மாத்ருபூமி பேட்டி குறித்து

அன்புள்ள ஜெ

இணையத்தில் அய்யனார் விஸ்வநாத் என்ற எழுத்தாளர் எழுதியதை ஒரு நண்பர் அனுப்பியிருந்தார்

//சக அலுவலக மல்லு ஒருவன் சிறுகதைகள் எழுதுவான். ஒரு தொகுப்பை சமீபமாய் வெளியிட்டுள்ளான். எடுத்த எடுப்பில் என்னுடன் மலையாளத்தில் பேசாமல், அரைகுறைத் தமிழிலும் பேசிக் கொல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடும் வழக்கமுள்ளவன். தமிழில் வெளிவந்த எந்தப் படைப்பையுமே படித்திராதவன். தமிழில் நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்களா? என ஆணவமாய் கேட்டவன். ஆனால் தமிழ் சினிமாவின் மாபெரும் இரசிகன். மிஷ்கின் படங்களை வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பவன். கலாகமுதியில் சாருவின் கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பதாகவும் அவரின் விமர்சனங்கள் பிடித்திருப்பதாகவும் மட்டும் சொன்னவன்.

நான் மலையாளத்தில் பஷீரிலிருந்து கே.ஆர்.மீரா வரை ஓரளவு வாசித்திருப்பதாகச் சொன்னேன். மலையாளத்திலிருந்து தமிழில் ஏராளமான படைப்புகள் மொழிபெயர்க்கப்படுவதால் என்னால் வாசிக்க முடிகிறது என்றேன். அவன் விவேக் ஷன்பேக்கைப் படித்திருக்கிறான். வங்காள எழுத்தாளர்களைப் படித்திருக்கிறான். தமிழை ஏன் படிக்கவில்லை என்றதற்கு அவன் கேட்ட கேள்வியைத்தான் முன் பத்தியில் சொல்லியிருந்தேன். அந்தக் கேள்விக்குப் பிறகு அவனுடனான இலக்கிய விசாரத்தை நிறுத்திக் கொண்டேன்.

சமீபமாய் மாத்ருபூமியில் வெளிவந்த ஜெயமோகனின் நீண்ட பேட்டியை படித்துவிட்டு என்னைத் தேடிவந்தான். ஜெயமோகன் மீது ஒரு வியக்கத்தக்க பிம்பம் அவனுள் வந்துவிட்டிருந்தது. எப்படி அவர் இவ்வளவு எழுதுகிறார்? என்பதுதான் அவனுடைய பிரதானக் கேள்வி. நான் ஜெமோவின் அருமை பெருமைகளை அரைமணிநேரம் விளக்கினேன்(விட்டுக் கொடுக்காமல்தான்)
விஷ்ணுபுரத்தை உடனே வாசித்தாகவேண்டும். ஆங்கிலப் பதிப்பு இருக்கிறதா? ஊரிலிருந்து வாங்கிவரமுடியுமா? என்றான். தமிழ் எழுத்தாளன் ஒன்றும் சும்மா கிடையாது என்பதை நிரூபிக்கவாவது அவனுக்கு அதை வாங்கிக் கொடுக்க விரும்புகிறேன். விஷ்ணுபுரம் ஆங்கிலப் பதிப்பு சென்னையில் எங்கு கிடைக்கும்? விவரங்கள் கொடுங்களேன்.

v.ayyanar

//

இரண்டு கேள்விகள். அந்த மலையாளப்பேட்டி கிடைக்குமா? விஷ்ணுபுரம் ஆங்கிலத்தில் உள்ளதா?

ஒரு சந்தேகம், மலையாளத்தில் தமிழிலக்கியங்களைப்பற்றிய அறிமுகமே கிடையாதா?

சரவணன்

அன்புள்ள சரவணன்

அந்த வரிகளை வடகரை வேலன் என் இணையவிவாதக் குழுமத்திலும் கொடுத்திருந்தார்

1. அந்தப்பேட்டியை நானேதான் தமிழில் மொழியாக்கம் செய்யவேண்டும். நேரம் இருந்தால் பார்க்கலாம். அதில் என் எழுத்து, வாழ்க்கை, மலையாள இலக்கியம் பற்றிய என் கருத்துக்களைச் சொல்லியிருந்தேன்.

2 விஷ்ணுபுரம் ஆங்கிலத்தில் கிடைப்பதில்லை. மொழியாக்கம் செய்தாலும் சரியாக இருக்காது. ஆங்கிலத்தில் எழுதும் ஒருவர் மொழியாக்கம் செய்யவில்லை என்றால் அது வாசிக்கும்தகுதி கொண்டதாக இருக்காது

3. மலையாளத்தில் தமிழின் முக்கியமான பல ஆக்கங்கள் சென்று சேரவில்லை என்பதே உண்மை. தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சிலகுறிப்புகள், ஒரு புளியமரத்தின் கதை, அசோகமித்திரனின் ‘தன்ணீர்’ ‘கரைந்த நிழல்கள்’ 18 ஆவது அட்சக்கோடு’ ஆ.மாதவனின் ‘புனலும் மணலும்’ ‘கிருஷ்ணப்பருந்து’ நீலபத்மநாபனின் ‘தலைமுறைகள் ‘பள்ளிகொண்ட புரம்’ ஜி நாகராஜனின் ‘நாளை மற்றும் ஒரு நாளே’ தோப்பில் முகமது மீரானின் ‘துறைமுகம்’ ‘கூனன் தோப்பு’ ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ போன்ற பல படைப்புகள் வெளிவந்துள்ளன.

ஆனால் மலையாள வாசகர்கள் பொதுவாக இந்திய இலக்கியத்தில் வங்காள இலக்கியம் தவிர பிறவற்றை பொருட்படுத்துவதில்லை. கன்னட உருது இலக்கியமேதைகளுக்கு அங்கே எளிய அறிமுகம் கூட இல்லை. குர் அதுல் ஐன் ஹைதரின் அக்னிநதி [ஆக் கி தர்யா]கிரிராஜ் கிஷொரின் சதுரங்க குதிரை [டாய் கர்] போன்ற ஆக்கங்கள் அங்கே கவனிக்கப்படவே இல்லை.

வங்க இலக்கியம்கூட இடதுசாரிகளால் பேசப்பட்டால், வார இதழ்களில் வெளிவந்தால் மட்டுமே கவனிக்கப்படுகிறது. மலையாளிகளுக்கு அதீன் பந்த்யோபாத்யாயவின் நீலகண்ட பறவையை தேடி [நீல் கண்ட் பக்கீர் கோஞ்சே] போன்ற ஒரு பெரும்படைப்பு அறிமுகமே இல்லை– மொழியாக்கம் செய்யப்பட்டு இருபதாண்டுக்காலமாகிறது. இன்றுவரை எவரும் ஒரு சிறு குறிப்புக்கூட எழுதி நான் வாசித்ததில்லை.

மலையாளிகள் ஒரு பொய்யான நம்பிக்கையில் இருக்கிறார்கள். இந்திய இலக்கியத்தில் மலையாளமும் வங்கமும் மட்டுமே முக்கியம் என்று. அதைக் கலைக்க அவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. வங்கத்தினரும் இதே மனமயக்கம் கொண்டவர்கள். அவர்கள் தங்களை மட்டுமே ஒத்துக்கொள்வார்கள். இவர்களின் இலக்கிய வாசிப்பு முழுக்க மேற்கு நோக்கியது. அதிலும்கூட பேரிலக்கிய வாசிப்பும் விவாதமும் குறைவே. பொதுவான அதிகம் பேசப்படும் ஆக்கங்கள் பற்றிய ஒரு மேலோட்டமான ஆர்வம்தான்.

இந்திய இலக்கியத்தில் கன்னடம், உருது , வங்க நாவல்களும் தமிழ்சிறுகதையும் வகிக்கும் இடம் மலையாள இலக்கியத்திற்கு இல்லை. ஆனால் அதை மலையாளி ஒத்துக்கொள்வதே இல்லை. வாசிக்க மறுப்பான், என்ன செய்ய முடியும்? இலக்கியத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. நீங்கள் நல்லெண்ணம் கொண்டு வாசித்தால் மட்டுமே இலக்கியம் உங்களுடன் பேசும். நிராகரிக்கும் மனநிலையுட்ன் வாசித்தால் எந்த இலக்கிய ஆக்கமும் கவராது போகும்.

பொதுவாக ஒரு மனநிலை உள்ளது, இதை வடக்கேயும் காணலாம். தமிழிலக்கியத்தின் சாதனையாளர்கள் எவரையும் அங்கீகரிக்காமல் தமிழ் எழுத்தாளராக கோவி மணிசேகரன், சமுத்திரம் போன்ற ஏதாவது ஓரு கோமாளிகளை எடுத்துக்கொள்வது, அவர்களை வைத்து மொத்த தமிழிலக்கியத்தையும் கேலிக்குரியதாக்குவது. மலையாள இலக்கியம் என்றால் பஷீரும் சகரியாவும். தமிழ் என்றால் இவர்கள். இந்த மனநிலையில் நின்றே தமிழில் நவீன இலக்கியம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

மலையாளி தமிழ் பண்பாட்டையும் தமிழிலக்கியத்தையும் நம் அரசியலையும் சினிமாவையும் வைத்தே மதிப்பிடுகிறான். ஆகவே அவனுக்கு எந்த மரியாதையும் இல்லை. ஆகவே வாசிக்க முன்வருவதில்லை. வாசித்தாலும் ஒரு நாக்கு சுழற்றலுடன் கடந்துசெல்வான். அவற்றின் முக்கியத்துவத்தை முன்வைக்கும் கூற்றுகளைப் புறக்கணிப்பான்.

இந்த விஷயங்களை எப்போதும் போல அந்த பேட்டியிலும் வலுவாகச் சொல்லியிருக்கிறேன். உலகஇலக்கியம், நவீன நாவல் எனப் பல திசைகளுக்கு விரியும் பேட்டி.
நல்ல வாசகர் சிலருக்காவது அது திறப்பாக அமையலாம். பார்ப்போம்

ஜெ

வாசிப்பின் நாட்டிய சாஸ்திரம்

முந்தைய கட்டுரைசிறுகதைகள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅதர்வம்-கடிதம்