பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]
அன்பின் ஜெமோவிற்கு வணக்கம்,
நலமே சூழ்க.
நேற்று முகநூலில் உலவும்போது ஒரு காணொளியைப் பார்க்க நேர்ந்தது.அதில் நாகாலாந்தில் இஞ்சி ஏற்றிக்கொண்டு வந்த டிரக் ஒன்று நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்துவிட்டது.விபத்து நேர்ந்த இடத்தில் கிரேன் போன்ற எந்த வசதியும் இல்லாத நிலையில் எந்தவொரு இயந்திரத்தையும் உபயோகிக்காமல் மூங்கில் மற்றும் கயிறுகளை மட்டும் உபயோகித்து மேலே கொண்டுவரும் உத்தியைப் பார்த்தபோது எனக்குத் தங்களின் கதாகாலத்து(தங்கள் வாசகரின் சொல்லாடல்தான்) சிறுகதையான ‘பத்துலட்சம் காலடிகள்’ தான் நினைவிலெழுந்தது.
அக்கதையில் கேரளாவின் மாப்பிள்ளைக் கலாசிகள் கடலுக்குள் மூழ்கிய பத்தேமாரிகளை வெறும் புளியமரத் தடிகள் மற்றும் கற்றாழை நாரைப் பின்னி முறுக்கி உருவாக்கப்பட்ட கயிறுகளைக் கொண்டுவெளியே எடுக்கும் தொழில்நுட்பம் பற்றியும் அவ்வாறு மேலே இழுக்கும்போது ஒரு குறிப்பிட்ட தாளகதியில் இஞ்ச் இஞ்சாக இழுத்து மேலேற்றும் உத்தி பற்றியும் வரும்.அதே உத்தியைப் பயன்படுத்தி இங்கே ஊர்மக்கள் ஒன்றுகூடி ஒரு தாளகதியுடன் இழுப்பதைப் பார்த்த தருணத்தில் நான் ஒரு மாப்பிள்ளைக் கலாசியை என்னுள் ஆவாகனப் படுத்திக் கொண்டு காலத்தில் கொஞ்ச நேரம் அமிழ்ந்துவிட்டேன். அந்த அனுபவத்தைத் தங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியதால் இக்கடிதம்.
நன்றி.
அந்தக் காணொளியின் இணைப்பு தங்களின் பார்வைக்கு.
விஜயன் ராமசாமி
எரிமருள் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
சென்ற நூறு கதைகளையும் மீண்டும் ஒருமுறை வாசித்து முடித்தேன். பிரம்மாண்டமான ஓர் உலகம். எத்தனை வாழ்க்கைகள். எத்தனை மாயங்கள். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உலகைநோக்கித் திறக்கிறது.
பொதுவாக நான் தமிழில் வாசித்தவரை கதை எழுதுபவர்களுக்குச் சில தனித்தன்மைகள் உள்ளன. அவர்கள் ஒன்று அவர்களின் வாழ்க்கையிலிருந்து சில விஷயங்களை எழுதுவதற்கு கண்டிருப்பார்கள். அவற்றை திரும்பத்திரும்ப எழுதுவார்கள். அந்த பேட்டர்ன் அவர்களுக்குள் இருக்கும். அவர்களிடம் அதையே எதிர்பார்ப்பார்கள்.
இன்னொரு சாரார், அவர்கள் வெளிநாட்டு இலக்கியத்தில் வாசித்த சிலவற்றை முன்னுதாரணமாக கொண்டிருப்பார்கள். இப்போது இதுதான் டிரெண்ட் என்று ஒன்றை நினைத்துக்கொண்டு அதை எழுதிப்பார்ப்பார்கள். அதில் எதையேனும் சிலர் பாராட்டிவிட்டால் அதையே எழுதிக்கொண்டிருப்பார்கள்.
இதில் முதல்வகையை விட இரண்டாம்வகை கீழானது என்பது என் எண்ணம். இரண்டாம்வகையினருக்கு அறிவுஜீவி தோரணை இருக்கும். சில ஆசிரியர்களை மேற்கோள்காட்ட முடியும். ஆனால் இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாதவர்கள். வரட்சியானவர்கள். ஒருவகையில் பாவமானவர்கள்.
ஒருவர் ‘இப்படித்தான் அமெரிக்காவில் இப்போதெல்லாம் எழுதுகிறார்கள்’ என்று நினைத்தோ ‘இதெல்லாம்தான் ஐரோப்பாவில் சிந்தனையாக உள்ளது’ என்று நினைத்தோ அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு எழுதினாரென்றால் அவரைப்போல அறிவில்லாதவர் எவராவது உண்டா? உனக்கு என்ன எழுத இருக்கிறதோ அதை எழுது என்றுதானே வாசகன் அவனிடம் சொல்வான்?
இந்த நூறுகதைகளைப் பற்றிச் சொல்லவந்தேன். ஒன்று நூறுகதைகளுமே உங்களுக்கு அந்தரங்கமானவை. நீங்கள் எழுதியதைக்கொண்டு பார்த்தால் உங்கள் சுயம் இல்லாத ஒரு கதைகூட இல்லை. ஆனால் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. பின்நவீனத்துவ- நேர்கோடற்ற எழுத்துமுறை கொண்ட கதைகள். விளையாட்டுத்தனமான கட்டமைப்பு கொண்ட கதைகள். அனுபவங்களை நேரடியாகச் சொல்லும் கதைகள். தொன்மங்களை கையாளும் கதைகள். மாயக்கதைகள். கவிதைய்போலவே இருக்கும் கதைகள் என எல்லாவகையான கதைகளும் நூறுகதைகளுக்குள் உள்ளன.
மிகவித்தியாசமான கதை என நான் நினைப்பது எரிமருள். கவிதைக்கு மட்டுமே உரிய ஒரு அபாரமான பொருள்மயக்கம் உள்ள கதை அது. ஒர் உச்சம் அந்தக்கதை
ராஜ் மகேந்திரன்