மூங்கில் மிகைமலர்வு – லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

கடந்த வாரம் பொங்கல் விடுமுறையில் கபினிக்கு செல்ல திட்டமிட்டோம். கபினியின் கோஸ்ட் எனப்படும் அந்த கருஞ்சிறுத்தையை காண்பதென்பது இளைய மகன் தருணுக்கு வாழ்நாள் ஆசை. கோவிட் தொற்றுக்காலமென்பதால்  ரயில், பேருந்துப் பயணங்களை தவிர்த்து மகன்கள் இருவருமே இப்போது ஓட்டுநர் உரிமம் வாங்கிவிட்டதாலும், பொள்ளாச்சி-அன்னூர்-த்தியமங்கலம் வழியே மைசூருவுக்கு செல்ல அதிகபட்சமே 200 கிமீ தானென்பதால்  காரிலேயே சென்றோம்.

அன்னூரிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் 27 கொண்டை ஊசிவளைவுகளுடன் இருந்த மலைப்பாதை முன்பு போலல்லாது தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும் சரக்கு லாரிகளினால் எந்த இடையூறுமின்றி செல்ல வசதியாக அகலப்படுத்தப்பட்டிருந்தது. மலைஇறங்கினதும் வந்த கல்லும் மண்ணும் குழிகளும் மட்டுமே இருந்த மிகக்கடினமான சந்தியமங்கலம்-மைசூர்  காட்டுப்பாதை சுமார் 40 கிlலோமீட்டருக்கு , நான்கு சக்கரங்கள் இருந்த பெரிய அளவிலான அரவை இயந்திரத்துக்குள் அமர்ந்து பயணிக்கும் அனுபவத்தை அளித்தது.  ஆனால் சொல்லி வைத்துக்கொண்டதுபோல்  காடெங்கும் மூங்கில்கள் பொன்னாய் பூத்து நிறைந்திருந்ததால். பாதைகொடுத்த சிரமம் தெரியவேயில்லை.

மூங்கில் பூப்பதை பார்ப்பது அரிது. நான் இரண்டாம் முறையாக இப்படி முழுக்காடும் நிறைந்து பூத்திருக்கும் மூங்கில்களை  பார்க்கிறேன். 2016’ல்  தாவரவகைப்பாட்டியல் பயிற்சியின் பொருட்டு அமைதிப்பள்ளத்தாக்கு சென்றிருக்கையில் காடெங்கும் மூங்கில் பூத்திருந்ததை முதன்முதலில் பார்த்தேன். காட்டின் பெயர் சைரேந்திரி என்பது இன்னும் அக்காட்டுடன் அணுக்கமாக வைத்தது. இனி வாழ்நாளில் மற்றோரு பூப்பை பார்க்கமாட்டேன் என்றே நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு மீண்டும் இவற்றை காணும் படி அருளப்பட்டிருக்கிறது.

பொன்னிற மலர்களுடன் கிளைத்த உலர் மஞ்சரிகள் 30’லிருந்து 40 மீட்டர் உயரத்துக்கு காடெங்கும், வழியெங்கும் நிறைந்திருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆனால் உடன் பயணித்த ஏராளமான வாகனங்களில் இருந்த ஒருவர் கூட மூங்கில் பூத்திருந்ததை நிமிர்ந்து பார்க்கவில்லை. இனியொருமுறை இந்நிகழ்வை அவர்களின் வாழ்நாளில் பார்ப்பது அரிது என்று தெரியாமல் சாலையோரம் வெகுசாதாரணமாக தென்பட்ட புள்ளிமான்களையும் யானைகளையும்  மட்டுமே வளைத்து வளைத்து படம் பிடித்தாகள் .எனக்கு ஆதங்கமாக இருந்தது அடடா, ஒரு அரிய நிகழ்வை தவற விடுகிறார்களே என்று.

மூங்கில்கள் வாழ்நாளின் இறுதியில் ஒரே ஒரு முறை மட்டும் பூத்து பின்னர் அழியும்  Monocarpic வகையை சேர்ந்தவை.   48-ருந்து 50 ஆண்டுகளில் மூங்கில்கள் இப்படி   முதலும் கடைசியுமாக மொத்தமாக பூத்து விதைகளை ஏராளமாக உருவாக்கிவிட்டு பின்னர் மடிந்துவிடும். மூங்கில் பூப்பதென்பது உண்மையில் மூங்கில் அழிவதுதான்.

மூங்கிற் சாவு  எனப்படும் மூங்கிலின் இத்தகைய மிகு பூப்பு பஞ்சத்துக்கும் அழிவிற்குமான அறிகுறி என்றே இந்தியாவில் பரவலாக நம்பப்படுகின்றது. ஆனால் மூங்கில் பூப்பிற்குப் பிறகு மண்ணில் விழுந்த மிகுதியான விதைகளை பெருச்சாளிகள், எலிகள் ஆகிய கொறிக்கும் உயிர்கள் உண்டு, பல்கிப்பெருகி பிற தானியங்களையும் உண்ணத் துவங்குவதால்தான்   உணவுத்தட்டுப்பாடு வருமே ஒழிய இந்த மிகுபூப்புக்கும் பஞ்சத்துக்கும் எந்த தொடர்புமில்லை என்றே தாவர அறிவியல் சொல்லுகின்றது  மூங்கில் பூக்கும் காலத்தையொட்டி எலிகள் மற்றும் பெருச்சாளிகளுக்கு கூடுதல் இனப்பெருக்க உந்துதல் உண்டாகுமென்றும் சொல்லப்படுகின்றது.

மகாபாரதத்தின் ஒரு வடிவம், ஜெயத்ரதன் திரெளபதியை இழுத்துக்கொண்டு போகும்போது திரெளபதி ’’மூங்கில் பூத்தபின் வரும் அழிவைபோல நீ அழிவாய்’’ என்று சாபமிட்டதாக சொல்லுகிறது. வெண்முரசு காண்டீபத்திலும் இது குறிப்பிடப்பட்டுளது. கலிகன், நாகர்களை எதிர்த்து  சித்ராங்கதன் போருக்கு புறப்பட்டு போயிருக்கும் சமயத்தில் ஃபல்குனையிடம் “மூங்கில் பூக்கும் காலத்து எலிகள் பெற்று பெருகுவது போல அவர்கள் வளர்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பல நூறுபேர் படையென எழுந்து வருகிறார்கள்” என்பான். அந்த ஒரு அத்தியாயத்திலேயே பல இடங்களில் மூங்கில் குறிப்பிடப்பட்டிருக்கும். (காண்டீபம் – 20, பகுதி மூன்று : முதல்நடம் – 3)

இப்படி பலநூறு கிலோமீட்டர் லைவிலிருக்கும் ஆயிரக்கணக்கான் மூங்கில்களும் சேர்ந்து ஒரேசமயத்தில் மலரும் விந்தையை தாவர அறிவியலாலும் சரியாக விளக்க முடிவதில்லை. Phenology எனபடும் தாவரங்களின் புதுத்தளிர்களும் மலர்களும் உருவாகும் காலத்திற்கான தனி அறிவியல்பிரிவு,  இன்னும் இதைக்குறித்து ஆய்வு செய்தபடியேதான் இருக்கிறது.

மூங்கில்களின் அடியிலிருக்கும் கிழங்குபோன்ற பகுதிகளில் தலைமுறைகளாக சேமிக்கப்பட்டிருக்கும் நினைவுக்குறிப்புக்கள் அதே இனத்தைச்சேர்ந்த பிற மூங்கில்களுக்கும் பூக்கும் சமயத்தை குறித்த தகவல்களை அனுப்பும். அல்லது எப்படியோ தெரிவிக்கும் சாத்தியமிருக்கின்றது என்று மட்டுமே இப்போதைக்கு ஆய்வுகள் அனுமானித்து சொல்லுகின்றன.

இப்படி குறிப்பிட்ட இடைவெளியில் மிகுபூப்பு நிகழ்வை கொண்டிருக்கும் மூங்கில், குறிஞ்சி போன்றவை Plietesials எனப்படும். குறிஞ்சியில் 12 வருடங்களுக்கு ஒருமுறை மலர்பவையும், 9 வருடங்களுக்கு ஒருமுறை மலர்பவையும் அவற்றிற்குள் எந்த குழப்பமுமில்லாமல் மிகத்துல்லியமாக அதே காலத்தில் மலருகின்றன என்பது பெரும் அதிசயமே!

பூத்த மூங்கில் மஞ்சரிகளில் மகரந்த சேர்க்கை நடந்து பெண்பூக்கள் கருவுற்று, பின்னர் விதைகள் முற்றி விழுந்து  அவற்றிலிருந்து புதிய மூங்கில்கள் வளர சில ஆண்டுகளாகிவிடும். அதுவரை மூங்கிலின் இலைகளையும் குருத்துக்களையும் விரும்பி உண்ணும் அக்காட்டின் யானைகள் அவ்வுணவுக்காக காத்திருக்க வேண்டியதுதான். சாலையோரம்  பச்சைஇலைகள ஒன்று கூட இல்லாமல் பழுத்துதிர்ந்து கொண்டிருக்கும் இலைகளையும் பொன்மஞ்சரிகளையும் கொண்டிருந்த ஒரு மாபெரும் மூங்கில் புதருக்கருகே ஒற்றைக்கொம்பன் யானையொன்று தலை குனிந்தபடி தும்பிக்கை நுனி அசைவதை பார்த்துக்கொண்டு அசையமல் வெகுநேரம் நின்று கொண்டிருந்தது என்னமோ துக்கமாக இருந்தது எனக்கு

லோகமாதேவி

கபினி காட்டில் நாற்புறமும் திறந்திருந்த ஜீப்பிற்கு வெகு அருகே நிதானமாக நடந்தபடி கூடவே வந்துகொண்டிருந்த அத்தனை பெரிய புலி எனக்கு பெரிய பரவசத்தை ஏற்படுத்தவில்லை. காடுமுழுக்க பொன்போல பூத்திருந்த மூங்கில்களை இரண்டாம் முறையாக பார்த்ததே பெரும் மகிழ்வை நிறைவை கொடுத்தது.இனி இதே வழியில் இன்னும் 50.60 ஆண்டுகளுக்கு பிறகு மகன்கள் அவர்களின் பேரக்குழந்தைகளுடன் செல்லும் போது மீண்டும் மூங்கிலின் மலர்தலை பார்ப்பார்களாக இருக்கும்.

அன்புடன்

லோகமாதேவி

முந்தைய கட்டுரைஅஞ்சலி:டொமினிக் ஜீவா
அடுத்த கட்டுரைஎண்ணும்பொழுது -கடிதங்கள்