இமைக்கணம் ஒரு கேள்வி

அன்புள்ள ஜெ,

ஒரு கிளாசிக்கை படிக்கும் பொழுது நிறுத்தாமல் ஒரு ஒழுக்காக வாசிப்பு நிகழவேண்டும் என்று நீங்கள் சொல்வதுண்டு. அந்த ஒழுக்கு விடுபட்டு விட்டால், வாசிப்புக்கு நடுவே அதிக நாட்கள் கடந்து விட்டால் மீண்டும் அதை உள் வாங்குவது எவ்வளவு கடினம் என்பது என் அனுபவத்தில் தெரிந்துகொண்டேன். வெண்முரசை அச்சு வடிவில்தான் வாசித்து கொண்டு இருக்கிறேன். குறுதிச்சாரல் வரைக்கும் நன்றாகத்தான் வாசிப்பு சென்றது. ‘இமைக்கணம்’ முதல்மூன்று அத்தியாயங்களை வாசிக்கும்  பொழுது விடுபடல் நிகழ்ந்து விட்டது. என் பணிக்கு சம்பந்தப்பட்ட இதர நூல்கள் வாசிக்க வேண்டியதால்… மீண்டும் பார்க்கலாம் என்றுதான் நிறுத்தினேன்.

ஒரு மாதம் பிறகு மீண்டும் சென்றால்… என்னால் உள் வாங்க முடியவில்லை. முதலில் இருந்து தொடங்கினேன். மீண்டும் வாசிப்பில் ஏதோ தடங்கல். இதற்கு இடையில் கரோனா தொற்று… அதில் மானசீகமாக பலவீனமாக உள்ள எனக்கு வெண்முரசின் தீவிரத்திற்குள் நுழைய முடியவில்லை. ஒரு புத்தெழுச்சி வர உங்களது தன்மீட்சி, நலம், உரையாடும் காந்தி புத்தகங்களை படித்தேன். மீண்டுவிட்டேன் என்ற நம்பிக்கை வந்த உடனேயே இமைக்கணம் தொடங்கினேன். அந்த வாசிப்பு தவத்திற்குள் செல்லும்முன்… மனதளவில் ஒருங்குவதற்காக குருதிச்சாரல்  கடைசி அத்தியாயங்களை வாசித்து அதில் இருந்து நேராக இமைக்கணத்தில் குதித்துவிட்டேன். புற காரணங்கள் எந்த தடங்கல் ஏற்படுத்தாமல் அமைத்து கொண்டேன். தவம் என்றேனே… அதை அணுவணுவாக சுவைத்தேன்.

பாரதத்தின் கதை மாந்தர்களுக்கு சொல்லப்படும் கீதையை… அதன் தர்க்க விதர்க்கங்களை நான் எந்த அளவிற்கு உள்வாங்கினேன் என்று தெரியவில்லை. நான் ரசித்ததெல்லாம் உங்களின் நடையை, நிகழ்வுகளை அமைத்த முறையை, கண்ணன் ஒவ்வொருவருக்கும் காட்டும் அந்த வாழ்க்கை மாயையை! ‘உங்கள் வாழ்க்கை இப்படி நிகழ்ந்து இருந்தால் எப்படி இருக்கும்…'(மிகவும் எளிமைப்படுத்தி விடுகிறேன்… மன்னிக்கவும்) என்று காட்டும் இடங்கள் ஒரு கிளாசிக்.  நமக்கும் அப்படி ஒரு ஆசான் அமைந்து ஒட்டுமொத்த வாழ்க்கையையும் புதிய ஒரு கோணத்தில் பார்க்கும் பார்வையை அளித்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம்தான் வந்தது. அல்லது இந்த நாவலில் மீண்டும் மீண்டும் வருவது போல் வேறெங்கோ அந்த வாழ்க்கை வாழ்கிறேனா… கனவில் வருவது அந்த வாழ்க்கையின் சிறு தெறிப்புகள் தானா! அந்த பிற வாழ்க்கைக்கு செல்லும் பாதையைத்தான் கண்ணன் காட்டுகிறானா!

கீதைதான் இமைக்கணத்தின் மையம் என்கிற பொழுதில் அதன் தத்துவர்த்திக்குள் செல்ல முடியாத எனது வாசிப்பு… குறைபட்டதுதான். விஷ்ணுபுரத்தில் இருந்தே இந்த குறை எண்ணில் உண்டு. இருந்தாலும் அந்த அத்தியாயங்களை மீண்டும் மீண்டும் வாசித்து உள்வாங்க முயற்சித்துக்கொண்டு தான் இருக்கிறேன். அந்த சிரமமெல்லாம்… ஒரு கவித்துவமான அத்தியாயத்தை வாசிக்கும் பொழுது பறந்து சென்று விடுகின்றது. இமைக்கணத்தில் வரும் வியாசனின் அத்தியாயம் அந்த மாதிரி ஒரு தேன் அமுது. அதை ஒன்று மட்டுமே ஒரு குறு நாவலாக பிரசுரிக்கலாம். வியாசரின் வீடுபேறுக்கான விழைவும்அதை அடையவே முடியாதென்ற ஏக்கமும்… எனக்கு உங்களின் கேள்விகள் என்றே பட்டன.

நாவலை முடித்தபின் வெண்முரசு விவாத தளத்திற்கு சென்று நண்பர்களின் கடிதங்களை படித்தேன். அருணாச்சல மகராஜன் அவர்களின் கடிதம் புதிய திறப்புகளை அளித்தது. இருந்தாலும் இமைக்கணத்தின் வடிவை பற்றி எனக்கு சில கேள்விகள் உள்ளன.

முதலாவது, கண்ணன் இமைக்கண காடுக்கு செல்லும் முன்… உபப்லாவ்யத்தில் நிகழும் பாண்டவர்களின் உரையாடலில், அவை வர்ணனையில் ஒரு செயற்கைத்தன்மையை கண்டேன். ஒரு கதை சொல்லியாக நீங்கள் விவரிக்கும் காட்சி வர்ணனைகளில் இருக்கும் ஒரு யதார்த்ததன்மை  அதில் இல்லை. கதை மாந்தர்களின் உரையாடல்களில் ஏதோ மிகு நாடகத்தனம். வெண்முரசில் சில நிகழ்வுகளை வேறு ஒருவர் பார்வையில் சொல்லும்பொழுதுதான் இந்த மாதிரி ஒரு செயற்கைத்தன்மையை அமைப்பீர்கள். ஆனால், இதில் அப்படி யாரும் இல்லை… சொல்வது நீங்களேதான்.  யுதிஷ்டரரின் அத்தியாயத்தில் இதே அவையை மீண்டும் காட்சிப்படுத்தி இருப்பீர்கள். அதில் உங்களுக்கே உரிய தீவிரம் உள்ளது. அதே யதார்த்ததன்மை.  முந்தய அத்தியாயத்தில் மட்டும் ஏன் அந்த செயற்கைத்தனம்?

இரணடாவது, கண்ணன் அர்ஜுனனுக்கு கீதையை உரைக்கும் அத்தியாயம் முழுவதும்… வெறும் புத்தக மேற்க்கோளாகத்தான் தோன்றியது. அதில் வரும் உரைகள் அனைத்தும் கீதைக்கு அப்பட்டமான மொழியாக்கமாகத்தான் இருந்தது. இதர கதைமாந்தர்களுக்கும் கண்ணன் கீதையைத்தான் உரைத்தாலும் சாதாரணமாக கண்ணனின் சகஜமான உரையாடலாகத்தான் திகழ்ந்தது. அர்ஜுனனின் அத்தியாயத்தில் மட்டும் ஏன் இப்படி வந்தது? கீதையை உங்களின் அற்புதமான தமிழில் சுவைத்தாலும்… ஒரு நாவலின் புனைவாக இதை ரசிக்க முடியவில்லை. இது நீங்கள் உத்தேசபூர்வமாக நிகழ்த்தியதுதான்… ஏன் என்றுதான் என்னால் உள்வாங்க முடியவில்லை.

அந்த அத்தியாயம் அர்ஜுனனின் கனவு என்று எடுத்துக்கொண்டாலும்… அந்த மொழிபெயர்ப்பு தோரணை நாவலுக்குள் ஒட்டாமல்தான் உள்ளது. அர்ஜுனன் நாவலின் இறுதியில்… நானே பீஷ்மராக, விதுரராக மற்ற எல்லோருமாக சென்றேன் என்று சொல்வான். அப்படி பாத்தால்  நாவல் முழுவதுமே அர்ஜுனனின் கனவுதான்… தொடக்கத்தில் வரும் திரேதாயுகத்தின் வர்ணனை உட்பட. அந்த வகையில் முதலில் வரும் உபப்லாவ்யத்தின் நாடகத்தன்மையை ஓர் அளவுக்கு புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால், மற்ற அத்தியாயங்களில் உங்களின் தீவிரமும்… கச்சிதமான உரையாடல்களும், கவித்துவமும் நிகழ்கிறதே! முதலிலும், அர்ஜுனன்-கண்ணனின் உரையாடலிலும் மட்டும் ஏன் அந்த செயற்கைத்தனம்?

நிச்சயமாக இதில் என் வாசிப்பு குறைப்பாடு ஏதோ உள்ளதாகத்தான் தோன்றுகிறது. அதை போக்கத்தான் இதர வாசர்களின் கடிதத்தை வாசித்தேன். ஆனால், எனக்கு அங்கு விடைகள் கிடைக்காததால் தான் உங்களிடம் கேட்கிறேன். மன்னிக்கவும்.

மிக்க அன்புடன்,
ராஜு.

அன்புள்ள ராஜு

இமைக்கணம் நாவலுக்கு ஓர் அமைப்பு உத்தேசிக்கப்பட்டது. அது ஒரு தனிநூல்.  ‘எவராலோ’ எழுதப்பட்டது. நேரடி நிகழ்வு அல்ல. ஒரு நூலின் மொழிநடை, அமைப்பு அதற்கு முகப்பாக அளிக்கப்பட்டது. ஆகவே ஓர்  ‘எழுதப்பட்ட’ நூலுக்கான வடிவை, மொழியை அது அங்கே கொண்டது.

அந்நூலில் ஓர் இமைக்கணத்தில் கீதை நிகழ்கிறது. கீதை ஒரு ‘ஊழ்கக் கணத்தில்’ அர்ஜுனனுக்கு கிருஷ்ணனால் சொல்லப்படுவதாக இமைக்கணம் காட்டுகிறது.

இமைக்கணம் பேசுவது கீதையை மட்டும்தான். அதாவது கீதாமுகூர்த்தம் என்னும் ஒரு கணத்தை. கீதையை பார்த்தன் அறிந்துகொண்ட ஒற்றைக்கணத்தை. அதை விரித்துவிரித்துப் பார்க்கமுடியுமா என்னும் முயற்சி அந்நாவலாக ஆகியிருக்கிறது

கீதை பல பதில்களைச் சொல்கிறது. ஆகவேதான் வெவ்வேறு யோகங்களாக உள்ளது. அந்த பதில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இயல்புடையவர்களுக்கு சொல்லப்படுவன. வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் பொருள்கொள்வன. ஆனால் சாராம்சம் வேதாந்தமையமாகிய அத்வைதமே.

இப்படி சொல்கிறேன். ஒரு கோடு. அதற்கு இப்பக்கம் இருப்பது கீதை. இன்றிருக்கும் நூல்வடிவ கீதை. அதில் எந்தச் சொல்மாற்றமும் நிகழக்கூடாது என்று நினைத்தேன். ஆகவே சொல் சொல்லாக, மொழியாக்கங்களை ஒப்பிட்டு, அதை அப்படியே கொடுத்தேன். அது புனைவல்ல, உண்மையான கீதை.

கோட்டுக்கு அந்தப்பக்கம் இருப்பது கீதையின் விரிவாக்கம். கீதையின் ஒவ்வொரு அத்தியாயமும் மகாபாரதத்திலுள்ள ஒவ்வொரு கதைமாந்தருக்குச் சொல்லப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்? கர்மயோகத்தை யார் வழியாகப் புரிந்துகொள்ள முடியும்? ஞானயோகத்தை எவரினூடாகப் புரிந்துகொள்ள முடியும்? அவ்வழியில் கற்பனையை ஓட்டி சென்ற வழிகள் அவை.

அந்தக் கற்பனைப் பகுதிகளிலெல்லாம் உள்ளே கீதையும் வருகிறது. கீதையின் நேரடி வரிகள் அவற்றிலும் உள்ளன. ஆனால் அந்த வரிகளை நோக்கி வரும் பிறவரிகள் புனைவாக உருவாக்கப்பட்டுள்ளன. அங்கே கற்பனை இருப்பதனால் வெண்முரசுக்குரிய படைப்புமொழி செயல்படுகிறது. அந்தமொழியில் கவித்துவமான பல வரிகள் வழியாக கீதை வெவ்வேறு கோணங்களில் எட்டி எட்டி தொடப்படுகிறது. இறுதியாக கீதையே முழுமையாக முன்வைக்கப்பட்டு நாவல் முடிகிறது

எப்படியும் வெண்முரசில் கீதை வந்தாகவேண்டும். கீதை ஒரு மூலநூல். அதை மாற்றுவது பிழை. புராணங்கள் மாற்றத்திற்குரியவை. ஏனென்றால் அவை அடிப்படையில் உதாரணகதைகள். மொத்த மகாபாரதமுமே மூவாயிரம் வருடங்களாக தொடர் மறுபுனைவுகளுக்கு ஆளாகியிருக்கிறது. ஆனால் உபநிடதங்களோ கீதையோ அப்படி மாற்றத்திற்குள்ளாகவில்லை. மாற்றப்படலாகாது. வெண்முரசில் கீதை மட்டுமே அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் முன்வைக்கப்படுகிறது.

உண்மையில் இமைக்கணத்தை கீதை நேரடியாக வரும் பகுதியை தவிர்த்துவிட்டு, ‘இவ்வாறு கீதை வந்தடையப்பட்டது’ என்ற ஒற்றைவரியாக அறிந்துகொண்டு வெண்முரசு வாசகன் கடந்துசெல்லலாம். அவனுக்கு உகந்த கீதை வடிவம் ஒன்றை தனியாகவும் வாசிக்கலாம். அது எவருடைய மொழியாக்கமாகவேண்டுமென்றாலும் இருக்கலாம்

அதாவது கீதைக்கான பாதைகள் மட்டும்தான் இமைக்கணம். சென்று சேருமிடத்தில் கீதை அங்கே இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் அங்கே கீதையின் முழுவடிவம் சொல்லுக்குச் சொல் மொழியாக்கமாக அமைந்துள்ளது. அது இமைக்கணத்தின் சிற்ப அமைப்புக்கு முக்கியமானது, அவ்வளவுதான்

இரண்டு உதாரணங்கள் சொல்கிறேன். ஒரு கற்சிற்பம் நம் கண்முன் இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழையது.  ‘இந்தச் சிற்பத்தை எப்படிச் செதுக்கியிருப்பார்கள், எங்கே கல் எடுத்திருப்பார்கள், எவரெவர் வடிவமைத்திருப்பார்கள்?” என்று கற்பனைசெய்து பின்னால் சென்று அந்த சிற்பம் ஓரு கருத்தாக, கற்பனையாக இருந்ததில் இருந்து தொடங்கி முழுமையடைந்தது வரை உருவகித்துப்பார்ப்பதுபோல. இங்கிருக்கும் சிற்பம் உண்மையானது, மாறாதது. கற்பனை அதிலிருந்து தொடங்கி தன் பாதையை தானே விரித்துக்கொள்கிறது

இன்னொரு உதாரணம், ஓர் ஆற்றை நாம் காண்கிறோம். ஆற்றிலிருந்து தொடங்கி அதற்கு நீர்வந்துசேரும் சிற்றாறுகள் ஓடைகள் ஆகிய அனைத்தையும் கண்டறிய முற்படுகிறோம். அதன் ஊற்றுமுகத்தை அடையாளப்படுத்துகிறோம். இதுவும் பின்னால் செல்லும் பாதை. விரிந்துகொண்டே செல்லும் பாதை

கீதை கர்ணனுக்கு, பீஷ்மருக்கு, வியாசருக்கு , சுகருக்கு எப்படி பொருள்படுகிறது என்பது இமைக்கணம் என்னும் கற்பனைக்கு அடிப்படையான கேள்வி. யமனுக்கு,இந்திரனுக்கு எப்படி பொருள்படுகிறது. சாவில், வாழ்வில் எப்படி பொருள்படுகிறது. வெறும்வீரனுக்கு ,கர்மயோகிக்கு, யோகிக்கு, ஞானிக்கு, பரமஹம்சருக்கு எப்படி பொருள்படுகிறது என இமைக்கணம் விரித்துசெல்கிறது. ஆனால் கீதை அதுதான், அதே சொற்கள்தான். அதை மாற்றமுடியாதல்லவா?

ஜெ

முந்தைய கட்டுரைஆன்மிகமும் சுதந்திரமும்
அடுத்த கட்டுரைஅணுக்கம்- ஒரு கடிதம்