விரதம்

அன்புள்ள ஜெ,

இன்றைய அரசியலில் ஃபாஸிசம் மேலோங்கியிருப்பதையும், அதற்கு எதிரான தரப்புகளின் சிக்கல்களையும் பற்றி மூன்று கடிதங்கள் எழுதியிருந்தேன். உங்கள் எதிர்வினையை எதிர்பார்த்தேன். அக்கடிதங்கள் பிரசுரமாகவில்லை. குறைந்தது அவற்றின் மீதான உங்கள் கருத்துக்களையாவது எதிர்பார்க்கிறேன்

ஜி.தியாகராஜன்

***

அன்புள்ள தியாகராஜன்,

பொதுவாக இந்த தளத்திற்கு என்று ஒரு கொள்கை உண்டு. மிகவும் பட்டுத் தெரிந்துகொண்டது. அதாவது இங்கே அரசியல் பேசுவதில்லை.

அதாவது அரசியல் என்று நாம் பொதுவாகச் சொல்வது அவரவர் நிலைபாடுகளை மூர்க்கமாகப் பற்றிக்கொண்டு பூசலிடுவது. அதில் ஒவ்வொருவரின் ஆணவம் மட்டுமே வெளிப்படுகிறது. எவரும் எதையும் கவனிப்பதில்லை, கற்பதில்லை.

அரிதாக, இந்த தளத்தில் அரசியல் பேசப்படும். அது அன்றாட அரசியல் அல்ல. கொள்கைகள் பற்றி. பொருளியல்பற்றி. வரலாறு பற்றி. தரவுகளுடனும் தர்க்கங்களுடனும் நன்கு எழுதப்பட்டது என்றால் நான் ஏற்காத தரப்பும் விரிவாக இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளது. மறுப்புகளும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பார்த்தேன், பிரசுரமானவற்றில் நான் சொன்னதைவிட என்னை மறுத்து பிறர் சொன்னதே அளவில் மிகுதி

ஆனால், தேர்தல்கள் நெருங்கநெருங்க முற்றாகவே அரசியலை தவிர்ப்பேன். தேர்தல்கால அரசியல்பேச்சு என்பது சினிமா ரிலீஸுக்கு முன் சினிமாபற்றிய பேச்சு உருவாக்கப்படுவதுபோலத்தான். சினிமாவைப்பற்றிய பேச்சு உருவாக்கப்படுவதெப்படி என்று எனக்குத்தெரியும்,

தேர்தல்கள் நெருங்குகையில் அந்த உச்சப்பிரச்சாரம் அத்தனைபேரையும் உள்ளிழுக்கிறது. அனைவரும் அதையே பேசுகிறார்கள். செயற்கையான வியூகங்கள், மையங்கள் உருவாக்கப்படுகின்றன. அத்தனைபேரும் நிலைபாடு எடுக்கிறார்கள். அந்நிலைபாடு பெரும்பாலும் மதம்,சாதி சார்ந்தது. தமிழகத்தில் அதற்கப்பால் ஓர் அரசியல் இன்று இல்லை. அது இடைநிலைச் சாதியினரின் அரசியல் என்றால் அது முற்போக்கு என நம்பவைக்கப்பட்டிருக்கிறோம்.

அந்த செயற்கையான, மிகைவிசைகொண்ட விவாதத்தில் இறங்கி ஆகப்போவது ஒன்றுமில்லை. எவரிடமும் எதையும் சொல்லிவிடமுடியாது. எதைச்சொன்னாலும் வசை ஏளனம்தான் வரும். என்னைப்போன்ற ஒருவரின் தரப்புக்கு எல்லா தரப்பிலிருந்தும் வசை வரும். என் குரலை பொருட்படுத்துபவர்கள் பொதுவாக கட்சியரசியலில் இல்லாதவர்கள். அவர்களிடம் எப்போது வேண்டுமென்றாலும் பேசிக்கொள்ளலாம்

தீபாவளி பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்ததும் கண்ணிலிருந்து மறைந்து ஏழுஎட்டு நாட்கள் கழித்து தலைதாழ்த்தி, கண்களை கீழ்நோக்கி உருட்டியபடி, வாலை நீட்டி ஆட்டிக்கொண்டு வந்து சேரும் நாய்போலத்தான் நானும். அடுத்த ஆகஸ்ட் செப்டெம்பருக்கு பிறகுதான் அரசியலை கவனிப்பதும், செய்திகளை தெரிந்துகொள்வதும்

ஜெ

முந்தைய கட்டுரைஇருபெண்களின் கடிதங்கள்
அடுத்த கட்டுரைசெயல் எனும் விடுதலை