதுரன், சஞ்சயன் ஆகியோரின் அறிவுத்திறத்தையும் தன்னுடைய அறியாமையையும் தான். அறிவு, அறியாமை மோதும் கணத்தில், அன்பு சற்று விலகி நின்றுகொள்கிறது என்றே படுகிறது.

திருதராஷ்டிரனின் ஆழ்மனம் விழியுடைய அத்தனை பேரின் மீதும் ஒருவகையான காழ்ப்புணர்வையே கொண்டிருக்கிறது. முதுசூதர் தீர்க்க சியாமரிடம் அவர் கொள்ளும் அன்பு அவர் பெற்றுள்ள இசையறிவுக்காக மட்டுமல்ல; அவருக்கு விழியில்லை என்பதாலும்தான். அதனால்தான் அவர் மரணமடைந்தபோது அவரின் உடலைக் காண அரச முறையை மீறிச் செல்கிறான் திருதராஷ்டிரன்.

விழியற்ற குழலிசைக்கலைஞருக்குப் பொன்னும் பொருளும் அள்ளித் தரவும் அவருக்குத் திருமணம் செய்து வைக்கவும் திருதராஷ்டிரனின் மனம் ஒப்புகிறது. திருதராஷ்டிரன் விழியற்றவர்களைத் தன் அகத்துக்கு ஓர் அடி நெருக்கமானவர்களாகவே வைத்துக்கொள்கிறார்.  விழியுடையவர்கள் அவர் தன் அகத்துக்கு ஓர் அடி விலக்கமானவர்களாகவே வைத்துக்கொள்கிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் திருதராஷ்டிரனின் குணநலனை விதுரனின் வாய்மொழியாகக் கொலைவேழத்தின் பெருங்கருணையை ஒருவன் மட்டிலுமே அறிவான். ஒவ்வொருநாளும் அதன் காலடியில் வாழும் எளிய பாகன் என்று ஒருவரியில், மிக அழகாகக் காட்டிவிடுகிறார்.

இதை அறிந்ததால்தான் விதுரன், திருதராஷ்டிரனிடம் சென்று, “உங்களைச் சந்திக்கப் பாண்டு வருவார். நீங்கள் உங்களின் அரியணையை அவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டாம்” என்று கூறுகிறார். ஆனால், திருதராஷ்டிரன் பாண்டுவுக்கு விட்டுக் கொடுக்கிறார். இதைத்தான் விதுரன் எதிர்பார்த்திருந்தார். காரணம், எதிர்மறையாகக் கூறி நேர்மறையான காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் ‘உளவியல் நுட்பம்’ அறிந்தவர் விதுரன்.

ஆனால், இந்த ‘உளவியல் நுட்பம்’ எல்லா நேரங்களிலும் செல்லுபடியாவதில்லை. துரியோதனனை அஸ்தினபுரியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று திருதராஷ்டிரனிடம் விதுரன் கூறும்போதும் திருதராஷ்டிரன் ஒப்புக்கொள்வதுபோலத் தலையை அசைக்கிறார், உடனேயே அம்பிகை அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததும், தன் முடிவினை மாற்றிக்கொள்கிறார் திருதராஷ்டிரன்.

திருதராஷ்டிரனின் மனம் தாமரை இலையின் மீது உருளும் நீர்த்திவளைபோலவே எப்போதும் அசைந்தபடியே இருக்கிறது. அதனால்தான் அவரால் எந்த முடிவையும் உறுதியாக எடுக்க இயல்வதில்லை. இதற்குப் பல நிகழ்வுகளைச் சான்றுகளாகக் காட்ட இயலும்.

திருதராஷ்டிரன் முதலில் பீஷ்மரை எதிர்த்து, பின்னர் அவரைப் பணிகிறார். முதலில் சஞ்சயனை வெறுத்து, பின்னர் அவனைத் தனக்கு நெருக்கமானவனாக உணர்கிறார். அவரின் மனம் ‘எடுப்பார் கைப்பிள்ளை’யாகவே இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை திருதராஷ்டிரன் ‘எடுப்பார் கொலைவேழம்’தான். கொலைவேழத்தை யாரால் தன் பிடியில் வைத்திருக்க இயலும்? சில தருணங்களில், மிகக் குறுகிய கணங்கள் மட்டுமே அது தன் பாகனுக்கு அருள் புரியும்.

பீஷ்மர், விதுரன், சகுனி என்ற மூன்று விதமான பேரறிஞர்களின் நுண்ணறிவு முனைகளும் சந்திக்கும் களமாகத்தான் ‘மழைப்பாடல்’ நாவல் அமைவு கொண்டுள்ளது. தனக்கான அறத்தோடு திகழும் பீஷ்மரின் அறிவு கங்கையைப் போலவே கலங்கமற்றுச் சுழித்தோடுகிறது. உளவியல் நிபுணனைப் போன்ற விதுரனின் அறிவு சூழ்நிலைகளைத் தனக்கானதாக வளைத்துக்கொள்கிறது. சூழ்ச்சிகளாலேயே பின்னப்பட்ட சிலந்தி வலையென உருவெடுத்துள்ள சகுனியின் அறிவு பாலைப்புயலெனக் கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் வாரிச் சுருட்டிக்கொள்கிறது.

பீஷ்மர் தன் தரப்பை முன்வைத்து எல்லோரையும் அணுகுகிறார். அவருக்கு, ‘அஸ்தினபுரி ஒருபோதும் ஆட்டம் கண்டுவிடக் கூடாது’ என்பதுதான் முதன்மை நோக்கம். விதுரன் பிறரின் உள்ளத்தை உற்றுநோக்கித் தன் சொல்லை முன்வைக்கிறார். அவருக்கு, ‘யாருடைய மனமும் நோகக் கூடாது’ என்பதுதான். ஆனால், அறம் சார்ந்தவை மட்டுமே நிகழ்த்தப்பட வேண்டும். அதைச் செயல்படுத்தவே அவர் தனக்கு நெருக்கமானவர்களோடும் விலக்கமானவர்களோடும் மாறி மாறிச் சென்று அருகே நிற்கிறார். சகுனியோ தன் திட்டத்தைச் செயலாக்க எதையும் இழக்க எப்போதும் தயார்நிலையில் இருக்கிறார். அவருக்கு எதன் அழிவைப் பற்றியும் எப்போதும் கவலையே இல்லை. ‘தன் திட்டம் செயல்வடிவம் பெற வேண்டும்’ என்பதே அவரின் முதன்மை நோக்கம். அந்தத் திட்டத்துடன்தான் அவர் அஸ்தினபுரிக்குள் நுழைகிறார்.

திருதராஷ்டிரன் அரியணையேற இயலாது என்ற நிலையில் பீஷ்மர் சகுனியைப் பதினெட்டாண்டுகள் இங்கேயே தங்கியிருந்து, காந்தாரியின் மகனை அரியணையேற்றுக என்கிறார். ஒருவேளை திருதராஷ்டிரன் அரியணையேறியிருந்தாலும் சகுனி அஸ்தினபுரியில்தான் தொடர்ந்து இருந்திருப்பார். நிச்சயமாக எண்ணிக்கையற்ற ஆண்டுகள் வரை அவர் அங்குதான் இருந்திருப்பார். காரணம், அவர் தன் அக்கா காந்தாரிக்கு அளித்த வாக்கின் படி, பாரதவர்ஷத்தையே அவளின் காலடியில் வைக்கும்வரை அவர் அஸ்தினபுரியில்தானே இருந்தாக வேண்டும்!.

இந்த மூன்று அறிவுத்திரள்களின் நடுவில்தான் பேரரசி சத்யவதியும் அரசி குந்தியும் அரசி காந்தாரியும் நிலைபெற வேண்டியுள்ளது. இந்தக் கடுமையான பகடையாட்டத்தில் தன் வாழ்நாளில் தான் கண்ட கனவு முழுமையாக நிறைவேறாத நிலையிலேயே பேரரசி சத்யவதி ஆட்டக்களத்தை விட்டு வெளியேறிவிடுகிறார். தன்னுடைய கனவினை நனவாக்கும் திட்டத்தோடு, குந்தி ஆட்டக்களத்தில் இறங்குகிறார். அவளுக்கு எதிராக நின்று களமாட காந்தாரி காத்திருக்கிறார். அவளுக்குப் பெருந்துணையாகச் சகுனி. குந்திக்குத் துணையாக அவளின் குழந்தைகளின் வடிவில் உறைந்திருக்கும் இருக்கும் வான்தேவர்கள்.

‘தன்னை நிலைநிறுத்திக்கொள்வது’ என்பது, எல்லா இடத்திலும் எப்போதும் அறைகூவல்கள் நிறைந்த ஒன்றாகவே அமைந்துவிடுகிறது. ஒருவகையில் பார்த்தால், அந்த அறைகூவல்கள் அனைத்துமே வானத்து தேவர்களிடமிருந்துதான் விடப்படுகின்றனவோ? என்றும் தோன்றுகிறது. மற்றொரு வகையில் பார்த்தால், அந்த அறைகூவல்களை எதிர்கொள்ளும் அனைத்துத் திறனும் ஒவ்வொருவருக்கும் அந்த வானத்துத் தேவர்களே கையளிப்பதாகவும் படுகிறது.

வான் நோக்கித் தனக்குத் தேவையான வல்லமையைக் கோரும் தவளைகளின் வாயொலிகளாகவே, மழைப்பாடலாகவே பீஷ்மர், சகுனி, குந்தி, காந்தாரி போன்றோரின் மன ஏக்கங்கள் இருக்கின்றன. அவர்கள் ஒருவரையொருவர் களத்திலிருந்து வெளியேற்றவே விரும்புகின்றனர். ஆனால், அவர்கள் ஒருபோதும் தாங்களாகக் களத்திலிருந்து வெளியேற விரும்புவதே இல்லை.

பேரரசி சத்யவதி தனக்குத் தேவையான நேரத்தில் பீஷ்மரை அஸ்தினபுரிக்குள் ஏற்பதும் தனக்குத் தேவையில்லாத சமயங்களில் பீஷ்மரை அஸ்தினபுரியைவிட்டு விலக்குவதுமாகத் தொடர்ந்து செயலாற்றுகிறார். அதற்காகப் பீஷ்மர் வருந்துவதேயில்லை. அவர் அஸ்தினபுரியைவிட்டு விலக்கப்படும் போதெல்லாம் உறையிலிட்ட கூர்வாளாகவும் அஸ்தினபுரிக்குள் ஏற்கப்படும் போதெல்லாம் உறையிலிருந்து உருவப்பட்ட கூர்வாளாகவும் தன் வலிமையையும் ஒளியையும் இழக்காமல், நுண்ணறிவின் துடிப்புடனேயே இருக்கிறார்.

பாண்டு தன் தந்தை விசித்திரவீரியனைப் போலவே மிக எளிய உடல்வாகு கொண்டவராக இருக்கிறார். அவர் குந்தியின் தன்னேற்பு விழாவுக்குச் செல்லும்போது, தன்னால் மஞ்சள் அரிசியை எடுத்துத் தூவும் வலிமை மட்டுமே தன்னிடம் இருப்பதாக விதுரனிடம் கூறுகிறார். அதே பாண்டு, வனம்புகுந்து சதசிருங்கத்தில் வாழும்போது, அவர் உடல் வலுவைப் பெறுகிறது. வியாசரின் மரபணு அப்போதுதான் பாண்டுவின் உடலுக்குள் வேலைசெய்வதாகவும் கருத இடமிருக்கிறது.

பாண்டு ஏறத்தாழ காட்டுமனிதராகவே மாறி விடுகிறார். வேட்டையாடுகிறார், குடிலமைக்கிறார், வேள்விகளுக்கு உதவி செய்கிறார், அரணிக் கட்டைகளைச் சேகரித்து, சீர்ப்படுத்துகிறார். அவருக்குத் தவக்குடில் வாழ்வு பிடித்திருக்கிறது. குந்தியின் குழந்தைகளைத் தோளில் ஏற்றிக்கொண்டு, காட்டுக்குள் நடந்து, அலைய அவரால் முடிகிறது. ஆறு ஆண்டுகளில் பாண்டுவின் உடலிலும் உள்ளத்திலும் வியத்தகு மாற்றங்கள் நிகழ்ந்துவிடுகின்றன.

அம்பாலிகையின் கைப்பாவையாக இருந்த பாண்டு, வனத்தில்தான் தன்னை ஆரோக்கியமான மனிதராக உணர்கிறார். ஆனால், செண்பகமலர்கள் சூழ்ந்த நிலத்தில் மாத்ரியுடன் கூடி, முழு மனிதராக மாற முடியாமல், மரணத்தைத் தழுவுகிறார். அதற்கு ஊழ்வினை ஒரு காரணம் என்றாலும் கூட, ‘இளமையில் கிட்டாத உடல் வலு, முதுமையில் கிட்டுவது கடினம்’ என்று கூறுவதுதான் சரியாக இருக்கும்.

‘முதற்கனல்’ நாவலின் இறுதியில் அம்பை தன்னை எரித்துக்கொள்கிறாள். ‘மழைப்பாடல்’ நாவலின் இறுதியில் மாத்ரி எரிபுகுகிறாள். அம்பை திருமணம் புரியாமைக்காகவும் மாத்ரி திருமணம் புரிந்தமைக்காகவும் இதை ஏற்க நேர்கிறது. இதுவும் காலத்தின் நகைமுரண்தான். அம்பையின் நோக்கம் பீஷ்மரை இந்தப் பெருநிலத்திலிருந்து முற்றிலும் நீக்குவதாகவும் மாத்ரியின் நோக்கம் பாண்டுவுக்குச் சுவர்க்கத்தின் வாசலைத் திறந்துவிடுவதற்காகவும் என அமைந்துள்ளது.

‘மழைப்பாடல்’ நாவல் வழியாக நாம் அறியும் அறுதி உண்மை, ‘அழைப்பில்லாமல் எந்த இறையரும் மண்ணில் இறங்காது’ என்பதே. அதனால்தான் வல்லமையைக் கோரும் அழைப்பொலிகள் மண்ணிலிருந்து விண்ணுக்கு எழத் தொடங்கிவிட்டன. இனி, அவற்றைச் செவிமடுத்த தெய்வங்கள் ஒவ்வொன்றாக, வீறுகொண்டு வெவ்வேறு வடிவங்களில் இறங்கி வந்து, களமாடக்கூடும்.

முனைவர் ப. சரவணன், மதுரை.

முந்தைய கட்டுரைவலியெழுத்து
அடுத்த கட்டுரைஆகுதி -கடிதங்கள்-3