ஃபாஸிசம், தாராளவாதம்

அமெரிக்காவில் ஃபாஸிசம்

அன்புள்ள ஆசானுக்கு

சீனுவின் கடிதத்தை தளத்தில் படித்தேன்,  அவரது கருதும் உங்கள் பதிலும் இங்கே அமெரிக்காவில் வசிக்கும் நம்மவர்களின் முக்கியமான நரம்பை தொட்டு விடும் என்றுதான் நினைக்கிறேன், எதிர் வினைகளை வாசிக்க ஆவலாக உள்ளேன்.

எனக்கு தனிப்பட்ட முறையில் அமெரிக்காவில் இன வெறி பற்றி அதிர்ச்சி இல்லை,  நாஜி இனவெறிக்கு அறிவியல் முத்திரை குத்துவதற்காக உபயோகிக்கப்பட்ட Eugenics என்ற சித்தாந்தம் செழித்து வளர்ந்த நாடு இது, சில வகைகளில் ஜெர்மானிய இனவாதிகளுக்கு முன்னோடிகள் கூட., பலருக்கும் தெரிந்த விஷயம் தான் இது.

ஆனால் என் தனிப்பட்ட அனுபவத்தில் ஒப்பு நோக்க அமெரிக்காவில் ஐரோப்பாவை விட தினசரி வாழ்க்கையில் இனவாதம் குறைவு என்று தான் சொல்வேன், உதாரணத்துக்கு, கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் ஐரோப்பிய நகரங்களில் நான் வேலை செய்யும் போது பாஸ்போர்ட்டை பாக்கெட்டில் வைக்காமல் வெளியே கிளம்புவதே இல்லை, எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி கேட்டு வாங்கி சோதனை செய்வார்கள், நம் தோல் நிறம் அப்படி.  வாங்கி பார்த்து புரியாமல் திருப்பி கொடுப்பார்கள்,  என்னது கணினி பொறியாளனா?  அதுவும் அந்த நிறுவனத்திலா? அவர்கள் எதிர்பார்ப்பது ஈழ அகதியை, பாஸ்போர்ட்டை வாங்கி கையில் வைத்துக்கொண்டு அதை பார்ப்பதற்கு முன் எங்கிருந்து வருகிறாய் என்று கேட்ப்பார்கள்.  அவர்களை குழப்புவதற்காக வேண்டுமென்றே ‘இந்தியாவில் தமிழ் நாட்டிலிருந்து’ என்று சேர்த்துச் சொல்வேன். சிக்கலில் மாட்டினால் நிறுவனம் எப்படியும் துணை வரும் என்ற தைரியம்,

ஆனால் இங்கே அமெரிக்காவில் நான் வசிக்கும் சியாட்டில் நகரத்தில் போலிஸ் துறைக்கு யாருடைய குடியுரிமை ஆவணங்களையும் பரிசோதிக்க உரிமை  இல்லை. இங்கே வந்த புதிதில் முதல் முறை என் காதலியுடன்(இப்போது மனைவி) டேட்டிங் போன போது நான் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து எதையோ எடுக்க கீழே விழுந்த  பாஸ்போர்ட்டை பார்த்து “உனக்கென்ன பைத்தியமா?” என்று கேட்டாள், காரணம் சொன்னதும் சிரித்து விட்டாள்,  அவள் இங்கேயே வளர்ந்த இந்தியப்பெண். முறை தவறிய  குடியேறிகளுக்கான சரணாலய நகரங்கள் மிக அதிகமாக உள்ளது இங்கே அமெரிக்காவில் தான்(https://en.wikipedia.org/wiki/Sanctuary_city)

தாராளவாதச் சிந்தனையை ஏன் கிறித்தவ மதவெறியின் இன்றைய அவதாரம் என்று சொல்கிறீர்கள் என்று விளங்கவில்லை, ஒற்றுமைகள்  புரிகிறது, இன்று தீவிர தராளவாதியாக உலகெங்கும் ஜனநாயகத்தை மனித உரிமையை பரப்பி  உலக நாடுகளை மீட்டெடுக்க இயங்கும் ஒருவரின் கடந்த கால இடம் கிறிஸ்தவ மிசனரிகள் தான்.

ஆனால் உண்மையான  தராளவாதிகளின் தர்க்க முறைமைகளும், சமரசமோ கருணையோ அற்ற சுய பரிசோதனைகளும் அவர்களை அறிவியக்கங்களுக்கு அருகே அல்லவா வைக்கின்றன? அவர்களின் தாட்சண்யமே அற்ற சுய கட்டுடைப்புகளை கண்டு பல முறை வியந்துள்ளேன், ஒரு உதாரணம் அவர்களின் கருத்து முகங்களில் ஒன்றான newyorkerஇல் வந்த David Thoreau பற்றிய இந்த கட்டுடைப்பு கட்டுரை (https://www.newyorker.com/magazine/2015/10/19/pond-scum?intcid=mod-most-popular),  இதன் தலைப்பை இப்போது மாற்றி விட்டார்கள் உண்மையான தலைப்பு “Pond Scum”, வாதம் வாதமாக எடுத்து வைத்து அவரை ஒரு பொய்யன் என்று சொல்லுகிறார்கள். பொறுக்கி என்ற தலைப்பில் கட்டுரை எழுதுகிறார்கள்,  அவர் இவர்களின் முன்னோடி அல்லவா?  தவறாக புரிந்து கொண்டிருக்கிறேனா?

நீங்கள் குறிப்பிடும் அறிவியக்கத்தின் அரசியல்  கிளைக்கருத்து தானே  தாராளவாதம் ?  இதைப்பற்றி முன்னரே எழுதி இருக்கிறீர்களா என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.

அன்புடன்
ஷங்கர் பிரதாப்

அன்புள்ள சங்கர்

அமெரிக்கா- ஐரோப்பாவின் தாராளவாதம்[ லிபரலிசம்] மனித உரிமைகளுக்காகவும், அடிப்படை ஜனநாயகப் பண்புகளுக்காகவும் நிலைகொள்வது என்பதிலும்; இனவெறி நிறவெறி போன்றவற்றுக்கு எதிரான சக்தி அது என்பதிலும் எனக்கு ஐயமில்லை. அதன் புறவயமான தர்க்கமுறை, அதன் அறிவுவழிபாட்டுத்தன்மை உலகுக்கு வழிகாட்டியானது. ஆகவே என்றும் அதை நான் ஆதரிக்கவே செய்வேன்.

ஆனால் அதன் அடியில், அதில் ஒருசாராரிடம், கீழைநாட்டு தொன்மையான பண்பாடுகள் மீதான ஒவ்வாமை இருந்துகொண்டே இருப்பதைப் பார்க்கலாம். இந்து பௌத்த கலாச்சாரங்களை, ஆப்ரிக்க பழங்குடிப் பண்பாடுகளை அவர்கள் மானுடநேயத்திற்கு எதிரானவையாகவும் தீமையின் தொகைகளாகவும் எந்த அடிப்படை அறிதலுமின்றி மிக எளிதாகச் சித்தரிப்பார்கள்.

சென்ற பத்தாண்டுகளில் அமெரிக்க ஐரோப்பியச் சூழலில் கீழைநாடுகள் பற்றி பேசப்பட்ட எல்லாச் செய்திகளும் இந்நாடுகளை கீழ்மைப்படுத்திக் காட்டுபவையாக, அதன்பொருட்டு மிகைப்படுத்தப்பட்டவையாக மட்டுமே இருப்பதை கொஞ்சம் கவனித்தால் நீங்கள் காணலாம். எந்தவகையான நல்ல  விஷயங்களும் இந்நாடுகள், இப்பண்பாடுகளைப்பற்றி ஐரோப்பிய- அமெரிக்கப் பொதுவெளியில் பேசப்பட்டிருக்காது.

இவையெல்லாம் ‘மனிதாபிமான’  ‘ஜனநாயக’ அடிப்படையில் லிபரல்களால் பேசப்பட்டவையாகவே இருக்கும். காரணம், ‘பண்பட்ட மேலைப்பண்பாடு x பண்படாத பிறர்’ என்னும் பார்வை அவர்களிடம் ஆழத்தில் உள்ளது. பலசமயம் லிபரலிசம் என்பது மேட்டிமைப்பார்வையின் முகமூடி.

உண்மையில் கீழைநாடுகளைப் பற்றி இன்று உலகம் முழுக்க ஓங்கியிருக்கும் பார்வை இதுதான்.இந்த லிபரல்கள் கீழைநாட்டுப் பண்பாடுகளைப் பற்றிய ‘உண்மைகளை’ச் சொல்வனவாகக் கொண்டாடும் எல்லா இலக்கிய ஆக்கங்களும் இப்பண்பாடுகள் மேல் அறமற்ற தாக்குதல்களை தொடுக்கும், இழிவுசெய்யும் தன்மைகொண்டவைதான். மாறாக உதாரணம் சொல்ல ஒரு படைப்பு, ஒரே ஒரு படைப்பு கூட சென்ற அரைநூற்றாண்டில் கண்ணுக்குப் படவில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கீழைநாட்டுப் பண்பாடுகள் மீது அமெரிக்காவும் ஐரோப்பாவும் கொண்டிருந்த ஆர்வத்தையும் மதிப்பையும் இந்த லிபரல்கள் நொறுக்கிவிட்டிருக்கிறார்கள்.இப்பார்வையின் சாராம்சமாக இருப்பது கிறிஸ்தவ உலகப்பார்வைதான். கிறிஸ்தவம், குறிப்பாக சீர்திருத்தவாத கிறிஸ்தவம், உருவாக்கிய ’நாம் – பிறர்’ என்னும் பார்வை இது. கிறிஸ்தவம் என்னதான் இருந்தாலும் மனிதாபிமானம் கொண்டது ‘மற்றவை’ அப்படி அல்ல என்ற நம்பிக்கையே மேலைநாட்டு லிபரல்களிடம் உள்ளது.

இந்தப்பார்வையை உலகைவெல்ல விரும்பும் கிறிஸ்தவ ஆதிக்கம் எப்போதும் பயன்படுத்திக்கொள்கிறது. இந்த லிபரல்பார்வை கீழைநாடுகளில் ஜனநாயகம், மனிதாபிமானம், மனித உரிமை என்னும் கருத்துக்களினூடாக பரப்பப் படுகிறது. அதற்குப் பெரும் நிதி அளிக்கப்படுகிறது. அதை முன்வைக்கும் அறிவுஜீவிகள் உருவாக்கப்படுகிறார்கள். நிதியால் இங்குள்ள கல்வித்துறை ஊடுருவப்பட்டு அக்கருத்துக்கள் நிறுவப்படுகின்றன. ஊடகங்கள் கைப்பற்றப்பட்டு அக்கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.

லிபரல் கருத்துக்களின் தேவையை நாம் நிராகரிக்க முடியாது. அவையே இங்கே அடிப்படை மனித உரிமைக்கான குரல்கள். ஜனநாயகத்திற்கான விசைகள். ஆனால் கூடவே ‘பேக்கேஜில்’ ஒருபகுதியாக இன்னொன்றும் வருகிறது. ஐரோப்ப்பிய அமெரிக்க லிபரல்களிடம் இருக்கும் பிறநாட்டு தொல்மரபுகளை எதிர்மறையாகப் பார்க்கும் மேட்டிமைப்பார்வை.

இவர்களால் கீழைநாடுகளின் பண்பாட்டு அடிப்படைகள் எதிர்மறையாக சித்தரிக்கப்படுகின்றன. அவை இழிவானவை, தீங்கானவை, தேங்கிப்போனவை என்ற சித்திரம் உருவாக்கப்படுகிறது. அதை ஏற்கும் அம்மக்கள் தங்கள் தொல்மரபுகளின்மேல் கசப்பும் எள்ளலும் கொள்கிறார்கள். இதை நம்மைச் சுற்றிக் காணலாம். ஒருவர் அமெரிக்க- ஐரோப்பிய லிபரலிசத்தை ஏற்றவர் என்றால் அவர் நம் மரபுகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ஏளனம் செய்து வசைபாடுபவராகவே இருப்பார். அவருக்கு தொல்மரபு வரலாறு எதுவுமே தெரிந்துமிருக்காது, ஆனால் கசப்புமட்டும் இருக்கும்.

இந்த கசப்புணர்வுகளை இங்கே வளர்த்து, உடனடியாக அறுவடை செய்பவர்கள் கிறித்தவ மதமாற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களே. ஜப்பான்,கொரியா, இலங்கை,வியட்நாம், பிலிப்பைன்ஸ், கம்போடியா, இந்தியா என கீழைநாடுகள் முழுக்க பௌத்தமும் இந்துமதமும் இப்படி vilify செய்யப்பட்டன, செய்யப்படுகின்றன.

அந்தத் தொல்மரபுகள் அளித்த ஆன்மிகம் அழிக்கப்பட்டுவிட்ட வெற்றிடத்தில் இந்நாடுகளில் கிறிஸ்தவம் பெருகுகிறது. ஏனென்றால் மக்களுக்கு ஆன்மிகம் தேவை. பலசமயம் அது அவர்களின் தெரிவாக இருக்காது, அவர்களுக்கு எது அளிக்கப்படுகிறதோ எது பிரச்சாரம்செய்யப்படுகிறதோ அதுவாகவே இருக்கும்.

உதாரணமாக, தென்கொரியா போன்ற நாடுகளில் பௌத்தம் எதிர்மறையாகச் சித்தரிக்கப்பட்டு, படிப்படையாக ‘நாகரீகமற்றது’ என்று காட்டப்பட்டு, அழிக்கப்பட்டது. அந்த இடத்தில் மூர்க்கமான, மூடநம்பிக்கை மலிந்த ஒருவகை கிறிஸ்தவம் வேரூன்றிவிட்டிருக்கிறது. அது லிபரல்களால் செய்யப்பட்ட அழிவு. ஆனால் அதைப்பற்றி அமெரிக்க- ஐரோப்பிய லிபரல்களுக்கு புகார்கள் இல்லை. அவர்கள் பலர் அதன் ஆதரவாளர்களாகவும் இருக்கிறார்கள். தென்கொரியா ‘நவீன’ப்படுத்தப்பட்டதாகவே அவர்கள் நம்புகிறார்கள்.

நான் தாராளவாதத்தையே ஏற்கிறேன். என் இலட்சியச் சிந்தனையாளர் பலர் அமெரிக்க- ஐரோப்பிய தாராளவாதிகளே. அவர்களை நான் எந்நிலையிலும் நிராகரிக்க மாட்டேன். இந்தியாவின் அல்லது கீழைநாடுகளின் அடிப்படைவாதம், பழமைவாதம் இரண்டையும் நிராகரிக்கிறேன். அவற்றுக்கு எதிரான சக்தியாக மேலைநாட்டு தாராளவாதத்தைப் பார்க்கிறேன்

கூடவே லிபரலிசத்தின் இந்த மேட்டிமைப்பார்வை, அது உருவாக்கும் அழிவு பற்றிய கவனமும் நமக்குத்தேவை என்று சொல்வேன்.

ஜெ

முந்தைய கட்டுரைசுனில் கிருஷ்ணனின் “விஷக்கிணறு” வெளியீடு
அடுத்த கட்டுரைபதியெழுதல்