அன்புள்ள ஜெ
சமீபத்தில் நான் நீலம் நாவலை வாசித்து முடித்தேன். எட்டே நாட்களில் நான் வெண்முரசு வரிசையில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் மூன்றையும் வாசித்தேன். நீலம் வந்ததும் நின்றுவிட்டேன். நீலத்தை இதுவரை நாலைந்துமுறை வாசித்துவிட்டேன். இரண்டுமுறை உரக்கச் சொல்லி வாசித்திருக்கிறேன். அதன் சொற்சுவையை நாவால் உச்சரித்தால்தான் உணர முடியும்
நீலம் பற்றி அற்புதமான வாசிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. நீலம் வெளிவந்தபோதே தொடர்ச்சியாக வாசகர்களின் எழுத்துக்கள் வந்தன. அழகான கடிதங்கள் பல பெண்களால் எழுதப்பட்டவை. நீலம் அவர்களை எந்த அளவுக்கு பாதித்தது என்று உணரமுடிந்தது. யோசித்துப்பார்த்தால் நீலம் பெண்களைத்தான் அந்த அளவுக்கு உணர்ச்சிகரமாக ஆட்டிப்படைக்கும் என்று தோன்றுகிறது. நீங்கள் பெண்ணாக நின்று எழுதிய நாவல். வாசகன் பெண்ணாக அமைந்து வாசிக்கவேண்டியது. வெண்முரசு நாவல் வரிசை ஒரு மரம் என்றால் இது அதிலே ஒரு அழகான பூ போல
உங்கள் தளத்தில் இரண்டு நீலம் வாசிப்புகளை கண்டேன். திரு மரபின் மைந்தன் முத்தையா [புகழ்பெற்ற பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையாதான் இவர் என நினைக்கிறேன்] ரெமிதா சதீஷ் இருவரும் எழுதியது. இருவரும் இரண்டு பார்வையில் எழுதியிருந்தார்கள். இரண்டு சிறந்த கட்டுரைகள். பொதுவான அம்சம் இருவருமே உணர்ச்சிகரமாக எழுதியிருந்தார்கள் என்பதுதான்
அதுதான் முக்கியமானது. நீலத்தை உணர்ச்சிகரமாக வாசித்தவர்கள் மட்டும்தான் அந்நாவலை அடையமுடியும். கொஞ்சம் உணர்ச்சிகரம் குறைவாக இருந்தால்கூட அந்நாவலை தொடவே முடியாது. அந்த நாவலில் உள்ளது ஓர் அரற்றல். ஒரு கட்டில்லாத மன அலைச்சல். அதை கூடவே சென்றால்தான் உணரமுடியும்
பழைய கவிதை ஒன்று உண்டு. ஆனந்த் எழுதிய கவிதை என்று ஞாபகம். பறக்கும் பறவையை துரத்திக் கேட்டேன், பறப்பது எப்படி என்று. இப்படித்தான் என்றது. அட ஆமாம் என்று வியந்தேன். நான் கீழே விழுந்தேன், பறவை பறந்து சென்றது’ அதே அனுபவம்தான். எந்த அறிவுத்தயாரிப்பும் இல்லாமல் மனம் ஒன்றி படிப்பவர்கள் மிக எளிதாக அந்நாவலுக்குள் சென்றுவிடுவார்கள்.
உதாரணமாக ,என் மனைவி வெண்முரசு வரிசையில் நீலம் மட்டும்தான் வாசித்திருக்கிறார். ஆனால் அத்தனை வரிகளும் மனப்பாடம். அவ்வளவு ஈடுபாட்டுடன் வாசித்தார். கொஞ்சம் ஈகோ கொண்டு விலகி நின்று வாசிப்பவர்களுக்கு அந்த உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவே முடியாது. இளமைக்காதலில் நாம் எந்த அளவுக்கு தர்க்கமே இல்லாத பித்துடன் இருப்போமோ அந்தப் பித்து தேவையாகிறதுநீலத்தை வாசிக்க
நான் நீலத்தின் வரிகளை தனித்தனியாக எடுத்து சொல்லிக்கொண்டே போவேன். முக்கியமான ஒன்று, இதுவரை நீலம் பற்றி எழுதிய எவருமே சொல்லாத ஒன்று உண்டு. அந்நாவலில் வரும் கண்ணனைக் கொல்லவரும் எல்லாருமே ராதையின் அம்சம் உடையவர்கள்தான். பூதனையிடம் அந்த அம்சம் ரொம்பவே இருக்கிறது. அவள் மண்ணின் வடிவம். முலைகொடுக்கவே வருகிறாள். ஆனால் கம்சன் ,திருணவிரதன், காளியன் எல்லாருமே ராதையின் அம்சத்துடன்தான் இருக்கிறார்கள்.
பீலி, குழல் எல்லாமே ராதைதான். யமுனையும் அவள்தான். அவளுக்கு காளிந்தி என்றபெயர் உண்டு. அவனுடைய எதிரிகளாகவும் அவளே நாவலுக்குள் வருகிறாளா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ”பதினாறாயிரம் பெண்களின் உடலென்னும் அலைவெளியாக காளிந்தி ஓடுவதைக் கண்டேன். அதில் காமம் கனிந்த கரிய உடல் நீந்தித் திளைப்பதைக் கண்டேன்”.என்று நீலம் காளிந்தி நதியைப் பற்றிச் சொல்கிறது
திருணவிரதனைப் பற்றிச் சொல்லும்போது அவன் விழியிமைகளை கவர்ந்து செல்கிறான் என்கிறது நீலம். அவன் மடியும்போது அதை ஒரு பெரும் முயக்கநிலையாகவே சொல்கிறது “அவன் மீது அவன் கவர்ந்த விழிமணிகள் இமையிதழ்கள் உதிர்ந்துதிர்ந்து மூடக்கண்டேன். அவன் மேல் அந்த நீலப்பீலி நிறைசிறகுகளாக விரிந்து குடைபிடிக்க பஞ்சு சூடிய விதைமணி போல் அவன் பறந்திறங்கக் கண்டேன். கருநிற விழியொளியன். விழிநிறக் கரியொளியன் ஆயரிளம் குலமைந்தன். அழியாத அச்சொல்லே உதடாக அச்சொல்லே விழியாக அச்சொல்லே விரல்மொழியாக அமைந்தங்கு அவன் மேலமர்ந்திருந்தான்”
நீலம் ராதையின் கதைதான். பஞ்சபூதங்களாகவும், எட்டுநாயகிகளாகவும், நான்கு பருவங்களாகவும் அவள் கிருஷ்ணனைச் சுற்றிச்சூழ்ந்துகொள்கிறாள். அதுதான் ராதையை ராதாகிருஷ்ணன் என்று கிருஷ்ணனுக்கு ஒருபடி மேலே வைக்கிறது. ஊழியில் கண்ணனின் பெயர் அழிந்தபின்னரும் ஒருகணம் நீடிக்கும் பெயராக ஆக்குகிறது
என்.எஸ்.பிரபாகர்