அந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-9

[ 9 ]

மறுநாள் நான் எழுவதற்கு முன்னரே அவள் எழுந்துவிட்டாள். அவள் உள்ளே ஏதோ செய்யும் ஓசை கேட்டுத்தான் நான் விழித்துக்கொண்டேன். இருட்டிலேயே அவள் வெளியே சென்று வந்துவிட்டிருந்தாள். நான் மிகமிக களைத்திருந்தேன். முழு இரவும் நான் தூங்கவில்லை. அத்தனை தூக்கம் அழுத்தியது. சாவுபோல எடைமிக்க தூக்கம். ஆனால் பத்துநிமிடம் தூங்கியதுமே மனம் விழித்துக்கொண்டது. அதன் பின் உழற்றிக்கொண்டே இருந்தது. விடியவிடிய.

நான் அந்தத்தருணத்தை திரும்ப எடுத்துக்கொள்ள முயன்றேன். அவளிடம் அவ்வாறெல்லாம் சொல்லாமல் இருக்க, அவ்வாறு எண்ணமே வராமலிருக்க. அந்த தருணத்தை வெவ்வேறு வகைகளில் மாற்றி நடித்தேன். என்னுள் நிகழ்த்தி நிகழ்த்திச் சலித்தேன். அதில் அவளை நான் தழுவி ஏற்றுக்கொண்டேன். காதலியை முதலில் அடைவதன் வேட்கை, தவிப்பு, பரவசம், தவிப்பு, தளர்வு என்று திளைத்தேன். பகற்கனவுகளில்தான் காமம் எத்தனை வண்ணம் கொள்கிறது. எத்தனை சாத்தியக்கூறுகளை அடைகிறது. எவ்வளவு தூரம் அதில் செல்லமுடிகிறது!

ஆனால் அவை பகற்கனவு என்றும் தெரிந்திருக்கிறது. ஆகவே சலிக்கிறது. அல்லது பகற்கனவுகளிலுள்ள ஒற்றைப்படைத்தன்மைதான் சலிப்பாகிறதா? வேண்டுவன வேண்டியதுபோல் நிகழ்ந்தபின் ஆணவ நிறைவின் வெறுமையை அன்றி எதையும் விட்டுவைக்காமல் பகற்கனவுகள் சலித்து நின்றுவிடுகின்றனவா? சலிக்காத பகற்கனவு என உண்டா? அதைத்தான் சொர்க்கம் என்கிறார்களா? தெவிட்டாத தேன் என்ற கற்பனைதான் எத்தனை முறை காதில் விழுந்திருக்கிறது!

பகற்கனவின் ஊசல் ஒரு திசையில் எல்லை தொட்டதும் மறுதிசைநோக்கி பாய்கிறது. தித்திக்கத் தித்திக்க அவளுடன் இருந்தவன் அவளை சிறுமைசெய்தேன். அவள் உளமுடைந்து அழச்செய்தேன். அவள் அழுவதைக் கண்டு நானும் உளமுருகி அழுதேன். துன்பத்திலும் திளைத்தேன். அதன் உச்சியில் பாட்டரி முனையில் நாநுனி தொடும் இனிப்பைக் கண்டுகொண்டேன். மீண்டும் திரும்பி வந்தேன். ஓயாத ஊசல்.

இரவில் படுக்கையில் கண்ணீர் வழிய நெடுநேரம் கிடந்தேன். கண்ணீர் வழிந்ததுமே கொஞ்சம் அமைதியடைந்தேன். அந்தக் கண்ணீர் அப்பகற்கனவு நாடகத்தில் நான் சொன்னவற்றுக்கும் செய்தவற்றுக்கும் அல்ல, உண்மையில் அவளிடம் நான் சொன்னவற்றுக்காக. ஆனால் அப்படி நேரடியாக அதை எனக்கே சொல்லிக்கொள்ள என்னால் இயலவில்லை. ஆகவே அதை நூறுமுறை திருப்பிப்போட வேண்டியிருந்தது. ஒரு செயற்கையான தருணத்தை கற்பனையில் உருவாக்கி பகற்கனவில் அதை விரித்தெடுக்கவேண்டியிருந்தது.

விடியற்காலையில் தூங்கியிருப்பேன். எப்போதோ விழித்துக்கொண்டேன். அந்த தூக்கத்தால் என் மனம் மிக நன்றாகத் தெளிந்திருந்தது. ஒவ்வொன்றும் மிகமிக துல்லியமாக, எந்தப் பூச்சுமில்லாமல் தெரிந்தது. அவளை நான் இழந்துவிட்டேன், அதுதான் உண்மை. ஏன் அதை அவளிடம் சொன்னேன்? அந்த தருணம் என்னை அச்சுறுத்தியது, அதன் எதிர்பாராத தன்மை. நான் என்னிடமிருந்த எதையோ இழக்க அஞ்சினேன். அதன்பின் நான் வேறொருவனாக ஆகிவிடுவேன். அது பாய்ந்து விடுவதற்கு முந்தைய கணத்தின் தயக்கம் மட்டும்தான், வேறொன்றுமல்ல. ஆனால் அது வேறேதேதோ சொற்களை தன்மேல் அணிந்துகொண்டுவிட்டது.

அந்த தருணத்தில் என்னை அதிலிருந்து விலக்கிக்கொள்ள விரும்பினேன். என்னை என் காமத்திலிருந்து அறுத்துக் கொள்ளவேண்டும் என முயன்றேன். அதை மூர்க்கமாகச் செய்தேன். ஆகவேதான் அந்த கடுமையான வார்த்தைகள். உண்மையில் அவளை ஒரு வாளால் வெட்டினேன். அந்த வாள் அவளை வெட்டுமென்று தெரிந்திருந்தது. அதை முன்னரே கண்டடைந்து ரகசியமாக வைத்திருந்தேன். ரத்தம் வழிய, துடிதுடிக்க வெட்டினேன்.

அந்த விடியற்காலையில் கண்ணீருடன் நான் என்னைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தேன். அந்த வாளை நான் வைத்திருந்திருக்கிறேன். நான் அவளிடம் சொன்னவை பொய் அல்ல. ஆனால் அவையே உண்மை என்றும் இல்லை. அது உண்மையின் ஒரு பகுதி. அதுவும் என் எண்ணம்தான். ஆனால் அவள்மேல் நான் பெரும் பித்து கொண்டிருந்தேன். அந்தப் பித்தையே நான் அஞ்சினேன். ஆனால்  உண்மையில் அதற்கு ஆழத்தில் அருவருப்பும் இருந்தது. அவளை அடைந்தால், அந்த கிளர்ச்சி அடங்கினால், அந்த அருவருப்பு மேலெழுமா? இல்லை இல்லை என்றது அதற்கும் அப்பால் ஓர் ஆழம். அவளே என் பெண். இன்னொருத்தி அல்ல. அவள்தான். அவளை இழந்தால் வாழ்நாளில் என்றென்றைக்குமான பெண்ணை இழந்துவிட்டேன் என்றே பொருள்.

அதை அவளை எழுப்பிச் சொல்லிவிடவேண்டும் என்று எண்ணினேன். அவளை தொட்டு எழுப்ப கைநீட்டிவிட்டேன். ஆனால் எழுப்பவில்லை. அவள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அப்படி தூங்க முடிகிறதென்றால் என் வார்த்தைகள் அவளை ஆழமாகப் புண்படுத்தவில்லை என்றுதான் பொருள். அவள் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. என்னை இழந்துவிட்டோம் என்னும் எண்ணம் அவளிடமில்லை. அந்த எண்ணம் சீற்றம் அளிக்க கையை விலக்கிக் கொண்டேன்.

பின்னர் மீண்டும் உள்ளம் நெகிழ்ந்தது. அவள் என் மேல் கொண்ட அக்கறையால் நான் நடந்துகொண்டது சரி என எண்ணுகிறாள். அதன்வழியாக என்னிடமிருந்து தன்னை விலக்கிக்கொண்டது அவளுக்கு நிறைவை அளிக்கிறது. என் நலனுக்காக என்னை இழப்பது அவளுக்கு இயல்பாக தெரிகிறது. அவளிடம் நாளை பேசவேண்டும். என் மனதில் என்ன என்று சொல்லவேண்டும். ஒரு சொல் மிச்சமில்லாமல் உரையாடிவிடவேண்டும்.

ஆனால் கூந்தலை அவிழ்த்து கையால் நீவியபடி உள்ளே வந்த அவளைப் பார்த்ததும் அந்த உணர்வெழுச்சிகள் அணைந்தன. அவள் என்னை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்று தோன்றியது. நேற்றிரவு நான் பேசியது அவளுக்கு நினைவிலிருப்பதாகவே தெரியவில்லை. அப்படியென்றால் அவள் மனம் காய்த்துப் போயிருக்கிறது. நுண்ணுணர்வுகளே இல்லை. அவமானங்கள்கூட ஒருபொருட்டாக இல்லை.

அல்லது, அந்த வார்த்தைகள் அவளுக்கு அவமதிப்பாகத் தோன்றவில்லை. அவள் அந்த நிலைக்கு இறங்கிவிட்டிருப்பது அவளுக்கு பொருட்டாகத் தெரியவில்லை. அவள் அங்கே இயல்பாக இருந்துகொண்டிருக்கிறாள். எந்தக் கீழ்நிலையிலும் மனிதர்கள் பழகிப்போனால் இயல்பாக இருப்பார்கள். அவள் அங்கே மகிழ்ச்சியாகக்கூட இருப்பாள். ஒருவேளை அவள் விரும்பும்படியான ஆண்கள் அவளிடம் வந்தால் அந்தக் காமத்தில் திளைக்கக்கூட செய்வாள்.

அதை மனதுக்குள் சொல்லிச்சொல்லி அவள்மேல் காழ்ப்பை வளர்த்துக்கொண்டேன். என் முகம் கடுமையாக இருந்தது. அவளை நேராகப் பார்ப்பதையே தவிர்த்தேன். அவளே சிறிய அறைக்குள் சென்று ஒடுங்கிக்கொண்டாள். நான் காலையின் வேலைகளை முடித்தேன். காலையுணவை நிறைய அள்ளி எடுத்து கொண்டுவந்து அவளுக்காக வைத்தேன். அவளிடம் ஒன்றும் சொல்லாமல் வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன்.

படப்பிடிப்புக்குச் சென்றேன். அங்கே என்.டி.ஆரும் பானுமதியும் கண்ணீருடன் கைகளைப் பற்றிக்கொண்டு பேசும் வசனங்கள் படமாகிக்கொண்டிருந்தன. இருவரும் பிரிவதற்கு இயலாமல் கண்ணீருடன் நின்றனர். பற்றிக்கொண்ட கைகளிலிருந்து தன் கையை உருவிக் கொள்ள பானுமதி முயன்றார். என்.டி.ஆர் அவள் கையை விடாமல் மீண்டும் மீண்டும் பற்றிக்கொண்டார். இருவர் முகங்களும் உருகிக்கொண்டிருந்தன. சூழ்ந்திருந்தவர்கள் முகங்களும் அதேபோலத் தெரிந்தன.

காமிரா ஓடிக்கொண்டே இருந்தது. என்.என்.ரெட்டி ஏதோ சொல்ல முயல ‘இல்லை, போகட்டும்’ என்று மெல்லி இரானி கைகாட்டினார்.  அந்தக்காட்சியில் அவர்கள் இருவரும் உணர்ச்சிகரமாக ஈடுபட்டுவிட்டிருந்தனர். விஜயேஸ்வரியும் நல்லமராஜுவும் அவர்களுக்குள் நிறைந்துவிட்டிருந்தனர். அவர்களின் துடிப்பும் தவிப்பும் அங்கிருந்த அத்தனைபேரையுமே முள்நுனியில் நிறுத்தியிருந்தது.

ஒருகட்டத்தில் விடுவித்துக்கொள்ள முடியாது, அறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று முடிவெடுத்தவர் போல பானுமதி கையை உருவிக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் ஓடினார். அழுதபடியே முகத்தை பொத்திக்கொண்டு ஓடிச் சென்று காமிரா ஃபீல்டை விட்டு வெளியே சென்று அப்படியே கால் தடுக்கியது போல விழுந்துவிட்டார். உதவியாளர்கள் ஓடிச்சென்று தூக்கினர். அவர் இரும்பு நாற்காலியில் அமர்ந்து முகத்தை கையால் மூடிக்கொண்டு மடிமேல் கவிழ்ந்துகொண்டார்.

என்.டி.ஆர் அவர் ஓடிப்போவதை பெருந்தவிப்புடன் பார்த்து ஓர் அடி முன்னெடுத்து வைத்தார். மிகப்பெரிய எடை உடல்மேல் அழுந்துவதுபோல மெல்ல தளர்ந்தார். கைகால்கள் எல்லாம் அந்த தளர்வு தோன்றியது. மிகமெல்ல பின்னடி எடுத்து வைத்து உதிர்வதுபோல ஒரு பாறையில் அமர்ந்தார். கைகள் அறியாமல் இடையிலிருந்த புல்லாங்குழலைத் தொட்டன. தாகத்தால் தவிப்பவன் நீரைக் கண்டதுபோல பரபரப்புடன் அதை உருவி எடுத்து வாயில் வைத்து வெறிகொண்டவராக வாசிக்கலானார்.

அவர் முகம் உணர்வுகளால் நெளிந்தது. கழுத்துத்தசைகள் துவண்டன. கால்கள் தாளமிட்டன. உடலெங்கும் இசை தெரிந்தது. முகம் மெல்ல அழுகையிலிருந்து புன்னகை கொண்டது. முகம் மலர்ந்து வாசித்துக் கொண்டிருந்தார். மெல்ல அண்ணாந்து நிலவை பார்த்தார். முகம் முழுக்க ஒளியுடன் நிலவை நோக்கி பரவசத்துடன் அமர்ந்திருந்தார். டிராலியில் காமிரா வெண்ணைபோல வழுக்கிச் சென்று நின்றபின் ஃபிலிம் ரோல் ஓடும் ஓசையே கேட்டுக்கொண்டிருந்தது.

பின்னர் மெல்லி இரானி பெருமூச்சுடன் காமிராவை நிறுத்தி, என்.என்.ரெட்டியின் தோளை மெல்ல தொட்டுவிட்டு விலகிச்சென்றார். அவருடைய உதவியாளன் அவரை நோக்கி கையில் பிளாஸ்குடனும் துவாலையுடனும் ஓடினான். நாலைந்து உதவியாளர்கள் என்.டி.ஆர் நோக்கி ஓடினார்கள். ஒருவன் பிளாஸ்கிலிருந்து எதையோ ஊற்றி அவருக்கு அளித்தான். என்.டி.ஆர் தன் ஒருமைநிலை கலைந்து கடும் சீற்றத்துடன் அவனை அடிக்க கையோங்கினார். வசைபோல எதையோ சொன்னபின் எழுந்து மறுபக்கமாக நடந்து சென்றார். அவர் கண்களை அருகே என பார்த்தேன், அதிலிருந்தது கடும் துயரம், வலி.

நான் பெருமூச்சுடன் திரும்பி நடந்தேன். வெயில் வெள்ளைநெருப்பு போல நின்று எரிந்தது. அடுப்பில் போடப்பட்ட கற்கள்போல சூழ்ந்திருந்த பாறைகளெல்லாம் கனலாகி வெம்மையை உமிழ்ந்தன. அங்கிருந்து விலகிச் சென்றுவிடவேண்டும் என்று தோன்றியது. காலடிகளை வெறியுடன் எடுத்து வைத்தேன். வீசப்பட்டவன்போல விலகிச்சென்றேன்.

எந்த திட்டமும் இல்லாமல் ஹம்பியில் நடந்துகொண்டிருந்தேன். துங்கபத்ரை கரையில் ஒரு செட் வேலை நடந்துகொண்டிருந்தது. உடலசைவாலேயே நாகலிங்க ஆசாரியை அடையாளம் கண்டேன். அருகே சென்று “நாகு” என்றேன்.

“ஆகா, ராவுகாரு… இங்கே என்ன செய்கிறீர்கள்?”

“ஆடைகள் கொண்டுவந்தேன்” என்றேன்.

“தெரியுமா, ஒரு பெண் ஒருவனை மண்டையில் அடித்தாளே. அவள் பலே கைகாரி. அவளுக்கு இங்கே யாரோ துணை இருந்திருக்கிறது. அன்றே சாகசமாக பெல்லாரி போய்விட்டாள்.”

“பெல்லாரிக்கா?”

“ஆமாம், இங்கிருந்து அங்கே லாரிகள் போகும்… அதில் போய்விட்டாள்.”

“உன்னிடம் யார் சொன்னது?”

“இங்கே அதேதான் பேச்சு… காலையில்தான் சித்தலிங்கப்பா சொல்லிக்கொண்டிருந்தார்… இந்த ரங்கா ரெட்டியின் ஆட்கள் சுத்த மடையன்கள். அவளை நேற்றெல்லாம் இங்கே சல்லடைபோட்டு சலித்துவிட்டார்கள். எருமைமாடுகள்…”

நான் “நரசிங்கன் இங்குதான் இருக்கிறான், தெரியுமா?” என்றேன்.

“இங்கேயா? அவன் வரமாட்டான் என்றானே?”

“அவன் படப்பிடிப்பு தொடங்கியபிறகுதான் வந்தான்.”

“படப்பிடிப்பு எப்படி போகிறது? நான் ஒருநாள் கூட பார்க்கவில்லை.”

“இன்று எடுத்தது உணர்ச்சிகரமாக இருந்தது. இருவருமே அழுதுவிட்டார்கள்.”

”ஆமாம், அதைச் சொன்னார்கள். அவர்கள் இருவரும் அப்படி ஒருவருக்கொருவர் இணைந்துவிட்டார்களாம். இருவருக்கும் உலகில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. அங்கே மதராசிலே கூட அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டேதான் இருந்தார்கள். அவர்கள் கண்களில் அப்படி ஒரு காதல்…”

“சேச்சே” என்றேன்.

“உண்மை, ஆனால் அது ஸ்டுடியோ. அங்கே அவர்கள் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள். இது வெளியூர். இதோபார், நிலம் மாறினால் நாம் நம்முடைய வழக்கமான கட்டுப்பாடுகளை இழந்துவிடுவோம். நஞ்சுண்டராவ் அங்கே என்றால் குடிக்கமாட்டார். இங்கே ஒவ்வொரு நாளும் குடி என்ன, பாட்டு என்ன, நடனம் என்ன…”

”என்.டி.ஆருக்கு திருமணம் ஆகிவிட்டதே.”

“அதனாலென்ன? இந்தமாதிரியான உறவுகள் சினிமாவில் வருவதுண்டு. நாலைந்து ஆண்டுகளுக்கு அது நீடிக்கும். பெரும்பாலும் பிரிந்து விடுவார்கள். ஆனால் ஒன்று, அந்த மாதிரி இருவர் உண்மையாகவே காதல்கொண்டுவிட்டால் அந்தப்படங்களில் அது தெரியும். உலகுக்கே தெரியும். அந்தப் படங்களெல்லாமே பயங்கரமாக ஓடும். நான் சொல்கிறேன், இந்தப்படம் மிகப்பெரிய ஹிட். சந்தேகமே இல்லை.”

நான் அவனுடனேயே இருந்தேன். அவர்கள் செட்டுக்கான அச்சுகளை கொண்டு வந்திருந்தார்கள். துணியைப் பரப்பி பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ், களிமண் கொண்டு சிறிய யானை உருவங்களை செய்து கொண்டிருந்தனர். காய்ந்தவற்றுக்கு மேல் வண்ணம்பூசப்பட்டு கல்போல ஆக்கப்பட்டன. கல்லுக்கான அதே வண்ணம், அதேபோன்ற கோடுகள், விரிசல்கள், புள்ளிகளுடன். அவற்றின்மேல் சாக்குப்படுதா போட்டு மூடப்பட்டது.

“ஏன் மூடிவைக்கவேண்டும்?” என்றேன்.

“அவை கல் என்று நினைத்து கையை ஊன்றிவிடுகிறார்கள். அழுத்தினால் அவை உடைந்துவிடும்” என்றான் நாகலிங்க ஆசாரி.

மாலையில்தான் நான் அங்கிருந்து திரும்பினேன். படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. பானுமதி போய்விட்டார் என்றார்கள். என்.டி.ஆர் பாறைகள் மேலிருந்து பாறைகளுக்கு தாவியும், மண்டபங்களில் சாய்ந்து நின்றும், கோயில் கோபுரங்களின்மேலே நின்றும் பாடிக்கொண்டிருந்தார். காமிரா கோடாவின் மேல் நின்று அவரை நோக்கி திரும்பியது. அது ஒரு கழுகு என எனக்குத் தோன்றியது.

தயாரிப்பு உதவியாளன் ஜெகபதி ராவ் என்னிடம் “உங்கள் தோட்டத்திலிருந்து ஒரு குட்டி ஓடிப்போய்விட்டாளாமே?” என்றான்.

“அப்படியா?”

“ஆமாம், ரெட்டிகாருவை அடித்தவள். ஓடும்போது அவருடைய பர்ஸையும் எடுத்துப் போய்விட்டாள். சாலைக்குச் சென்று அங்கே போய்க்கொண்டிருந்த லாரிகளில் ஒன்றில் ஏறி பெல்லாரி போய்விட்டாள். அவளிடம் நிறைய பணமிருந்திருக்கிறது.”

“யார் சொன்னது?” என்றேன்.

“கிருஷ்ணா ராவ் நேரிலேயே பார்த்திருக்கிறான். அவன் ஏதோ வாங்கிக்கொண்டு ஹொஸ்பெட்டிலிருந்து சைக்கிளில் வந்திருக்கிறான். இந்தப்பெண் லாரியில் ஏறிச்செல்வதை கண்ணால் பார்த்திருக்கிறான்.”

நான் துங்கபத்ராவில் குளித்துவிட்டுக் கிளம்பும்போது நாகலிங்க ஆசாரியிடம் அவன் சைக்கிளை கேட்டேன். “எனக்கு அங்கே தேவைப்படுகிறது. நாளை திரும்ப தந்துவிடுகிறேன்.”

“நாளைக்கு பகலில் எனக்கு தேவைப்படும்.”

”தந்துவிடுகிறேன்” என்றேன்.

அந்த சைக்கிள் மிகப்பழையது. அது முழுக்க பெயிண்ட் சொட்டி புள்ளிகளும் கோடுகளுமாக வண்ணக்கலவையாக இருந்தது. கலை இலாகா சைக்கிள்கள் அப்படித்தான் இருக்கும். அவற்றை நாங்கள் புள்ளிமான் என்போம். அதை ஓட்டிக்கொண்டு நான் எங்கள் பண்ணை வீட்டை அடைந்தேன்.

கோதண்டம் “எது இந்த புள்ளிமான்?” என்று கேட்டார்.

“சும்மா வாங்கிக்கொண்டு வந்தேன்… அங்கிருந்து வர லாரிகள் இல்லை” என்றேன்.

வேலைகள் முடிந்து பத்தரை மணிக்கு வீட்டுக்குள் புகுந்து கதவை சாத்திக்கொண்டேன். சாப்பாட்டுத்தட்டை வைத்து மெல்ல ஓசையிட்டேன்.

அவள் உள்ளிருந்து எழுந்து வந்தாள்.

“நல்ல தூக்கமா?” என்றேன்.

“இல்லை, கொஞ்சம் தூங்கினேன். ஆனால் போதுமான அளவு தூங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்.”

“சாப்பிடு” என்றேன்.

அவள் சாப்பிட ஆரம்பித்தாள். நான் “எல்லாம் நான் நினைத்தபடியே நடந்திருக்கிறது. நீ பெல்லாரி போய்விட்டாய் என்ற வார்த்தை பரவிவிட்டது. ஆகவே இன்றிரவு காவல் இருக்காது. நான் ஒரு சைக்கிள் வாங்கி வந்திருக்கிறேன். உன்னை ஹொஸ்பெட் வரை கொண்டுசென்று விடுகிறேன். பணம் தருகிறேன். நீ கிளம்பிப் போய்விடு.”

”சரி” என்று அவள் சொன்னாள்.

சாப்பிட்டுவிட்டு அவள் வந்து துணிப்பொதிகளில் சாய்ந்து கால்நீட்டி அமர்ந்துகொண்டாள். அவளை பார்த்துக்கொண்டிருந்தேன். அவளை மீண்டும் சந்திக்கப் போவதில்லை என்று தோன்றிவிட்டது. அது ஒரு வகை பரபரப்பை அளித்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த கண்தயக்கமும் இல்லாமல், நேருக்குநேராக. அவள் கன்னங்களை, கழுத்தை, தோளை, மென்மயிர்படர்ந்த கைகளை தாகம் தீராத பதற்றத்துடன் பார்த்தேன்.

அவள் அதை கவனித்தாள். ஆனால் எதுவும் சொல்லவில்லை. ஒரு கட்டத்தில் நான் தன்னுணர்வை அடைந்தேன். பெருமூச்சுடன் வேறுபக்கம் பார்த்தேன். எழுந்து சென்று அவளிடம் சரணடைந்துவிட வேண்டும் என எனக்குள் எழுந்த வெறியை தடுத்து நிறுத்தியது அவள் என்னை பொருட்படுத்தவே இல்லை என்னும் எண்ணம். அவள் என்னையும் நிரந்தரமாகப் பிரியப்போகிறாள், ஆனால் அந்த வருத்தம் அவளிடம் இருப்பது போலவே தெரியவில்லை.

இருவரும் ஒரு சொல்லும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தோம். அவ்வப்போது பெருமூச்சுடன் கலைந்து சற்று உடல்மாற்றி அமர்ந்துகொண்டோம். நான் ஒர் ஆடையின் வெள்ளிச்சரிகையை பிரிக்க ஆரம்பித்தேன். கறுப்புவெள்ளை படமாகையால் எல்லா சரிகைகளும் வெள்ளிதான். வெள்ளி அல்ல, அலுமினியநூல். அந்த வேலை எப்படியோ என்னை ஈர்த்தது. அதிலிருந்து வெளியேற முடியவில்லை.

அந்தச்சரிகை மிக நீளமானது. அது வளைந்து வளைந்து நெளிந்து பின்னி சிக்கலான வடிவங்களாகி அந்த ஆடை முழுக்க ஓடியிருந்தது. மலர்கள், மொட்டுகள், கனிகள், கொடிகளாகியது. விதவிதமான வடிவங்களாகியது. அதை அறுந்துவிடாமல் பிரித்துக்கொண்டே இருந்தேன். இரண்டுமணிநேரம் ஆகியிருக்கும். என் கை முழுக்க வெள்ளிநுரை போல அது இருந்தது.

அவள் நான் அதைப் பிரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்ததும் புன்னகைத்து கையை நீட்டினாள். நான் அதை அவளுக்கு அளித்தேன்.

“கோழிக்குஞ்சு போலிருக்கிறது” என்றாள்.

“நுரைபோல” என்று நான் சொன்னேன்.

“சுருட்டி தலைக்கு பூபோல வைத்துக்கொள்ளலாம்” என்றாள்.

நான் புன்னகைத்தேன். அப்படி நான் எண்ணிப்பார்க்கவே இல்லை. பெண்களுக்குத்தான் அப்படி தோன்றுகிறது.

அவள் “நாம் எப்போது கிளம்புகிறோம்?” என்றாள்.

“கொஞ்சம் போகட்டும், அத்தனைபேரும் தூங்கியிருக்கவேண்டும். ஆனால் மிகவும் பிந்தினால் ஹொஸ்பெட் போய் சேரும்போது விடிந்திருக்கும். அது நல்லது அல்ல.”

“நான் குளிக்கவேண்டும்” என்றாள்.

“பம்ப்செட்…” என்றபின் “அது ஆபத்து” என்றேன்.

”நீங்கள் ஒரே ஒரு பக்கெட் தண்ணீர் கொண்டுவாருங்கள். நான் இங்கே உள்ளேயே குளித்துவிடுகிறேன். மூடிய அறையில் இருந்து இருந்து ஒரே வியர்வை.”

நான் எழுந்து வெளியே பார்த்தேன். அசைவே இல்லை. அத்தனைபேரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இவ்வேளையில் பம்ப்செட் வரை போகலாமா?

“கொட்டகையில் குடிநீராக பானையில் தண்ணீர் வைத்திருக்கிறார்கள். அதை எடுத்துவரட்டுமா?”

“அதுபோதும்.”

கொட்டகை மிக அருகேதான். நான் கதவைத்திறந்து வெளியே சென்று மிக விரைவாக அதை எடுத்துவந்துவிட்டேன்.

அவள் எழுந்து அதை என்னிடமிருந்து வாங்கி அறையின் மூலையில் வைத்தாள்.

“இங்கேயா குளிக்கப்போகிறாய்?”

”மற்ற எல்லா அறைகளிலும் ஸ்டாக் இருக்கிறது”

“நான் வெளியே நிற்கவா?”

“எதற்கு? யாராவது கவனிப்பார்கள், உள்ளே இருங்கள்… பரவாயில்லை”

அவள் அங்கேயே தன் ஆடைகளை களைந்தாள். அவள் துண்டு கட்டிக்கொள்ள போகிறாள் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் எல்லா ஆடைகளையும் களைந்து நிர்வாணமாக நின்றாள்.

“என்ன, என்ன இது?” என்றேன் படபடப்புடன்.

“பரவாயில்லை” என்று அவள் என்னை நோக்கி புன்னகைத்தாள்.

என்னை கவர முயல்கிறாள், என்னை வீழ்த்திவிட நினைக்கிறாள். நான் வீம்புடன் பார்வையை திருப்பிக்கொண்டேன்.

அவள் பானையில் இருந்த நீரில் துணியை முக்கி உடலை துடைத்துக்கொண்டாள். அந்த ஓசை என்னை சீண்டியது. நான் திரும்பிப்பார்த்தேன். அவள் என்னை பார்க்காமல் உடலை துடைத்துக் கொண்டிருந்தாள்.

நான் பார்க்கும் முதல் நிர்வாணப் பெண்ணுடல். நான் படத்தில்கூட பார்த்ததில்லை. இப்படித்தான் இருக்குமா? முதற்கணம் அந்த வெற்றுடல் சாதாரணமாக இருந்தது. ஒரு சிறுவனின் உடல்போல. கணம் கணமாக அது அளித்த ஈர்ப்பு பெருகியது. சிறிய மார்பகங்களின் முனை மெல்லிய சிவந்த கறை போல காம்புகள் அற்று தெரிந்தது. மார்புகளின் வளைவுகளின் பளபளப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். பொருட்களின் மெருகு அல்ல. உயிரின் மெருகு அது.

மெய்யாகவே அப்படி ஒளிகொண்டிருக்குமா? நான் கற்பனை செய்துகொள்கிறேனா? ஆனால் சிற்பம்போல் இல்லை. ஒரு மார்பை விட இன்னொன்று சற்று சிறியது. உருண்டு அரைப்பந்துகள் போல் இல்லை. வழிந்து திரண்டு சொட்டநிற்கும் இரு துளிகள் போலிருந்தன. அசைவில் அவை மெல்ல ததும்பி அசைந்தன.

பின்பக்கமும் தொடைகளும் தோல் விரிந்ததன் மெல்லிய வரிகளுடன் தெரிந்தன. வெள்ளரிக்காய்போன்ற வரிகள் என்று தோன்றியது. அவள் உடலில் இருந்த வழவழப்பு புதிய காய்கறிகளுக்குரியது. நீர்த் துளிகள் தயங்கி வழிந்து இணைந்து ஓடி கீழிறங்கிய பளபளக்கும் சருமம்.

அவள் எனக்கு தன் உடலை நன்றாக காட்ட விரும்பினாள் என்பது தெளிவாகவே தெரிந்தது. நன்றாகவே திரும்பி முன்பக்கத்தை காட்டினாள். தொடைகள் நடுவே புகைக்கரிபோல அந்தரங்க மயிர்ப்பரவல். அக்குளில் ஒட்டடைபோன்ற மயிர்ப்பூச்சு. அண்ணாந்தபோது கழுத்தில் தெரிந்த தொண்டை வளையங்கள்.

எஞ்சிய நீரில் கூந்தலை விட்டு அலம்பினாள். பின்னர் நிமிர்ந்து முடியை பின்னால் அள்ளி போட்டு துண்டால் துவட்டிக்கொண்டாள். கைகள் உயர்ந்து துவட்ட அவளுடைய இரு சிறு மார்புக்குமிழ்களும் ததும்பி எழுந்து எழுந்து அமைந்தன. இரு சிறிய முயல்குட்டிகள்.  விலாவெலும்புகள் மென்மையான தோலுக்குள் அசைந்தன.

அவள் இன்னொரு ஆடையை அணிந்துகொண்டாள். தலைமயிரை நீட்டி பரப்பியபடி கைகளை கட்டிக்கொண்டு நின்றாள்.

“பின்பக்க ஜன்னலை திறந்து வைக்கவா? காற்றிருந்தால் கூந்தல் சீக்கிரமாக உலரும்.”

“சரி” என்றேன். “அப்படியென்றால் விளக்கை அணைத்துவிடு”.

அவள் கதவை திறந்தாள். காற்று சீறிக்கொண்டு உள்ளே வந்து சுழன்றது. நான் தரையில் கொஞ்சம் நீர் சொட்டியிருப்பதை தவிர்த்தால் கலத்தில் நான் கொண்டுவந்த நீர் அப்படியே இருப்பதைக் கண்டேன்.

“நீர் செலவழியாமலேயே குளித்துவிட்டாய்” என்றேன்.

“சென்னப்பட்டினத்தில் தண்ணீரே கிடையாது. எங்கள் குடிசைக்கு அருகில் குழாயும் இல்லை. கோடைகாலத்தில் நாலைந்து குடம் நீர்தான் கிடைக்கும். நான் கொஞ்சநீரில் குடிசைக்குள்ளேயே குளிப்பேன்.”

“ராஜமந்திரியில் கோதாவரி ஓடுகிறது, இல்லையா?”

”ஆமாம், அது எவ்வளவு பெரிய ஆறு… கடல்போல மறுபக்கம் தெரியாத ஆறு… ஆண்டுக்கு நாலைந்துமுறை சாமிகும்பிடப் போய் கோதாவரியில் குளிப்போம். அருகே ஆறு இருப்பதனால் எங்கள் கிணறுகளில் எல்லாம் நிறைய தண்ணீர் இருக்கும். வெறும் குடத்தைவிட்டே தண்ணீரை அள்ளிக்கொள்ள முடியும். என் அம்மா சிலசமயம் நூறுகுடம் தண்ணீர்கூட விட்டு குளிப்பாள்.”

“அப்படியா?” என்றேன்.

”குளித்துக்கொண்டே இருப்பாள். நான் போய் கூப்பிட்டால்தான் நிறுத்துவாள்” என்றாள் “நானும் அதேபோல குளிக்கவேண்டும்… போனதுமே நூறுகுடம் நீர்விட்டு குளிக்கவேண்டும்.”

“அம்மா என்ன செய்கிறாள்? தனியாகவா இருக்கிறாள்?”

“எங்கள் சாதியில் எல்லா பெண்களும் செய்வதைத்தான் அம்மாவும் செய்கிறாள்” என்றாள் “அங்கே வேறேதும் செய்ய முடியாது.”

“ஓ” என்றேன்.

மீண்டும் சற்றுநேரம் அமைதி நிலவியது. நான் அந்த சரிகையற்ற ஆடையை மடித்துவைத்தேன். பிறகு எழுந்து சென்று வெளியே பார்த்தேன்.

“கிளம்புவோம்” என்றேன்.

“நான் இதே ஆடையில் வரலாமா?”

“இந்த ஆடையில் போனால் இங்கே தனியாக தெரியும்… ஆனால் வேறு ஏதாவது போட்டுக்கொண்டால் அங்கே ஹொசபேட்டையில் வேறுமாதிரி இருக்கும்” என்றேன். பிறகு “இதே ஆடை போதும். ஆனால் மேலே ஒரு சட்டையை போட்டுக்கொள். தலைமுடியை சுருட்டிவைத்து ஒரு துணியை முண்டாசாக கட்டிக்கொள்.பார்த்தால் சட்டென்று ஆண் என்று தோன்றினால்போதும். நாம் சைக்கிளில்தான் போகப்போகிறோம்.”

”நிலா இருக்கிறது.”

”ஆமாம்.”

அவள் ஒரு பெரிய சட்டையை போட்டுக்கொண்டாள். கீழே அவள் அணிந்திருந்த கவுனின் கீழ்நுனி தெரிந்தது. தலைமுடியை முண்டாசாக கட்டிக்கொண்டாள். வெளியே இறங்கி நின்றாள்.

ஒரு பையில் நாலைந்து துணிகளை எடுத்து வைத்தேன்.

“இது எதற்கு?” என்றாள்.

“கையில் பையே இல்லாமல் போனால் தேவையில்லாத சந்தேகங்கள் வரும்.”

“ஆமாம்” என்றாள்.

நான் கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டேன். கணக்கு புத்தகங்களை மேலே வைத்தேன்.  வெளியே சென்று வீட்டைப்பூட்டி சாவியை தூங்கிக்கொண்டிருந்த கோதண்டம் அண்ணனின் தலையருகே வைத்துவிட்டு சைக்கிளை எடுத்தேன். “வா” என்றேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைஇன்னொரு மெய்யியல் நாவல்- கடிதம்
அடுத்த கட்டுரைவேதப்பண்பாடு நாட்டார் பண்பாடா?