மாலா சின்ஹா- கடிதம்

குருதியின் சதுரங்கம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

குருதியின் சதுரங்கம் ஒரு சுவையான பதிவு. ராகமாலிகா இசைக்குள் பல ராகங்கள் போல மாலா சின்ஹா  மூலம் பல முகங்களை, இனங்களை, இடங்களை  கலைடாஸ்கோப்  சுழற்றி காண்பித்து விட்டீர்கள்.

அறுபதுகளின் சினிமா டைட்டில் கார்டுகளில் முதலில் மாலா சின்ஹா பெயர்தான் வரும். அப்புறம்தான் தர்மேந்திராவின் பெயர். மதன்மோகன் இசையில் ‘ஆப் கி நஸ்ரோ னே சம்ஜா’ மனசை வசியம் செய்யும் பாடல். மாலா சின்ஹா தர்மேந்திராவுடன்  இணைந்து நடித்த இன்னொரு படம் ‘ஆங்க்கேன்’. பாம்பே ரவி இசை. மலையாளியான ரவி தில்லியில் பிறந்து பாலிவுட் சென்று பல அற்புத பாடல்களை தந்தவர். ‘ஆங்க்கேன்’ படத்தில் மாலா சின்ஹா ஒரு ஜப்பானிய பெண்ணாக வருவார்.

”பீம்பளாசி  ராகம்” , நீலம்” – இந்த இரண்டுக்கும் ஏதேனும் தொடர்புண்டா தெரியவில்லை. ”கில்தேன் ஹை குல் யஹான்” ஷர்மிலி படத்தில் ராக்கி நீல சேலையுடன் பாடுகிறார். இதன் தமிழ் பதிப்பு ”ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே”  என்ற பாடல். மேரா சாயா படத்தில் ”நைனோ மேன் பதரா சாயே”   சாதனா நீல சேலை. அப்படியே  பீம்பளாஸ்  நூல் பிடித்துக்கொண்டு ”லகான்” வரை சென்று நிறுத்துவது வழக்கம். ”லகான்” ஏ.ஆர்.ரகுமானின் ”இஸ்லியே ராதா ஜலே” ஒரு மாயாஜாலம். இந்த பாடலின் சாரம் ”கண்ணனும் ராதையும்”.

எனக்கு கர்நாடக சங்கீத பின்னணியெல்லாம் எதுவும் கிடையாது. என் குடும்பத்தில் கர்நாடக சங்கீதம் என்றால் கிலோ எத்தனை என்பார்கள். பீம்பளாசிக்கும் ஆபேரிக்கும் உள்ள பாலத்தை இசைப்பயணம் தொகுதியில் நீல சேலையணிந்து எடுத்துரைத்தவர்  சாருலதா மணி அவர்கள். தியாகராஜர் ”நகுமோ” என ஆபேரியில் புலம்புவது நீல வண்ண ராமனின் விக்ரஹத்தை தொலைத்துவிட்டு.

மாலா சின்ஹா ரசிகன் என்பதால் நானொரு வயதான கிழவன் என நினைக்க வேண்டாம். இசைக்கு மொழியோ வயதோ தடையில்லை என்பதால், மொசார்ட், பீத்தோவன், பாக், ஷுபர்ட், தியாகராஜர் என முன்னூறு வருடங்கள் பின்னோக்கி செல்லும்பொழுது வழியில் மாலா சின்ஹா, சாதனா, வஹீதா ரெஹ்மான், ஷர்மிளா தாகூர் என பலரை சந்திக்கும்படி நேர்கிறது.

நீங்கள் அற்புதமான பழைய பாடல்களை பற்றி பதிவிடும்பொழுது , எதிர்வினை எதுவும் வரவில்லையே என கவலை வேண்டாம்.  நீங்கள் பரிந்துரைக்கும் பாடல்களுக்கு பல ரசிகர்கள் உண்டென நம்புகிறேன். Monday Morning Blues என்பார்கள். திங்கள் காலை பீம்பளாசி ராகம் கேட்ட பின்பு மனம் சுழன்று கொண்டே இருக்கிறது. தலைக்கு மேலே ஆயிரம் வேலை. அலுவலக அல்லலுக்குள் நுழைய வேண்டும்.

குரங்கின் மூளைக்குள் எலக்ட்ரானிக் சிப் செலுத்தி  வீடியோ கேம் விளையாட செய்து விட்டார்கள். Schubert’s Unfinished Symphony யை A.I (செயற்கை நுண்ணறிவு) முடித்து விட்டதாம்.

மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்,
ராஜா.

முந்தைய கட்டுரைடிஜிட்டல் மாயை- கடிதம்
அடுத்த கட்டுரைஎண்ணும்பொழுது- கடிதங்கள்