இமைக்கணம்- வாக் சூக்தம்

அன்புள்ள ஜெ,

இமைக்கணத்தில் திரௌபதி கண்ட விஸ்வரூப தரிசனத்தை வாசித்தபோது ரிக்வேதத்தில் வரும் வாக் சூக்தத்தோடு தொடர்பு படுத்திக்கொண்டேன். கவித்துவமும் பித்தும் தணலாடும் இவ்வரிகளில் உள்ள அழுத்தமும் அதிகாரத்தொனியும் கட்டற்றத்தன்மையும் ஒவ்வொரு முறை சொல்லிக்கேட்கும் போதும் உருவாக்கும் மனவெழுச்சி சாதாரணமானதல்ல.

மொழிபெயர்க்கும் அளவுக்கு வடமொழி தெரியாதென்றாலும் அகராதியின் துணைக்கொண்டு, ஆங்கிலத்தில் கிடைக்கும் சில உரைகள், மொழிபெயர்ப்புகளை வைத்துக்கொண்டு அந்த அர்த்தம் வருமாறு தமிழில் சற்றே சுதந்திரமாக என் வாசிப்புக்காக  மொழியாக்கம் செய்து வைத்திருந்தேன். போதாமைகளுடன் இருக்கலாம், என்றாலும், அதை இணைத்திருக்கிறேன்.

நன்றி,

சுசித்ரா 

வாக் சூக்தம்  (ரிக் வேதம் 10.125)

நான் ருத்ரர்களுடனும் வசுக்களுடனும் உலவுபவள் –
ஆதித்யர்களுடனும் பிரபஞ்சத்தின் சகல தேவர்களுடனும்
அலைபவள் நான்.
நான் மித்திரனையும் வருணனையும் தாங்குபவள் –
இந்திரனையும் அக்னியையும் அஸ்வினிக்குமர்களையும்
என்னில் கொண்டுள்ளவள் நான்.
சோமரஸத்தையும்,
வேள்விக்கூடங்களை அமைக்கும் த்வஷ்டரையும்,
அதனை காக்கும்  பூஷனையும், பகனையும்
ஏந்திச்செல்பவள் நான்.
மனம்குவிந்து வேள்வி நிகழ்த்தும் அதன் யஜமானனுக்கு
பெருசெல்வமெல்லாம் வழங்குபவளும் நானேயாம்.
நான் இந்நிலத்தின் பேரரசி.
மங்களங்களும் செல்வங்களும் திரட்டுபவள்.
பிரக்ஞை வடிவானவள்.
முதன்மையாக வணங்கத்தக்கவள்.
பல்வேறு இடங்களில்
பலவடிவமாக
சிதறிப்பரந்து விரிய
ஆணையிட்டிருக்கின்றன
தெய்வங்கள் எனக்கு.
என்வழியாகத்தான்

உண்பவன்  உண்கிறான்,
காண்பவன் காண்கிறான்,
கேட்பவன் கேட்கிறான்,
சுவாசிப்பவன் சுவாசிக்கிறான்.
என்னை உணராதவன் கூட
என்னிலேயே உறைகின்றான்.
கேள்!

கவனத்துடன் கேட்பவனுக்காக மட்டுமே
இதைச்சொல்கிறேன் நான்.
தேவர்களுக்கும் மானுடர்களுக்கும்
விருப்பமான இச்சொற்களை
நானே, நான் மட்டுமே,
இங்கு, இப்போது
மொழிகிறேன், கேள்.
எவன் ஒருவன்
என் விருப்பத்துக்குள்ளானவனோ
அவனை
வலிமைகொண்டவனாக,
பிரம்மத்தை அறிந்தவனாக,
ரிஷியாக,
மேதமைகளெல்லாம் பொருந்தியவனாக
ஆக்குபவள் நானே.
பிரம்மத்தின் எதிரிகள் மீது அம்புதொடுக்க
ருத்திரனின் வில்லை வளைக்கிறேன் நான்,
உயிர்களுக்கெல்லாம்  போர்புரிகிறேன் –
நான்
விண்ணையும் மண்ணையும் நிறைத்துவிட்டேன்.
மலைச்சிகரத்தில் என் தந்தையை நான் பெற்றெடுக்கிறேன்
என் பிறப்பிடமோ கடலாழத்தில்.
அங்கிருந்து நான் வளர்ந்து வளர்ந்து
உலகிலெல்லாம்
இவ்வுயிர்களிலெல்லாம்
பரவிப்பரவி
வானுயர
ஓங்கி நின்று
தொட்டுவிட்டேன் அதை,
அந்த உச்சத்தை.
வாடையென வீசும்
என் மூச்சுக்காற்றினால்
நானே,
நான்மட்டுமே,
இவை அனைத்தையும்
வடித்தெடுக்கிறேன்.
ஆகவே
விண்ணையும்
மண்ணையும்
மீறிய பெரியோளாக,
பெருமாண்பு பொருந்தியோளாக  திகழ்கிறேன்

நான்.

முந்தைய கட்டுரைகுருதியின் சதுரங்கம்
அடுத்த கட்டுரைஅமெரிக்காவில் ஃபாஸிசம் கடிதங்கள்