ஈழத்தமிழ் எழுத்தாளரும் சிற்றிதழாளருமான டொமினிக் ஜீவா 28-1-2021 அன்று தன் 94 ஆவது அகவையில் மறைந்தார். ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். முற்போக்கு இலக்கியத்திற்காக மல்லிகை என்னும் மாத இதழை நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நடத்திவந்தார்.
ஈழ இலக்கியத்தின் பல குறிப்பிடத்தக்க படைப்புக்கள் மல்லிகையில் வெளியாகியிருக்கின்றன. பல ஆண்டுகள் மல்லிகை எனக்கு தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தது. நான் வாசிக்கநேர்ந்தபோது அதன் பொற்காலம் முடிவுற்றுவிட்டிருந்தது. பெரும்பாலும் பயிற்சியற்ற தொடக்கநிலை எழுத்துக்களே அதில் வெளியாகிவந்தன.மல்லிகையில் ஜீவாவின் கேள்விபதில்கள் கூர்மையானவை.
ஜீவா எழுதிய தொடக்ககாலச் சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை என்று நண்பர்கள் சொல்கிறார்கள். நான் வாசித்தவகையில் அவை எளிமையான முற்போக்குக் கதைகளே. ஆனால் அவருடைய தன்வரலாற்றுக் குறிப்புகள் நேர்த்தியானவை. அவர் சென்னை வந்ததை ஒட்டி எழுதிய ஒரு கட்டுரையின் சுருக்கம் எழுபதுகளில் குமுதத்தில் வெளிவந்தது. அதன்வழியாகவே அவரை நான் அறிமுகம் செய்துகொண்டேன்.
ஜீவா எப்படி நினைவுகூரப்படுவார்? ஈழத்தி முற்போக்கு எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராக. சிற்றிதழ் இயக்கத்தின் விடாப்பிடியான முயற்சியின் உதாரணங்களில் ஒன்றான மல்லிகையின் நிறுவனர், ஆசிரியராக. முற்போக்கு எழுத்திற்கு களம் அமைத்துக்கொடுத்த ஆசிரியராக
ஆனால் அதற்கிணையாக அனுபவ முத்திரைகள், முப்பெரும் தலைநகரங்களில் முப்பதுநாட்கள் போன்ற அனுபவக்குறிப்புகள் வழியாகவும் அவர் நினைவுகூரப்படுவார். ஈழச்சமூகத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளில் ஒன்றில் பிறந்து ,முறையான கல்வி பெறாமல் ,தன் அறிவுத்தாகத்தையும் தன்மதிப்பையும் மட்டுமே ஆயுதமாகக் கொண்டு அந்த இடுங்கித்தேங்கிய சூழலுடன் போராடி தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆளுமை அவர். அவருடைய வாழ்க்கை அவ்வகையில் மிக ஈர்ப்பு அளிப்பது. சலிக்காத போராளியாக, மெய்யான கலகக்காரராக தன் காலகட்டத்தின் அடிப்படை இயல்பான மீறலை நிகழ்த்திக்கொண்டிருந்தவர் ஜீவா.
முன்னோடிக்கு அஞ்சலி