கதாபாத்திரங்களின் உருமாற்றம்

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

வெண்முரசு கடிதங்களை தொடர்ந்து வாசித்துவருகிறேன். நான் இப்போதுதான் வெண்முரசு படிக்க ஆரம்பித்து கார்கடல் தாண்டி சென்றுகொண்டிருக்கிறேன். என் வாழ்நாளில் இத்தனை பக்கங்களை நான் வாசிப்பேன் என்று நினைக்கவே இல்லை. ஒரு நாவல் என்னை இத்தனை பக்கங்கள் வாசிக்கவைக்கும் என்றும் நினைத்ததில்லை. முழுவீச்சில் இந்நாவல் என்னை அடித்துச் செல்கிறது

இந்நாவலை வாசிக்கும்போது எனக்கு மிகமிக உதவியாக இருப்பவை இந்நாவலைப்பற்றி வந்த கடிதங்கள். இந்நாவல் தொடராக வந்தபோது கூடவே கடிதங்களும் வந்தன. ஆகவே அந்தக்கடிதங்களை ஒரு நாவலை வாசித்து முடித்ததுமே வாசிக்கமுடிந்தது. ஆனால் இன்றைக்கு அப்படி வாசிக்க முடியவில்லை. பின்னால் சென்று தேடித்தேடி வாசிக்கவேண்டியிருக்கிறது

இந்த கடிதங்களை எல்லாம் நாவல் வாரியாக பிரித்து தனித்தனியாக வெளியிட்டிருந்தால் அவை இன்னமும் உதவியாக இருக்கும். நல்ல கடிதங்களை தொகுத்து அவற்றை நூல் வடிவில் ஆக்கி அமேசானில்கூட வெளியிடலாம். ஒரு ஐம்பது அறுபது ரூபாய் விலை வைத்தால் நாவலுடன் சேர்த்தே வாங்கி கூடவே வாசிக்கலாம். பல கடிதங்கள் நாவலுக்கே டியூட்டோரியல் போல அமையும் அளவுக்கு முக்கியமானவை.

இந்நாவலை வாசிக்கத் தொடங்குவதற்கு முன்பாக எனக்கு சில சிக்கல்கள் இருந்தன. இதை வாசிக்கமுடியாது, கடினமான நடை, தனித்தமிழ் நடை என்று ஒரு தரப்பு சொல்லிக்கொண்டே இருந்தது. இன்னொரு தரப்பு மகாபாரதக் கதாபாத்திரங்களை கெடுத்துவிட்டார் என்று சொல்லிக்கொண்டே இருந்தது.

மகாபாரதக் கதாபாத்திரங்களைக் கெடுத்துவிட்டார் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் ஒன்றும் மூலமகாபாரதத்தை வாசித்தவர்கள் அல்ல. அவர்கள் டிவியில் மகாபாரதம் பார்த்தவர்கள். மூலமகாபாரதம் படித்து அதை ஒருவகை ஆசாரமாக எடுத்துக்கொண்டவர்களும் சிலர் இருக்கலாம். அவர்களுக்கு எந்தக்கேள்வியும் இருக்காது. அப்படியே எடுத்துக்கொள்பவர்கள்.

ஆனால் இந்தப்பிரச்சாரம் என்னைப்போல வாசிக்க நினைக்கிற சிலருக்கு ஆரம்பத்திலே தடையாக இருந்தது என்பதை இங்கே சொல்லியாகவேண்டும். உண்மையிலேயே பெரிய தடைதான். முதற்கனல் முடிந்து மழைப்பாடல் தொடங்கி முடிவதுவரை கதாபாத்திரங்கள் எப்படியெல்லாம் மாற்றப்பட்டிருக்கின்றன என்று பார்ப்பதிலேயே மண்டை ஓடியது. ஒரு கட்டத்தில் இதென்ன, நமக்கு ஏன் இந்த வேலை என்று நினைத்து விட்டுவிட்டு மீண்டும் வாசித்து வந்தேன். இந்த அவஸ்தை ஏதும் இல்லாமல், அரைகுறைவாசிப்பின் மூளைச்சீக்கு இல்லாமல் வாசிப்பவர்கள் கொடுத்து வைப்பவர்கள்.

நான் இந்நாவலை கார்கடல் வரை வந்தபிறகுதான் இந்நாவலில் கதைமாந்தருக்கு என்ன ஆகிறது என்று பார்த்தேன். இது ஒரு பழையபாணி கதை அல்ல. இது ஒரு நவீன நாவல். நவீனநாவல் என்ற வடிவம் தொடக்கத்தில் இருந்தே ஒருங்கிணைவுள்ள கதாபாத்திரங்களை உருவாக்க முயலவில்லை.கதாபாத்திரங்களை ஜப்பானிய விசிறிபோல விரித்து பார்க்கவே முயல்கிறது. விரித்து விரித்து அகழ்ந்து அகழ்ந்து பார்க்கிறது. பழையநாவலுக்கும் புதியநாவலுக்குமுள்ள வேறுபாடு இதுதான்.

ஒரு மனிதன் உண்மையில் தனக்குள் பலராக இருக்கிறான். அவனை ஒருங்கிணைவுடன் தெரியச்செய்வது அவன் புழங்கும் சூழலும் அவனைப்பற்றிய மற்றவர்களின் பார்வையும்தான். அவன் ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்ப மாறிக்கொண்டே இருக்கின்றான். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொருவகையில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறான். வெவ்வேறு வகையில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறான்

அந்த பன்மையைத்தான் நவீனநாவல் முன்வைக்கும் என்று நினைக்கிறேன். வெண்முரசில் துரியோதனன், பீமன், யுதிஷ்டிரன், அர்ஜுனன், கர்ணன் என எல்லா கதாபாத்திரங்களும் தொடர்ச்சியாக விரிக்கப்படுகிறார்கள். பல PESONALITY களாக பலமுகங்களாக ஆக்கப்படுகிறார்கள்.வெவ்வேறு வகைகளில் அவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் PESONALITY  என்ற ஒன்றே இல்லையோ என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் விரித்து விரித்து ஆழம் வரை சொல்லப்படுகிறார்கள்

நாவல் முடியப்போகும் இடத்தில் மீண்டும் இந்த பெரிய கதாபாத்திரங்களெல்லாம் குவிந்து ஒரே PESONALITY யாக ஆவதை பார்க்கிறேன்.அதுவரை இருந்த எல்லா முகங்களும் அவர்கள்தான் என்று தெரிகிறது. அவர்களின் தோற்றங்கள் எல்லாமே அவர்களின் PESONALITY யின் வடிவங்கள்தான் என்று தெரிகிறது.விசிறி மீண்டும் இணைந்து ஒன்றாகிறது. ஜப்பானிய விசிறியில் படங்கள் இருக்கும். விரியும்போது அந்தப்படம் இன்னொரு படமாக ஆகும். இணையும்போது மீண்டும் முன்பிருந்த படமாக ஆகிவிடும்

இந்த விரிதலைத்தான் நான் ஆரம்பத்திலிருந்தே பார்த்தேன். அது மிகவும் துலக்கமாகத் தெரிவது துரியோதனனின் கதாபாத்திரத்தில்தான். துரியோதனன் நடுவே அவன் அப்பாவிடம் அடிவாங்கியதும், உடல்குறை அடைந்ததும், அவனுடைய அந்த இயந்திரத்தனம் முழுமையாகவே இல்லாமலாகிவிடுகிறது. அவன் மனிதனாகிறான். அவன் கருணைகொண்டவனாகவும் ஆகிறான். அதன்பின் வஞ்சத்தால் கருமையாகி மீண்டும் பழிகொண்ட கலியன் ஆகிறான்.

மாறிக்கொண்டே இருக்கும் துரியோதனன் போர் நெருங்கநெருங்க மீண்டும் ஒன்றாகிறான். ஒரே ஆளுமையாக ஆகிறான். ஒரு deity போல ஆகிவிடுகிறான். அவனை ஒரு கற்சிலையாகவே பார்க்கமுடிகிறது

ஆனால் சில கதாபாத்திரங்கள் அப்படி அல்ல. சகுனி, திருதராஷ்டிரர் போன்றவர்கள் மாறாத சிலைபோலவே தென்படுகிறார்கள். ஒரே உணர்வுநிலையும் ஒரே ஆளுமையும் உடையவர்கள். ஏனென்றால் அவர்களின் மனசுக்குள் கதை போகவில்லை. அவர்களை மற்றவர்கள் பார்க்கும் கோணத்திலேயே கதை சொல்லப்படுகிறது. ஆகவே யூனிட்டி இருக்கிறது. குந்தி போன்ற கதாபாத்திரங்களுக்குள் கதை போகவில்லை. ஆனால் அவர்களின் அக ஆழம் என்ன என்பதை சுட்டிக்காட்டி கதை நின்றுவிடுகிறது. சௌவீர மணிமுடியை குந்தி சூடிக்கொள்வதுதான் அவளுடைய மனசின் அந்தரங்கம். அந்தக் குந்திதான் மெய்யானவள். அவள்தான் மகாபாரதபோரையே நடத்திவைப்பவள்

அப்படிப்பார்த்தால் ஒரு கதாபாத்திரத்தின் மனசுக்குள் எந்த அளவுக்கு கதை செல்கிறதோ அந்த அளவுக்கு கதை அந்தக்கதாபாத்திரத்தை உடைத்து உடைத்து பரப்பிவிடுகிறது. பயம் தயக்கம் கொந்தளிப்பு என எல்லா உணர்ச்சிகளும் அவர்களுக்கு இருக்கின்றன. அவர்கள் வெவ்வேறு வகையில் வெளிப்பட்டபடியே இருக்கிறார்கள்

நாவலைப்பற்றி மகாபாரதத்தில் ஆழமான வாசிப்பு உடைய என் தாய்மாமாவிடம் பேசினேன். மகாபாரத மூலமே அப்படித்தான் அவர்களைக் காட்டுகிறது என்று சொன்னார். மகாபாரதக் கதாபாத்திரங்கள் எல்லாமே ஒவ்வொரு பர்வத்திலும் ஒவ்வொரு *யுடன் தான் இருக்கிறார்கள். கதாபாத்திர யூனிட்டி என்பது மகாபாரதத்தில் அனேகமாக இல்லை என்று அவர் சொன்னார்.

துகிலுரிதல் காட்சியில் அவ்வளவு வெறியோடு தென்பட்ட திரௌபதி அடுத்த பர்வத்தில் என் விதி இப்படி ஆயிற்றே என்று கிருஷ்ணனிடம் பரிதாபமான குடும்பப்பெண் மாதிரி கதறி அழுது புலம்புகிறாள். ஆனால் விராடபர்வத்தில் மறுபடியும் அரசியின் திமிரோடு இருக்கிறாள். அதன்பிறகு போர் பற்றிய பர்வங்களில் எல்லாம் அவள் என்ன நினைத்தாள் என்பதெல்லாம் மகாபாரதத்தில் இல்லை. ஒரு வீடு கிடைத்தால்போதும் என்று பாண்டவர்கள் சமரசம் செய்ய தயாராக இருந்தபோது துரியோதனன் ரத்த்தத்தால் தலைசீவுவேன் என்று சொன்ன அவள் என்ன சொன்னாள் என்பது மகாபாரத மூலத்தில் இல்லை. அவளுடைய குணச்சித்திரமே யூனிட்டியுடன் இல்லை என்று சொன்னார்.

அந்த யூனிட்டி என்பது கதாபாத்திரத்தை குறைத்து கொண்டுவருவது. எந்த கதாபாத்திரத்தையும் அதன் உச்ச அளவுக்கு ஆராய்ச்சி செய்தால் ஆழமாகச்சொன்னால் யூனிட்டிதான் இல்லாமலாகும் என்று தோன்றுகிறது. காந்தியைப்பற்றிய ஆராய்ச்சிகளைப் பார்க்கும்போது அப்படி நினைத்துக்கொண்டேன். ஆனால் இல்லாமலாவது அந்த கதாபாத்திரத்தின் external unity மட்டும்தான். அது இல்லாமலாகி ஆழமாக சொல்லப்படும்போது அதன் inner unity துலங்கிவருகிறது.

வெண்முரசு வாசிப்பின் அனுபவமே இந்த குணச்சித்திரங்களின் மாற்றமும் மாற்றமில்லாத சாரமும் என்னென்ன என்று பார்ப்பதுதான் என்று இப்போது நினைக்கிறேன்.

எஸ்.ஆர்.பிரபுராஜ்

முந்தைய கட்டுரைபன்முகராமன்
அடுத்த கட்டுரைசுகிசிவமும் சுப்ரமணியனும்- கடிதம்