அமெரிக்காவில் ஃபாஸிசம்

https://anightatthegarden.com/

A NIGHT AT THE GARDEN: Press Kit

பொதுவாக நான் இணையத்தில் செயற்கை அறிவின் வழியே பிரத்யேகமாக அது பரிந்துரைக்கும் எதையுமே சொடுக்கிப் பார்ப்பதில்லை.  விதிவிலக்காக அது பரிந்துரைத்த  இந்த தளம் சென்று பார்த்தேன். (1957 இல் வெளியான பாசிச எதிர்ப்பு கருப்பு வெள்ளை  நார்வேஜியன்  திரைப்படம் seven lives குறித்து நான்  வாசித்த வகையில் இந்த சுட்டி பரிந்துரைக்கப் பட்டிருக்க கூடும்).

7 நிமிட க்ளாஸிக் ஆவணம். 1939 இல் அமெரிக்காவில் ஜெர்மனியின் பாசிச கருத்தியலை ஏற்று ஒழுகும் இனவெறிக் கூட்டத்தின் மாநாடு. 20,000 பேர் கூடிய மாநாடு. எனில் இதன் ஐம்பது மடங்கு வெளியே பொது மனதில் பொது ஜனம் என்று அமைந்திருக்கும்.

கூட்ட நிர்வாகம், மேடை அமைப்பு, ஒளி ஒலி என பாசிசத்தின் பிரும்மாண்ட வசீகரம். இன்றைய ட்ரம்ப் கொள்கைகள் எதுவோ அதை அன்று முழங்குகிறார் ஒருவர். மொத்த கூட்டத்திலிருந்து ஒரே ஒருவர்(க்ரீன் பால்) மேடைக்கு ஓடி வந்து அதை எதிர்க்கிறார். அவரை அடித்து உதைத்து அரை நிர்வாணமாக்கி தூக்கி வெளியே எறிகிறார்கள்.

அக இருளில் இருந்து திரட்டி எடுத்த பின்னணி இசை. கச்சிதமான எடிட்டிங் வழியே உலகே மறந்து போன இருள்தருணம் ஒன்றின் ஆவணம் மீண்டும் கண்டடையப்பட்டு அரங்கம் கண்டிருக்கிறது. A night at the garden எனும் இந்த 7 நிமிட வலிமையான ஆவணப் படத்தின் இயக்குனர் மார்ஷல் க்யூரி. அவரது நேர்காணலுடன் அவரது படம் உயர் தரத்தில் இந்த தளத்தில் இருக்கிறது.

மொத்த கூட்டத்தின் எதிராக  ஒருவன் என்பதே மனம் பொங்க வைக்கும் அம்சம் என்றாலும், அந்த ஒருவன் சின்னாபின்னம் ஆகும் போது கூட்டத்தில் ஒரு சிறுவன் அதைக் காளியாட்டமாக கொண்டாடும் காட்சி இந்த ஆவணத்தை வரலாற்று ஆவணம் எனும் தளத்திலிருந்து  மனிதர்கள் அவர்களின் அகம் குறித்த ஆவணம் என்று உயர்த்தி விடுகிறது. எத்தனையோ ஹாலோகாஸ்ட் படங்கள் மத்தியில் இந்த 7 நிமிட உண்மை ஆவணம் அந்த உண்மையின் தீவிரம் கொண்டே அவற்றை விஞ்சி நிற்கிறது. ஆகவே உங்கள் பார்வைக்கும்.

கடலூர் சீனு

***

அன்புள்ள சீனு,

எனக்கு ஆச்சரியம்தான். ஹிட்லருக்கு அமெரிக்காவில் 1939ல் இத்தனை ஆதரவு இருந்தது திகைப்பளிக்கிறது.

அமெரிக்கா, ஐரோப்பா இரு நிலங்களிலும் நான் பயணம் செய்தவரை நேரடியாக உணர்ந்த ஒன்று உண்டு, அங்கே நிறவெறி, இனவெறி,கிறித்தவ மதவெறி ஆகிய மூன்றும் எப்போதும் உண்டு. அவை என்றும் இருக்கும். அவை மூன்றும் இன்று ஒன்றாக உள்ளன, சமயங்களில் கிறித்தவ மதவெறி தாராளவாதச் சிந்தனை என்றபெயரில் முதல் இரண்டை எதிர்ப்பதும் உண்டு.

அறிவியல்புனைகதைகள் சித்தரிக்கும் ஒரு தொலைதூர எதிர்காலத்தில்தான் அது இல்லாமலாக வாய்ப்பு. அடிப்படையான நோய்க்கிருமிகள் உடலிலேயே இருப்பதுபோல என்று சொல்லலாம். ஐரோப்பாவின் ஆயிரமாண்டுக்கால வரலாற்றில், அமெரிக்காவின் முந்நூறாண்டுக்கால வரலாற்றில் அவை மிகப்பெரிய செயல்விசைகளாக இருந்துள்ளன. பொதுவாக இங்கிருந்து அங்கே குடியேறி, ஒரு மண்ணுலகசொர்க்கத்திற்கு வந்துவிட்டோம் என நினைக்கும் நியோஅமெரிக்கர்கள் நியோஐரோப்பியர்களுக்கு மட்டும் அது தெரியாது

இந்நாடுகளில் இருக்கும் ஜனநாயகம் என்பது அந்த அடிப்படை விசைகளின் மீதான அறிவின் வெற்றி.ஆனால் அது தொடர்ச்சியாக அறிவியக்கத்தால் நிலைநிறுத்தப்படவேண்டும். அறிவின் தரப்பு போராடிக்கொண்டேதான் இருக்கவேண்டும். அதன் ஆற்றல் கொஞ்சம் தளர்ந்தால் அடிப்படைவிசைகள் மேலெழுந்துவிடும். நோயெதிர்ப்புசக்தி குறைந்தால் கிருமிகள் மேலெழுவது போல.

இந்தியா போன்ற கீழைநாடுகளுக்கு மதஅடிப்படைவாதமும், இனவாதமும் இதேபோன்று அடிப்படைவிசைகள். ஒவ்வொருகணமும் அறிவியக்கம் அவற்றுக்கு எதிரான ஜனநாயகப்போராட்டத்தில் இருக்கவேண்டும். எங்கே சிக்கல் வருகிறதென்றால் ஜனநாயகத்தரப்பு என்றபேரில் மறுபக்கமும் இனவாதமும் அடிப்படைவாதமும் முன்னிறுத்தப்படும்போதுதான். அடிப்படைவாதங்களுக்கு இடையேயான போராக, இனவாதங்களுக்கு இடையேயான போராக அரசியல்களம் மாறிவிடும்போதுதான். அங்குதான் ஒருவகையான கையறுநிலை உருவாகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைதொல்பழங்காலம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசமணத்தில் இந்திரன்