பரதன், இரு கடிதங்கள்

பரதன்
கலைஞனின் தொடுகை
இணைகோட்டு ஓவியம்
ஆதல்
காமத்தின் கலை, பரதனின் நினைவில்…

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு..

அன்பும் வணக்கமும்.

பரதன் குறித்த ஒரு கட்டுரையில், தாங்கள் மிருகங்களுக்கு இல்லாத எந்த தத்துவ சிக்கலும் மனிதர்களுக்கு இல்லை. என்று பரதன் கூறியதாக சொன்னீர்கள்..

அந்த வரியை சற்று விளக்க முடியுமா..?,

நன்றி..

பாலமுருகன்

அன்புள்ள பாலமுருகன்,

அது ஒரு தத்துவம்சார்ந்த வரி அல்ல, தத்துவம் என்பதையே நிராகரிக்கும் வரி.

பரதன் ஒரு திரைப்பட இயக்குநராக எப்போதுமே காமம், வன்முறை, வஞ்சம் ஆகியவற்றையே திரைப்படமாக எடுத்தவர். அவை அடிப்படை இச்சைகள் எனப்படுகின்றன. அவை ஃப்ராய்டிய உளவியலில் id என்று சொல்லப்படுகின்றன. ஃப்ராய்ட் மனிதனின் அடிப்படை உணர்வுகள் அவைசார்ந்தவை மட்டுமே என்கிறார். அவை விலங்குகளுக்கும் உரியவை.

அடிப்படை விலங்குணர்ச்சிகள் அன்றி வேறு ஏதும் மனிதர்களுக்கு இல்லை, மனிதனும் வெறும் விலங்குமட்டும்தான் என்று பரதன் சொல்கிறார். நாம் மனிதனுக்கு இருப்பதாகச் சொல்லும் தத்துவப்பிரச்சினைகள், அறப்பிரச்சினைகள் எல்லாமே கற்பனையானவை என்றும் அடிப்படை இச்சைகளின் சிக்கல்களை நாம் இப்படி மறுவிளக்கம் அளித்துக்கொள்கிறோம் என்றும்அவர் சொல்கிறார்.

இது அவருடைய தரப்பு. அந்த காலகட்டத்தில் ஃபிராய்டியம் செல்வாக்கு செலுத்திய காலகட்டத்தில் ஓங்கியிருந்த ஒரு சிந்தனையும்கூட. அது சரியா தவறா என நீங்களே யோசிக்கலாம்

ஜெ

அன்புள்ள ஜெ

எனக்கு பிடித்தமான இயக்குநர் பரதன். அவரைப்பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையை லோகித் தாஸ் பற்றிய குறிப்பின் கீழே கண்டேன். அவரைப்பற்றி ஒரு நல்ல நூலை அவருடைய திரைக்கதையாசிரியரான ஜான் பால் எழுதியிருக்கிறதாக எழுதியிருந்தீர்கள். அது தமிழில் வந்துள்ளதா?

தமிழ்ச்செல்வன்

 

அன்புள்ள தமிழ்ச்செல்வன்

இல்லை, அந்நூல் மொழியாக்கம் செய்யப்படவில்லை. மொழியாக்கம் செய்யப்படவேண்டிய நூல்தான்

எனக்கும் பிடித்தமான இயக்குநர்தான் பரதன். காலம் செல்லச்செல்ல அவருடைய படங்களின் மதிப்பு கூடியபடியேதான் செல்கிறது. எழுபது எண்பதுகளில் கலைப்படங்களுக்கு – அவை சர்வதேச விழாக்களில் இடம்பெறவேண்டும் என்றால்- ஒரு செயற்கையான மந்தகதி தேவை என்று நினைக்கப்பட்டது. அன்று உருவாக்கப்பட்ட கலைப்படங்களில் எல்லாம் சூழல் சித்தரிப்பில், குளோஸப் காட்சிகளில் அந்த செயற்கையான மந்தகதி இருக்கும். அதை இன்றுபார்த்தால் தாளமுடியவில்லை.

அதைப்போல அன்றுள்ள கலைப்படங்களில் பெரும்பாலானவை அரசியல் உள்ளடக்கம் கொண்டவை. அன்று பேசப்பட்ட பொதுவான அரசியல் உள்ளடக்கமே படங்கள் சர்வதேச அரங்குக்குச் செல்ல வழியமைத்தது. சற்று மீறல், சற்று எதிர்ப்பு, கொஞ்சம் துடுக்குத்தனம் கொண்ட அரசியல் அது. அந்த அரசியல் இன்று காலாவதியாகிவிட்டது. இன்று பல அரசியல்படங்களைப் பார்க்கையில் என்ன ஏது என்று புரியவில்லை.

பரதன் அவை இரண்டையும் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவர் தன்னை கலைப்பட இயக்குநராகச் சொல்லிக்கொள்ளவுமில்லை. வன்முறை காமம் இரண்டிலும் அவருக்கிருந்த மோகத்தை, அவற்றில் அவர் தேடியவற்றை, கண்டடைந்தவற்றை மட்டும் முன்வைத்தார். ஆகவே அவருக்கு அவருடைய தகுதிக்குரிய இடம் அமையவே இல்லை. அவர் அதைப்பற்றிக் கவலைப்படவுமில்லை.

ஆனால் இன்று பலபடங்கள் கிளாஸிக் ஆக கருதப்படுகின்றன. முன்பு அவரை நிராகரித்த, பொருட்படுத்தாத விமர்சகர்களாலேயே கொண்டாடப்படுகின்றன

ஜெ

முந்தைய கட்டுரைகர்ணனின் கேள்விகள் – இமைக்கணம்
அடுத்த கட்டுரையதார்த்தவாதம் ஏன்?- கடிதம்