இருளில் [சிறுகதை]

தேசிய நெடுஞ்சாலையின் நடுவே, அரளிச்செடிகள் பூத்து நின்றிருந்த பகுப்பான் மீது நின்று கைகாட்டிய இளைஞனைக் கண்டதும் லாரி வேகம் குறைந்தது. நான் எரிச்சலுடன் “என்ன பாய், இடமே இல்லை….” என்றேன்.

“கொஞ்சம் நெருக்கினால் உட்கார்ந்துக்கலாம் சாப். குளிருக்கும் இதமா இருக்கும்”என்று டிரைவர் அப்துல் சொன்னார்.

”நான் வேணும்னா இன்னொரு டிக்கெட் பணத்தை தந்திடறேன்” என்றேன்.

“பணத்துக்காக இல்லை சாப்” என்று அப்துல் சொன்னார் “நடுரோடு, நடுராத்திரி… ஒரு ஆளை அப்டி விட்டிடக்கூடாது. பைசா இல்லேன்னாலும் பரவாயில்லை…”

திருடனாக இருக்கப்போகிறான் என்று சொல்ல நான் நினைத்ததும் லாரி அவன் அருகே நின்றது. இந்தியில் “எங்கே?”என்று அப்துல் கேட்டார்.

“இந்தவழியேதான்… வண்டி இந்தூர்தானே போகிறது?” என்று அவன் மழலை இந்தியில் சொன்னான்.

”இந்தூருக்குள் நுழையாது…”

“என்னை நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டாலும் ஒன்றுமில்லை”

“சரி ஏறிக்கொள்”

க்ளீனர் பையன் இறங்கி வழிவிட அவன் கம்பியைப் பிடித்து ஏறி என்னருகே அமர்ந்தான். க்ளீனர் பாதி பின்பக்கத்தை இருக்கையின் விளிம்பில் வைத்து தொற்றி அமரத்தான் இடமிருந்தது.

குட்டிக்குட்டி நிலாக்கள் போல விளக்குகள் தலைக்கு மிக உயரத்தில் ஒளிவிட நிலாவெளிச்சம் போல மெல்லிய பளபளப்பு கொண்டிருந்தது சாலை. எதிரே வந்த லாரிகளின் முகப்புவிளக்குகளின் வெளிச்சம் பகுப்பானில் நின்ற அரளிச்செடிகளின் நிழலை எங்கள் லாரிமேல் எடுத்து பதியச்செய்து இழுத்துச் சுழற்றி சுழற்றி சென்றுகொண்டிருந்தது.அப்துல்லின் முகம் அதில் ஒளிகொண்டு ஒளிகொண்டு அணைந்தது. அவர் முகத்திலிருந்த கட்டைத்தாடியின் மயிர்கள் ஒளித்துருவல்களாக தெரிந்து தெரிந்து அணைந்தன.

நேரான சாலை. வளையத்தின் மீது கையை லேசாக வைத்து அக்ஸிலேட்டர் மீது மெல்ல மிதித்தபடி அப்துல் ஒரு காலை தூக்கி இருக்கைமேல் மடித்து வைத்துக்கொண்டார். நான் காலடியில் இருந்த என் தோல்பையை எடுத்து மடிமேல் வைத்துக்கொண்டு காலை நீட்டி முதுகை நிமிர்த்தினேன்.

ஒரு வளைவில் பின்னால் வந்த லாரியின் வெளிச்சத்தில் எங்கள் லாரியின் நிழல் எங்கள் முன்னால் தெரிந்த மரக்கூட்டங்களின் இலைச்செறிவின்மே விழுந்து வளைந்து சென்றது.

“இந்த ரோடெல்லாம் இப்டி ஓங்குதாங்கா போட்டப் பின்னாலே ஓட்டுறது கஷ்டமாப்போச்சு சாப்”என்றார் அப்துல் “ அப்டியே கொண்டு அடிக்குது. போனவாட்டி வாறப்ப ஓங்கோல் வழியா சவாரி. அப்டியே தூங்கிட்டேன். ஒரு அரமணி நேரம் நல்ல தூக்கத்திலேயே வண்டி போய்ட்டிருக்கு. அப்றம் முழிச்சிக்கிட்டேன். முழிச்சிக்கிடவேண்டிய நேரத்திலே சரியா முழிச்சுக்கிட்டேன். அங்க அப்டியே போயிருந்தா நேரா போயி பள்ளத்திலே தலைகுப்புற விழுந்திருப்பேன். ஓவர்லோடு வேற…”

”அதெப்டி சரியா முழிப்பு வருது?”

“சாப், ஒவ்வொரு தொழிலுக்கும் அல்லாஹ் ஒரு ஜின்னை படைச்சிருக்காரு. ஸ்டீரிங்குக்கு ஒரு ஜின்னு உண்டு… அதான் என்னைய காப்பாத்திச்சு”

“சும்மா…”

“என்ன சும்மா? எப்டியும் இருவத்தஞ்சு வாட்டி அப்டி ஆயிருக்கு. அந்த ஜின்னு இருக்கு”

“இப்ப நம்ம கூட இருக்கா?”

”என் கையிலே இருக்கு… ஸ்டீரிங் புடிச்சு பழகினை கையை அது பாத்திட்டிருக்கு… “

நான் புன்னகைத்தேன்.

“சிரிப்பில்லை சாப்… நம்ம உஸ்தாத் பெரிய டிரைவர்… இப்ப ஓட்டுறதில்லை. சாயல்குடி ஜாபர் அலின்னு சொன்னா பலபேருக்கு தெரியும். அவர் சொன்னது இது”

“அப்ப ஏன் ஆக்ஸிடெண்ட் நடக்குது?”

“ஜின்னு காப்பாத்தும், ஜின்னு நம்மளை கைவிடுறதும் உண்டு… அதெல்லாம் நம்ம கையிலே இல்லை. அல்லாவோட ஆணை”

நான் மீண்டும் புன்னகைத்தேன்.

“மத்தவனுக்கு தமிழ் தெரியாதுன்னு நினைக்கிறேன்… அப்டியே பேச்சுக் குடுக்கிறது. பொழுதுபோகும்ல? தூங்காம ஓட்டலாம். எப்டியும் நாலுநாலரை மணிநேரம் ஆயிடும் வெளிச்சம் வாறதுக்கு”

“நீங்கதானே ஏத்தினீங்க.. நீங்க பேச்சுகுடுங்க…”என்றேன் “எங்கிட்ட பேச்சுக் குடுத்தீங்க. பெரிசா சுவாரசியம் இல்லேன்னு அவனை ஏத்திக்கிட்டீங்க”

”அதெல்லாம் ஒண்ணுமில்லை சாப்” என்றார் அப்துல் “தம்பி, உனக்கு தமிழ் தெரியுமா?”

”தெரியாது, நான் தெலுங்கு பேசுபவன்”

”இந்தி ?”

“இந்தி கொஞ்சம் பேசுவேன்”

”இந்திக்காரர்களுக்கே இந்தி கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும்” என்றார் அப்துல் வெடித்துச் சிரித்தபடி. “ஏன்னா அந்த பாசையே கொஞ்சம்தான் இருக்கு”

அவன் புன்னகைத்தான். அவன் வாய்விட்டுச் சிரிக்கவில்லை என்பதை நான் கண்டேன். மனதுக்குள் கைவிரல்களை இறுகப்பற்றிக் கொண்டிருப்பவர்கள் உண்டு. அவர்கள் சிரிப்பதில் தெரிந்துவிடும். அவர்கள் பேசவும் மாட்டார்கள்.

“இவன் பேசக்கூடிய ஆள் இல்லை பாய்” என்றேன்.

“தூங்காமலிருந்தால்போதும்” என்றார் அப்துல். “உன் பெயர் என்ன தம்பி?”

“தருண்… தருண் ரெட்டி”

“ரெட்டியா? அது சரி…”என்றார் அப்துல். அவருக்கு இப்போது நெருக்கம் கொஞ்சம் கூடியதுபோல தோன்றியது “எங்கே போகிறாய் தம்பி? இந்தூரில் யார் இருக்கிறார்கள்?”

“யாருமில்லை. நாலைந்து வருடங்களுக்கு முன்பு நான் ஒருமுறை இந்தூர் போயிருக்கிறேன்”

“எதற்கு?”

”இதே போல சும்மாதான்… அங்கே ஒருநாள் இருந்தேன். அங்கிருந்து கிளம்பிவிட்டேன்”

“இன்றைக்கும் அதேபோல கிளம்பிவிடுவாயா?”

”ஆமாம்”

“அங்கிருந்து?”

“அங்கிருந்து இன்னொரு ஊர்… அதேமாதிரி”

“சரிதான், நாடோடி…” என்றார் அப்துல் “கையிலே நமக்குத்தர பணம் இருக்கிறதா. இல்லை இலவசப் பயணம்தானா?”

”இல்லை, தேவையான பணம் இருக்கிறது. நான் தொழில் செய்கிறேன்…”

“என்ன தொழில்?”

”கொஞ்சம் பணமிருக்கிறது, அதை பங்குச்சந்தையில் புரட்டிக்கொண்டிருக்கிறேன். எனக்குத் தேவையான லாபம் வந்துவிடும்”

எனக்கே அவன்மேல் ஆர்வம் வந்துவிட்டது. ”இப்படியே சுற்றிக்கொண்டிருக்கிறாயா?” என்றேன்

“ஆமாம்”

“ஏதாவது ஆராய்ச்சி செய்கிறாயா?”

“அதெல்லாம் இல்லை”

”சரித்திர இடங்களைப் பார்ப்பது , அதேமாதிரி…”

“அப்படியெல்லாம் இல்லை”

“வேறென்ன? இந்தமாதிரி அலைந்து இந்தியா முழுக்க சுற்றுவது இல்லையா? ஃபேஸ்புக்கில் எழுதுவது… இன்ஸ்டாகிராமில் ஃபோட்டோ…”

“அப்படியும் இல்லை… நான் சுற்ற ஆரம்பித்து ஏழு வருடமாகிறது. நான் தேசியநெடுஞ்சாலைகளில் மட்டும்தான் பயணம் செய்கிறேன்”

”ஊர்களுக்குள் போவதில்லையா?”

“பெரும்பாலும் போவதில்லை… தேசிய நெடுஞ்சாலைதான்”

“ஏன்?”

“எனக்கு தேசியநெடுஞ்சாலைகள் பிடித்திருக்கிறது. இது திறந்தவெளி மாதிரி இருக்கிறது. எந்த ஊருக்குள் போனாலும் மூடிய அறைக்குள் இருப்பதுபோல மூச்சுத்திணறுகிறது”

“ஆச்சரியம்தான்”என்றேன்

“எனக்கும் அப்படித்தான்”என்றார் அப்துல் “எனக்கும் அகலமான சாலைகளில் வாழ்வதுதான் பிடிக்கிறது. சாலையோரம் ஏதாவது உணவகத்தின் அருகே வண்டியை நிறுத்திவிட்டு தூங்கினால்தான் ஆழமான தூக்கம் வரும்… டிரைவர் ஆனபிறகு இந்த இருபத்தேழு வருடங்களில் நான் ஊருக்குள் வீட்டுக்குள் தூங்கிய நாட்கள் மிகக்குறைவு”

“ஆமாம்… நெடுஞ்சாலை இரண்டுபக்கமும் திறந்திருக்கிறது. இரண்டுபக்கமும் முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்க இடமிருக்கிறது…. ஊர்கள் அடைபட்டவை. எனக்கு ஊருக்குள் போனால் சிதல்புற்றுக்குள் போனதுபோல இருக்கிறது” என்றான் தருண். அவன் தெலுங்கு எனக்கு தெளிவாகவே புரிந்தது. நான் நெல்லூரில் ஒரு ஏஜென்ஸி எடுத்திருந்தேன், ஆறு வருடம் முன்பு.

“நீ திருமணம் செய்துகொள்ளவில்லையா? குடும்பம்?” என்றேன்

‘இல்லை, எனக்கு அம்மா மட்டும்தான் இருந்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்கள்… இப்போது யாரும் இல்லை”

“எனக்கும் யாரும் இல்லை” என்றார் அப்துல் “இப்போதைக்கு இந்த கிளீனர் மட்டும்தான் சொந்தம்… டேய் நசீர், டேய் ஹிமாறே”

நசீர் அமர்ந்துகொண்டு தலையை தொங்கவிட்டு ஆடிக்கொண்டிருந்தான். வசைபாடப்பட்டால்தான் அவனுக்கு நன்றாகத் தூக்கம் வரும்போல.

”பார்த்தாயா? அவனால் நின்றுகொண்டும் நடந்துகொண்டும்கூட தூங்க முடியும்… பெரிய கில்லாடி” என்றார் அப்துல்.

”உங்களுக்கு மனைவி இல்லையா டிரைவர் சாப்?”என்றான் தருண்.

“இருந்தாள்… ஒரு குழந்தையும் இருந்தது. ஒரு காய்ச்சல் வந்தது, இரண்டுபேருக்குமே” அப்துல்  அதை சாதாரணமாகத்தான் சொன்னார். ஆனால் சட்டென்று அந்த சிறிய இடத்திற்குள் காற்று இறுகிவிட்டது.

அவன் என்னை பார்த்தான். நான் பேசாமலிருந்தேன். அப்துல் ஒரு பீடி பற்றவைத்துக்கொண்டார். வளையத்தை விட்டுவிட்டு இரு கைகளாலும் பீடியை பொத்தி கனல் காட்டி இழுத்தார். புகையை மூக்குவழியாக விட்டார்.

“நீங்கள் மறுமணம் செய்துகொள்ளலாமே” என்றான் தருண் ‘உங்கள் மதத்தில் அதெல்லாம் எளிய விஷயம்தானே?”

“உண்மையைச் சொன்னால் நான் அதற்கு தீவிரமாக முயற்சி செய்தேன்… எப்படியாவது திருமணம் செய்துகொண்டு பிள்ளைகுட்டியாக வாழவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் பெண்ணை தேடி கண்டுபிடித்து நேரில் பார்ப்பது வரைத்தான். நேரில் பார்த்ததும் ஒருமாதிரி ஆகிவிடும்”

“ஒருமாதிரி என்றால்?”என்று தருண் கேட்டான்.

“அதை என்ன சொல்வது? இதோபார் பசியோடு சாப்பிடப்போகிறாய். சோறுக்கு பதில் அங்கே மண் இருந்தால் என்ன ஆகும்? அதேபோல… ஒரு ஜின் சாபம் போட்டு நீ கையால் தொட்டதுமே சோறு மண்ணாக ஆகிவிட்டால் என்ன செய்வாய்? சாப்பிடுவாயா?”

“ஏன்?”என்று தருண் கேட்டான்.

“எல்லாம் அந்த பழிகாரியால்தான்… ஜீனத், என் மனைவி. அவளும் அவள் மூஞ்சியும்…. அவள் என் மனதிலிருந்து குறையவே இல்லை”

“எத்தனை ஆண்டுகளாகிறது?”என்றேன்

”அது ஆகிறது, நீண்டகாலம். இந்த ஜூனில் இருபத்தொரு ஆண்டு ஆகும்… அழகாக எல்லாம் இருக்க மாட்டாள். என்னைவிட கறுப்பு. அவளை நான் ஒன்றும் பெரிதாக நேசிக்கவில்லை. அந்தக்காலத்தில் நல்ல அடியெல்லாம் கொடுத்திருக்கிறேன். அவள் செத்தபோதுகூட நான் பெரிதாக  ஒன்றும் நிலைகுலைந்து போகவில்லை. கொஞ்சம் அழுதேன். நாலைந்து நாளில் சரியாகிவிட்டேன். எப்படியாவது அந்த துக்கத்திலிருந்து வெளியே வந்துவிடவேண்டும் என்று முடிவும் செய்தேன். இப்போதுகூட துக்கமெல்லாம் இல்லை. அல்லா மேலே ஆணை, துக்கமே இல்லை. ஆனால் இன்னொரு பெண்ணை பார்த்தால் சீச்சீ என்று ஆகிவிடும். அதெப்படி இவளுடன் போய் என்று தோன்றிவிடும். சும்மா கற்பனை செய்து பார்த்தாலே, சொன்னேனே, வாய்நிறைய மண்ணை அள்ளிபோட்டுக்கொண்டதுபோல ஆகிவிடும். துப்பி துப்பி வாயைக்கழுவி… அந்தக் கனவே பலமுறை வந்திருக்கிறது”

“வித்தியாசமான ஆள்தான் நீங்கள்” என்றேன் “இப்படியெல்லாம் இருக்கும் என்று தெரியும்… ஆனால் அதெல்லாம் ஒரு நாலைந்து ஆண்டுகளுக்கு”

“எல்லாரும் என்னிடம் சொல்லிப்பார்த்தார்கள்… கேலிகூட செய்வார்கள், எனக்கு விபத்தில் இடுப்பில் அடிபட்டுவிட்டது என்று பேச்சு உண்டு. எனக்கே ஆற்றாமையாக இருக்கும்… என்ன இது ,ஒருத்தி செத்தால் நான் ஏன் பைத்தியக்காரன் மாதிரி இப்படி இருக்கவேண்டும் என்று நினைப்பேன். ஆனால் எல்லாம் இன்னொரு பெண்ணை நெருங்குவதுவரைத்தான். என்னால் முடியாது”

நான் “என்னால் இதை நம்ப முடியவில்லை”என்றேன். “உங்களுக்கு வேறேதோ பிரச்சினை இருக்கும்”

”ஏன்?”என்று தருண் கேட்டான்

”ஆண்கள் அப்படி இருக்கமாட்டார்கள்”

“எப்படி?”

“பெண் இல்லாமல்… ஒரு பெண் இருக்கும்போதே ஆண்கள் மற்ற பெண்களை பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள்”என்றேன்

“நானும் எல்லா பெண்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்”என்றார் அப்துல். “சினிமாகூட அதற்காகத்தான் பார்க்கிறேன். ஆனால் என்னால் இன்னொரு பெண்ணை நெருங்க முடியவில்லை… ”

“அது வேறு ஏதோ பிரச்சினை… நீங்கள் ஒரு சைக்கியாட்ரிஸ்டைப் பார்க்கவேண்டும்”

“யார் அது?”

”மனதுக்கு மருந்து கொடுப்பவர்”

”நான் மௌல்வி சாகிபிடம் பேசினேன். மூன்று மௌல்விகளிடம் பேசியிருக்கிறேன்”

”அவர்கள் என்ன சொன்னார்கள்?”

”என்னை ஒரு ஜின் தடுக்கிறது என்றார்கள். எனக்காக துவா செய்தார்கள்”

நான் சிரித்தேன்.

தருண் சட்டென்று சற்று உரத்த குரலில் “சிரிக்காதீர்கள்… உங்களுக்கு புரியாதது எல்லாம் சிரிக்கவேண்டிய விஷயம் அல்ல”என்றான்.

“என்ன?” என்றேன்.

”அவருடைய நிலைமை உங்களுக்கு புரியவில்லை”

“உனக்குப் புரிகிறதா?”

“எனக்கும் முழுக்கப் புரியவில்லை. ஆனால் கொஞ்சம் என்னால் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் எனக்கும் அதேநிலைதான்”

நான் அவனை வியப்புடன் பார்த்தேன்.

“நானும் அவரைப்போலத்தான்” என்று அவன் தலைகுனிந்து தணிந்த குரலில் சொன்னான்.

“உன் மனைவியா?”

“இல்லை”

“காதலியா?”

“இல்லை” என்றான். “அவள் யார் என்றே எனக்கு தெரியாது…சாப் ஒரு பீடி கொடுங்கள்”

அவர்கள் இருவரும் பீடி பற்றவைத்துக்கொண்டார்கள். இரு தீக்கொள்ளிகள் சீறிக்கொண்டே இருந்தன. இந்த எதிர்க்காற்றில் பீடி மிகவிரைவாகக் கரைந்துவிடும்.

அவர்கள் இழுப்பதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் பேசுவான் என எதிர்பார்த்தேன். அவன் பேசவில்லை. நானே ஆரம்பித்தேன்.

”அந்த பெண் யார்?”

நான் கேட்டபோது அவன் சற்று துணுக்குற்றதுபோல தோன்றியது. அவன் பீடிக்கு பழகியவன் அல்ல. புகை அவனை கமறச்செய்தது. அவன் கையில் இருந்து தீப்புள்ளி சிவந்து சிவந்து சீறியது.

அவன் “ம்ம்” என்றான். பிறகு தொண்டையை கனைத்துக்கொண்டு “சொன்னேனே, யார் என்றே தெரியாது”என்றான்.

“அப்படியென்றால்?”

”அன்றைக்கு நான் ஒரு முதலீட்டு நிறுவனத்தில் ஊழியனாக இருந்தேன். ஊர் ஊராக செல்லவேண்டும். பெரும்பாலும் பைக்கிலேயே போவேன்.பைக் மேல் எனக்கு அப்படி ஒரு மோகம். எனக்கு பிடித்தமான ஒரு ராயல் என்ஃபீல்ட் வைத்திருந்தேன்.ராயல் என்ஃபீல்ட் கிளப்பிலும் நான் உறுப்பினர். பெரும்பாலும் சாலையோர மோட்டல்களில் தங்குவேன். சாலையோர தாபாக்களில் சாப்பிடுவேன். என்னை ஒரு கௌபாய் போல கற்பனைசெய்துகொள்வேன்”

“குடி?”

‘இல்லை, இப்போதும் குடிப்பதில்லை” என்றான். பிறகு “ஏழு வருடம் முன்பு நடந்தது…சரியாகச் சொன்னால் இரண்டாயிரத்திப் பதிமூன்று நவம்பர் எட்டாம்தேதி. நான் பைக்கிலேயே ஹைதராபாதிலிருந்து போபால் போய்க்கொண்டிருந்தேன். நாக்பூர் வழியாக. நாக்பூருக்குள் நுழையவில்லை. நெடுஞ்சாலையிலேயே ஒரு மோட்டலில் தங்கினேன். அப்போது ரிலையன்ஸ் பெட்ரோல்பங்குகள் தொடங்கிக்கொண்டிருந்த காலம். பல பெட்ரோல் பங்குகளை நவீன மோட்டல் போல கட்டினார்கள். கீழே உணவகம், மேலே அறைகள். வசதியான ஏஸி அறைகள் உண்டு. கீழே லாரிகளை நிறுத்துவதற்கு இடம். வாடகைக்கு டோர்மெட்ரி உண்டு. கயிற்றுக் கட்டில்களை திறந்தவெளியில் போட்டு படுத்துக்கொள்வதாக இருந்தால் வாடகை கிடையாது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இருந்ததனால் அன்றெல்லாம் காரில் போகும் குடும்பங்கள் கூட அங்கே அறைகளில் தங்கிவிட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது”

”ஆமாம், நாங்கள் நீலப்புள்ளிகள் என்று சொல்வோம். நீலநிறமாக இருக்கும் அதெல்லாம். மிக வசதியான இடங்கள். ஆனால் ரிலையன்ஸ் பெட்ரோலிய விற்பனை நஷ்டம் என்று அப்படியே அந்தத் திட்டத்தை கைவிட்டு விட்டார்கள். பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் அப்படியே பாழடைந்து கபர்ஸ்தான் போலக் கிடக்கின்றன”என்றார் அப்துல்.

நீலம் அல்ல, இண்டிகோ நிறம் என்று தருண் சொன்னான். நாக்பூருக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலையில் அப்படி ஒரு நல்ல மோட்டல். நான் அங்கே போகும்போது ஏழுமணி இருக்கும். முழுநாளும் வெயிலில் வந்ததனால் களைத்துவிட்டேன். நான் இரவில் பொதுவாக பைக் பயணம் செய்வதில்லை. ஆகவே அந்த மோட்டலைக் கண்டதுமே நிறுத்திவிட்டேன். அங்கே பைக் பாதுகாப்பாக இருக்கும். ஏஸி இல்லாத சிறிய அறை இருநூறு ரூபாய்தான் வாடகை. ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டேன். கீழே டோர்மெட்ரியும் கட்டில்களும் இருக்குமிடத்தில் மட்டும்தான் சந்தடி இருந்தது. அறையில் குளிக்க முடிந்தது. கீழே போய் சப்பாத்தியும் டாலும் சாப்பிட்டுவிட்டு மேலே வந்து படுத்துக்கொண்டேன்.

அப்போதுதான் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்குகள் வந்திருந்தன. ஆகவே அவர்களின் மோட்டல்கள் அந்த அளவுக்கு மக்களுக்குப் பழகவில்லை. அவ்வளவு வசதிகள் இருந்தாலும்கூட லாரிகள் கொஞ்சமாகத்தான் வந்தன. லாரிக்காரர்கள் பழகிப்போன இடங்களை விட்டு வரவிரும்பவில்லை. பாதுகாப்பு பற்றி சந்தேகமும் அவர்களுக்கு இருந்தது. அதோடு வழக்கமான இடங்களில் கள்ளச்சாராயம், விபச்சாரிகள் என பல கவர்ச்சிகள் அவர்களுக்கு இருந்தன. மோட்டல் முன் இரண்டு கார்கள் நின்றன… ஆனால் மேலே பெரும்பாலும் அறைகள் காலியாகத்தான் இருந்தன.

நான் தூங்கிவிட்டேன். இரவில் மேலும் கார்கள் வந்து யாரோ ஏஸி அறைகளில் தங்குவது அரைகுறை உணர்வில் தெரிந்தது. சட்டென்று மின்சாரம் போய்விட்டது. அப்போதெல்லாம் வடக்கே மின்சாரம் அடிக்கடி போகும். கீழே மோட்டாரைப் போட்டார்கள். ஆனால் கீழே அவசியமான விளக்குகள் மட்டும்தான் எரிந்தன.மேலே அறைகளில் வெளிச்சமில்லை. என் அறையில் நல்ல இருட்டு. என் அறை கடைசியில் இருந்தது. பின்பக்கம் கடலைச் செடி விரிந்த வயல்வெளிதான். அது அமாவாசையை ஒட்டிய நாள். ஆகவே வெளியே நல்ல இருட்டு. வெளிவிளக்குகளின் வெளிச்சமும் எட்டவில்லை

நல்ல புழுக்கம். நான் கதவையும் ஜன்னலையும் திறந்து வைத்தேன். கையால் துழாவி தண்ணீர் எடுத்து குடித்துவிட்டு மீண்டும் தூங்கிவிட்டேன். எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியாது. அரைத்தூக்கத்தில் திளைத்துக்கொண்டிருந்தபோது என் அருகே ஒரு பெண் படுத்திருப்பதை உணர்ந்தேன். திடுக்கிட்டு எழுவதற்குள் அவள் என்மேல் தன் உடலை வைத்து கைகளாலும் கால்களாலும் அழுத்திப்பிடித்து என் வாயை தன் வாயால் கவ்விக்கொண்டாள்.

நான் நன்றாக விழித்துக்கொண்டு திமிறினேன். அவள் நல்ல வலுவான பெண். என்னைவிட கொஞ்சம் பெரியவள். குண்டுப்பெண் அல்ல, ஆனால் நல்ல ஓங்குதாங்கானவள். அவளை என்னால் பார்க்க முடியவில்லை. நல்ல இருட்டு. அவள் ஏற்கனவே ஜன்னல்களையும் கதவுகளையும் நன்றாக மூடியிருந்தாள். அவளுடைய உடலின் ஒரு நிழல்தோற்றம் தெரிந்தது. அதுகூட தெளிவாக இல்லை. ஒரு கண்மயக்கமாகக்கூட இருக்கலாம்.

பெண்ணின் மணம், பெண்ணின் தொடுகை. அதைவிட பெண்ணின் நோக்கம். என் உடல் உயிர்கொண்டது.

அதை உணர்ந்த பின் அவள் என் வாயை கையால் பொத்திக்கொண்டு என் காதில் சொன்னாள். “நான் உன்னை பார்க்கவில்லை. இருட்டிலேயே வந்தேன். ஓநாய் போல மோப்பம் பிடித்துத்தான் வந்தேன். நான் உன்னை பார்க்க மாட்டேன். என்னை நீயும் பார்க்கக் கூடாது. இது மட்டும்தான். இதற்காக மட்டும்தான் வந்தேன். சத்தம்போடக்கூடாது, சரியா?”

ஆழமான இனிய குரல். மிகப்பெரிய ஒரு இசைக்கருவியை மிகத்தாழ்ந்த சுருதியில் வாசிப்பதுபோல அப்படி ஒரு விசித்திரமான இனிமை அது.

நான் தலையசைத்தபின் அவள் கையை எடுத்தாள். “முதலாவதா?”என்றாள்.

“ஆமாம்”என்றேன்.

”உன் நிழலுருவத்தைப் பார்த்தேன். நீ மிகவும் இளைஞன் என்று தெரிந்தது”

”நீ யார்?” என்றேன்.

”அதை நீ கேட்கக்கூடாது.நானும் கேட்கமாட்டேன். நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவே கூடாது. ஒருவரை ஒருவர் விசாரிக்கவோ தெரிந்துகொள்ளவோ கூடாது…சரியா?”.

”சரி” என்றேன்.

‘சத்தியம் செய்து கொடு”

“சத்தியம்” என்று அவள் கையை தொட்டு அழுத்தினென்.

அந்நேரமெல்லாம் அவள் என்னை முத்தமிட்டுக்கொண்டும் தழுவிக்கொண்டும் இருந்தாள். என்னை முழுக்கவே அவளுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள். உன்னை கொல்லட்டுமா என்று கேட்டால் கொல் என்று சொல்லியிருப்பேன்

தருணை இடைமறித்து நான் கேட்டேன் “அதெப்படி? அதெப்படி ஒரு பெண்… யாரென்றே தெரியாத ஒரு பெண்… பார்க்கக்கூட இல்லை”

அப்துல் “அது அப்படித்தான்… நீ சொல் தம்பி” என்றார்.

“இவர் நம்பவில்லை”என்றான் தருண்.

“நான் நம்புகிறேன், நீ சொல்”என்றார் அப்துல்.

“அவள் நோயாளியாக இருக்கலாம். குரூபியாக இருக்கலாம்”என்றேன்

“நீ வாயைமூடு” என்றார் அப்துல் “சொல் தம்பி, பிறகு?”

தருண் சொன்னான். அவள் முழுக்க முழுக்க என்னை அவளுடைய உடலின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள். என் மனதையும் அவள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள். அவள் உடலை அப்படி தெளிவாக உணர்ந்ததனால்தான் அவள் மோகினிப்பேய் அல்ல, பெண்தான் என்று நான் நம்புகிறேன்.

அவளிடம் “உன்னுடன் வந்தவர் யார்?”என்றேன்

“என் கணவன்… குடிகாரன். அவனால் வண்டி ஓட்ட முடியவில்லை. போதை தள்ளியது. அங்கே தூங்கிக்கொண்டிருக்கிறான்”

ஒரு கட்டத்தில் அவளிடமிருந்த வெறியை  முழுமையாகவே எனக்கு கடத்திவிட்டாள். அது எனக்கு முதல் அனுபவம். ஆனால் நெடுங்காலமாக தெரிந்ததுபோல இருந்தது. மூர்க்கமான தீவிரமான முழுமையான அனுபவம்.

என் அருகே அவள் மூச்சுவாங்கியபடி படுத்திருந்தாள். நான் அவள் மார்புகளை வருடியபடி “நீ ஏன் இதைச் செய்கிறாய்?”என்று கேட்டேன்.

“கேள்விகள் ஏதும் கேட்கக்கூடாது…. நாம் இனிமே சந்திக்கவே போவதில்லை. முகத்தைக்கூட பார்க்கப் போவதில்லை” என்றாள்.

”சரி”என்றேன்.

“இது ஒரு கனவு, இந்த கனவை ஞாபகம் வைத்திருப்ப்போம்”

“ம்”என்றேன். பிறகு “ஏன் இப்படி?”என்றேன்.

“உன்னால் கேள்விகள் கேட்காமல் இருக்க முடியவில்லை… எந்தக் கேள்வியும் கேட்காதே. இது கனவு. கனவுக்கு எந்த தர்க்கமும் கேள்வியும் இல்லை. கனவில் நடந்ததற்கு யாரிடமும் நாம் கணக்கு சொல்லவேண்டியதில்லை. கனவுக்கு பழி பாவம் ஒன்றும் இல்லை”

“ஆமாம்”என்றேன்.

“கனவு அல்ல என்றால்தான் இது பாவம்… கனவு என்றால் பாவமே இல்லை”

“ஆமாம்” என்றேன்.

அவள் எழுந்து தவழ்ந்து சென்று ஆடைகளை போட்டுக்கொண்டாள். அவளுடைய அசைவின் ஓசைகள் கேட்டன. உடைகளின் சரசரப்பு. உடலின் உறுப்புகள் உரசிக்கொள்வதும் ஓசையிடும் என்று அப்போதுதான் கேட்டேன். மிகமென்மையான, ரகசியமான ஓசை அது.

அவள் உடைகளை அணிந்துவிட்டு “நான் கதவை திறந்து வெளியே செல்வேன். நீ கதவை மூடிக்கொள்ளவேண்டும். கண்களை மூடி படுத்திருக்கவேண்டும். விடியும் வரை கதவை திறக்கக்கூடாது. என் அறை எது என்றோ என் கார் எண் எது என்றோ விசாரிக்கக்கூடாது”என்றாள்.

“இல்லை”என்றேன்.

”இது நீ செய்த சத்தியம், சரியா?” என்றாள்.

”ஆமாம்” என்றேன்.

அவள் பெருமூச்சுவிட்டாள். “உன் ஒரு கேள்விக்கு பதில் சொல்கிறேன். ஒருவர் பிறவி எடுத்துவிட்டால் ஒருமுறை, ஒரு கனவிலாவது, மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் இல்லையா?”

நான் ஒன்றும் சொல்லவில்லை. அவள் வெளியே போனாள். கதவு திறந்து மூடும் ஓசை மிக மெலிதாகக் கேட்டது. காலடியோசை அதைவிட மெலிதாகக் கேட்டது.அவள் வந்ததும் நிகழ்ந்ததும் வெறும் கனவுதானா என்ற நிலை ஒருசில கணங்களுக்குள் உருவாகிவிட்டது,

நான் எதையுமே நினைக்கவில்லை. என் மனம் வெறுமையாக இருந்தது. நான் அந்த அனுபவத்திலிருந்து வெளியே வரவே இல்லை. அது உண்மையாகவே கனவா என்று என் மனம் மயங்கியது. என் உடலிலும் பெரும் களைப்பு. அப்படியே தூங்கிவிட்டேன்.  அரைமணி நேரம் தூங்கியிருக்கலாம். பிறகு மெல்லிய விழிப்பு. சட்டென்று உள்ளம் திடுக்கிட்டது. நெஞ்சில் ஓர் உதை விழுந்ததுபோலிருந்தது. இதயம் படபடவென்று துடிக்க ஆரம்பித்தது.

ஓடிப்போய் கதவைத்திறந்து அவள் போன அறையை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் என்னால் அசையமுடியவில்லை. என் உள்ளம் எந்த அளவுக்கு வேகம் கொண்டிருந்ததோ அந்த அளவுக்கு என் கைகால்கள் செத்தவை போல கிடந்தன. எதற்குக் கட்டுப்பட்டு அப்படிக் கிடந்தேன் என்று தெரியவில்லை.

பிறகு யோசித்தபோது தோன்றியது, அந்த அனுபவம் கொஞ்சம்கூட எதிர்பாராதது, கற்பனைகூட செய்யாதது.நாம் எல்லா அனுபவங்களையும் கொஞ்சம் கொஞ்சம் முன்னரே கற்பனைசெய்திருப்போம். அதனால்தான் அவை நிகழும்போது இயல்பாக எதிர்வினையாற்றுகிறோம். வாழ்க்கை ஒன்றுதான், ஆனால் அதன் ஆயிரக்கணக்கான சாத்தியங்களை நமது பகற்கனவில் கண்டிருப்போம். மனிதன் வாழ்வதே பகற்கனவில்தான். வாழ்க்கையின் ஒரு சிறுபகுதிதான் வெளியே வாழும்வாழ்க்கை.

ஆனால் என் பகற்கனவில்கூட நான் எண்ணாத ஒன்று அங்கே நிகழ்ந்தது. ஆகவே என் சிந்தனையும் உள்ளமும் அப்படியே உறைந்துபோய்விட்டன. ஆனால் எண்ணம் என்று சொல்லமுடியாத உதிரிச்சொற்கள் பெருகித் தாவிக் கொப்பளித்தன. அந்த விசை உள்ளத்தை களைப்படையச் செய்தது.சொன்னால் நம்ப மாட்டீர்கள், நான் அப்படியே மீண்டும் தூங்கிவிட்டேன்.

அப்துல் “அது அப்படித்தான், மனம் கொள்ளாமல் ஏதாவது வந்தால் உடனே நல்ல தூக்கம் வரும்”என்றார்.

தருண் “ஏன் என்றே தெரியவில்லை” என்றான். மீண்டும் சொல்ல ஆரம்பித்தான்.

நான் அப்படியே தூங்கி விழித்தபோது அறைக்குள் வெயில் வெள்ளையாக கோடு மாதிரி கிடந்தது. கழற்றி கொடியில் போட்டிருந்த என் ஜீன்ஸிலிருந்த பெல்டின் கொக்கி மின்னிக்கொண்டிருந்தது.

எழுந்து அமர்ந்து கொஞ்சநேரம் கழித்துத்தான் என்ன நடந்தது என்பது என் தலைக்குள் விடிந்தது. உடனே திடுக்கிட்டு எழுந்து நின்றேன். என்ன ஏது என்று புரியவில்லை. என் நெஞ்சு படபடத்தது. கைகால்கள் உதறிக்கொண்டன.

ஜீன்ஸை அணிந்து சட்டையைப்போட்டுக்கொண்டு பையை எடுத்துக்கொண்டு நேராக கீழே வந்து பைக்கை எடுத்துக்கொண்டு நூறு கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டினேன். எழுபது கிலோமீட்டர் கடந்தபிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக நிதானமானேன்.வண்டியை ஒரு தாபாவில் நிறுத்தி சாப்பிட்டேன். என் தன்னினைவு திரும்பியது. ஒவ்வொன்றாக யோசித்தேன். அதை யாரிடமும் சொன்னால் நம்ப மாட்டார்கள். ஒரு அசட்டுத்தனமான பகல்கனவு போல இருந்தது.

உண்மையில் எனக்கே அது நடந்ததா என்று சந்தேகம் ஒருகணம் வந்தது. ஆனால் அவள் உடலின் தொடுகை, மூச்சின் வாசனை, குரலின் கிசுகிசுப்பு, அப்போது உதடுகள் என் செவிகளை தொட்டுத்தொட்டுச் சென்றது, மூச்சுக்காற்றில் என் பிடரி மயிர் அசைந்தது எல்லாமே ஞாபகமிருந்தது. அப்போது, அரைக்கணம் முன் நடந்ததுபோல.

ஏன் ஓடிவந்தேன் என்று என்னையே சலித்துக்கொண்டேன்.திரும்பி அங்கே போனால் என்ன? பலமுறை மனதால் திரும்ப எழுபது கிலோமீட்டர் ஓட்டிச்சென்று அவளைப் பார்த்தேன். ஆனால் என்னால் அதைச் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. மேலும் அவள் அங்கே இல்லை என்று நன்றாக தெரிந்திருந்தது. காலையில் மோட்டலின் பார்க்கிங் பகுதியில் எந்தக் காரும் இல்லை.

நான் எனக்குள் பேசிப்பேசி என்னை நிதானமாக ஆக்கிக்கொண்டேன். சரி, இது ஓர் அரிய நிகழ்வு. ஒரு அந்தரங்கமான கனவு. இதை எனக்குள்ளேயே வைத்துக்கொள்ளலாம். இது எனக்கு ஒரு திருட்டுப்பொருள் கிடைத்ததுபோல. திருட்டு அல்ல. ஏனென்றால் கனவுக்கு பழியும் பாவமும் இல்லை.

அன்று போபால் செல்லும்போது என் மனம் இனித்துக்கொண்டிருந்தது. நான் உரக்க பாடிக்கொண்டே பைக்கை ஓட்டினேன். வெறிகொண்டவன்போலச் சிரித்துக்கொண்டே இருந்தேன்.

பத்துப்பதினைந்துநாள் நான் இருந்த நிலை இன்று நினைத்தாலும் ஏக்கமாக இருக்கிறது. நான் குடிப்பதில்லை, ஆனால் அப்போது குடித்தேன். வேலையை முடித்துவிட்டு வெறுமே பைக்கில் நெடுஞ்சாலையில் ஓட்டினேன். என்னால் வேகத்தை குறைக்கமுடியவில்லை. நூறு நூற்றியிருபது நூற்றி ஐம்பது என்று ஓட்டினேன். தன்னந்தனியாக நின்று கைகளை விரித்து கூச்சலிட்டேன். எவரிடமோ என்னென்னமோ சொன்னேன். சாலையோரமாகச் செல்லும் ஒருவர் அருகே வண்டியை நிறுத்தி எதையாவது சொல்வேன். கிறுக்குத்தனமாக. அவர் திகைக்கும்போது பைக்கை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவேன். என்னென்ன செய்தேன் என்றே நினைவில்லை. ஒருமுறை ஒரு சிறிய பாலத்திலிருந்து கீழே குதித்தேன். முழங்காலில் நல்ல அடி.

பிறகு மெல்ல பித்து தணிந்தது. ஏக்கம் வந்து நிறைய ஆரம்பித்தது. எதற்கான ஏக்கம், என்ன வேண்டும் என்றெல்லாம் தெரியவில்லை. மிகமிக அரிய ஒன்றை இழந்து விட்டது போலிருந்தது. திரும்ப வரவே வராது என்ற நினைப்பே பதைபதைக்கச் செய்தது. தனியாக அமர்ந்து அழவேண்டும் என்று தோன்றியது.ஆனால் அழவும் முடியாது. மனம் அவ்வளவு கனமாக இருக்கும். தொண்டையில் அழுகை கரகரக்கும். ஆனால் அழுகை வராது.

எனக்கு என்ன ஆயிற்று என்று நானே தர்க்கபூர்வமாக அலசிக்கொண்டேன். ஒன்றுமில்லை, ஓர் அரிய அனுபவம். அதை அப்படியே கடந்துவிடவேண்டியதுதான். இந்த ஏக்கத்திற்கு இடமே இல்லை. வாழ்க்கையில் எவ்வளவோ அனுபவங்கள் இப்படித்தான், திரும்ப நிகழ்வதே இல்லை. உண்மையில் வாழ்க்கையில் எல்லா அனுபவங்களும் இப்படித்தான்.

ஆனால் இந்த தர்க்கமெல்லாம் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கும், மறுபக்கம் மனம் கனத்து கல்போல இருக்கும். அந்த அனுபவத்தை என்னால் எந்த வகையிலும் கடந்துசெல்ல முடியவில்லை. நாள் செல்லச்செல்ல எல்லா அனுபவங்களும் சிறியதாகி பின்னகர்ந்து விடுகின்றன. அனுபவங்கள்மேல் அனுபவங்கள் வந்து விழுந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் இந்த அனுபவம் பெருகியபடியே இருந்தது. இதனருகே வேறெந்த அனுபவமும் நிலைகொள்ள முடியவில்லை.

அடுத்த மூன்றுமாதம் நான் தவித்து அலைந்தேன். அந்த மூன்றுமாதங்களில் மட்டும் இருபது முப்பது முறை நான் அந்த மோட்டலுக்குச் சென்றிருப்பேன். வெவ்வேறு நேரங்களில் சென்றேன். எதிர்பாராமல் சென்றால் அவள் அங்கே இருப்பாள் என்பதுபோல. அந்த அறையில் தங்கினால் ஓர் இரவில் அவள் முன்புபோல வந்து தழுவுவாள் என்று நினைத்துக்கொண்டேன். எனக்கே நன்றாகத் தெரிந்திருந்தது, மறுபடி அவளைச் சந்திக்கவே முடியாது என்று. அந்த அனுபவம் அப்படியே காலத்தில் பின்னால் சென்றுவிட்டது என்று.

மூன்றுமாதங்களில் தாடிவளர்ந்து, தலைமுடி வளர்ந்து, உடைகள் தொளதொளவென்றாகி, எங்கு பார்த்தாலும் எவரும் கிறுக்கன் என்று சொல்லும்படி ஆகிவிட்டேன். அம்மா ஓங்கோலில் இருந்தாள். அவளுக்கு ஒன்றும் தெரியாது. நான் என் வேலையை விட்டுவிட்டேன். சேமிப்பைக் கொண்டு கொஞ்சநாள் வாழ்ந்தேன். ஒரு கட்டத்தில் தங்கியிருந்த இடத்தை காலிசெய்துவிட்டேன். பைக்கில் ஒரு பையில் என் உடைமைகள் எல்லாம் இருந்தன. அதன்பிறகு நான் நெடுஞ்சாலைகளிலேயே வாழ ஆரம்பித்தேன்.

நெடுஞ்சாலைக்கு அப்படி ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அது மனிதனை பைத்தியமாக ஆக்கிவிடும். என்னைப்போல முழுக்க முழுக்க நெடுஞ்சாலையிலேயே வாழும் பலநூறுபேரை நான் கண்டிருக்கிறேன். அனைவருமே நெடுஞ்சாலைப் பைத்தியங்கள். நெடுஞ்சாலைகளில் நீங்கள் பார்க்கும் பைத்தியங்களை வேறெங்கும் பார்க்கமுடியாது. அவர்களை எங்கே கொண்டுசென்று விட்டாலும் இங்கே வந்துவிடுவார்கள். இங்கே, இந்த இருபக்கமும் மாபெரும் வாசல்கள் திறந்த வெட்டவெளியில்தான் அவர்களால் நிம்மதியாக இருக்கமுடியும்.

இரண்டுமுறை நான் பைக்கில் இருந்து விழுந்தேன். என்னால் பைக்கை கவனமாக ஓட்டமுடியவில்லை. என் உடலில் சமநிலை போய்விட்டது. ஆகவே பைக்கை விற்றுவிட்டேன். இதோ ஏழாண்டுகளாக சாலைகளில் இப்படி பயணம் செய்கிறேன். லாரிகளில் ஜீப்புகளில் பஸ்களில் செல்வேன். வேறு எங்கும் செல்வதில்லை. ஹைதராபாத் முதல் போபால் வரை. திரும்பவும் ஹைதராபாது. முன்பு அந்தப்பாதையில் நாக்பூர் வழியாகச் சென்றேன். நூற்றுக்கணக்கான முறை சென்றபின் சலித்துவிட்டது.இப்போது இந்தூர் வழியாகவும் செல்கிறேன்.

”ஒரு பீடி கொடுங்கள்”என்று அவன் கேட்டான்.

அப்துல் பீடியை கொடுத்து தானும் ஒன்றை பற்றவைத்துக்கொண்டார்.

இருவரும் மௌனமாக புகைவிட்டனர்.

“அந்த மோட்டலில் கார் எண்களை பதிவுசெய்வதில்லையா?”என்றேன்.

“வாட்ச்மேன் பதிவுசெய்வான்… ரிஜிஸ்டரும் பதிவுசெய்வார்கள்.ஆனால் அதெல்லாம் கொஞ்சநாள்தான் இருக்கும். நான் மூன்றுமாதம் வரை அதைப் பார்க்க முயற்சிசெய்யவே இல்லை… அதன்பிறகு அங்கேபோய் அந்த தகவல்களை கேட்கலாம் என்று நினைத்தேன். ஆனால் கேட்கவில்லை”

“ஏன்?”

“தெரியவில்லை…”

”ஒரு வேளை தீவிரமாக தேடினால், அங்கிருக்கும் பதிவுகள் வழியாக கண்டுபிடிக்கலாம்”

“ஆமாம், நான் ஒருவருடம் வரை தயங்கிக்கொண்டிருந்தேன். நான் அப்படி அவள் பின்னால் செல்வது அவளுக்கு செய்யும் துரோகம் என்று நினைத்தேன். அதன்பிறகு அந்த தகவல்களை தேடிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். அதற்குள் அந்த மோட்டல், பெட்ரோல்பங்க் எல்லாவற்றையும் மூடிவிட்டார்கள்”

”நீ வேறு பெண்களை முயற்சி செய்யவில்லையா?”என்றார் அப்துல் “அதுதானே வெளியே செல்ல சிறந்த வழி?”

”ஆமாம், அதை நான் யோசித்து முடிவெடுத்து செய்ய முயன்றேன். வேறு பெண்களை நெருங்க முயன்றேன். விபச்சாரிகளைக்கூட அணுகியிருக்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. எல்லா பெண்களிலும் நான் ஒரே பெண்ணைத்தான் தேடுகிறேன். அருகே சென்றாலே தெரிந்துவிடும், அவள் அல்ல இவள் என்று. உடனே ஏமாற்றமும் எரிச்சலும் வந்துவிடும். நீங்கள் சொன்னீர்களே சோறு மண்ணாக மாறியதுபோல என்று. அப்படி ஆகிவிடும்”

“ஆமாம், கொடுமை அது’ என்றார் அப்துல்.

“நான் பல பெண்களை அந்தச் சந்தர்ப்பத்தில் அடித்திருக்கிறேன். அவர்கள் திருப்பி அடித்திருக்கிறார்கள். அடிலாபாத்தில் ஒரு பெண்ணும் அவளுடைய ரவுடிகளும் சேர்ந்து அடித்து மூன்று மாதம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். நெற்றியில் இந்த தழும்பு அதுதான்” என்றான் தருண்.

“நீ அவளை தவிர எவரையுமே ஏற்றுக்கொள்ள மாட்டாயா?” என்றேன்.

“உண்மையில் எந்த பெண்ணாக இருந்தாலும் மனமார ஏற்றுக்கொள்வேன். யாரையாவது ஏற்றுக்கொண்டு இந்த அலைக்கழிதலில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். ஏதாவது சைக்கியாட்ரிஸ்ட் என்னை அப்படி மாற்றினார் என்றால் அவருக்காக நான் லட்சக்கணக்காக பணம் கொடுக்க தயாராக இருக்கிறேன்.இப்போது என்னால் முடியவில்லை… அதுதான் உண்மை. நான் என்னை அறியாமல் அவளைத்தான் தேடுகிறேன். வேறு எவரையுமே பெண் என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை”

”அவளைத்தான் உனக்கு தெரியாதே”

“ஆமாம், அவளுடைய முகம் உடல் ஒன்றுமே தெரியாது. ஆனால் ஒரு பெண்ணை அணுகினாலே தெரிந்துவிடும், அவள் அல்ல இவள் என்று. அப்படி குழப்பம் இருந்தால்கூட அவளை தொட்டால் உடனே குமட்டல் வருவதுபோல ஒரு உலுக்கல்வரும். மனம் விலகிவிடும்”

“நீ உண்மையில் உன்னுடன் இருந்த அந்தப்பெண்ணை கண்டால்கூட அதே வெறுப்பு வரும் என்று நினைக்கிறேன்”என்றேன்.

அவன் திடீரென்று கிறுக்குத்தனமான வேகத்துடன் “இல்லை, இல்லை, எனக்கு அவளை தெரியும். நான் ஒரு கணம்கூட மறக்கவில்லை”என்றான்.

நான் அந்த வேகத்தைக் கண்டு பதறிவிட்டேன். “சரி சரி, நான் சும்மா சொன்னேன்” என்றேன்.

”ஏழாண்டுகளில் அவளுடைய தொடுகையும் மணமும் குரலும் இன்னும் தீவிரமாக ஆகிவிட்டிருக்கிறது. இதோ இப்போது இங்கே என்னால் அவளை உணரமுடிகிறது. ஐந்து நிமிடம் முன்பு நடந்தது போலிருக்கின்றது அந்த நாளின் நிகழ்வு”

“அவனை போட்டு படுத்தாதீங்க சாப்…அவன் பாதிக்கிறுக்கனா இருக்கான்”என்று பாய் என்னிடம் தமிழில் சொன்னார்

“நான் அவளை மறக்கவே இல்லை… அவளைத் தவிர எல்லாமே மறந்துவிடுகிறது”என்றான்.

“நீ இதிலிருந்து வெளியே வந்தே ஆகவேண்டும், இல்லாவிட்டால் அழிந்துவிடுவாய்” என்றேன்.

“அழிந்தால் அழிகிறேன். அது என் தலையெழுத்து என்றால் அப்படி ஆகட்டும்” அவன் சட்டென்று விம்மி அழ ஆரம்பித்தான். கைகளால் தலையை பிடித்தபடி குனிந்து அமர்ந்து அழுதான். நான் அவன் தோளை தட்டி ஆறுதல்படுத்தினேன்.

பாயிடம் “போதைப்பழக்கம் இருக்குமோ?”என்றேன்.

”இல்லை, அவன் கண்ணப் பாத்தா நல்லாத் தெரியுது, கண்டிப்பா அதெல்லாம் இல்லை. ஆனா ஆளு கிறுக்கன்”என்றார் பாய்.

அவன் முகத்தை துடைத்துக்கொண்டான். பெருமூச்சுவிட்டான். சற்று புன்னகை செய்து “ஒரு பீடி கொடுங்கள் சாப்”என்றான்.

அவர்கள் இன்னொரு முறை பீடி பிடித்தனர். லாரி ஒளியை வீசி அதை துரத்துவதுபோல சென்றுகொண்டிருந்தது.

அம்முறை அந்த அமைதி நீண்டநேரம் இருந்தது பாய் வழியில் ஓர் இடத்தில் லாரியை நிறுத்தினார். நாங்கள் ஒரு டீ சாப்பிட்டோம். அவன் டீ சாப்பிடுவதில்லை என்று சொல்லிவிட்டு இறங்கி கைகளை கட்டிக்கொண்டு நின்றான். பரட்டைத்தலையும் தாடியும் நிழலுருவாக லாரிமேல் விழுந்து கிடந்தன. அவனுக்குப்பின்னால் ஒரு பிசாசு இருப்பதுபோல.

மீண்டும் லாரியில் ஏறிக்கொண்டபோது பேச்சு நின்றுவிட்டது. நெடுநேரம் கழித்து அப்துல் கேட்டார்  “இப்போது இதை ஏன் சொன்னாய்?”

“நீங்கள் உங்கள் மனைவி பற்றிச் சொன்னீர்கள், எனக்கும் அதே கதைதானே?”

”ஆமாம்”என்றார் அப்துல்.

இந்தூரை வண்டி நெருங்கியது. ”நான் இங்கே இறங்கிக்கொள்கிறேன்”என்றான்.

”இங்கேயா?”

”ஆமாம், இந்தூருக்குள் போகும் லாரிகள் இங்கேதான் வலப்பக்கம் செல்வார்கள்”

“சரி ,பார்ப்போம்” என்றார் அப்துல், வண்டி நின்றது.

“தருண், பை… டேக் கேர்”என்றேன்,

”பை”என்று அவன் இறங்கிக்கொண்டான்,

கிளீனர் வாயை துடைத்துவிட்டு “இந்தூரு!”என்றான்,

“இப்பத்தான் தெரிஞ்சிருக்கு ஹிமாறுக்கு…டேய், மறுபடி தூங்கு…” என்றபின் என்னிடம் “சரியான இபிலீஸு சாப் இந்த நசீர்”என்றார் அப்துல்,

லாரி கிளம்பியதும் நான் “அவன் கதைவிட்டிருக்கான்னு நினைக்கிறேன் பாய்” என்றேன்.

“எப்டி சொல்றீங்க?”

”நீங்க உங்க கதையச் சொன்னதும் அதைப்புடிச்சுக்கிட்டு அவன் ஒரு கதையை அடிச்சுவிட்டுட்டான். நாம அவனை இவ்ளவுதூரம் கொண்டுவந்ததுக்கு டிக்கெட் அது. அவங்கிட்ட நீங்க காசுகேக்கலை பாத்தீங்களா?”

“சேச்சே, அவன் உண்மையத்தான் சொல்றான்… அவன் முகத்தை பாத்தேன்”

”அவன் பெரிய நடிகனா இருந்தா?”

“நம்மாலே இப்ப ஒண்ணுமே சொல்லமுடியாது… அதை எதுக்கு போட்டு உடைச்சுக்கிடணும்?”என்றார் அப்துல். “கதையா இருந்தாலும் நல்லாத்தானே இருந்திச்சு. சினிமாவாக்கூட எடுக்கலாம்”

”ஆமா”என்றேன். திரும்பிப்பார்த்தேன். விரிந்த நெடுஞ்சாலையில் தன்னந்தனியாக நின்றிருந்தான். எதிர்வரும் லாரிகளின் ஒளியில் மின்னி மின்னி அணைந்து கொண்டிருந்தான்.

லாரி விலகிச்செல்லச் செல்ல அவன் சொன்ன கதையும் சுருங்கிக்கொண்டிருப்பதாகப் பட்டது.

அப்துல் திடீரென்று சிரித்தார்.

“என்ன பாய்?”

“இல்ல நினைச்சுகிட்டேன், இப்ப இவன் எல்லா பெண்ணிலயும் அவளை தேடுறதுபோல அவ எல்லா ஆம்புளைங்களிலயும் இவனை தேடுவாளா?”

நான் “ஒருவேளை அவ எல்லா ஆம்புளைகளிலேயும் இவனை கண்டுகிட்டாள்னா?”என்றேன்.

“சேச்சே”என்றார் அப்துல் “அநியாயமா பேசக்கூடாது”என்றார்.

லாரி ஒளியின்மேல் ஏறி ஏறிச் சென்றுகொண்டிருந்தது.

பிறகு அவரே “மனுச மனசுல்ல?. இருக்கலாம்” என்றார். தொப்பியை எடுத்துவிட்டு தலையை கையால் வருடியபடி “ ஆமா, அவ இவனை எல்லார்கிட்டயும் பாக்கலாம்…”என்றார்.

“நான் சொன்னது ஒரு வாய்ப்புன்னுதான்’ என்றேன்

“ஆமா, ஆனா அத்தனை பேரையும் அவ சேத்துக்கிடுவான்னு சொல்லமுடியாது. அத்தனை பேரையும் தொரத்திவிட்டுட்டு அவளும் இவனை மாதிரியே கிறுக்காத்தான் இருப்பாள்ன்னு தோணுது” என்றார் அப்துல்.

”ஏன்?”என்றேன்.

அப்துல் ”இங்கபாருங்க சாப், அல்லா மனுசனுக்கு குடுத்தது சும்மா தீப்பெட்டி சைசுக்கு மனசாக்கும். அதுக்குள்ள ஆனையைப்புடிச்சு அடைச்சுப் போடலாம்னு நினைக்கப் பிடாது… இந்தமாதிரி எங்கயுமில்லாத அனுபவமெல்லாம் வந்தா அவ்ளவுதான், மனுஷனுக்கு தரையிலே காலு நிக்காது. மண்டை நொஸ்ஸாயிடும்” என்றார்.

“ஆமா” என்றேன் “சாதாரணமாவே மனுசன் காலு மண்ணிலே தொட்டுத் தொட்டுத்தான் தாவிக்கிட்டு இருக்கு”

“பின்னே இல்லாம? யா ரஹ்மான்” என்றார் அப்துல்.

நானே சற்றுநேரம் கழித்து “ஏன் பாய், வேறுமாதிரியும் அவ ஆகியிருக்கலாம்ல?”என்றேன்

“எப்டி?” என்றார் அப்துல்.

“இன்னும் பெரிசா, ரொம்ப உயரத்துக்கு, வேற மாதிரி?”என்றேன்.  “மனுஷ மனசுக்கு எவ்ளவோ வாய்ப்புகளிருக்கு பாய்”

அப்துல் பதில் சொல்லவில்லை. சாலையைப் பார்த்துக்கொண்டு ஓட்டிக்கொண்டிருந்தார்.நெடுநேரத்திற்குப்பின் மீண்டும்  “யா ரஹ்மான்!”என்றார்.

 

***

 

17 இரு நோயாளிகள் [சிறுகதை]

16 மலைபூத்தபோது [சிறுகதை]

15 கேளி [சிறுகதை]

14 விசை [சிறுகதை]

13. இழை [சிறுகதை]

12. ஆமென்பது[ சிறுகதை]

11.விருந்து [சிறுகதை]

10.ஏழாம்கடல் [சிறுகதை]

9. தீற்றல் [சிறுகதை]

8. படையல் [சிறுகதை]

7.கூர் [சிறுகதை]

6. யட்சன் [சிறுகதை]

5. கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3.வலம் இடம் [சிறுகதை]

2.கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை]

முந்தைய கட்டுரைஇமையம்- சாகித்ய அக்காதமி- கடிதம், பதில்
அடுத்த கட்டுரைகூர், தீற்றல் – கடிதங்கள்