எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது [சிறுகதை]

அன்பின் ஜெ,

நலம் என்று கொள்கிறேன்.

”எண்ணும்பொழுது” சிறுகதை வாசித்தேன். ஒரு தளத்தில், எப்போது கதைக்கால ஆண் எண்ணத் தொடங்கினானோ அன்றே காதலில் நம்பிக்கை இல்லாமல் ஆகிறது. காலை பகல் மாலை என்று தெரியாமல் புரிவதே காதல். conscious உணர்வு எப்போது தலையிடுகிறதோ அப்போது காதல் உடைய நேர்கிறது. வெண்முரசின் பீஷ்மன் அம்பையிடம் சொல்வதுபோல் எப்பொழுது கையை நீட்டுகிறோமோ காட்டுக்கிளிகள் அஞ்சி பறந்துவிடும்.

மறுதளத்தில் ”எண்ணும்பொழுது” என்பது எண் என்பதை விடுத்து எண்ணம் என்பதையே நாடியது. உங்களின் குறள் உரையில் நீங்கள் குறிப்பிட்ட எண்ணென்ப ஏனைய எழுத்தென்ப என்பதன் சாத்தியப் பொருளான எண்ணம் என்ப வந்துபோனது. லெக்சிகனிலும் எண்ணம் என்பதற்கு thought உடன் கடைசியாக mathematics என்றும் பொருள் தரப்படிகிறது. போலவே எண் என்பதற்கு calculation உடன் thoughtம் வருகிறது.

கதைக்காலத்தில் பெண் கவித்தன்மையோடு முல்லையைக் கொடுக்கிறாள், தான் காத்திருப்பேன் என்று. கடலைவிட பெரியதாக இருக்கப்போகும் பிரிவு எனும் கங்குல் வெள்ளத்தை காத்து இருந்து கடந்துவிடலாம் என்று.  பொருள்வயின் செல்லும் ஆணோ ஒரு பொருளையே கொடுக்கிறான். ஒருவேளை வெகுநாட்கள் கழித்து பூக்கள் உதிராமல், அக்கணமே முல்லை உதிர்ந்துவிட்டதோ.

வள்ளுவன் சொன்னது போல் “பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை” — ஒருவர் ‘நான் உன்னைப் பிரிகிறேன்’ என்று சொல்லும் அளவுக்கு கொடுமையானவர் என்றால், அவர் திரும்பி வந்து என்னிடம் அன்புசெய்வார் என்று கொள்ளுதல் மிகுந்த முட்டாள்தனம் அல்லவா. உன்னைவிட்டுச் செல்கிறேன் என்ற எண்ணம் எழுந்தக்கணமே முல்லை உதிர்வதற்கான அறிகுறியா.

நிகழ்காலத்தில் ஆண் கவித்தன்மையோடு உள்ளான். அவள் எதிர்துருவம். இருவேறு துருவங்களைச் சேர்த்து வைத்திருப்பது காமம் ஒன்றே. சுடச்சுடவே பொன் மேலும் சுடரும். காதல், காமத்தால் சுட்டால் ஒழிய ஒளிராது. தங்கம் வெளிறியே போகும். எப்போது அவர்கள் காமமின்றி பிரிய நேர்கிறதோ அப்பொழுதே அவர்கள் எண்ணத் தொடங்கிவிடுவார்கள்; அப்பொழுதே நிரந்திர பிரிவு தொடக்கம்.

நன்றி

விஜய் ரெங்கராஜன்.

அன்புள்ள ஜெ

எண்ணும்பொழுது சிறுகதை என் பாட்டி அடிக்கடி சொல்லும் ஒரு சொலவடையை நினைவூட்டியது. அளந்து வாங்கணும், அளக்காம கொடுக்கணும். அன்பு, பாசம், கடமை, தியாகம் எதையுமே அளக்காமல், எண்ணாமல் , செய்பவர்கள்தான் உண்மையில் அதில் மகிழ்ச்சியும் நிறைவும் அடையமுடியும். அதை எண்ண ஆரம்பித்தால் கசப்பும் வருத்தமும்தான் மிஞ்சும்.

எங்கள் தாய்மாமா வீட்டுக்காக அவ்வளவு தியாகங்கள் செய்தவர். எட்டு தங்கைகளை அவர்தான் திருமணம் செய்துகொடுத்தார். நாற்பத்தாறாவது வயதில்தான் அவர் திருமணம் செய்துகொண்டார். அவர் எப்போதுமே அவர் செய்த தியாகங்களை கணக்குபோட்டு சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் தங்கைகள் எல்லாம் அவர்மேல் மிகப்பெரிய மதிப்பு கொண்டவர்கள். என் அம்மாவெல்லாம் தாய்மாமா பேரைச்சொல்லிவிட்டாலே கண் கலங்கிவிடுவார். ஆனால் அவர் அதையெல்லாம் கணக்குபோட்டு சொல்லிச்சொல்லிக் காட்டி கடைசியில் அத்தனைபேராலும் வெறுக்கப்படுபவராக ஆனார்

“நீ எதுவரை என்னை காதலிக்கிறாய்” ”உனக்கு யார் மிக முக்கியம்?” “நான் காதலிக்கும் அளவே நீ காதலிக்கிறாயா?”என்ற கேள்விகளெல்லாமே அர்த்தமில்லாதவை. அவற்றை கேட்க ஆரம்பித்ததுமே காதல் இல்லாமலாகிவிடுகிறது. எண்ணும்பொழுது ஒன்றுமே மிஞ்சாது. எல்லா பூவும் உதிரும். பொன் வெள்ளியாகிவிடும். கோணச்சி அறிந்த வாழ்க்கையின் அடிப்படையான ரகசியம் இதுதான்

 

ஆர்.கிருஷ்ணகுமார்

எண்ணும்பொழுது- கடிதங்கள்-5

எண்ணும்பொழுது- கடிதங்கள்-4

எண்ணும்பொழுது- கடிதங்கள்-3

எண்ணும்பொழுது- கடிதங்கள்-2

எண்ணும்பொழுது- கடிதங்கள் -1

முந்தைய கட்டுரைமீரா- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெங்கட்டாம்பேட்டை – கடலூர் சீனு