எண்ணும்பொழுது [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
எண்ணும்பொழுது கதைக்கு நுட்பமான வாசிப்புகள் வந்துகொண்டே இருப்பது ஆச்சரியமளிக்கிறது. உங்கள் முக்கியமான எல்லா கதைகளுக்கும் வாசிப்புகள், விவாதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் அவற்றை வாசிக்கும்போது நான் வாசித்த எதையாவது இவர்கள் வாசிக்காமலிருக்கிறார்கள என்றுதான் பார்த்தேன்.
அதில் எனக்கு தோன்றிய ஒன்று கடலுக்கும் போம்பாளருக்குமான உறவு. கடலில் வணிகம்செய்பவர், கடலில் அலைபவர் அவர். கடல் அவரை அவளிடமிருந்து பிரிக்கிறது. அந்தக்கடல் அலைகளால் சூழும்போது அந்த செடியை பத்திரமாக பிடித்துக்கொண்டு நீந்தி கரையை அணுகிவிடுகிறார். அப்போது ஒரு பூவும் உதிரவில்லை.
பூ உதிர்வதெல்லாம் கரையில்தான். பூ உதிர்ந்ததும் கடலில் மூழ்கி அடியில் சென்றுவிடுகிறார். திருவீட்டில் கன்னி தீயில் விழுகிறாள். வீட்டு தீபத்திலிருந்து சிதைத்தீக்கு செல்கிறார்.
எஸ்.ஆர். சடகோபன்
அன்புள்ள ஜெ
எண்ணும் பொழுது உடலுள் உள்ளமேன கதைக்குள் கதையமைந்த கதை. உடல் உரு கொண்டது என்பதாலேயே எல்லை கொண்டது. அருவானதாலேயே அளவின்மையே அளவே எனக் கொண்டது உள்ளம். கணம் தோறும் உள்ளத்தை நிகழ்த்தும் உடல் அதை காண்காணிக்கவும் செய்கிறது. அவன் சொல்லும் கதை அவர்களின் ஆழுள்ளத்தை பிரதிபலிக்கிறது. அது கதையாக இருப்பதே சொல்லப்பட முடியாது என்பதால் தான். உண்மை மூள் என்பதாலேயே அதை கண்டபின்னர் வாழ முடியாது.
இந்த கதையை வாசித்த பின் ஞாபகம் வந்தது ஆழி சிறுகதை தான். இவ்விரு கதைகளும் ஆண் பெண் ஆடலை பேசுகின்றன. இவற்றின் பொதுவான அம்சங்களில் இரண்டு கடல் இரண்டிலுமே பெரும் படிமமாக வருகிறது. இன்னொன்று கதாப்பாத்திரங்களுக்கு பெயரே இல்லை. அதிலும் எண்ணும் பொழுது ஓர் உச்சம். படுக்கையறை தவிர வேறு எந்த இடமும் இல்லை. அதை நம் பண்பாட்டுடன் இணைப்பது அந்த தாலி தான். அதை தாண்டி நேரடியாக மானுட தளத்திற்கு சென்று விடுகிறது கதை.
அவர்களின் அந்த ஆடலை பார்க்கும் போது மழைப்பாடலின் ஆரம்பத்தில் வரும் அம்மையும் அப்பனும் சேர்ந்தாடும் காட்சியில் வரும் வெல்லாவீழா ஆடல் என்ற சொல்லே நினைவுக்கு வந்தது.
போம்பாளர் கொடுக்கும் மோதிரமும் கன்னி கொடுக்கும் முல்லை கொடியும் இரண்டு படிமங்கள் ஆகின்றன. அந்த மோதிரம் ஆண் பெண்ணை பொருளென அணிந்து கொள்ள வேண்டும் என்று விழைவதன் என்பதன் குறியீடு எனலாம். அவர் கன்னியின் பிம்பத்தை பெரிதும் விரும்புகிறார். ஆடியில் நிறுத்தி அழகு பார்க்கிறார். அவனும் அவ்வாறு தான் செய்கிறான்.
ஆணின் பகற்கனவுகளை நோக்கினால் ஒன்று அறியலாம் ஒவ்வொரு முறையும் உடல்களை மாற்றுவானே ஒழிய அத்தனையிலும் தான் விரும்பிய அந்த ஒற்றை உள்ளத்தை நிரப்புவான். பெண் உடலை பொன்னென தழுவி மகிழ்பவன் அவளின் உள்ளத்தையும் உடலை போலவே வளைக்க ஆசை கொண்டுள்ளான். அவன் பார்த்த, கேட்ட கதைகளை, கவர்ந்த விஷயங்களை அவளிடம் சொல்லி கொண்டே இருக்கிறான். கதை சொல்லி கொண்டிருக்கையிலேயே அவள் கவனிப்பிற்காக ஏங்குகிறான். அவள் பலமுறை புறக்கணித்தும் ஏன் இன்று திரும்பவும் சொல்கிறான். ஒருவேளை என்றேனும் அவளை வென்றெடுக்க முடியும் என்ற கனவால் இருக்கலாம்.
ஆனால் போம்பாளர் கன்னியை திருமணம் செய்த கதையை சொன்னவுடன் அவளில் ஏற்படும் சிரிப்பு ஆழத்தில் அவளும் அதை அறிந்திருக்கிறாள் என்பதை காட்டிவிடுகிறது. அவள் அவனை அதுவரை கொண்டுவந்து சேர்த்திருப்பதை அவன் உணருமிடத்தோடு முல்லை கொடியை இணைத்து கொண்டால் ஒரு திறப்பு. மரம் கொடியை ஏற்றி கொள்வதாலேயே தான் வலிமையானது என்று நினைக்கிறது. ஆனால் முழுதாக கொடி ஏறிய மரம் என்பது மரம் மட்டுமல்ல கொடியும் தான். பெண் விழைவது ஆணை கொடியென சுற்றி அவனை தானென உணர செய்து பூத்து மலரும் தருணத்தை போலும். மரம் சரியலாம் குழைவே நெளிவே நீரே என்றான கொடி சரிவதுமில்லை சாய்வதுமில்லை.
மனசறிஞ்சு மனசறிஞ்சு கோணச்சியாய் போனேன் என்ற வரி முக்கியமானது. ஒவ்வொரு முறை மனதை நோக்கி அறியும் போது அதன் கோணல்களே. அந்த கோணல் காம குரோத மோகமாக வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது. இந்த கோணல்களே படைப்பை நிகழ்த்துகின்றன ஆனால் அதை கோணலை மட்டுமே அறிவது கோணச்சி சென்றடையும் ஒருவகை மர்மத்தை. அந்த கோணமலை எதுவாக இருக்கலாம். இருளாக ஒளியாக இருப்பாக இன்மையாக எதுவாக வேண்டுமானாலும் ஆகலாம் நாமறியாத அந்த ஆழம்.
கோணச்சி சொல்லும் இன்னொரு வரி பறக்கிறது நடந்தா பதிஞ்ச காலை எண்ணும் அம்மையே. அந்த வரி உறவுகள் என்பதன் பின்னால் உள்ள மொத்த இலட்சியவாதத்தையும் சொல்லிவிடுகிறது. கணியன் பூங்குன்றானரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரி நாம் செல்ல இலட்சிய உலகத்தை சொல்கிறதென்றால் இந்த வரி நாம் நின்றுள்ள இலட்சிய கனவை சொல்கிறது. எண்ணி கணக்கிட்டால் உறவு இல்லை வணிகம். அத்தனை உறவுகளும் எண்ணாது இருக்கும் பெருங்கனவு தான்.
போம்பாளரை சுழற்றியடிக்கும் கடல் விலக்கி செல்ல துடிக்கும் இயற்கை விசை எனலாம். அதன் மறுவடிவம் தான் கடலுங்கரை கன்னி. அவர்கள் பிரிந்து சென்ற பின் இருவரும் சொர்க்கத்துக்கு செல்கிறார்கள். வழமை மாறி புதுமை பூக்கும் இடங்களில் ஒன்று. எண்ணியதால் கடைந்தெடுத்த சந்தேக நஞ்சை உண்டு சுவைக்கிறார்கள். ஏனெனில் மிக சிறந்த நஞ்சென்பது அமுதென்று சுவைப்பது. மனிதன் துயரில் இன்பம் கொண்டு துயரை பெருக்கி நிறைபவனும் கூட.
அன்புடன்
சக்திவேல்