முதற்கனல் என் தத்துவநோக்கில்

அன்பு ஜெ,

முதற்கனலில் என்னைக் கவர்ந்த தத்துவார்த்த தருணங்களை இந்தக் கடிதத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

முதற்கனல் என்ற சொல்லே ஒரு கனல் ஒன்று என்னுளிருந்து புறப்படத் தயாராகுவது போல அமைந்தது. அண்ட சராசங்களின் துவக்கப் புள்ளியே கூட ஒரு முதற்கனலாகத் தான் இருந்திருக்க முடியும். அந்தக் கனலின் பிறப்பை மிக நுட்பமாக இந்த நூலின் முதல் அத்தியாயம் எடுத்தியம்புகிறது. இந்த நாவலை வாசிக்கும் போது அந்தக் கனலை அம்பையின் காதலின் கனலோ என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் ஜெ இங்கு முதற்கனலாக சொல்லியிருப்பது சுனந்தையின் காமத்தின் கனலை. ஆம்! அது அங்கு தான் தொடங்குகிறது என்றுணர்ந்த போது என் எண்ணங்கள் மடை மாறியது. மிகப் பெரும் ஓர் சாம்ராஜ்யத்தின் அழிவுக்கான கனலை முதற்கனல் எடுத்தியம்புகிறது.

பிரபஞ்சத்தின் தோற்றுவாய் எல்லா மதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. அறிவியலிலும் சொல்லப்பட்டுள்ளது. பெரும்பான்மையானோர் ஏற்றுக் கொள்ளும் பெருவெடிப்புக் கொள்கையையே கூட என்னால் ததுவார்த்த ரீதியாக ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. பைபிலிலும், குர்ஆனிலும், இந்து மதம் பொதுவாகச் சொல்லும் கடவுள் படைப்பு என்பதும் எப்போதும் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. அதை நாம் எதிர்த்தால் பாவச் செயலாக கருதுவதென்பது கூட என்னை அங்கிருந்து விலகி ஓடவே செய்திருந்தது. எதைச் சொன்னாலும் நான் அதுக்கு முன் என்ன? என்றே நினைத்திருப்பேன்.

இங்கு ஜெ காட்டும் பிரபஞ்சத் தோற்றுவாய் என்னை சிலிக்கச் செய்கிறது. ஏதுமற்ற ஓர் சூனியத்திலிருந்து பிரபஞ்சம் பிறக்கிறது. பிரபஞ்சத்தின் முதல் அசைவு நா-அகத்தின் அசைவாக சித்தரிக்கப்பட்டு “நான் இருக்கிறேன்”; “இனி” என்று விரிகிறது. நான் என்பதே அகங்காரமாகி அதன் அருப்பை நினைத்து பெருமிதம் கொள்வதே அகங்காரமாகி அது பல்லாயிரம் கோடியாக பெருகுகிறது. ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் தோறுவாய் ”இச்சை” என்னும் புள்ளியினின்று பிறப்பெடுக்கிறது என்னும் தத்துவம் என்னுள் கேட்டுக் கொண்ட பல கேள்விக்கான விடையாக அமைந்தது. மேலும் சிந்தித்தேன். சூனியத்திலிருந்து அடுத்து தோன்றுவது ”ஒன்று”. ஒன்றிலிருந்து எண்கள் முடிவில்லாது பெருகிக் கொண்டே செல்கிறது. அதற்கு முற்று என்பது இல்லை. இச்சையும் அப்படித்தானே. இச்சை ஒன்றாலே தான் இப்படி பல்லாயிரமாகப் பெருக முடியும். அப்படியானால் நான் என்பதைக் கடக்க முதலில் இச்சையை விட்டாக வேண்டும். புத்தரும் அதைத்தானே சொல்கிறார். அவர் கண்டடைந்த கரு அதுவாகத்தானே இருக்க முடியும்.  பைபிலில் ஏதேன் தோட்டத்திற்கு வரும் நாகம் கூட இச்சையின் வடிவம் தானே. அதைக் கைகொண்டதால் தானே மனிதன் கடவுளுக்கு நிகரான இடத்தை இழந்தான். கடவுள் தன்மையை ஒருவேளை அடைய வேண்டுமென்றால் நான் விட வேண்டியது இச்சை தானே. இச்சையை விட்டு, நான் என்பதையும் விட்டொழித்து இறுதியில் நான் சென்றடையப் போவது எங்கே? மீண்டும் அந்த ஆதிப்புள்ளியான ஒன்றுமற்ற நிலை.

ஜெ சொல்வதுபோல நான் என்று தொகுத்துக் கொண்டதை விட்டொழிக்கும் ஒரு நிலை. ஏதுமற்ற நிலை. விஷ்ணுபுரத்தின் அஜிதன் உணர்ந்ததே கூட அதைத்தான். அவன் வாழ்வுப் பயணத்தில் தேர்ந்தெடுத்தது என்பது ஞான மார்க்கத்தை. ஒரு வேளை அவன் சென்றடைய வேண்டுவது என்பது ஞானம் என தான் தொகுத்துக் கொண்ட அனைத்தையும் விட்டொழிப்பது. ”துறந்தவர்களுக்கு நான் அடிமை” என்ற உங்களின் இன்னொருவரியையும் இணைத்துக் கொண்டேன்.

இங்ஙனம் இந்த பிரபஞ்சத் தோற்றுவாயின் தத்துவமே என்னை முழுமையாக உள்ளிழுத்து முதற்கனலின் அத்தியாயத்துக்குள் விரைந்து இழுத்துக் கொண்டது. இந்த தத்துவத்தைத் தெரிந்து கொண்டேன் என்று நான் அகந்தையில் அமைந்து விட முடியுமா? முடியாது. ஏனென்றால் இச்சையை விட்டொழிப்பது அத்துனை சுலபமான காரியம் அல்லவே. காவியத்தைன் பயணந்தோறும் அதற்கான வழியையும், ”நான் ”என்பதைக் கண்டறிந்து அதை விட்டொழிக்கவுமான மார்க்கத்தை தேட முடிவெடுத்தேன். இச்சை என்பதின் உருப்பெருக்கத்தை அதன் பிரம்மாண்ட எழுச்சியை காணும் பயணத்தை இந்தப் புள்ளியினின்றே ஆரம்பித்தேன்.

இச்சையை நீங்கள் இங்கே தீமையாகவும் சொல்லவில்லை. ”அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது.” என்றீர்கள். ஞானத்தைப் பற்றிச் சொல்லும்போது ”மண்ணுலகில் ஒவ்வொரு உயிருக்கும் ஞானம் கடமையாக்கப்பட்டுள்ளது” என்றும், ”ஞானம் என்பது அடைவதல்ல, ஒவ்வொன்றாய் இழந்தபின்பு எஞ்சுவது.” என்றீர்கள். கை கொண்ட ஞானத்தை செய்யும் தவறுகளுக்கான தருக்கத்தை உதிர்ப்பதற்காக பயன்படுத்துவதன் சிறுமையையும் கடிகிறீர்கள். இங்ஙனம் பீஷ்மரை, பரசுராமரை, துரோணரை உயர்ந்தோராக்கியது ஞானமே. ஆகையால் பிறப்பு எத்தகையதாயினும் உயர்வு என்பது ஞானத்தாலே வரும் என்று கொண்டேன். தொடங்கிவிட்ட இந்த என் பிறப்பு ஞானத்தை நோக்கி செலுத்த வேண்டியது என்பதையும் உணர்ந்தேன். ஞானத்தைக் கொண்டவன் ஆசையயும் தன்னகங்காரத்தையும் விட்டொழிக்கவில்லையெனில் அதுவே அவனுக்கு விஷமாக அமையும் என்று கூறுகிறீர்கள்.

மேலும் அறம் என்பது என்ன? தன்னறம், சுயதர்மம், தன்னகங்காரத்தைக் கலைவது போன்றவற்றைப்பற்றியும் பேசுகிறீர்கள். அறத்தைப்பற்றி சொல்லும்போது ”மிருகங்கள் நடந்தும், பறவைகள் பறந்தும், புழுக்கள் நெளிந்தும் அறத்தை அறிந்துகொள்கின்றன. அவையறியும் அறம் ஒன்றே” என ஒரு உபகதை மூலம் சொல்லியிருந்தீர்கள். காலங்காலமாக அறம் என்று கடைபிடித்துக் கொண்டிருக்கும் ஒன்றை நோக்கி அடுத்த தலைமுறை திரும்பினின்று அது பிழையெனச் சொல்லும்போது அந்தக்காலம் முடிவுக்கு வந்துவிடுகிறது. என்று விளங்கவைத்த தருணம் எனக்கு மிகவும் அரியது.

”நான்” என்ற ஒன்றைக் கொண்டு சுழலும் மானுட வாழ்க்கையைப் பற்றி பல இடங்களில் சொல்கிறீர்கள். ”நான்” காணுவது என்பது நான் அறிந்தவற்றை மட்டுமே, என்னை முன்னிலைப் படுத்துவதை மட்டுமே, என் ஞானம், அறிவு என்று நான் கொண்டவற்றை மட்டுமே என்பது எத்துனை நிதர்சணமான உண்மை. பிறரில் காண்பதே கூட நான் விரும்பியதை மட்டுமே எனும்போது என் சிறுமையை உணர்ந்து கொண்டேன். என்னை நான் அயலானாகக் காண்பது போலேயே இப்போதெல்லாம் பிறரையும் எந்தவொரு முன் யூகமுமின்றி கண்டு கொண்டிருக்கிறேன். உலகத்து உயிர்கள் அனைத்தும் ஒன்றே எனக் காணும் ஒரு நிலையை எய்தச் செய்கிறீர்கள். வாழும் உலகத்தை இனியதாக்குகிறீர்கள்.

ஞானத்தைவிட தவத்தைவிட உயர்வான ஒன்றைப்பற்றிச் சொல்லும்போது அன்பை/பிரேமையைச் சொல்கிறீர்கள். ”அன்புகொண்டவர்கள் வரமுடியாத ஆழம் என ஏதும் எவரிடமும் இருப்பதில்லை” என்பது எத்துனை நிதர்சணமான உண்மை.

காலத்தைப் பற்றிப் பேசுகையில் அதை மாயையாக்கி நாம் திறந்து கொள்ள வேண்டிய காலம் அகண்டகாலம் என்கிறீர்கள். “முழுமுதல்காலத்தில் அனைத்தும் ஒன்றே. மூவகைக்காலம் என்பது நாம் நம் அகங்காரத்தால் பிரித்துக்கொள்வது மட்டுமே. அகண்டகாலம் நோக்கித் திறக்கும் கண்கள் கொண்டவர்கள் ஞானியர்.” இங்கு தான் காலம் என்னும் பரிமாணத்தின் தோற்றப்பிழையைக் கொண்டு நான்” என்பதி பிரித்தறிந்தேன். இன்னொரு இடத்தில், ”இப்படி இது நிகழ்ந்தாக வேண்டுமென்றிருக்கிறது. இதன் காரணங்கள் நாமறியாத இறந்தகாலத்திலும் காரியங்கள் நாம் அறிய முடியாத எதிர்காலத்திலும் உள்ளன.” என்று சொல்லியிருந்தீர்கள். அறிய முடியாத காலம் என்ற ஒன்றின் இருப்பே ஆணவத்தை முற்றிலும் அழிக்கும் புள்ளியாகக் கொண்டேன். இளைஞனே எவற்றையெல்லாம் அறிய முடியாதோ அவற்றை அறிந்துவிட்டாயா? என்று அக்னிவேசர் சிகண்டியின் முன் கேட்கப்படும் கேள்வி ஆணவத்தை முழுதழிக்கக்கூடியது.

இறுதியாக இந்த நாவலில் நான் கண்டடைந்த அற்புதமான சிந்தனை ஆடிப்பிம்பம் பற்றியது. ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் ஆடிப்பிம்பங்கள் இருக்கின்றன தான். இந்த நாவலின் பிரம்மாண்ட நாயகனான பீஷ்மருக்கான ஆடிப்பிம்பத்தை நீங்கள் சொல்லிக் கொண்டே வந்து பால்ஹிகரை அறிமுகப்படுத்தி இருவரையும் ஆடிப்பிம்பமாக நிறுத்தும் தருணம் சிலிர்க்கச் செய்தது. ”தன் ஆடிப்பாவையிடம் மட்டுமே மனிதர்கள் தோற்கிறார்கள்.” என்னும் வரிகள் மேலும் திறப்பைத் தந்தது.

அக்னிவேசர் சிகண்டிக்கு சொல்லாக கற்றுத் தரும் யாவுமே தனுர்வேதம் கற்பவனுக்கு மட்டுமின்றி எந்தவொரு மாணவனுக்குமானது. புறத்தை வெல்பவனே அகத்தை வெல்பவனாகிறான் என்று கூறிக் கொண்டே வந்து இறுதியில் சிகண்டிக்கு சொல்லும் ஆப்தமந்திரமே இந்த நாவலின் இறுதியில் என்னில் எஞ்சி நின்றது. ”அது நீயே.; மகனே நானே நீ”; “தத்வமசி”.

 

 

இரம்யா.

முந்தைய கட்டுரைஇருதிசையிலும் புதைகுழிகள்
அடுத்த கட்டுரைநித்யா புகைப்படங்கள்