அன்புள்ள ஜெ,
இன்று வேறெந்த தளத்தைவிடவும் உங்கள் தளத்தில்தான் கடிதங்கள் வெளியாகின்றன. கடிதங்கள் எழுதியே பலர் எழுத்தாளர்களும் ஆகிவிட்டார்கள். நான் உங்களுக்கு எட்டு கடிதங்களுக்கு மேல் எழுதியிருக்கிறேன். என் கடிதங்களுக்கு நீங்கள் ஒருசில வரிகளில் பதிலளித்திருக்கிறீர்கள். ஆனால் எதையும் பிரசுரிக்கவில்லை. அக்கடிதங்களில் பார்வையா மொழியா என்ன பிரச்சினை என்று அறிய ஆவலாக இருக்கிறேன்
எம்.ஆர்.சுந்தர்ராஜன்
***
அன்புள்ள சுந்தர் ராஜன்
உங்கள் முதல் கடிதம் கேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றி என நினைக்கிறேன். அதன்பின் நீங்கள் அனுப்பிய எல்லா கடிதங்களும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் போன்றவற்றில் நீங்கள் பார்த்த சீரியல்களைப் பற்றி. கடைசியாக இரண்டு கடிதங்கள் பிக்பாஸ் பற்றி, திரையரங்கில் நூறுசதவீதம் ஆட்களை அனுமதிப்பது பற்றி.
ஆரம்பம் முதலே ஒரு கொள்கையை வைத்திருக்கிறேன். இந்த தளத்திற்கு கொஞ்சபேர் தவறாமல் வந்து வாசிக்கிறார்கள் என்றால் அதற்குக்காரணம் இங்கே பிற எல்லா இடங்களிலும் இருக்கும் அரட்டை – விவாதம் ஆகியவற்றுக்கு அப்பால் சில புதிய விஷயங்கள் பேசப்படுகின்றன என்பதுதான். தமிழகத்தில் எப்போதுமே மூன்றுவிஷயங்கள்தான் ஆவேசமாகப் பேசப்படும். முறையே சினிமா, சாப்பாடு, அரசியல்.
சினிமா பற்றிய எல்லா பேச்சுமே சினிமாபற்றிய மோகத்தை மட்டுமே வெளிப்படுத்துபவை. பொழுதுபோக்குக்காக மட்டுமே சினிமா பார்க்கப்படுகிறது. சாப்பாடும் அப்படியே. வெறும் மோகம்.ஆகவே எப்போதுமே வெறும் அரட்டையாகவே அது நிகழ்கிறது. எத்தனை சீரியலும் சினிமாவும் பார்த்தாலும் எவரும் அறிவார்ந்து எதையும் அடைவதில்லை. அந்த சீரியலை, சினிமாவை தொடர்ந்துசென்றுகூட எதையும் வாசித்து தெரிந்துகொள்வதில்லை.
சினிமாவே ஆனாலும்கூட ஒரு திட்டத்துடன் தொடர்ச்சியாக முழுமையாக சினிமாக்களைப் பார்ப்பவர்களுக்குத்தான் அதனால் பயனுண்டு. உதாரணமாக ஒருவர் ஹோலோகாஸ்ட் படங்களில் சிறந்த ஐம்பதை தேர்வுசெய்து ,ஐம்பதையும் தொடர்ந்து பார்த்து, கூடவே தேவையான செய்திகளையும் பின்னணிவரலாற்றையும் வாசித்தறிந்து, தன் கருத்துக்களை தொடர்ச்சியாக குறிப்புகளாக எழுதிவைத்துக்கொண்டு, அதன்பின் தொகுத்துக்கொண்டு யோசித்தால்தான் சினிமாவால் பயன். அங்கிங்காக ஆர்வம் போனபோக்கில் பார்க்கும் படங்கள் வெறும் உதிரிக்காட்சிகளாக நினைவில் நிழலாடும், அவ்வளவுதான்
அதோடு, காட்சியூடகம் பெருவணிகம். ஆகவே மிகப்பெரிய விளம்பரம் செய்யப்படுகிறது. பொதுப்பரபரப்பு உருவாக்கப்படுகிறது. உலகமே அதனால் அடித்துச்செல்லப்படும். பொதுக்கருத்து உருவாகி வரும். அதனுடன் தானும் மிதந்து ஒழுகி பரவசமடைவது, விவாதிப்பது அறிவுச்செயல்பாடு அல்ல. கேம் ஆஃப் த்ரோன்ஸ் வந்தபோது உலகமே அதைப்பற்றிப் பேசியது. இப்போது அந்தப்பேச்சு எங்கே? அதற்கு என்ன இடம்?
இங்கே அரசியல் எப்போதுமே உறுதியான கட்சிகட்டல். பெரும்பாலும் மதம், சாதி சார்ந்துதான் அந்நிலைபாடு எடுக்கப்படுகிறது. அது ஒருவகை மந்தைமனநிலை. எடுத்துக்கொண்ட தரப்பின் எல்லாவற்றையும் எல்லாவகையிலும் நியாயப்படுத்துவது. கண்மூடித்தனமான தலைமைவழிபாடு. பரவசமான நாயக வழிபாடு. அங்கே விவாதம் என்பது ஒருவகை ஆணவநிறைவு, ஒருவகை நாவரிப்பு தீர்த்தல். அதனால் பயன் ஏதுமில்லை. அரசியலே இப்போது அரசியல் வசை, அரசியல் நையாண்டியாக மாறிவிட்டது.
ஆகவே இந்த சினிமா, சாப்பாடு, அரசியல் அரட்டைகளுக்கு இடமளிக்கவேண்டாம் என்பது என் எண்ணம். தவிர்க்கவே முடியாதபோது மட்டுமே குறிப்பிடத்தக்க சினிமாக்கள் பற்றி எழுதுகிறேன். அதுவும் வேறு எவராவது எழுதியிருக்கிறார்களா என்று தேடிப்பார்த்து இல்லையென்றால் மட்டும் எழுதுகிறேன். கட்சியரசியல் பற்றி எதுவுமே பேசுவதில்லை. சமூக ஊடகங்களில் முழுக்கமுழுக்க நிறைந்திருப்பவை இவைதானே. அதற்கு வெளியே ஓர் இடம், அதுவே இந்தத் தளத்தின் நோக்கம்
அயலூர் நாய் போல வாலை கவட்டைக்குள் வைத்து, ஒருகண் முன்னால் ஒரு கண் பின்னால் பார்க்க, அப்படியே பாந்தமாக நடந்து இந்த சந்தடியை கடந்துவிட முயல்கிறேன். அவ்வப்போது கல்லடிகள் பட்டாலும் கால்கள் நடுவே சென்றுவிடுவது இயல்கிறது.
ஜெ