சுக்கிரி குழுமம் -கடிதம்


ஒரு தொடக்கம், அதன் பரவல்

ஆசிரியருக்கு வணக்கம்,

நலமாக இருக்கிறீர்கள் என்பதை உங்கள் பயணங்கள் மற்றும் நண்பர்கள் சந்திப்புகள் மூலம் உறுதியாகியது.

உங்களது இன்றைய ஒரு தொடக்கம்,பரவல் பதிவை கண்டபின் இதை எழுதுகிறேன். நோய்தொற்று காலத்தின் பலனாக கடந்த ஏப்ரல் மாதம் சுக்கிரி எனும் இலக்கிய குழுமம் உங்கள் நண்பர்களால் துவங்கப்பட்டு உங்களது கதைகளை வாரம்தோறும் விவாதிக்கிறார்கள்.

தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி சுக்கிரி குழுமம் ஒரு படி மேலே போய் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள ஜெயமோகனின் வாசகர்களை ஜூம் மூலம் இணைத்து உங்கள் கதைகளை விவாதிக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு சந்திப்பில் இரு கதைகள் என விவாதிக்க தொடங்கி நடந்து கொண்டிருந்தது. இரண்டு மணிநேரம் மாஸ்டர் ஜெயமோகனின் கதைகளை விவாதித்தபின்பும் நேரம் போதாமையால் இப்போது வாரம் ஒரு கதை என  ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்திய நேரப்படி மாலை ஆறு மணிக்கு சரியாக தொடங்கி எட்டு மணிக்கு மேலும் நீள்கிறது.

இங்கே வெட்டி அரட்டை கிடையாது,கதையிலிருந்து கொஞ்சம் விவாதம் மாறும்போது மட்டுறுத்தல் உண்டு.கலந்துகொள்பவர் அந்த வாரத்திற்கான கதையை கண்டிப்பாக வாசித்துவிட்டு வரவேண்டும்.இருபது ஆண்டுகளுக்கு மேலாக வாசிப்பு பழக்கமுள்ள கூர் இலக்கிய வாசகர்கள் இங்கு பேசிப்பேசி  மேலும் தங்களது வாசிப்பை கூர்மையாக்கினார்கள். இலக்கிய அடிப்படை கூட அறியாமல் மொக்கையாக உள்ளே வந்து விவாதத்தில் கலந்து இலக்கியம் எப்படி வாசிக்க வேண்டும், வாசிப்பில் விடுபட்டவை எவை என சுக்கிரி மூலம் நானும் கற்றுக்கொண்டேன்.

பெண்களும் இந்த விவாதங்களில் கலந்து கொண்டு விவாதித்ததோடு மட்டுமல்லாமல், தங்களது திறமையையும் கண்டு கொண்டபின், வீட்டிலும் அலுவலகத்திலும் திறம்பட செயல்பட இந்த விவாதாங்கள் உதவி புரிந்ததாக சொல்கிறார்கள்.

ஒவ்வொரு வாரமும் குறைந்தது இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். கடந்த சனிக்கிழமை வரை உங்களது நூறு கதைகளிலிருந்து  எழுபது கதைகளை விவாதித்துள்ளோம் (ஆகாயம்). விவாதம் துவங்கும் இந்திய நேரம் மாலை ஆறு மணி ஆஸ்திரேலியாவில் இருக்கும் நண்பர் கார்த்திக்கு பின்னிரவு, அமெரிக்க நண்பர்களுக்கு அதிகாலை, ஹாங்காங் ஜெகதீஸ் மற்றும் சிங்கப்பூர் சுபாவிற்கும் பின்னிரவு நேரம் ஆனாலும் உற்சாகத்துடனும் முன்பே நூறு கதைகளையும் வாசித்திருந்தாலும் விவாதிற்காக மீள் வாசிப்பு செய்துவிட்டு பங்கேற்கிறார்கள்.

இதனால் வாசிப்பில் தங்களை மேம்படுத்தியதல்லாமல் உலகம் முழுவதும் ஒரு நட்பை உருவாக்கி தந்துள்ளீர்கள்.உலகின் எந்த நிலத்தில் பாதம் பட்டாலும் அங்கே உங்கள் வாசகர் ஒருவர் இருக்கிறார்.என்னுடைய கடந்த ஒரு மாத பயணத்தில் வங்காள விரிகுடாவில் துவங்கி இந்திய பெருங்கடல் வந்தபோது இலங்கை எழுத்தாளர் ரிஷான் ஷெரிப் “வாய்ப்பிருந்தால் இறங்குங்கள் வீட்டிற்கு வந்து விட்டு போங்கள் என்றார். வளைகுடா நாடுகளை கடந்து ஐரோப்பா வந்தபோது லண்டன் ராஜேஷ் அழைத்தார். பதினைந்து நாட்கள் கழிந்து அமெரிக்கா செல்லும்போது அங்கேயும் உங்கள் நண்பர்கள் இருக்கிறார்கள் நோய்தொற்று காலத்திற்கு பின் அனைவரையும் சந்திப்பேன். உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் பசிக்கு உணவும், தங்குவதற்கு இடமும் எனக்கு உறுதி.

இப்படி இலக்கியம் மட்டும் நீங்கள் கற்பித்ததல்லாமல் உலகம் முழுவதும் நண்பர்களையும் ஏற்படுத்தி தந்து உள்ளீர்கள். நன்றி சொல்லி கடந்து செல்ல மாட்டேன். காலத்திற்கும் பிடித்து கொள்வேன்.

விஷ்ணுபுரம் என்னும் அமைப்பு ஒரு தொடக்கம். அதிலிருந்து தொடங்கிய நண்பர்கள் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு இலக்கியக்கூடுகைகளை நடத்தி வருகிறார்கள். சென்னை, பாண்டிச்சேரி ஆகிய ஊர்களில் வெண்முரசு விவாதக்கூட்டத்தை நடத்திவருகிறார்கள். கோவையில் வெண்முரசு விவாதக்கூட்டம் ஒன்று இம்மாதம் முதல் தொடங்கி நடைபெறுகிறது.

உங்கள் வரியிலிருந்து வெவ்வேறு ஊர்களில் மட்டுமல்ல வெவ்வேறு நாடுகளிலும் இலக்கிய கூடுகைகள் நடக்கிறது. அமெரிக்காவில் மூத்தவர் சௌந்தர் மற்றும் நண்பர்கள் இணைந்து விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

சுக்கிரியில் பத்துலட்சம் காலடிகள் விவாதத்தின் போது நீங்களும் கலந்து சிறப்பித்தீர்கள். வரும் சனிக்கிழமை சுக்கிரியில் தங்கபுத்தகம் கதை விவாதம் நடைபெறும்.

தொடர்புக்கு .

சந்தோஷ்-99653-15137

ஷாகுல் ஹமீது

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) 

முந்தைய கட்டுரைஅமெரிக்காவில் ஃபாஸிசம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைரா. செந்தில்குமார் விழா -உரை