ம.நவீன் சிறுகதைகள்- கடிதம்

நவீன்

அன்புள்ள ஜெ,

சென்ற ஆண்டின் தொடக்கத்தில் நண்பரும் எழுத்தாளருமான சுனீல் கிருஷ்ணன் சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் மீதான வாசிப்பரங்கு ஒன்றை திட்டமிட்டிருந்தார். எதிர்பாராதவிதமான கொரோனா பரவலால் கடைசி நிமிடத்தில் அது ரத்தாகிவிட்டது. அவ்வரங்கிற்காக ம.நவீனின் சிறுகதைகள் சிலவற்றை வாசித்திருந்தேன். அக்கதைகள் என்னை மிகவும் கவர்ந்திருந்தன. ஒரு முக்கிய எழுத்தாளரின் வருகையாக அவை எனக்குத் தோன்றியது.

இப்போது அவர் 2020ல் எழுதிய எட்டு சிறுகதைகளையும் ஒருசேர வாசித்தபோது அவ்வெண்ணம் மேலும் உறுதிப்பட்டது. இரண்டு கூறுகளை மட்டும் இங்கே கவனப்படுத்த விரும்பிகிறேன்.

முதலாவது சிறுகதையின் சவாலை நேரடியாக எதிர்கொள்கிறார். எவ்வித நழுவல்களும் இல்லாமல் கதையின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுகிறார். எக்கதையும் அரைகுறையாக இல்லை. அனைத்து கதைகளும் வலுவான கதையம்சம் கொண்டவை. வெவ்வேறு களங்களை வாழ்க்கைத் தருணங்களை வாசகனுக்கு காட்டுபவை. அதேசமயம் அவை பொது உண்மைகளை நோக்கி நகர்ந்துவிடாமல் தனித்துவமான பார்வைகளை சென்றடைகின்றன. இவ்வகையான விதவிதமான கருக்களை கையாளும் போது அவை கலைரீதியாக முழுமை கொள்ளவைப்பது சாதாரண காரியமில்லை. அவ்விடர்களை வெவ்வேறு வகையில் கடக்கிறார். உதாரணமாக ’சியர்ஸ்’ கதை அவ்வன்னையின் மனவோட்டத்தை தொடர்வதன் மூலம் தன்னை முழுமைபடுத்திக் கொள்கிறது. அதே போல பல்வேறு வரலற்றுத் தகவலகள் ’கழுகு’ கதைக்கு ஆழத்தை சேர்க்கிறது.

இரண்டாவது இந்த எட்டு கதைகளின் மூலமாகவும் நவீன் என்னும் புனைவெழுத்தாளனுடன் அவன் ஆழ்மனத்துடன் நம்மால் உரையாட முடிகிறது. இவ்வம்சம் மிக முக்கியம் என நினைக்கிறேன். சிறந்த சிறுகதை என்பதைத் தாண்டி சிறந்த சிறுகதையாசிரியரின் கதை என்னும் இடத்திற்கு நகர்கின்றன. அப்படித்தான் உங்கள் அனைத்து படைப்புகளையும் நாங்கள் அணுகுகிறோம். அவற்றின் மூலமாக உங்கள் ஆழ்மனதை தொடர்கிறோம். அதனுடன் உரையாடுகிறோம். அதனால் தான் இத்தனை பரந்துபட்ட கதைகள் இருப்பினும் அவற்றில் ஒரு அறுபடாத் தொடர்ச்சியை உங்கள் வாசகர்களால் உணரமுடிகிறது. அத்தகைய ஒரு இடத்தை நவீனின் கதைகளும் அடைந்துவிட்டன எனச் சொல்லுவேன். ’பூனியான்’ கதையும் ’கன்னி’ கதையும் இரு எல்லைகள். ஆனால் இரண்டிற்கு அடியிலும் பொதுவாக இருக்கும் படைப்பாளியின் அகத்தை நம்மால் கண்டுகொள்ள முடிகிறது

இக்கதைகளில் மிகச்சிறந்ததாக நான் நினைப்பது ‘ராசன்’ கதை. எவ்வளவு விளக்கினாலும் விளக்கமுடியாத ஒரு இடத்தை கதை சென்றடைகிறது. எழுதப்பட்ட கதைக்கு நிகராகவே இன்னொரு கதையை வாசகன் மனதில் எழுதிக்கொள்ள வைக்கும் கதை.

ஒரு முக்கியமான எழுத்தாளர் நம் கண் முன்னே மெதுவாக உருப்பெறுதைக் காண்பது பெரும் பரவசத்தை அளிக்கிறது. அதை உங்களுடனும் சக வாசக நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவே இதை எழுதுகிறேன்.

நன்றி.

– பாலாஜி பிருத்விராஜ்

நவீன் கதைகளின் சுட்டிகள்:

கழுகு

உச்சை

சியர்ஸ்

ராசன்

கன்னி

பூனியான்

ஒலிப்பேழை

பட்சி

முந்தைய கட்டுரைசுகிசிவமும் சுப்ரமணியனும்- கடிதம்
அடுத்த கட்டுரைஇரவு- கடிதம்