மேடையர்களின் சொல்லாராய்ச்சி

அகோர நரசிம்மர்

அருகாமை

அன்புள்ள ஜெ

கரு.பழனியப்பன் தொலைக்காட்சியில் நடத்தும் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதில் அருகில் என்பதற்கு நேர் எதிர்ச்சொல் அருகாமை என்கிறார். அதாவது அதன்பொருள் சேய்மையாம். அகோரம் என்பது கோரம் என்பதற்கு எதிர்ப்பதம் என்கிறார். அத்தனை தன்னம்பிக்கையுடன் அத்தனை நையாண்டியுடன் அதைச் சொல்கிறார். மொழியறிவற்ற இளைஞர்கள் அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சீண்டி வசைபாடி நக்கலாக இதையெல்லாம் சொல்கிறார்.

அருகாமை என்பதைப்பற்றி நீங்கள் எழுதிய குறிப்பு நினைவுக்கு வந்தது.[அருகாமை] இணையம் குப்பைக்கூடை என்கிறார். இவர் நடத்தும் டிவி நிகழ்ச்சிகள் மாபெரும் குப்பைக்கூடைகள். இவர் சொல்வதெல்லாம் இணையத்திலிருந்து பொறுக்கி அங்கே கொண்டுசெல்லும் குப்பைமலைகள்.

இவர்கள்தான் இன்று தமிழுக்கு கற்பிக்கிறார்கள்

எம்.ராஜேந்திரன்

அகோர வீரபத்ரர்

அன்புள்ள ராஜேந்திரன்,

எப்போதும் கற்றுக்கொண்டிருப்பவன் அறிஞன். அவனே கற்பிக்கவும் தகுதி கொண்டவன். அவனுக்கு தான் கற்றவற்றின்மேல் சற்று ஐயமும், மேலும் கற்கவேண்டியவை உள்ளன என்னும் எண்ணமும் இருக்கும்.

அருகாமை என்பது அருகில் என்பதற்கு எதிர்ச்சொல் என்று சொல்லும்முன் பொருட்படுத்தத்தக்க தமிழறிஞர்கள் எவரேனும் அதற்கு சான்று உரைத்தது உண்டா என்று பார்த்திருக்கலாம். தனித்தமிழறிஞர்களான மறைமலை அடிகள் உட்பட பலரும் அச்சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை இணையத்திலேயே தேடிக்கண்டடைந்திருக்கலாம். குறைந்தது, பேரகராதியையாவது பார்த்திருக்கலாம்

கோரம் என்பது சம்ஸ்கிருதச்சொல். [ஹோரம்] உண்மையில் அது சொல் அல்ல, ஓர் ஒலிவெளிப்பாடுதான். பயங்கரமானது என்று பொருள்.அழகற்றது என்றல்ல. பேச்சுவழக்கில் நாம் அதை நாம் கோரம் என்று ஆக்கிக்கொண்டோம்.கோரம் என்றால் அச்சமூட்டுவது என்றே பேச்சுவழக்கிலும் பொருள். சிலர் அழகற்றது என்ற பொருளிலும் பயன்படுத்துவார்கள்.

சம்ஸ்கிருதத்தில்தான் அ என்பது எதிர்மறைப்பொருளில் சேர்க்கப்படுகிறது. உதாரணம் சுபம் – அசுபம். தமிழில் அவ்விலக்கணம் இல்லை. ஆனால் சம்ஸ்கிருதத்தில்கூட அ என்பது எப்போதும் எதிர்மறைப்பொருளில் சேர்க்கப்படுவதில்லை. அ என்னும் ஒலி வியப்பின் ஒலியாகவும் சேர்க்கப்படும். அவ்வண்ணம்தான் ஹோரம் அஹோரம் ஆகிறது.

இந்துக்களுக்குத் தெரிந்திருக்கும் அஹோர நரசிம்மர், அஹோர வீரபத்ரர் போன்ற தெய்வங்களின் பெயர்களை. பயங்கரமான, உக்கிரமான என்றுதான் பொருள். பயங்கரமற்ற உக்கிரமற்ற என்று பொருள் இல்லை. இரணியனின் குடலை உருவிக்கொண்டிருக்கும் நரசிம்மரே பொதுவாக அகோரநரசிம்மவடிவம். அசுரனைக் கொன்று வெறிகொண்டு நிற்கும் வீரபத்ரர் அகோரவீரபத்ரர் எனப்படுகிறார்.

அஹோர என்னும் சொல்லின் தமிழ் மரூஊ தான் வாய்மொழியில் அகோரம் என்று புழங்குகிறது.தமிழிலும் அச்சொல்லுக்கு அசிங்கமான என்று பொருள் இல்லை. கொடூரமான என்றுதான் பொருள். முகம் அகோரமாக இருந்தது என்றால் கொடூரமாக இருந்தது என்றுதான் குறிப்பு.

வாய்மொழிப் புழக்கமாக உள்ள சொற்களின் முதல்வடிவை கண்டடைவதென்பது சொல்லாய்விலும், நாட்டாரியலிலும் மிகப்பெரிய இடம் கொண்ட அறிவுச் செயல்பாடு. அதற்குரிய ஆய்வுநெறிகள் பல உள்ளன.முதல் நெறி, மக்களின் மொழிமேல் மதிப்பு வேண்டும் என்பதுதான். வரலாற்றையும் பண்பாட்டையும் வட்டாரத்தையும் கருத்தில்கொண்டு பொருள்கொள்ளவேண்டும் என்பது அடுத்த நெறி.

மக்களின் மொழி என்பது ஒரு மாபெரும் அறிவுத்தொகை. அதன் திரிபுகளும் சிதைவுகளும்கூட அறிவியக்கத்தையும் பண்பாட்டுச்செயல்பாட்டையும் காட்டுவனதான். ஆகவேதான் மக்கள்மொழியை பேரறிஞர்கள்கூட திருத்தக்கூடாது, அதை ஆராய மட்டுமே அறிஞர்களுக்கு உரிமை என்று இன்று சொல்லப்படுகிறது. அதற்கு அறிஞர்கள் தங்கள் போக்கில் விளக்கம் அளிப்பது ஒரு பண்பாட்டு அழிப்பு நடவடிக்கை.

மக்கள்மொழியில் மொழிக்கலப்பு இருக்கும். மொழித்திரிபு இருக்கும். அந்த மொழிக்கலப்புகள் பண்பாட்டு பரிமாற்றத்தின் வரலாற்றைக் காட்டும் சான்றுகள். திரிபுகள் பண்பாட்டு புழக்கத்தின் தடங்கள். தூய்மைவாதிகளான அறிஞர்கள் அதை தூயமொழியாக ஆக்குவதும், அயல்மொழிச் சொல்லின் திரிபை வளைத்து ஒடித்து அதெல்லாம் தமிழே என நிறுவமுயல்வதும்கூட பண்பாட்டை அழிப்பதே.

அண்மையில் நான் பேசிக்கொண்டிருந்த ஓர் எடுத்துக்காட்டு. ‘கேவலம்’ என்ற சொல் தமிழில் கீழ்மை என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. களியக்காவிளைக்கு அப்பால், கேரளத்திற்குச் சென்றால் அதற்கு ‘வெறும்’ என்றுதான் பொருள். ‘ஞான் கேவலம் ஒரு மலையாளி’ என்று ஒருவன் சொன்னால் “நான் வெறுமொரு மலையாளி’ என்றே பொருள்

உண்மையில்  ‘கேவல’ என்ற அந்த சம்ஸ்கிருதச் சொல்லின் பொருள்  ’எஞ்சுவது’, ‘தான் மட்டுமே ஆனது’  ‘வெறும்’ என்பதுதான். ஆகவேதான் சைவசித்தாந்தத்தில் வீடுபேறுக்கு ‘கைவல்யம்’ என்று சொல் உள்ளது. கைவல்யநவநீதம் போன்ற நூல்களே இங்குள்ளன.

ஆனால் இங்கே பேச்சுவழக்கில் கேவலம் என்றால் கீழ்மை என ஆகியிருக்கிறது. அது மக்களுக்கு அறிவில்லாமையால் பேசப்படுவது என சொல்பவன் அறிஞனல்ல, வெறும் ஆணவம்கொண்ட அறிவிலி. மக்கள் ஏன் அதைச் சொல்கிறார்கள் என ஆராய்பவனே அறிஞன், ஆய்வாளன்

தமிழ்ப்பண்பாட்டுச் சூழலில் தனித்துவிடப்படுதல், கைவிடப்படுதலே உண்மையான கீழ்மை என இருந்திருக்கலாம். கேவலப்படுதல் என்றால் தனிமைகொள்ளுதல், பிறரால் ஒதுக்கப்படுதல். அதன்மேல் பெரும் ஒவ்வாமை இருந்திருக்கலாம். வனத்தில் அலைந்தாலும் இனத்தில் அடைய விரும்புபவன் தமிழன். அதிலிருந்து கேவலம் என்பதுதான் கீழ்மை என ஆகியிருக்கலாம். இது தமிழ்ப்பண்பாட்டின் நுண்ணிய உளநிலை ஒன்றைநோக்கி சுட்டுகிறது. இதை உணர்வதே மொழியாராய்ச்சியின் வழிமுறை. அதை பண்பாட்டாய்வாளர்களே செய்யமுடியும்.

ஆனால் இங்கே எந்த அடிப்படைவாசிப்பும், எந்த அறிவுப்பின்புலமும், எந்த பண்பாட்டுப்பயிற்சியும் இல்லாத அசட்டு மேடைப்பேச்சாளர்கள் தொடர்ந்து மக்கள்மொழியை நையாண்டி செய்கிறார்கள். அவற்றை தங்களுக்கு தோன்றியவகையில் திருத்துகிறார்கள், விளக்குகிறார்கள். இன்று தமிழகமெங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாபெரும் அறிவுத்தளப் பேரழிவு இது.

ஜெ

கனி

இமையம் என்னும் சொல்

அருகாமை- கடிதங்கள்

கெட்டவார்த்தைகள்

ஏன் தமிழ்ச்சொற்கள்?

மூட்டை

தாலப்பொலி: ஒருகடிதம்

திதலையும் பசலையும்

கந்து

முந்தைய கட்டுரைரா. செந்தில்குமார் விழா -உரை
அடுத்த கட்டுரைஇமைக்கணம் என்னும் மெய்நிகரி