நிலத்தை வாசிப்பது- கடிதங்கள்

இலக்கியத்தின் நிலக்காட்சிகளை காண…

அன்புள்ள ஜெ,

இலக்கியத்தின் நிலக்காட்சிகளை காண பதிவை வாசித்தேன். அந்த கேள்வியில் இருந்து இன்று வெகுதொலைவில் நிற்பதாக உணர்கிறேன். அதற்கு பதில் வரும் என்பதை நினைக்கவேயில்லை. இன்று படிக்கும் முன்னால் கூட என் கேள்வியாக தான் இருக்கும் என தோன்றவேயில்லை.

நீங்கள் சொல்வது போல எனக்கும் அப்படிப்பட்ட கனவுகள் வந்ததுண்டு. பிரமாண்டமான கோயில்கள், பெரும் கடலைகள், அடர் காடு, பள்ளத்தாக்கு நதிகள் என பல உண்டு. உண்மையில் இவை எவற்றையுமே நான் நேரில் பார்த்தது இல்லை. ஒவ்வொருமுறையும் அந்த கனவுகளை கண்டு எழுகையிலும் வியப்பில் பிரம்மித்து விடுவேன். அத்தனை துல்லியமாக வேறெங்கும் பார்த்தது இல்லை.

அன்று அக்கேள்வியை கேட்கையில் வெண்முரசு வாசிக்க தொடங்கவில்லை. இன்று வெண்முரசில் இந்திர நீலத்தின் துவாரகையில் இருக்கிறேன். ஆரம்பத்தில் சொற்கள் காட்சிகள் ஆவதில் தடை இருந்தது. ஆனால் நீலத்தை தொட்டதும் இருந்த சிறிய தடைகளும் உடைந்துவிட்டன. முதல் முறையாக கரியவனின் யாதவர் குலச்செல்வத்தின் உலகளந்தவனின் பாதங்களில் ராதையாக சென்றமர்ந்து வாரியெடுத்து என் கண்ணனுக்கு முலையூட்டி மகிழ்ந்தேன். இன்று வாசிக்கையில் ஒவ்வொன்றும் கணவேன்றே காண்கிறேன். மேலும் இந்த கனவில் உச்சம் சென்று தொடவே, ஆழ்திருக்கவே விரும்புகிறேன்.

அன்புடன்

சக்திவேல்

 

அன்புள்ள ஜெ

இலக்கியத்தில் நிலக்காட்சிகளைக் காண்பது என்ற கட்டுரை எனக்கு மிக உதவியானது. அது என்னுடைய பல சந்தேகங்களைத் தீர்த்துவைத்தது. உண்மையில் வாசிக்கத் தொடங்கும்போது எனக்கு இந்தச் சந்தேகம் இருந்தது. கதையாசிரியர் ஒரு நிலத்தைச் சொல்கிறாரே, நாம் அதை வாசிக்கவில்லையே, என்ன செய்வது என்று யோசித்திருந்தேன். நானே கற்பனைசெய்து கொண்டால் அது நல்ல வாசிப்பு அல்ல என்று தோன்றியது.ஆனால் என்னால் கற்பனைசெய்யாமல் வாசிக்கமுடியாது. நிறைய சந்தர்ப்பங்களில் என் கற்பனை அளவுக்கு அந்த உண்மையான காட்சிகள் இல்லை என்றும் பட்டது

உங்கள் கட்டுரையில் இருந்து என் வாசிப்பே சிறந்த வாசிப்பு, இப்படித்தான் வாசிக்கமுடியும் என்று தெரிந்துகொண்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி

செல்வக்குமார் எம்

முந்தைய கட்டுரைநடனம்
அடுத்த கட்டுரைவிதிசமைப்பவர் பற்றி மீண்டும்