இமைக்கணம் – கர்ணனுக்கான கீதை

நான்  வாழ்ந்த வாழ்வெல்லாம் வெறும் எதிர்க்குரல் மட்டுமே.இனிஎழும் போரும் அவ்வாறே. எனில் இருத்தலுக்கென்ன பொருள்?’ – என்ற தன்னிரக்கத்தில் பிறக்கிறது கர்ணனின் வினா.

“தன் வாழ்வு தான் பிறந்த கணத்திலேயே முடிவு செய்யப்பட்டுவிட்டிருக்க, தான் செயலாற்றி விளையப்போவது என்ன? எதற்கு செயலாற்ற வேண்டும்? தன்னை மீறிய விசைகளால் தான் இழுத்துச் செல்லப்படுகையில் மானுடன் ஆற்றக் கூடுவது தான் என்ன?” என தொடர்ச்சியாக வினாக்களை அடுக்கும் கர்ணன் முன் இளைய யாதவர் அவன் வாழ்வின் மாற்றுச் சாத்தியம் ஒன்றைக் காட்டுகிறார்.

கர்ணன் மட்டும் யாரென்பதை அறிவித்திருந்தால் இந்த பாரத யுத்தமே நடந்திருக்காது, தேனாறும், பாலாறும் ஓடியிருக்கும் என மகாபாரதம் அறிந்த ஒவ்வொருவரும் கண்டிருந்த பொன்னொளிர் பகற்கனவே அது. அவ்வாறு ஓடிய பிறகு என்ன நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதையும் சற்று மேலதிகமாக விவரிக்கிறது வெண்முரசு. கர்ணன் விரும்பியிருந்தால் அவ்வாழ்வை அவர் தேர்ந்தெடுக்க இயலும் எனவும் கூறுகிறார் இளையயாதவர். இருப்பினும் அவன் வேண்டாம் என்கிறான். வேண்டாம் என்றவனிடம் இனி வரப்போகும் கோரம் என்ன என்பதையும் காட்டுகிறார். இருப்பினும், இவ்வாழ்வே போதும் என மீள்கிறான் கர்ணன். அதன் பிறகு அவனுக்கான அறிதலை அவனுக்கு அளிக்கிறார் அவர்.

இத்தருணத்தில் சில கேள்விகளை நாம் எழுப்பிக் கொள்வதன் மூலம் இவ்வறிதல்களை இன்னும் சற்று நெருங்கிச் செல்ல இயலும்.

1, கர்ணனுக்கு ஏன் இந்த பொன்னொளிர் மாற்று வாழ்வு காட்டப்பட வேண்டும்?

  1. அவ்வாழ்வை அவன் ஏன் தேர்ந்தெடுக்காது ஒழிய வேண்டும்?
  2. அவனுக்கு அவர் அளிக்கும் அறிதல்கள் அவனை எவ்விதம் முழுமை நோக்கிச் செலுத்துகின்றன?
  3. பொன்னொளிர்மாற்று வாழ்வு:

கர்ணனின் துயர் என்பது அவனது வாழ்வு அவன் பிறந்த கணத்திலேயே சிறுமையும், இழப்புகளும், தாழ்வும், நிறைவின்மையும் நிறைந்த ஒன்றாக முடிவு செய்யப்பட்டு விட்டது என்பது. எனவே அவனே விரும்பியது போன்று அவனது பிறப்பு அனைவராலும் அறிந்து, ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதைக் காட்டும் ஒன்றாக காட்டப்படுகிறது. அது அவனே எண்ணியிருந்தது போல முன்பின் நிகரில்லாத ஒரு பெருவாழ்வாகவே அமைகிறது. இந்த எண்ணம், முக்கியமாக கிந்தூரத்திடம் அவன் தோற்ற கணத்தில் இருந்து அவனிடம் இருந்து கொண்டே இருப்பது தான்.

இன்னும் சொல்லப்போனால் இத்தகைய ஒரு வாழ்வுச் சாத்தியம் அவனுக்கு வெய்யோனின் இறுதியில் நாகங்களின் காவலன்  நாகபாசனால் அளிக்கப்பட்டது தான். அப்போது கூட அவன் தன்னறத்தாலும், அவனுள் ஒடுக்கப்பட்டோர், சிறுமைக்காளானோர் மீது இருந்த பெருங்கருணையாலும் அவ்வாழ்வைத் துறந்து அஸ்வசேனனை கையில் எடுக்கிறான். இதோ இங்கே இளையயாதவர் அவனது மாற்று வாழ்வின் முழுச் சாத்தியங்களையும் அவன் முன் காட்டுகிறார். இப்போதும் அவன் அதை வேண்டாம் என்றே மறுக்கிறான்.

  1. ஏன்மறுக்கிறான்?

அப்படி ஒரு வாழ்வை அவன் ஏன் தேர்ந்தெடுக்கவில்லை? மூச்சுலகில் ஒரு கட்டத்தில் தனக்கு வர வேண்டிய அன்னமும், நீரும் தனது கொடி வழி முற்றழிவதால் வாராது போய்விடுவதாலா? இல்லை, தனது புகழ் இம்மண்ணில் இல்லாது போய், மன்னர் நிரையில் வெறும் பெயராக எஞ்சி, இறுதியில் அனைவரின் கருத்தில் இருந்தும் மறைந்து போவதாலா? இவற்றைக் காரணம் எனக் கொள்வது, கர்ணன் என்னும் அதிமானுடனை எனது கீழ்மைக்கு இழுப்பது போன்றது தான். நிச்சயம் இந்த காரணங்கள் இருக்க இயலாது. கர்ணனின் இப்போதைய வாழ்வுக்கும், அவனுக்குக் காட்டப்பட்ட வாழ்வுக்கும் இருந்த ஒற்றுமை என்ன?

துயர். ஆம், கர்ணனின் இப்போதைய வாழ்வில் வெளிப்படையாக அவனைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் அவனது துயர், காட்டப்பட்ட வாழ்வில் மெளனமாக, வெளித்தெரியாமல் தொடர்ந்து வருகிறது. அங்கும் அவனை வாட்டுவது துயரே. அதுவே அவனை நிறைவின்மைக்குள்ளும் தள்ளுகிறது. உண்மையில் அந்த வாழ்வில் வசுக்ஷேணரின் ஒரு செயல் தான் இருவாழ்விலும் அவருடைய துயர் என்ன என்பதையே கர்ணனுக்கே உணர்த்துகிறது. அது துறந்து செல்கையிலும் அவர் கரந்து கொண்டு சென்ற குண்டலங்கள்.

அவை அவரது பிறப்பு தான். அவர் குந்தியின் மூத்த மகன், எனவே பாண்டுவின் முதல் மைந்தன், எனவே குருவம்சத்தவன், மூத்தவன் அவனே ஆதலால் அஸ்தினபுரியின் பட்டத்து இளவரசன், எனவே தன் தம்பியர் நூற்று ஐவருக்கும் அவனே பொறுப்பானவன் என்று அந்த துயரை நீட்டலாம் (இதைத்தான் கணிகர் வெய்யோனில் ‘நீரும் ஒரு பீஷ்மர் அல்லவா’ எனக் குறிப்பிடுகிறார்) அந்த குண்டலங்களை அவர் மூச்சுலகிற்கும் கொண்டு செல்கிறார். அது அவரிடம் இருக்கும் வரை அவர் தத்தளித்துக் கொண்டே தான் இருக்கிறார்.

அவரிடம் மூச்சுலகின் நற்காலமான சுகாலன், “நீங்கள் காம்பு கனிந்து உதிரவில்லை” என்கிறான். எனவே அவர் அங்கும் துயர் கொண்டிருக்கிறார் என்றும், களம் கொண்டு செல்லும் அம்புகள் முற்றொழியாமல் பாசறை திரும்புபவர்களுக்கு போர் ஓய்வதில்லை என்றும் சொல்கிறான். அவருடைய முதல் பிழை ஊடு மட்டுமே கொண்ட அவரது ஊழ். அதையே எதிர்த்து நின்றிருந்தால் அவர் ஆவநாழி ஓய்ந்திருக்கக் கூடும் என்கிறான். இருவாழ்விலும் அவர் கண்டதும், கொண்டதும் துயரே. எனவே தான் ஆவநாழி ஒழியச் சாத்தியமான இவ்வாழ்வே இயன்றது என அவர் தேர்ந்தெடுக்கிறார்.

  1. கர்ணனின்அறிதலும், முழுமையும்

கர்ணனிடம் இளைய யாதவர் துயர்கள் மூன்று வகை என்கிறார்.

அ) ஆதிதெய்வீகம் – இறப்பு, நோய், முதுமை.

ஆ) ஆதிபௌதிகம் – இழப்பு, வலி

இ) ஆதிமானுஷீகம்

விலங்குகளுக்கும், சிற்றுயிர்களுக்கும் முதலிரண்டு வகை துயர்களே உள்ளன. அவை அத்துயர் குறித்து எண்ணுவதுமில்லை, எனவே வளர்ப்பதும் இல்லை. அமைந்திருத்தல் மற்றும் முரண் கொள்ளாதிருத்தல் வாயிலாக இத்துயரைக் கடந்தும் செல்கின்றன. மானுடரும் அவ்வாறே!! மானுடர்களுக்கு இந்த மூன்றாவது துயரும் உள்ளது. உண்மையில் மானுடம் அடையும் அனைத்துத் துயர்களும் இந்த மூன்றாவது வகையில் அடக்கி விட இயலும்.

இவை மானுடம் அடைந்த பகுத்தறிவால் உருவாகின்றவை. எனவே இவற்றில் ஆதாரம் அறியாமையே. இத்துயரை வெல்ல வழி அறிதல் மட்டுமே. கர்ணன் தான் கொண்ட பிறப்பால் அடைந்த சிறுமை, இழப்பு என்னும் துயர் ஆதி தெய்வீகத் துயர் என மயங்குகிறான். இந்த எண்ணம் அவனிடம் வெண்முகில் நகரம் நாவலில், காம்பில்யப் போருக்கு முன் அவன் பூரிசிரவசிடம் பேசுகையிலேயே வெளிப்பட்டிருக்கிறது. எனவே தான் அவன் துயருக்கு வேதாந்தம், மானுடம் கடந்த ஞானம் என்ன பதில் சொல்கிறது என்ற வினாவுடன் துவங்குகிறான்.

இளைய யாதவர் மிகச் சரியாக சாமானியனின் துயருக்கு ஞானியின் அறிதலில் விடை தேடுவது தவறு என அவனுக்குச் சுட்டுகிறார். ஆம், அவன் கொண்ட துயர்கள் அனைத்தும் இயல் வாழ்வில் தானே. அதைத் தாண்டிய மெய்மையின் பாதையில் அவன் செல்லவும் இல்லை, அதைக் குறித்த தேடலும் அவனிடம் இல்லை. தவறுகளும், கீழ்மைகளும் மானுட வாழ்வின் கணங்கள். அவை முடிவிலா சுழலின் கண்ணிகள் என்பதைத் தவிர அவற்றின் பொருளையும், இலக்குகளையும், விளைவுகளையும் மானுடன் எண்ணுவது தேவையற்றது.

பாஞ்சாலியை சிறுமை செய்த கணத்துக்காக இத்தனை காலம் தன் வாழ்வை அழித்துக் கொண்டிருக்கும் அவனிடம், அந்த நிகழ்வால் தான் இத்தனை பெரிய பேரழிவை நிகழ்த்தவிருக்கும் போர் விளைந்துள்ளது என வெம்பி நிற்கும் அவனிடம் “நிகழும் நன்றுக்கு பொறுப்பேற்பதே ஆணவம். தீதுக்கு பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம்” என இடித்துரைக்கிறார் பீலிவிழியன். இதற்காகவே அவனுக்கு அந்த பொன்னொளிர் மாற்று வாழ்வு காட்டப்படுகிறது.

அங்கும் இத்தகையதோர் பேரழிவு நிகழ்கிறது. என்ன… சற்றுத் தாமதமாக, சிறுகச் சிறுக நிகழ்கிறது. மூச்சுலகில் பரிதவிக்கும் வாசுக்ஷேணரிடம் சுகாலன் அவ்வாறு கொல்லப்படுபர்களெல்லாம் அவன் கொன்றிருக்க வேண்டியவர்கள் என்கிறான். சாமானியத் தளத்தில் அவன் எதிர்கொள்ளும் களத்தின் செயல் வழிகளை அவனுக்கு விளக்குகிறார் இளைய யாதவர்.

தனக்கான செயல்வழியும், இலக்கையும் அறிந்து ஆற்றுவதே தன்னறம் என்பதை புரிய வைக்கிறார். தன்னறம் அறிக்கையிலேயே, அதை ஆற்றுகையிலேயே முழுவிசையும் நிகழ முடியும் என்பதை உணர்த்துகிறார். தனக்குரிய களத்தில், தனக்குரிய அறிதலை அடைவதன் மூலம் துயரிலிருந்து விடுதலை அடைந்வதே மானுட வாழ்வின் ஒழுக்கு என அறிவிக்கிறார். ஏனென்றால் மானுடனுக்கு ஆதிமானுஷீகத் துயரும் அருளப்பட்டுள்ளது. அதை அறிந்து, அறுத்து எறிவதே வாழ்வு. விடுதலையைத் தரும் அறிதலைத் தேடி கதவுகளைத் தட்டுவதே மானுடன் செய்யக்கூடுவது. எனவே செயலாற்றுக என உரைக்கிறார்.

இழப்பதனால், வீழ்வதனால் எவரும் தோற்பதில்லை, முழுமையாக வெளிப்படமையாலே தோற்கிறார்கள். எனவே தனக்கான செயல்வழியும், இலக்குமாகும் தன்னறத்தை அறிந்து, அதில் தன் முழுவிசையையும் வெளிப்படுத்துமாறு அவனை அறைகூவுகிறார்.  அவனை எதிர்த்து நிற்கும் அனைத்து எதிர்விசைகளும் அவனது ஆற்றலைக் கோரியே அப்பேருரு கொண்டிருக்கின்றன என அவனுக்கு உணர்த்துகிறார்.

அவ்வாழ்விலும் துயரும், அழிவும், மகிழ்வும் என இருக்கும் சுழலைக் காணும் கர்ணன் முன், இவ்வாழ்வின் கோரத்தையும் காட்டுகிறார் இளைய யாதவர். கர்ணன் கையால் மடிந்த தன் புதல்வர்களில் தன் ஆழமறிந்த பேருடலன் மீது வீழ்ந்து கதறுகிறாள் அவன் அன்னை. அனைவரும் மடிந்த களத்தில், துரியன் வெல்கிறான், கர்ணனின் முழு விசையின் வெளிப்பாட்டால். மடிந்து கொண்டிருக்கும் கர்ணனிடம் நம்மவன் ஒருவன் அரசனாவான் என்றும், வெற்றியும், தோல்வியும் நமதே என்றும் உரைக்கிறான் துரியன். இவ்விடத்தில் மீளும் கர்ணனிடம் அவர் கூறும் அறிதல்களில் முக்கியமான ஒன்று

“நீங்கள் காப்பவருக்காக எதிரியைக் கொல்கிறீர்கள் என்றால் கடமையைச் செயதவராகிறீர். நீங்களும் கொல்லப்படக்கூடும் களம் என்றால் அறத்தையே இழைத்தவராகிறீர். ஒரு கணமும் திரும்பி எண்ணி வருந்தமாட்டீர் என்றால் நற்செயலையே இயற்றுகிறீர்கள்” என்பது.

இவையே கர்ணனை மீண்டும் செயல் வீரனாக்குகிறது. அவனுடைய பிறப்பின் காரணத்தால் அவன் கொண்ட குழப்பங்கள் அனைத்திற்கும் விடையாகிறது. தான் காக்க வேண்டிய துரியனுக்காக களம் நின்று தன் கடமையைச் செய்கிறான் கர்ணன். தன் முழுவிசையும் வெளிப்பட்டு வென்றால், தோற்பது பாண்டவர்கள் மட்டுமல்ல,

‘அழிக்கப்படுகையில், கைவிடப்படுகையில், சிறுமை கொள்கையில் பிறிதொன்றை நோக்கி உதவிகோருபவன் தன்னையறியாதவன். அழைக்கப்படாத தெய்வமொன்று இருண்ட ஆலயத்தில் துயருடன் அவனுக்காகக் காத்திருக்கிறது. தோற்றீர்கள் எனில் வெல்க! வீழ்ந்தீர்கள் எனில் எழுக! அடக்கப்பட்டிருந்தால் ஆள்க! சிறுமைப் படுத்தப்பட்டிருந்தால் விரிக! அதற்குரிய இயலறிவே உங்களுக்கானது, தனியறிவு அதற்கு உகந்ததல்ல. கூரியது என்றாலும் ஒளியைக் கொண்டு காலில் தைத்த முல்லை அகழ்ந்தெடுக்கவியலாது.’

என சாமானியருக்கும், அடிமைப் படுத்தப்பட்டோருக்கும், கைவிடப்பட்டோருக்கும், அனைத்து மானுடருக்குமான மீட்சியின் வழியைக் கூறும் வேதமுடிபும் தான். அத்தகையோர் மீது கொண்ட பெருங்கருணை தானேஅவனை வஞ்சம் சூடச் செய்தது. தனக்கும், தன்னைப் போன்றோருக்கும் கூட  விடுதலைக்கும், மீட்புக்கும் வழி கூறிய இக்கொள்கை வெல்வதே அவனது செயல் வழி, அதுவே அவனது இலக்கு, அதுவே அவனது தன்னறம்.

எனவே தான் தானும் மடியும் களத்தில், தன் தம்பியர் நால்வரையும் கொல்வதில்லை என்றும், தன் பிம்பமான அர்ஜுனன் மீது நாகபாசத்தை ஒரு தடவை மட்டுமே எய்வேன் என்றும் குந்திக்கு வரமளித்து அறத்தையே இயற்றுகிறான். தன்னறம் உணர்ந்து அதற்காகவே அவ்வரங்களை அளித்ததால் திரும்பி நோக்கினாலும் ஒரு கணம் கூட வருந்தாத நற்செயலையே செய்கிறான். தான் வெல்வதற்குச் சாத்தியங்களாக இருந்த இக்கவசத்தையும், தன் பிறப்பு என்னும் குண்டலத்தையும் முற்றாகத் துறக்கிறான், அவற்றையும் அளிக்கிறான். கொடைவள்ளல் அல்லவா அவன்!! தருமத்தையே செய்து முழுமையடைகிறான்!!! உச்சத்தின் உச்சமாக புடவிப்பேருருவனுக்கே கொடையளித்து தன் கலம் ஒழிகிறான்!!! நிறைவடைகிறான்.

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்

முந்தைய கட்டுரையூமா வாசுகிக்கு வாழ்த்து
அடுத்த கட்டுரைதத்துவம் பயில