இளநாகன் ஏன்?

அன்புள்ள ஜெ,

வண்ணக்கடலில் வரும் இளநாகன் கதைக்கு எவ்விதம் தேவைப்படுகிறான் என்று எனக்கு பெருங்குழப்பமிருந்தது. நீங்களே ஒரு கேள்வி பதிலின் போது, வண்ணக்கடல் முக்கிய கதைமாந்தர்களின் இளமையைப் பற்றி சொல்வது, எனவே ஒரு தொகுத்துக் கூறும் வசதிக்காக அக்கதைகளை வேறு ஒருவர் கேட்பது போல அமைத்திருக்கிறேன் என்றிருந்தீர்கள்.

அது சரி தான். அப்படி ஒரு பாத்திரம் இல்லையென்றால் பீமன், துரியோதனன், அர்ஜுனன், துரோணர், கர்ணன், ஏகலவ்யன் கதைகளைத் தொகுத்து ஒரே மூச்சில் சொல்லியிருக்க முடியாது. ஆனால் இளநாகன் அவ்வளவுக்கு மட்டும் தானா? அப்படி ஒருவன் தேவையென்றால் முதற்கனலின் ஆஸ்திகன் போல ஏதேனுமொரு பிற்கால கதாபாத்திரத்திற்கு அதன் தாய் கூறும் கதையாகவே அதை வைத்திருக்கலாமே! ஏன் பாரதத்திற்கே சம்பந்தமில்லாத ஒருவனை, அதுவும் ஓர் தமிழ் பாணனை வைத்து துவக்க வேண்டும்?

இருவிதமாக இதற்கு பதில் தேறலாம். ஒன்று அந்த இளநாகன் நீங்கள் தான். உங்களின் பாரத தரிசனங்களைத் தொடர்ந்தவர்களுக்கு இது இன்னும் தெளிவாகத் துலங்கும். வண்ணக்கடலின் நிலக்காட்சிகள், நகர் வர்ணனைகள் தங்களின் அருகர்களின் பாதை முதலான பயணக் கட்டுரைகளில் வந்தவற்றின் விரிவாக்கம் தான். குறிப்பாக அந்த மஹுவா கள்ளைக் குடித்து விட்டு மயங்கிக் கிடக்கும் ஓர் இளைஞனை இரு பெண்கள் தெளிவாக்க முயலும் காட்சி. இது நீங்கள் ஏற்கனவே எழுதியது தான். கழிந்த இருபத்தைந்து வருடங்களாக தங்களின் பயணத்தில் பாரதமும் இடம்பெற்றிருக்கிறது. குமரியில் துவங்கி வேறு வேறு வழிகளினூடாக நீங்கள் கண்டடைந்த அஸ்தினபுரயைத் தான் எழுதியிருக்கிறீர்கள்.

இளநாகன் கீரனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, கீரன் ‘ஏதேது அப்படியே அஸ்தினபுரி வரை சென்று விடுவீர்கள் போல’ என்று சொல்லும் சொல் தான் அவனக்கு அஸ்தினபுரி செல்ல தூண்டல். உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளின் சொல் தான் வெண்முரசு எழுதத் தூண்டுதல் என்றிருந்தீர்கள்.

இரண்டாவது அந்த இளநாகன் வாசிக்கும் நாங்களும் தான். ஒவ்வொருவாசகரும் தான். இளநாகன்  ஓர் வடநாட்டு சூதனிடம் கேட்கிறான், ‘அஸ்தினபுரிக்கு எப்படி போவது? அது நெருங்குவதை எப்படி கண்டுபிடிப்பது?’. அதற்கு அச்சூதன் சொல்கிறான்,’வழி, சூதர் பாடல்கள தான். அஸ்தினபுரி நெருங்க நெருங்க சூதர் பாடல்களில் உண்மை கூடிக் கொண்டே வரும்’. அதற்கேற்றார் போல அஸ்தினபுரியைப் பற்றி நல்ல விஷயங்களே மதுரையிலும், புகாரிலும் சொல்லப்படுகின்றன. அஸ்தினபுரி நெருங்க நெருங்க நாவல் புறக்கணிக்கப் பட்டவர்களின் கதையாக மாறுகிறது.மற்றொரு விதத்தில் உண்மை கூடுகிறது. இதுவும் இயல்பானது தான்.

இந்தியாவில் ஐரோப்பாவின் மேன்மைகள் மட்டுமே கேட்டிருக்கிறேன். இங்கே வந்த பிறகு தான் உண்மையை அறிகிறேன். மேலும் அஸ்தினாபுரம் என்பதே ஓர் பெரிய குறியீடு தான். இங்கே அஸ்தினபுரி என்பது மகாபாரதத்தைத் தான் குறிக்கிறது. பாரதத்தைப் பற்றி படிக்கும் தோறும், கேட்கும் தோறும் நமக்கு பாரதம் துலங்கி வரத்துவங்கும். வெண்முரசிற்கு முன்னர் இருந்ததை விட தற்போது என்னுடைய புரிதல் அதிகமாயிருக்கிறது. ஆனால் நான் பாரதத்தை முற்றாக அறிந்து கொள்வேனா? நிச்சயம் எனக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் அதை அறிந்து கொள்வேன். ஒவ்வொரு வாசகரும் அவ்வாறே. ஜெவும் அவ்வாறே.

அதைத் தான் வண்ணக்கடலின் கடைசி அத்தியாயம் இவ்வாறு சொல்கிறது. ‘சூதரே, மாகதரே, ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் சென்ற அஸ்தினபுரி எது? அதை பிறர் சென்றடையமுடியாது. ஒவ்வொருவரும் அவரவருக்குரிய அஸ்தினபுரியையே சென்றடைகின்றனர். செல்லும் வழியில் சிறகுதிர்ந்து விழுபவரும் அதிலேயே உதிர்கின்றனர். செல்லாது கருவறையிலேயே தங்கிவிட்டவர்களும் அதையே உணர்கின்றனர்.’

மகாபாரதம் என்பது என்ன? வெறும் கதையா? அது ஐந்தாம் வேதம். நம் புண்ணிய பூமியின் தத்துவங்கள் அனைத்தும் முயங்கிய ஓர் வெளி. மற்றொரு விதத்தில் ஒட்டுமொத்த பாரதமும் பங்கேற்ற ஓர் நிகழ்வு தான் பாரதப் போர். அப்படியென்றால் அஸ்தினபுரியின் நிகழ்வுகள் பாரதத்தின் ஒவ்வோர் பகுதியிலும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தின என்பதும் மிக முக்கியம். அவற்றைப் பற்றி பிற்கால நாவல்கள் பேசும் பொழுது இந்த நிலக்காட்சிகள் மேலும் முக்கியம் பெறலாம்.

என்னை இளநாகன் என உணர்ந்த கணம் வண்ணக்கடல் மொத்தமாத் திறந்தது. அங்கங்கு தனித்து நின்றவையனைத்துமே ஓர் ஒழுக்குக்குள் வந்தது. இப்போது யோசித்துப் பார்த்தால் இளநாகன் ஓர் இன்றியமையா பாத்திரமே. அன்புடன்,

அருணாச்சலம், நெதர்லாந்து

அன்புள்ள அருணாச்சலம்,
எழுத ஆரம்பிக்கும்போது உண்மையில் திட்டம் ஏதும் இருக்காது. அல்லது நம் மேல்மனதுக்குத் திட்டங்கள் இருக்காது. ஆழ்மனது ஏதோ திட்டமிட்டிருக்கும்.

இளநாகன் மகாபாரதத்தின் தொன்மங்களும் தத்துவங்களும் விளைந்த நிலவியலைப்பற்றி ஆராயும் ஒருவன். தொன்மங்கள் பெருகிச்செல்லும் வெளியில் அவை முளைத்த மண்ணை முதலில் சொல்லியாகவேண்டியிருக்கிறது. ஆகவே அவன் வருகிறான் என நானே கண்டுகொண்டேன்.

மேலும் இங்கே வராவிட்டால் இனி போர் முடிந்தபின்னர்தான் பாரதம் வர முடியும். பாரதக்கதையும் பாரதநிலமும் ஒன்றே என்பது என் தரிசனம். நான் நடந்து அறிந்த தரிசனம். அது நாவலில் வந்தாகவேண்டுமல்லவா.

ஜெ

Monday, October 13, 2014
இளநாகன்

முந்தைய கட்டுரைபுனைவு வாசிப்பு தவிர்க்கமுடியாததா?
அடுத்த கட்டுரைவல்லினம் செயலி